2009

2009

தப்பியோடி கைதான படையினருக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும் – ஐ.தே.க. வலியுறுத்தல்

தப்பியோடிய படையினரை கைது செய்து குற்றவாளிகளுடன் சிறையில் வைத்திருப்பது சிறந்தல்லவென ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்ததுடன் அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வேலைத்திட்டம் அவசியமெனவும் வலியுறுத்தினர்.

புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து பேசப்படும் நிலையில் தப்பியோடி கைதான படையினருக்கும் அதனை வழங்கி சுமுக வாழ்க்கையை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமெனவும் தெரிவித்தார். எதிர்க்கட்சித்தலைவரின் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாகாநாட்டில் அவர் கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்;  படையிலிருந்து விடுமுறையைப் பெற்று மீண்டும் பணிக்கு திரும்பாத சுமார் 40 ஆயிரம் படையினர் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தப்பிச் சென்றுள்ளவர்களில் 4500 பேரளவில் கைது செய்யப்பட்டு குற்றச்செயல் புரிந்தவர்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குடும்பப் பிரச்சினை, பணியின் போதான பிரச்சினை போன்ற காரணங்களால் இவர்கள் தவறிழைத்த போதும் படையில் சில வருடங்களாவது பணியாற்றியுள்ளனர். இந் நிலையில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுடன் இவர்கள் தடுத்து வைக்கப்படுவதானது சிறந்ததல்ல. அதாவது குற்றச் செயலுடன் தொடர்புடையவர்களுடன் இருந்து வெளியே வரும் போது இவர்களால் பிரச்சினையேற்படுவதற்கு வழிவகுக்கும். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அதற்கு பயன்படுத்த முடியாதென்பதால் குற்றம் புரிந்தவர்களுடன் தடுத்து வைக்காது அவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். அல்லது தப்பியுள்ளவர்கள் சுமுகமாக வாழ இடமளிக்கப்பட வேண்டும். பொசன் மற்றும் வெசாக் தினங்களில் ஜனாதிபதி விடுதலை வழங்குவது போல் ஜனாதிபதி முப்படைகளின் தளபதியென்ற வகையில் இதனை செய்ய முன்வரவேண்டும். இது தொடர்பில் படைவீரரது குடும்பத்தினர் எம்முடன் கதைத்துள்ளனர்.

புலிகளுக்கு தற்போது பொது மன்னிப்பு குறித்து பேசுகின்ற நிலையில் படையினருக்கும் இதனை வழங்க வேண்டுமென நாம் கேட்கின்றோம்.

இலங்கையின் இன்றைய சமுதாயம் ஆங்கிலத்தில் பேசும் ஆற்றலை இழந்துள்ளது

schoolgirls-sri-lanka.jpgநூறாண் டுகளுக்கு மேலாக ஆங்கில ஆட்சியாளரின் நிர்வாகத்தின் கீழ் இருந்த இலங்கையின் இன்றைய சமுதாயம் ஆங்கிலத்தில் பேசும் திறனை இழந்து நிற்பதாக கிழக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் வி.பி.பாலசிங்கம், திருகோணமலை வலயக்கல்வி அலுவலகம் நடத்திய புத்தாக்கக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்வினைத் தொடக்கி வைத்துப் பேசும்போது குறிப்பிட்டார்.

ரஷ்யா மற்றும் சீனாவில் உயர் கல்வி பெறுவதற்காக செல்லும் நமது மாணவர்கள் அங்கு ரஷ்ய, சீன மொழிகளில் ஆறு மாதகால பயிற்சி பெற்ற பின்னரே உயர்கல்வியைத் தொடர முடிகின்றது. நமது நாட்டில் இருக்கும் போது ஆங்கில மொழியையும் கற்க ஏன் முன்வருகிறார்களில்லை. ஆங்கில மொழியை ஒவ்வொருவரும் கற்க வேண்டியது அவசியம் என்றும் பிரதம செயலாளர் பாலசிங்கம் கூறினார்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் முதல்வர் என். நகேந்திரகுமார் பேசும்போது;

உயர்கல்வி பெறும் மாணவர்கள் வர்த்தகம், கலை ஆகிய துறைகளில் அக்கறை காட்டுகிறார்களே தவிர, விஞ்ஞானத்துறையில் அக்கறை காட்டுகின்றார்கள் இல்லை. திருமலை வளாகத்தில் விஞ்ஞானத்துறைக் கல்விக்குரிய வசதிகள் அனைத்தும் உள்ளன. மாணவர் எண்ணிக்கைதான் குறைவு என்று கூறினார்.

மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி வீரவர்தன பேசும்போது;

ஆசிரியர் பற்றாக்குறை பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்களுக்குத்தான் பற்றாக்குறை நிலவுகிறது. கணிதபாடம் போதிக்கும் ஆசிரியர்கள் தங்களிடம் கற்கும் மாணவர்களை குறைந்தது அப்பாடத்தில் சாதாரண சித்தி எடுக்கக்கூடியதாக பயிற்றுவிக்க வேண்டும். பாடங்களில் மாணவர்கள் சித்திபெறவில்லை என்ற நிலையை அப்பாடங்களைப் போதிக்கும் ஆசிரியர்கள் மாற்றியமைக்க வேண்டுமென்று கூறினார். வலயக்கல்விப் பணிப்பாளர் அ. விஜயானந்த மூர்த்தி தலைமை வகித்தார்.

சம்பள மீளாய்வு தொடர்பான விபரங்களை பேச்சுகளில் ஈடுபடுவோர் வெளியிட வேண்டும்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்ற தரப்புகள் வெளியிட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் விஜயகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது; தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனங்களும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்களும் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் குறித்து முறையாக அறிவிக்கவில்லை.

இது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களுக்கிடையில் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, ஊவா மாகாணசபைத் தேர்தலைக் காரணம் காட்டி சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக்கப்படுவதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது.

இவ்வாறானதொரு நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கமான இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர் சார்பாக செயற்படுவதற்கு ஐ.தே.க. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வை உறுதிப்படுத்துமாறு பான் கீ மூன் வலியுறுத்தல்

06bankimoon.jpgஆயுதக் குழுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுவர்களின் பராமரிப்பு பாதுகாப்பு மற்றும் அவர்களை சமூகத்துடன் ஒருங்கிணைக்கும் செயல்திட்டங்களை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் ஆயுத மோதலும் சிறுவர்களும் என்பது பற்றிய அறிக்கையொன்றை பாதுகாப்பு சபைக்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் 18 வயதுக்கு குறைந்த முன்னாள் சிறுவர் போராளிகளுக்கு பொருத்தமான உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கொழும்பை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா. மற்றும் ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் இலங்கை முன்னேற்றத்தை வென்றெடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக நியூயோர்க்கில் வியாழக் கிழமையன்று பான் கீ மூனின் பேச் சாளர் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஆயுதக் குழுவிலிருந்து வெளியேறிய சகல சிறுவர்களினதும் அடையாளத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். அவர்களை விடுவிக்க வேண்டும், புனர்வாழ்வளிக்க வேண்டும்.

அவர்கள் சமூகங்கள் மத்தியில் ஒருங்கிணைவதற்கான ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். சர்வதேச தரத்திற்கமைவாக இவை தொடர்பான நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும்.

அத்துடன், மனிதாபிமானப் பணியாளர்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிகளை வழங்க அரசு வசதிகளைச் செய்துகொடுக்க வேண்டும். குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பொருத்தமான பராமரிப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், இடம்பெயர்ந்த பிள்ளைகளின் போஷாக்கை அதிக உயர்ந்த பட்சத்துக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன் சிறுவர்களை படைக்கு திரட்டுவது தொடர்பாக எந்தவொரு பொறுமையையும் கடைப்பிடிக்கக் கூடாதெனவும் பான் கீ மூன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

