2009

2009

ஐ.பி.எல்: புதிய அட்டவணை கோருகிறது இந்திய அரசு

i-p-l-logo.jpgஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய அட்டவணையை தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி, மே 24ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்தன.

இதையடுத்து, அட்டவணையை மாற்றுமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, ஐபிஎல் நிர்வாகம் புதிய அட்டவணையை கடந்த 7ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

ஆனால், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், டெல்லி உட்பட பல்வேறு மாநில அரசுகள், போட்டி அட்டவணைகள் தொடர்பாக ஆட்சேபம் வெளியிட்டன. தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்றும், கூடுதல் படையினர் தேவை என்றும் தெரிவித்தன. சில மாநில அரசுகள், ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன. ஒரு சில மாநிலங்கள், தேர்தல் முடிந்த பிறகுதான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன.

ஆகவே, அதன் பிறகு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நிர்வாகம் இந்த மாதம் 7ஆம் தேதி சமர்ப்பித்த அட்டவணைப்படி போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் தெரிவித்துள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு, புதிய அட்டவணையைத் தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனிதப் பேரவலத்தை நோக்கி மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்கள் இருதரப்பும் தீர்மானிக்காவிடின் 30 ஆயிரம் பேர் மடியக்கூடும் – குமார் ரூபசிங்க

army-s-l.jpgவன்னியில் மோதல்பகுதியில் அகப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்கள் தற்போது மனிதப் பேரவலத்தை நோக்கிச் செல்வதாக கலாநிதி குமார் ரூபசிங்க தெரிவித்ததுடன் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒரு முடிவுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்தார்.

ஜனநாயகத்திற்கான மக்கள் இயக்கம் நேற்று முன்தினம் வியாழக் கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்ற கல்லூரியில் “பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான யோசனைகளை’ முன்வைக்குமாறு நடத்திய மகாநாட்டில் அவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில்; இன்றுள்ள யுத்தப்பிரச்சினையை எடுத்துக்கொண்டால் கெரில்லா பாணியிலான பயங்கரவாதம் வெளிப்படலாம். இக் கருத்தை ஏனைய சிவில் சமூக அமைப்புகளும் ஏற்றுக்கொண்டுள்ளன.

நான் 25 வருடமாக யுத்தத்தை எதிர்த்து வருபவன். இன்று முல்லைத்தீவில் 1 1/2 முதல் 2 1/2 இலட்சம் வரையான மக்கள் நெருக்கடியான நிலைக்குள் அகப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது மனிதநேய நெருக்கடியிலிருந்து அழிவை நோக்கி நாம் செல்கின்றோம். இது போன்ற நிகழ்வு முன்னர் இங்கு இடம்பெற்றதில்லை. இது தொடர்பில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வராவிட்டால் 30 ஆயிரம் மக்கள் மடியலாம். இதனை எந்தவொரு நவீன சமூகமும் ஏற்காது. எனவே நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்க வேண்டிய நிலையிலுள்ளோம்.

அங்குள்ள மக்கள் படும் இன்னல் குறித்து அதிர்ச்சியடைந்தேன். அதேபோல அவர்கள் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்குகின்ற முகாம்களும் திருப்தியாக இல்லையென நினைக்கிறேன். அங்கு சர்வதேச நியமங்கள் பின்பற்றப்பட வேண்டும். இம்முகாம்களை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் சர்வதேச அமைப்பிடம் விட்டுவிட்டால் பிரச்சினை ஏற்படாது.

இதேவேளை; முல்லைத்தீவில் சிக்கியுள்ள 2 1/2 இலட்சம் மக்கள் என்ன செய்யமுடியும்? சர்வதேச சமூகம் தொடர்ச்சியாக அரசையும் புலிகளையும் ஒத்துழைக்குமாறு கோருகின்றது. புலிகள் அம்மக்களை விடுவிக்க மறுத்து வருகின்றனர். அரசு யுத்தத்தை முன்னெடுக்கின்றது. இதற்கு இரு தரப்புமே பொறுப்பானவர்கள். மக்களை விடுதலைசெய்யுமாறு புலிகளுக்கு என்ன அழுத்தம் வந்ததெனக் கேட்கின்றேன். சென்னை, தமிழ்நாடு மற்றும் புலம்பெயர் சமூகத்திலிருந்து இந்த அழுத்தம் மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் மக்களை தமது கேடயமாக வைத்துள்ளனர்.

