2009

2009

இடம்பெயர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க உதவுவோம் – ஜோன் ஹோல்ம்ஸ்

john-holmes.jpg இலங்கையில் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டால் மோதல்கள் நடைபெற்ற பகுதியிலிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப் படவேண்டும் அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படவேண்டும் இதற்கு நாமும் உதவிசெய்வோம்” என ஐக்கிய நாடுகள் மனிதநேய விவகாரங்களுக்கான செயலாளர் ஜோன் ஹோல்ம்ஸ் நியூயோர்க்கில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில்,  இடம்பெயர்ந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமைகள் குறித்துத் தாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். இலங்கையில் நிலைமை மாறிவருகிறது இதனால் தகவல்கள் எதுவும் தெளிவாகவில்லை.

தற்போது காணப்படும் நிலையை எம்மால் உடனடியாகத் தம்மால் உறுதிப்படுத்தமுடியாதிருக்கின்றது.  மோதல் பகுதிகளிலுள்ள மக்கள் அனைவரும் அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார்கள் என நாம் நம்புகிறோம் என்றார்.

பிரபாகரன் இன்று இரவு பேட்டி!!-எஸ்.எம்.எஸ். பரபரப்பு

Pirabakaran_Vவிடுதலைப் புலிகள்  இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், அவர் இன்று இரவு டிவியில் பேட்டி அளிக்கவுள்ளதாகவும் ஒரு எஸ்.எம்.எஸ். உலா வந்து கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபாகரன் குறித்து தினசரி ஒரு புதுத் தகவல் வெளியாகி பரபரப்பை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. பிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு வெளியிட்ட வீடியோ படமும் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

இந் நிலையில் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகவும், இன்று இரவு அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேரடியாக பேட்டி அளிக்கவிருப்பதாகவும் ஒரு எஸ்.எஸ்.எஸ். படு இந்தியாவில் வேகமாக உலா வந்து கொண்டுள்ளது.

அந்த எஸ்.எம்.எஸ்.ஸில் கூறப்பட்டுள்ளதாவது..

”மகிழ்ச்சிகரமான செய்தி. நமது தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் மரணமடையவில்லை. இது உண்மை. இன்று இரவு 10.30 மணிக்கு நமது தலைவர் தொலைக்காட்சிகளுக்கு சிறப்பு பேட்டி அளிக்கவுள்ளார். பழ. நெடுமாறனும் அதுகுறித்துப் பேசவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சி மற்றும் ராஜ் தொலைக்காட்சியில் இதை காணத் தவறாதீர்கள். இதை அனைத்து உண்மைத் தமிழர்களுக்கும் தெரிவியுங்கள்” என்று அந்த எஸ்.எம்.எஸ். கூறுகிறது.

புதிய அரசு அமைக்க மன்மோகன் சிங்கிற்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி

manmohan_soniya.jpgபுதிய அரசு அமைக்குமாறு மன்மோகன் சிங்கிற்கு ஜனாதிபதி பிரதிபா பாட்டீல்முறைப்படி அழைப்பு விடுத்தார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து புதிய ஆட்சி அமைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை, ராஷ்டிரபதி பவனில் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தனிப்பெரும் கட்சியாகவும், தனிப்பெரும்பான்மை பெற்ற கூட்டணியாகவும் உள்ள தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். தங்களது அரசுக்கு ஆதரவளிக்கும் 322 எம்.பி.,க்கள் பட்டியலையும் அவர்கள் அப்போது ஜனாதிபதியிடம் வழங்கினர்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கை அரசு அமைக்க அழைக்கும் கடிதத்தை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், மன்மோகன் சிங்கிடம் வழங்கினார். இதை ராஷ்டிரபதி பவனில் கூடியிருந்த செய்தியாளர்களிடம் மன்மோகன் சிங் தெரிவித்தார். அதன்படி, மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சி மற்றும் பெரும்பான்மை பெற்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையிலும் ஆட்சியமைக்க வருமாறு அழைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பாராளுமன்றம் முன் போராட்டம்: 10 தமிழர்கள் கைது