சந்தோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 22ம் இடம்

050709happy-country.jpgஉலகின் சந்தோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 22ம் இடம் வழங்கப்பட்டுள்ளது. திங்க டேங் என்ற புதிய பொருளாதார நிறுவகத்தனால் வெளியிடப்பட்டுள்ள இந்த தரவரிசைப்பட்டியலின் படி, உலகின் மிகவும் சந்தோசமான நாடாக கொஸ்டாரிகா தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முன்னிலை வகிக்கும் நாடுகள் பல, அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளாக காணப்படுவதாகவும், அபிவிருத்தி அடைந்த நாடுகள் பெரும்பாலும் இடைநிலையிலேயே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
இலங்கையில் அசாதாரண சூழ்நிலை நிலவுகின்ற போதும், சந்தோசமான நாடுகளின் பட்டியிலில் 22 ம் இடத்திற்கு தரப்படுத்தப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்பட்டுள்ளது. அத்துடன், இந்த பட்டியலில் முதல் நான்கு இடங்களை பெற்ற நாடுகள் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உலகின் வல்லரசுகளாக கணிக்கப்படும் பல நாடுகள் இந்த தரவரிசையில் பின்னத்தள்ளப்பட்டுள்ளன. இங்கிலாந்துக்கு இதில் 74ம் இடமும், அமெரக்காவிற்கு 114 ம் இடமும், கனடாவிற்கு 88 வது இடமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலைகள், அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி காணப்பட்டாலும், அதனை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்தோசமாக வாழக் கூடிய சூழ்நிலை உருவாக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோதல்களின் பின்னரும், அதனால் பாதிக்கப்பட்ட வடுக்கள் நிறைந்திருந்தாலும், இலங்கை 22ம் இடத்தில இருக்கின்றமை விசேடமான அம்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பாடசாலை அதிபர் உட்பட இருவர் சுட்டுக்கொலை

வவுனியா மாவட்டத்தில் உள்ள பாரதிபுரம் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் உட்பட இருவர் இன்று வவுனியாவில் அடையாளம் தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிரான புதிய சட்டமூலம்: தண்டம் 4276 முதல் 8553 ஸ்ரேலிங் பவுண்ஸ் வரை விதிப்பு

italy.jpgஇத்தாலிய பாராளுமன்றமானது அந்நாட்டிலுள்ள சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு தண்டனையளிக்கும் புதிய சட்ட மூலத்தை நிறைவேற்றியுள்ளது.  புதிய சட்ட விதிகளுக்கு அமைய சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு 4276 ஸ்ரேலிங் பவுண் முதல் 8553 ஸ்ரேலிங் பவுண் வரையான தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது.

 கடந்த மே மாதம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி சட்ட மூலம் வியாழக்கிழமை பாராளுமன்ற மேல்சபையான செனட் சபையிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து சட்டமாக அமுலாக்கப்படும் அந்தஸ்தை பெற்றுள்ளது.

இந்த புதிய சட்டமானது சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு தண்டனையாக பெருந்தொகை தண்டப்பணம் விதிப்பதற்கும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தங்க வைத்திருப்பவர்களுக்கு மூன்று வருடத்துக்கு மேலான சிறைத் தண்டனை வழங்குவதற்கும் வழிவகை செய்கிறது.

புதிய சட்ட விதிகளுக்கு அமைய சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு 4276 ஸ்ரேலிங் பவுண் முதல் 8553 ஸ்ரேலிங் பவுண் வரையான தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது. அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுத்து வைப்பதற்கான காலமும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளது. இந்த புதிய சட்ட அமுலாக்கத்திற்கு மனித உரிமைக் குழுக்களும் வத்திக்கானும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார்; 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை டிசம்பருக்கு பிற்போடுமாறு கோரிக்கை

கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் நடைபெறவுள்ள 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை டிசம்பர் மாதத்துக்கு பிற்போடுமாறு வவுனியா மாவட்ட கல்வி வலய பணிப்பாளர் திருமதி ரஞ்சனி ஓஸ்வர்ல்ட் பரீட்சை ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர் பாக பரீட்சை ஆணையாளர் அநுர எதிரிசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவுடனும், கல்வி அமைச்சின் செயலாளருடனும் அடுத்தவாரம் பேசுவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ம் திகதி 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் நாடு முழுவதும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. குறிப்பாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களில் இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களின் சுமார் 6000 மாணவர்கள் இப்பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். கதிர்காமர், அருணாசலம், இராமநாதன், ஆனந்த குமாரசுவாமி போன்ற முக்கிய நான்கு நிவாரணக் கிராமங்கள் உட்பட சுமார் 20 வலயங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4800 மாணவர்களின் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. எனினும் 5ம் ஆண்டு மாணவர்கள் எல்லா வலயங்களிலும் இருப்பதால் குறுகிய காலத்துள் அவர்களை ஒன்றிணைந்து பரீட்சைக்கு ஆயத்தப்படுத்த முடியாத நடைமுறைச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது என்பதுபற்றியும். வவுனியா மாவட்ட பாடசாலைகளில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதால் வவுனியா மாவட்ட, மன்னார் மாவட்ட மாணவர்களும் உடனடியாக பரீட்சைக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளமை பற்றியும் வலய கல்விப் பணிப்பாளர், பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்கவுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைய வேண்டுகோள் ஒன்றை விடுக்குமாறு இது தொடர்பாக அமைச்சருடன் கலந்தாலோசித்து பதிலளிப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

ஏ-9 வீதியூடாக வாரத்தில் 3 தடவை பஸ் சேவை நடைபெற ஏற்பாடு

jaffna_town.jpgயாழ்ப் பாணத்தில் இருந்து ஏ9 வீதி ஊடாக வாரத்தில் மூன்றுதடவைகள் ஐந்து பஸ்கள் சேவையில் ஈடுபட இணக்கம் காணப்பட்டுள்ளது. ஆரம்ப நாள்களில் இந்த நடைமுறை அமுலுக்கு கொண்டு வரப்பட்டாலும் காலப் போக்கில் சேவைகள் வழமைக்கு திரும்பிவிடும்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த இத் தகவலைத் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழகத்துக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சரிடம் மாணவர்கள் எழுப்பியகேள்விகளுக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு அவர் கூறினார். போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாக மாணவர்கள் எழுப்பியகேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்  வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் அன்றி பொதுமக்களின் போக்குவரத்துப் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உள்ளேன். விரைவில் பொதுமக்கள் போக்குவரத்துக்கு ஏ9 பாதையை அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. வாரத்தில் மூன்று தடவைகள்  5 பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்று கூறினார்.

இந்தியத் தூதுவர் யாழ்ப்பாணம் விரைவில் வரவுள்ளார். அப்போது நீங்கள் அவரைச் சந்திக்க விரும்பினால் அதற்கான வாய்பை நான் ஏற்படுத்தி தருவேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தார். துணைவேந்தர் ஊடாக விண்ணப்பித்தால் இந்தியத் தூதரை சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும் என்று அவர் கூறினார்.

சட்டமா அதிபர் மொஹான் இன்று யாழ். சென்றுள்ளார்

சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார் சட்ட உதவி நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்.பொதுநூலககேட்போர் கூடத்தில் இன்று நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான செயலமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றுள்ளார்

நாளை காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட நீதிபதிகளை அவர் சந்தித்து சட்டம், ஒழுங்கு பேணும் செயற்பாடுகள் குறித்து ஆராய்வார்.சட்ட உதவி நிறுவனம் நடத்தும் செயல மர்வில் சிறப்புரையாற்ற சிரேஷ்ட சட்டத் தரணிகளான கனகநாயகம் கனகேஸ்வரன், எஸ்.சுமந்திரன், பரிஸ்டர் ராஜபக்ஷ ஆகியோர் ஏற்கனவே யாழ்ப்பாணம் சென்றுள்ளனர்.