துப்பாக்கியை ஏந்திய படி புலிகள் உள்ளனர். இதனால் மக்கள் வெளியேறுவது எவ்வாறு சாத்தியம். அவர்கள் எறிகணைகள் மற்றும் பீரங்கியினால் கொல்லப்படுகின்றனர். மனித நேய அடிப்படையில் அவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும். அவர்களை அனுமதித்தால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஊடாக மனித நேய பணியை மேற்கொள்ள இடமளிக்குமாறு கோரமுடியும்.

வெளியேறுபவர்களில் ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களுக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறும் அதனை சட்ட ரீதியாக பிரகடனப்படுத்துமாறும் ஜனாதிபதியை நாம் கேட்கமுடியும். 1971 ஆம் ஆண்டு நடந்தது போன்று 78 ஆயிரம் பேருக்கு திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா பொதுமன்னிப்பளித்தார்.

இந்நிலையில் ஆயுதங்களை கைவிட்டு வந்தவர்களுக்கு விடுதலை அளிக்கப்பட்டது. இதேபோல பொது மன்னிப்பின் மூலம் போராளிகளும் ஏனையோரும் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொள்ள எமது அமைப்பின் மூலம் கோரலாம். எனவே அகப்பட்டு துன்பப்படும் மக்களுக்கு உதவுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம். நாம் எல்லோரும் இணைந்து குறிப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதற்காக இணைந்து நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டுமென்றார்.

ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் இங்கு பேசும் போது; போர் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றது. கிளர்ச்சி இலங்கையில் முதல் முறையல்ல 1971,1989 ஆகிய காலப்பகுதியில் இரு தடவை நிகழ்ந்தன. 1987 முதல் 1989 வரையான காலப்பகுதி மிகப் பயங்கரமானது. தற்போது போல இது தென்னிலங்கையிலும் சமனாகக் காணப்பட்டது.

நாட்டின் எல்லா இடங்களிலும் சோதனைகள் இடம்பெற்றன. தமிழர், முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டனர். சிங்களவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர். அதேநேரம் அவர்கள் கொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டதை மறந்து விடமுடியாது. அக்கிளர்ச்சி அடக்கி ஒடுக்கப்பட்டது. நான் அப்போது கைது செய்யப்பட்டேன். புலிகள் ஆயுதம் மூலம் அழிக்கப்படுவது இலங்கை தமிழ் மக்களுக்கு நன்மையாகும். 89 இரத்தக் களரியின் பின் இராணுவம் முகாம்களில் முடக்கப்பட்டது. புரட்சியை மேற்கொண்டவர்கள் ஜனநாயகத்துக்கு வந்து கூட்டங்களை நடத்தினர், நிலைமை வழமைக்குத் திரும்பியது.

இரு சர்வாதிகாரங்கள் உள்ளதைவிட ஒன்று இருப்பது நல்லது. இரண்டு இருப்பது பயங்கரமானது. தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றதென்பதை ஏற்கின்றேன். புலிகள் தமிழ் தலைவர்களை, மக்களை கொலை செய்துள்ளனர்.சக போராட்ட இயக்கத்தையும் அழித்தனர். நாம் தர்க்க ரீதியாக சிந்திக்க வேண்டும். பாதிக்கப்படும் இதயம் ஆறுதலடையவே போர் இடம்பெறுகின்றதென்றார்.