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு அங்குள்ள தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்களை அவர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான தமிழர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 தமிழர்களை லண்டன் போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் மட்டும் 3 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இலங்கையில் மீண்டும் விடுதலைப்போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இலங்கை தமிழர்களுக்கு தேவையான நிவாரண உதவி வழங்கப்படும்: கருணாநிதியிடம் பிரதமர் உறுதி

karunanithi.jpg முதல் அமைச்சர் கருணாநிதியை இன்று காலையில் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இல்லத்தில் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு கருணாநிதி பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு: 

கேள்வி: இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் உங்களை சந்தித்துப் பேசியதைப் பற்றி?

பதில்: நேற்றைய தினம் பிரதமருடனும், சோனியா காந்தியுடனும் நான் பேசிய தின் தொடர்ச்சியாக இன்றைக்கு அவர் இலங்கைக்கு செல்கிறார். அங்குள்ள சூழ் நிலைகளை அறிந்து வந்து மீண்டும் என்னைச் சந்தித்து விவரங்களை கூறுவார்.

கேள்வி: இலங்கைக்கு நிவாரணம் அளிப்பது பற்றி குறிப்பிட்டு ஏதாவது கேட்டிருக்கிறீர்களா?

பதில்: இலங்கை தமிழர் பகுதிகளில் நிவாரணத்திற்காக எவ்வளவு தேவையோ அவ்வளவையும் நிறைவு செய்வோம் என்று பிரதமர் சொல்லியிருக்கிறார்.

பிரபாகரனின் ‘கடைசி’ மணிநேரங்கள் – கூறுகிறார் இலங்கை ராணுவ அதிகாரி

Pirabakaran_Vவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ‘கொல்லப்பட்டபோது’ நடந்த சம்பவங்கள் குறித்து இலங்கை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அது இதோ…

பிரபாகரனின் நடமாட்டம், அவர் எங்கு செல்கிறார் என்பது அவரது மனைவி மதிவதனி தவிர மூன்றே மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மட்டும்தான் தெரியுமாம்.

ஒருவர் பொட்டு அம்மான், இன்னொருவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி. மூன்றாவது நபர் புலிகளின் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் ரீகன்.

சமீபத்தில் டாக்டர் ரீகன் ராணுவத்திடம் சிக்கினார். அவரை பல நாட்கள் கடுமையாக சித்திரவதை செய்து விசாரித்துள்ளனர். முதலில் பிரபாகரன் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் ரீகன். ஆனால் கொடூர சித்திரவதையில் பிரபாகரன் இருப்பிடம் குறித்து கூறி விட்டார் ரீகன்.

இதன் மூலம் 16ம் தேதி நள்ளிரவுவாக்கில்தான் பிரபாகரன் இருப்பிடம் குறித்து ராணுவத்திற்கு தெளிவாகத் தெரிய வந்தது.

மேலும், பிரபாகரன் போட்டு வைத்திருந்த முழுத் திட்டமும் தெரிய வந்தது.

பிரபாகரனின் திட்டம் என்னவென்றால், ராணுவத்தின் 53வது முன்னரங்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு, முல்லைத்தீவு- வெளிஓயா காடுகளுக்குச் செல்வது. பின்னர் அங்கிருந்து திரிகோணமலை வழியாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு அல்லது அம்பாரைக்கு தப்பிச் செல்வது.

ஏற்கனவே அங்கு நிலை கொண்டிருந்த கர்னல் ராம் தலைமையிலான படையினரிடம் தங்களது வருகையை முன்கூட்டியே தெரிவித்து விட்டாராம் பிரபாகரன்.

இதையடுத்து 17ம் தேதி அதிகாலையில் புலிகள் தங்களது கடைசி தாக்குதலைத் தொடங்கினர். கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் படு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டு சென்றனர்.

ஏற்கனவே எச்சரித்து வைக்கப்பட்டிருந்த ராணுவப் பிரிவுகள், விடுதலைப் புலிகளை மடக்க முயன்றன. ஆனால், அதையும் மீறி 53வது பிரிவின் முன்னரங்கு பாதுகாப்பு வளையத்தை புலிகள் உடைத்துக் கொண்டு சென்றனர்.

