வெனி சூலாவின் ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்க நடத்தப்படவுள்ள சர்வசன வாக்கெடுப்பை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர். சுமார் ஆறு எம். பிக்கள் எதிர்த்து வாக்களித்ததுடன் ஐந்து பேர் நடுநிலைமை வகித்தனர். 167 எம்.பிக்கள் சர்வஜன வாக்கெடுப்பை ஆதரித்தும் அரசியல் அமைப்பில் மாற்றம் கோரியும் வாக்களித்தனர்.
வெனிசூலாவில் ஜனாதிபதியின் பதவிக் காலங்களை மட்டுப்படுத்தி வரையப்பட்டுள்ள அரசியல் யாப்பை மாற்றம் செய்ய வேண்டுமா இல்லையா எனக் கோரியே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாது. சாவெஸ் 1990 ஆம் ஆண்டு வெனிசூலாவின் ஜனாதிபதியாகப் பதிவியேற்றார். இரண்டு முறைகள் தொடர்ந்தும் வெற்றி பெற்று 1999 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவி வகித்த அவருக்கு தொடர்ந்து பதவியில் இருக்க முடியாமல் போனது. இதனால் முதலாவது திருத்தத்தைக் கொண்டு வந்து 2005 வரை தொடர்ந்தும் ஜனாதிபதியாக கடமையாற்றினார். தற்போது 2012 இல் பதவி முடிவடைவதால் மீண்டும் திருத்தம் கொண்டுவர முயற்சிக்கப்படுகின்றது.
பாராளுமன்றம் இதற்கான ஆணையை வழங்கியுள்ளதுடன் ஜனாதிபதியின் பதவிக் காலங்களை மட்டுப்படுத்தும் விடயத்தை அரசியல் அமைப்பிலிருந்து நீக்கிவிட முயற்சிக்கப்படுகின்றது. இதற்கான ஆணையை மக்களிடம் வேண்டியே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கான திகதிகள் இதுவரை தீர்மானிக்கப்படாதபோதும் பெப்ரவரி 15 ஆம் திகதி சர்வஜன வாக்கெடுப்பு நடைபெறும் என ஜனாதிபதி சாவெஸ் சொன்னார். பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரசியல் அமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். தனிநபர் ஆட்சி கொடுங்கோலுக்கு வழிகோலுமென இம் மாணவர்கள் கோஷமிட்டனர். வீதிகள், பெருந்தெருக்களை மறித்து போக்குவரத்துகளுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இடையூறு உண்டு பண்ணினார்கள். பொலிஸார் பொல்லடி, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து இவர்களைக் கலைத்தனர்.
வெனிசூலாவில் மிக நீண்ட காலம் எம். பிக்களாகவும், ஜனாதிபதியாகவும் உள்ளோர் பண மோசடி, அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதால் பதவிக் காலங்களை மட்டுப்படுத்த வேண்டும். எனவே மக்கள் அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்படுவதற்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென கத்தோலிக்க அமைப்பொன்று கருத்து வெளியிட்டுள்ளது. வெனிசூலாவை மிகத் திறைமையுடன் ஆள்வதற்கு சாவெஸைத் தவிர இன்னுமொருவர் இல்லை. எனவே அவர் அதிகாரத்தில் தொடரவே வாக்களிப்போம் எனச் சிலர் கூறினர்.