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் எவ்வித திட்டங்களையும் முழுமையாக செய்யவில்லை -மகிந்த சமரசிங்க

mahinda-samara-sinha.jpgமோதல் நடைபெறும் பகுதிகளில் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் எதுவிதமான திட்டங்களையும் முழுமையாக மேற்கொள்ளவில்லையென அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே இவ்வாறு கூறிய அமைச்சர் மகிந்த சமரசிங்க மேலும் தெரிவிக்கையில்;

மோதல் நடைபெறும் பகுதிகளில் பணியாற்றிய சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது திட்டங்களை விளக்கும் படங்களை பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தியுள்ளன. இவ்வாறு விளம்பரப் படங்களை காட்சிப்படுத்துவதை மட்டுமே இந்த அரசசார்பற்ற நிறுவனங்கள் பணியாகக் கொண்டிருந்தனவே தவிர, செயல்திட்டங்கள் எதனையும் பூரணப்படுத்தவில்லை.

ஆனால் மனிதநேயப் பணிகள், விளையாட்டு மைதானப் புனரமைப்புகள், சனசமூக நிலையப் புனர்நிர்மாணம் என்பனவற்றிற்காகப் பெருந்தொகைப் பணத்தினை இவ்வமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொள்கின்றன. இவ்விடயம் தொடர்பாகவும் இலங்கையில் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளரை தலைவராகக் கொண்டு குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவானது எதிர்காலத்தில் அரசுடன் இணைந்து பணியாற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பெயர்களைப் பட்டியலிடும். அதேவேளை, பொதுமக்களின் பாவனைக்காக ஏ9 வீதியைத் திறப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும் வீதியைத் திறப்பதற்குக் குறிப்பிட்ட காலம் தேவைப்படுமெனவும் தெரிவித்தார்.

நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பகுதியையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

gothabaya.jpgவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் 30 சதுர கிலோமீற்றர் பரப்பளவுள்ள பிரதேசம் இருப்பதாக கூறப்படுகின்ற போதும் அங்குள்ள வாவிப்பகுதி கைப்பற்றப்பட்டால் 20 சதுர கிலோமீற்றருக்கும் கூடுதலான பிரதேசம் மட்டுமே அங்கு அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மிகுதியாக உள்ள பிரதேசம் கைப்பற்றப்படவுள்ளதோடு நாட்டின் முழுப் பிரதேசமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுமெனவும் அவர் உறுதியளித்தார்.

நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பொது சன முன்னணியின் கீழ் போட்டியிடும் மத்திய சூழல் அதிகாரசபையின் முன்னாள் தலைவர் உதயகமன்பிலவின் இணையத்தளத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நாளுக்கு நாள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசம் சுருங்கிவருவதாக தெரிவித்த கோதாபய ராஜபக்ஷ மேலும் தனது உரையில்; இந்த யுத்தத்தில் விடுதலைப்புலிகள் இரு இராணுவப்பிரிவுகளை நிறுவுவதற்கு போதுமான பெருந்தொகையான ஆயுதங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். முன்னைய புலனாய்வு பிரிவின் அறிக்கையின் அடிப்படையில் , விடுதலைப்புலிகளின் ஆளணி வசதிகள் மிகக்கூடுதலாக இருக்குமென நாம் எதிர்பார்த்தோம்.

அவர்களின் அவ்வாறான ஒழுங்கமைப்புகளை நாம் முறியடித்துள்ளதோடு , மிக விரைவில் அவர்களது பகுதிக்கு மூச்சுவிட முடியாத நிலைக்கு அவர்களை கொண்டு வந்து நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலப்பகுதியையும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவோம் என அவர் தெரிவித்தார்.

30 வருடங்களாக தொடர்ந்த யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு கமன்பிலவைப் போன்றவர்களின் ஆதரவும் இந்த நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மிகவும் உதவியாக அமைந்ததாக கோதாபய குறிப்பிட்டார்.

புற்றுநோய் பரவுவது போன்ற பாதிப்பை இந்த யுத்தம் கொண்டிருப்பதோடு , இந்த பிரச்சினையை குறைந்தபட்சம் அடுத்த 10 பரம்பரைகளுக்கு நாம் விட்டுவைக்கப்போவதில்லை. இப் பயங்கரவாத பிரச்சினை 30 வருடங்களை நிறைவு செய்துள்ளநிலையில் இதனை அடுத்த தொடர்பு அத்தியாயத்திற்காக நாம் விட்டுவைக்கப் போவதில்லை. இந்த யுத்தம் ஒரு புற்றுநோயை போன்றது.