மேலும் ராணுவத்தின் ஆம்புலன்ஸ் ஒன்றையும் பறித்துக் கொண்ட அவர்கள், 15 ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ராணுவம் திருப்பித் தாக்கத் தொடங்கியது. சக்தி வாய்ந்த எறிகணை ராக்கெட்டுகளை வீசித் தாக்கியது. இதில் 200 விடுதலைப் புலி வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 30 பேர் வரை கருகிப் போய் விட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலேயே மிகச் சிறந்த வீரர்களாக அவர்களின் உடல்கள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. விடுதலைப் புலிகள் தப்பிச் சென்ற ஆம்புலன்ஸும் தாக்குதலில் சிக்கி எரிந்து போனது.

பின்னர் ராணுவத்தினர் அந்த ஆம்புலன்ஸை நெருங்கிப் பார்த்தபோது உள்ளே பிரபாகரனைப் போன்ற உடலமைப்புடன் கூடிய உடல் உள்பட 3 உடல்கள் சிக்கின.

பிரபாகரனைப் போன்ற உடலமைப்புடன் கூடிய உடல், கருகிப் போயிருந்தது. முகத்தையோ, உடலையோ அடையாளம் காணவே முடியாத அளவுக்கு அது இருந்தது.

(முதலில் இப்படித்தான் கூறியிருந்தது இலங்கை ராணுவமும், அரசும். அந்த கருகிப் போன உடலை அடையாளம் காண முயன்று வருவதாகவும் அது கூறியிருந்தது.

ஆனால் திடீரென பிரஷ்ஷான முக அமைப்புடன் கூடிய ஒரு உடலைக் காட்டி இதுதான் பிரபாகரன், நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் இந்தப் பிணம் கிடந்தது என்று இலங்கை அரசும், ராணுவமும் கூறியது நினைவிருக்கலாம்.

முதலில் கருகிப் போய் அடையாளமே தெரியவில்லை என்று கூறிய ராணுவம், பின்னர் புது உடலைக் காட்டியதுதான் ராணுவத்தின் பேச்சை நம்புவதா, இல்லையா என்ற சந்தேகத்தை பலமாக எழுப்பியுள்ளது).

இருந்தாலும், அந்த உடல் பிரபாகரனுடையதாக இருக்கும் என்றே ராணுவம் உறுதியாக நம்பியது. காரணம், பிரபாகரன் தப்பிப் போக வேறு வழியே இல்லை.

சிறப்பு ராணுவப் படையினரால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது காயமடைந்து, நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் போய் அவர் உயிரிழந்திருக்க வேண்டும்.

ஆனால் அவரது உடலை கருகிப் போன ஆம்புலன்ஸிலிருந்துதான் ராணுவம் எடுத்தது.

இந்தத் தாக்குதலின்போது உயிருடன் சிக்கிய விடுதலைப் புலிகள்  சிலரை விசாரித்தபோது, பிரபாகரன் சுடப்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

பிரபாகரன் உள்ளிட்டோரின் கருகிய உடல்களை 53வது பிரிவு வீரர்கள் மீட்டாலும் கூட, உடலை வேறு ஒரு பிரிவினர் வந்து வாங்கிச் சென்று விட்டனர்.

ராணுவம் 400 உடல்களை மீட்டது. உடல்களை மீட்கும் பணியில் 1, 2, மற்றும் 5வது சிறப்புப் படைப் பிரிவினர் ஈடுபட்டனர்.

கொல்லப்பட்ட வீரர்கள் பட்டியலில் முக்கியமான விடுதலைப் புலிகளான லாரன்ஸ், கரிகாலன், பாப்பா, இளந்திரையன் ஆகியோரைக் காணவில்லை.

அதேசமயம், பொட்டு அம்மான், பானு, சூசை ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.

இவர்களில் சூசையும், சொர்ணமும்தான் இறுதி வரை தீரத்துடன் போராடினார்கள். மற்றவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது இவர்கள் இருவரும் அவ்வாறு செய்ய முயலாமல், ராணுவத்தை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரையும் ராணுவ வீரர்கள் கொன்று விட்டனர் என்று அந்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி;தட்ஸ் இந்தியா

சிவ்சங்கர் மேனன் மற்றும் நாராயணன் – இலங்கை விஜயம்

menon-narayan.jpgஇந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே நாராயணன் ஆகியோர் இன்று இலங்கை வரவுள்ளனர்.இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை தோற்கடித்து உள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் தலமையை அழித்துள்ளதாகவும் அறிவித்துள்ள நிலையில் இந்தியாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.

இவர்கள் இலங்கை வருவதற்கு முன் தமிழ் நாடு முதல்வர் மு.கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடி ஆலோசனைகள் பெற்றுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அது பிரபாகரனே அல்ல-பாரதிராஜா

bharathiraja.jpgபிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள வீடியோ நம்பும்படி இல்லை என்றும், அவர் நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தனது அலுவலகத்தி் மீது நடந்த தாக்குதல் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து புகார் தந்த பின் நிருபர்களிடம் பேசிய அவர்,

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை ராணுவம் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆனால், அது பிரபாகரனின் படத்தை போல இல்லை. பிரபாகரன் சாகவில்லை. அவர் நலமோடு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவரை நான் நேரில் பார்த்துள்ளேன். டிவியில் வெளியான படத்துக்கும், பிரபாகரனின் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றார்.

இலங்கை நிலைமையை அவதானிக்க விரைவில் இந்தியப் பிரதிநிதிகள் குழு

indo-lanka.jpgஇலங்கையின் நிலைமைகளை அவதானிக்க இந்தியா  வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை ஓரிரு தினங்களில் அங்கு  அனுப்பவுள்ளோம்  என்று இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களின் மத்தியில் புனர்வாழ்வுக்காக இந்தியா 500 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதே தற்போதைய முக்கிய விடயமாகும்.அதேவேளை, தமிழர்கள் உட்பட சிறுபான்மையினரின் அபிலாகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்  என்றார்.         

பிரபாகரனின் உடலைக் கண்ட செய்தியாளர் தெரிவித்த கருத்துக்கள்

karuna-daya.jpg
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்ற முல்லைத்தீவின் கடற்கரைப் பிரதேசத்துக்குச் செல்ல செய்தியாளர்களை இலங்கை அரசு தொடர்ந்து அனுமதிக்காமல் இருந்தது. இருந்தும் சில செய்தியாளர்கள் இராணுவத்தினரால் அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். கடந்த 6 நாட்களாக கிளிநொச்சியில் உள்ள 58 வது டிவிஷனின் தலைமையகத்தில் இருந்து களமுனைக்கு தினந்தோரும் சென்று வந்த ஹிந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் முரளீதர் ரெட்டி நேற்று செவ்வாய்கிழமை விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என்று அரசு கூறும் உடலையும் நேரில் பார்த்துள்ளார்.

பிரபாகரனின் உடலை நேற்று செவ்வாய் மாலை தான் பார்த்தாக கூறிய அவர், அந்த உடலை விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும் தற்போதைய அரசாங்க அமைச்சருமான கருணாவும், படையினரிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டரும், இராணவத்திடம் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டார்.

பிரபாகரன் எப்படி இறந்தார் என்பது தெளிவாகாமல் உள்ளது என்றும், அந்த உடலில் சைனைட் அருந்தியதற்கான தடயங்கள் இல்லை என்று படையினர் தம்மிடம் கூறியதாகவும் ரெட்டி நம்மிடம் தெரிவித்தார். அவர் துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிரபாகரனின் உடல் தவிர இராணுவ அதிகாரிகள், சார்ள்ஸ் அன்டனி உடலை காட்டியதாகக் குறிப்பட்ட அவர், பொட்டு அம்மானின் உடலை பார்க்கவில்லை என்றார். போர் பகுதியில் உள்ள உடல்களில் சில மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்