ஒரு கட்டத்தில் கதிரியக்க சிகிச்சை மூலமாக மேலும் புற்றுநோயை குணப்படுத்தலாம் . அவ்வாறே பயங்கரவாதத்தின் மூலமான யுத்தத்தையும் வெற்றி கொள்ள முடியும் . பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர் அக்குரஸ்ஸவியில் நடைபெற்ற சம்பவம் போன்ற நிலைமைகள் இனிமேல் ஏற்படாது. குறைந்த பட்சம் 10 தலைமுறைகளுக்கு பயங்கரவாதத்தின் கெடுபிடி இல்லாத நாட்டையே நாம் எதிர்பார்க்க விரும்புகிறோம்

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட கடற்படை சிப்பாய், பெண் கான்ஸ்டபிள் கைது

பொது இடத்தில் மிகவும் அநாகரிகமான முறையில் நடந்து கொண்டமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் ஒரு கடற்படை சிப்பாயும், ஒரு பெண் கான்ஸ்டபிளும் மதவாச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அனுராதபுரம் நீதிமன்ற மேலதிக நீதிவான் சிவன்த மங்சநாயக்க முன்னிலையில் இவ்விரு சந்தேக நபர்களையும் ஆஜர் செய்த பொலிஸார் மதவாச்சி நகர மத்தியில் பொது மக்களுக்கு அருவருப்பூட்டும் விதத்தில் இவ்விருவரும் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாகத் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து நீதிவான் அவ்விருவரையும் தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தார். புனாவை கடற்கரை முகாமைச் சேர்ந்த சமில் இந்திக்க ரணதுங்க என்ற சிப்பாயும் மதவாச்சி பொலிஸ் வீதிச் சோதனைச் சாவடியில் பணியாற்றும் பி.நில்மினி என்ற பொலிஸ் கான்ஸ்டபிளுமே பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.

யுத்தத்தில் முனைப்புக்காட்டுமளவுக்கு அரசு அரசியல் தீர்வில் அக்கறை செலுத்தவில்லை -லியம் பொக்ஸிடம் ஹக்கீம் தெரிவிப்பு

rauff_hakeem.jpgயுத்தத்தில் முனைப்புக்காட்டுமளவுக்கு மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அரசியல் தீர்வுகாணும் விடயத்தில் அக்கறை செலுத்தவில்லையென பிரிட்டிஷ் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸிடம் சுட்டிக்காட்டியிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், இதன் காரணமாக சிறுபான்மைச் சமூகங்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசின் அழைப்பின் மீது இங்கு வந்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ், நேற்று முன்தினம் மாலை ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவைச் சந்தித்தவேளையிலேயே ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

ரவூப் ஹக்கீமுடன் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் தவிசாளரும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவருமான பஷீர் சேகுதாவூத், அரசியல் பீட உறுப்பினர்களான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், சட்டத்தரணி ஏ.எம்.பாயிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே தாம் இந்த விஜயத்தை மேற்கொண்டதாகத் தெரிவித்த லியம் பொக்ஸ், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் குழுவிடம் கேட்டறிந்து கொண்டார். நாட்டின் தற்போதைய அரசியல் கள நிலைமைகளை லியம் பொக்ஸிடம் விளக்கிக்கூறியதாக தெரிவித்த ரவூப் ஹக்கீம், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்பார்ப்புகள் எதுவும் இந்த அரசினால் கவனத்தில்கொள்ளப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.

அரசாங்கம் யுத்தத்தின் மீதே கூடுதல் முனைப்புக்காட்டுவதாகவும் தென்னிலங்கையில் யுத்தவெற்றியை காட்டி பெரும்பான்மை சமூகத்தை தவறானபாதையில் இட்டுச்செல்ல முனைவதாகவும் குறிப்பிட்ட அவர், அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதில் எந்தவிதமான அக்கறையையும் காட்டமுற்படவில்லையெனவும் அரசுக்கு அரசியல் தீர்வில் ஆர்வம் இருப்பதாக தெரியவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் அரசு மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும் ஹக்கீம் லியம் பொக்ஸிடம் எடுத்துக்கூறியுள்ளார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தாமல் மீளக் குடியமர்த்துவதில் அரசு கவனம் செலுத்துவதாகவும் இதன் பின்விளைவுகள் குறித்து முஸ்லிம்கள் அச்சம் கொண்டிருப்பதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்பதாகவும் இதற்கு உரிய தீர்வைக் காண்பதில் அரசு கவனம் செலுத்தத் தவறிவருவதாகவும் ரவூப் ஹக்கீம் லியம் பொக்ஸிடம் எடுத்துக் கூறியுள்ளார். இச் சந்திப்பு சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

குவைத்தில் காலமான கனகநாயகத்தின் உறவினர்களை தொடர்புகொள்ள கோரிக்கை

வெளி விவகார அமைச்சு அறிவிப்பு குவைத்தில் காலமான இன்னாசிமுத்து சாமித்தம்பி கனகநாயகம் என்பவரின் உறவினர்களை தம்முடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.  இன்னாசிமுத்து சாமித்தம்பி கனகநாயகம் என்பவர் குவைத் நகரில் இறந்துள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இவரின் கடவுச்சீட்டு இலக்கம் M 123850 (NEW) ICM 035568ஆகும்.

இறந்தவரின் வாரிசுகளைப் பற்றியோ அல்லது இறந்தவர் பற்றிய தகவல்களைக் கொடுக்க முடிந்தவர்களோ இல. 14 சேர் பாரொன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு01 இல் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் “கொன்சுலர்’ பிரிவுடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். தொலைபேசி இலக்கம் 0112437635, தொலைநகல் 0112473899.

தமிழீழம் மலர்ந்தே தீரும்; பிரபாகரனை அசைக்க முடியாது : மலேசிய எதிர்க்கட்சி தலைவர்

karpal.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சிறிலங்கா அரசாங்கத்தினால் அசைக்கக்கூட முடியாது என்று மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் தலைவர் கர்ப்பால் சிங் தெரிவித்துள்ளார். அண்மையில் பினாங்கு மாநிலத்தில் ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையைக் கண்டிக்காத உலக நாடுகளைக் குறிப்பாக இந்தியாவை கர்ப்பால் கடுமையாக சாடினார். தமிழக முதல்வர் மு.கருணாநிதி எங்கே போய்விட்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் எங்கே போய்விட்டார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கையில் நடைபெறும் படுகொலையை தடுக்காத இந்த இருவரும் உலகத் தமிழர்களிடம் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளனர். இலங்கையில் இடம்பெற்று வரும் இன வெறியாட்டத்தைக் கண்டிக்கக் கூடத் தயங்கும் இந்தியாவை நினைத்து வேதனையடைவதாக அவர் குறிப்பிட்டார்.
 
மேலும் சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்ப் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்து விடலாம் என்று கனவு காணும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு நான் ஒன்றை கூற விரும்புகிறேன். பிரபாகரனை உங்களால் அசைக்கக்கூட  முடியாது. பிரபாகரன் ஓடிவிட மாட்டார். தமிழீழழ் மலரும் வரை அவர் போராடுவார். தமிழீழம் மலர்ந்தே தீரும்.
 
பிடல் காஸ்ட்ரோவை தீவிரவாதி என்று கூறிய அதே உலகம்தான் இன்று அவரை தேசியவாதி என்று போற்றுகிறது. பிரபாகரனையும் நாளைய சரித்திரம் போராட்டவாதி எனவும் தேசியவாதி எனவும் போற்றுமே தவிர தீவிரவாதி என்று ஒரு போதும் கூறாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
நண்பர்களே, இன்று ஈழத் தமிழர் இன்னல் துடைக்க ஒன்று சேர்ந்துள்ள நாம், அள்ளி கொடுக்கா விட்டாலும் கிள்ளியாவது கொடுப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

மகா நாயக்க தேரர்களுடன் ஆனந்த சங்கரி சந்திப்பு – புத்தரின் புனித தந்தத்திற்கும் தரிசனம்

anada_sangari.jpgதமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்த சங்கரி கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் தற்போது பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ள புத்த பெருமானின் புனித தந்தத்தை நேற்று (13) காலை தரிசித்ததுடன் கண்டியில் உள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்த அதி வணக்கத்திற்குரிய மகா தேரர்களையும் சந்தித்துப் பேசியுள்ளார்.

தற்போது அனைத்து வகையிலும் தமது அதிகாரத்தையும் ஆட்சியையும் பறிகொடுத்து தொடர்ச்சியான தோல்விகளை அனுபவித்து வரும் பயங்கரவாத புலிகளின் தலைவர் பிரபாகரன் மத வழிபாட்டுத் தலங்களையும் அதில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களையும் இலக்கு வைத்து மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. சர்வதேச அரங்கில் இதனை தெளிவுபடுத்த வேண்டியது எமது அனைவருடைய பொறுப்பாகவுமாக உள்ளது.

தன் வசம் வைத்திருக்கும் அப்பாவி தமிழ் பொது மக்களை உடன் அரசின் கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பும்படியும் மேலும் அது போன்று பயங்கரவாத குழுத் தலைவர் பிரபாகரனையும் ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட வேண்டுமெனவும் நான் பகிரங் கமாக தெரிவிக்கின்றேன் எனவும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர் சங்கைக் குரிய உடுகம ஸ்ரீ புத்த ரக்கித்தக்கியை சந்தித்துப் பேசும் போது ஆனந்த சங்கரி சுட்டிக்காட்டினார்.

‘வணங்கா மண்’ கப்பல் – உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கி பயணமாகும்

vanangkaa-mann.jpgஈழத் தமிழ் உறவுகளுக்கான உணவு மற்றும் உயிர்க்காப்பு மருந்துகளுடன் ‘வணங்கா மண்’ என்னும் கப்பல் தாயகம் நோக்கிய பயணத்தை தொடங்கவுள்ளதாக பிரித்தானியா வாழ் புலம்பெயர்ந்த உறவுகளால் உருவாக்கப்பட்டுள்ள ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது  என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. 

உலகமே கைவிட்ட எம் உறவுகளின் உயிர் காப்பதற்கான தாயகம் நோக்கிய பயணம் என இந்நடவடிக்கையை சிறப்பித்துக்கூறும் ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு மேலும் தெரிவித்துள்ளதாவது. சிங்களப் பேரினவாத அரசால் மேற்கொள்ளப்படுகின்ற தமிழின சுத்திகரிப்பு நடவடிக்கையில் என்றுமில்லாதவாறு உணவு ஆயுதமாக பாவிக்கப்படுகின்றது. இதற்கு ஜக்கிய நாடுகள் சபை முதல் உலக நாடுகள் அனைத்துமே எமது மக்களை தீண்டத்தகாதவர்களாக பார்க்கின்றது.

இந்நிலையில் எமது உறவுகளுக்காக பிரித்தானிய தமிழர்களால் ‘வணங்கா மண்’ நடவடிக்கை பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. ஒருபுறம் குண்டு மழையில் சாவுக்குள் வாழ்வாய் வாழும் மக்களை பட்டினியால் சாவு கொள்ள விடுவோமா?  வேதனைகள் சோதனைகளை கடந்து வந்து புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது இனம் அழிய விடுவோமா?

அரசுகள் கைவிட்டால் என்ன?  மனிதநேயம் கொண்ட மக்களிடம் எடுத்து எமது துயரை சொல்வோம். அவர்கள் ஆதரவை பெற்றுக்கொள்வோம்.  எம் உறவுகளை காத்திடுவோம். தாயகம் நோக்கிய பயணத்திற்கு அனைவரும் ஒன்றிணைவோம்.  என்று வேண்டி நிற்கிறது ‘வணங்கா மண்’ ஒருங்கிணைப்புக் குழு  என புதினம் இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.