2009

2009

இடம்பெயர் மக்களின் வைத்திய தேவைக்கு மருந்துகள் : சுவிஸ் அரசு சுகாதார அமைச்சிடம் கையளிப்பு

IDP_Camp_Aug09இடம் பெயர்ந்த மக்களின் அவசர வைத்திய தேவைக்குரிய ஒரு தொகுதி மருந்துகளை சுவிற்சர்லாந்து வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு வைத்திய சேவைகளை ஆற்றி வரும் வைத்தியசாலைகளில் அவசரமாகத் தேவைப்படுகின்ற ஒரு தொகுதி மருந்துகளையே சுவிற்சர்லாந்து அரசாங்கம், சுகாதார அமைச்சிடம் வழங்கியுள்ளது.

‘அன்டி பயோடிக்’ மருந்துகளைக் கூடுதலாகக் கொண்ட இந்த மருந்துத் தொகுதி 71 லட்சம் ரூபா பெறுமதியுடையவை என்றும், இடம்பெயர்ந்த மக்களின் வைத்திய தேவைக்கான உதவிகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்ற சுவிற்சர்லாந்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு அமைய 3ஆவது தொகுதியாக இவை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு வெளிவிவகார திணைக்களம், கொழும்பில் உள்ள சுவிற்சர்லாந்து தூதரகத்தின் ஊடாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதுவரையில் இலங்கையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான வைத்திய சேவையில் அவசரமாகத் தேவைப்படும் 180 லட்சம் ரூபா பெறுதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை விரைவாக அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சுவிஸ் அரசு ஆதரிக்கின்றது. அதேவேளை, மனிக்பாம் முகாம்களில் சுதந்திரமாக நடமாட முடியாதவாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் குறித்து கவலைகொண்டிருப்பதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான உதவிகள், மனிதாபிமான பாதுகாப்பு மற்றும் அனைத்து சமூகங்களினதும் பாதுகாப்புக்கான நிறுவன ரீதியான தீர்வுகளுக்கு தனது ஆதரவையும் உதவிகளையும் வழங்குவது என்ற நிலைப்பாட்டை சுவிற்சர்லாந்து இந்த மருத்துவ உதவிகளின் மூலம் மீண்டும் வலியுறுத்துவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இங்கினியாகல பிரதேசம்: போலிக் கச்சேரி நடத்திய பெண் ஆவணங்களுடன் கைது

அம்பாறை இங்கினியாகலப் பிரதேசத்தில் போலிக் கச்சேரி ஒன்றினை நடத்தி வந்த பெண்ணொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று முன் தினம் (30) சுற்றிவளைத்து தேடுதல் நடத்திய போது சந்தேக நபரான பெண் நடத்தி வந்த போலி கச்சேரியிலிருந்து பிறப்பு, இறப்பு, விவாக அத்தாட்சிப் பத்தி ரங்கள், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிரதேச நிர்வாக சேவை அதிகாரிகளின் உத்தியோகபூர்வ இறப்பர் முத்திரைகள் சிலவற்றினையும் கண்டு பிடித்து கைப்பற்றியதாக இங்கினியாகல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசார ணைகளை இங்கினியாகல பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதி காரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மேற் கொண்டு வருகின்றனர்.

ஜப்பானின் புதிய பிரதமர் மிகவும் எளிமையானவர்!

japan.jpgஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள யுகியோ கோடோயாமா மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது. ஜப்பானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜப்பான் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றது. உலகக் போருக்குப் பின்னர் லிபரல் ஜனநாயகக் கட்சியைத் தவிர வேறோரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்றதில்லை என்ற வரலாற்றை, இத்தேர்தல் மூலம் ஜப்பான் ஜனநாயகக் கட்சி முடிவுக்கு கொண்டு வந்தது.

இதனால் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, அக்கட்சியின் தலைவரும், பிரதமருமான டாரோ அஸோ பதவி விலகியுள்ளார். இந்நிலையில் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள ஜப்பான் ஜனநாயக கட்சித் தலைவர் யுகியோ, மிகவும் எளிமையானவர் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து யுகியோவின் மனைவி மியூகி, பிரபல பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தனது கணவர் ஓர் யதார்த்தவாதி என்றும் அவர் மிகவும் எளிமையானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். பார்ப்பதற்கு ஜப்பான் நாட்டவரை போல் அல்லாமல் வெளிநாட்டவரை போல் இருந்தாலும், அவர் மக்களோடு மக்களாக இருப்பவர். அவரை யாரும் எளிதில் சந்தித்து பேச முடியும் என்றும் மியூகி கூறினார். மியூகி, முன்னாள் பிரபல நடிகையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-2015க்குள் செவ்வாய்க்கு ராக்கெட்…

29-chandrayaan.jpgசந்திரா யன்-2 திட்டத்துக்கு பின் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் தொடர்பாக பல விஞ்ஞான அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் கொடுக்கும் திட்டங்களை அடிப்படையாக வைத்து செவ்வாய் கிரக ராக்கெட்டை எப்படி உருவாக்குவது என்பதை முடிவு செய்ய முடியும்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது 2013 முதல் 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். விரைவில் பிரதமர்  மன்மோகன் சிங்கை சந்தித்து சந்திரயான்-1 திட்டம் குறித்து மாதவன் நாயர் விவாதிக்கவுள்ளாராம்.

செயலிழந்து போய் விட்ட 514 கிலோ எடை கொண்ட சந்திரயான்-1 விண்கலம் இன்னும் ஓராண்டுக்கு நிலவின் வட்டப் பாதையில் இருக்கும். அதன் பின்னர் அது படிப்படியாக நிலவின் தளத்தில் மோதி விழுந்து விடும்.

இதற்கிடையே, எந்தவிதமான நிலவுப் பயணங்களும் ஒரு ஆண்டு வரை நீடித்ததில்லையாம். அதிகபட்சம் 6 அல்லது 7 மாதங்கள் வரைதான் நீடித்துள்ளன. ஆனால் சந்திரயான்-1 விண்கலம் கிட்டத்தட்ட 10 மாதங்கள் நிலவைச் சுற்றி வந்தது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.  நிலவின் சுற்றுச்சூழல், சூரிய கதிர்வீச்சு, விண்வெளியில் காணப்படும் பல்வேறு சூழல்கள் ஆகியவற்றைத் தாக்குப்பிடித்து சந்திரயான்-1 இத்தனை காலம் இருந்ததே மிகப் பெரிய சாதனை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒரு ஆட்டின் விலை 1 கோடியே 83 லட்சம்

goats.jpgஆஸ்தி ரேலியா நாட்டில் கடந்த 1980-ம் ஆண்டு ஒரு ஆடு ரூ. 1 கோடியே 17 லட்சத்துக்கு விற்கப்பட்டது.  கடந்த 24 ஆண்டுக்கும் மேலாக அது உடைக்க முடியாத உலக சாதனையாக இருந்தது. கடந்த வியாழக்கிழமை ஸ்காட்டிஸ் நேஷனல் டெக்சல் சந்தையில் ஒரு ஆடு பரபரப்பாக ஏலம் விடப்பட்டது. டெவரன்வாலே என்றழைக்கப்பட்ட அந்த ஆட்டை வாங்க கடும் போட்டி நிலவியது.
 
இறுதியில் கெயர்னஸ் பகுதியை சேர்ந்த ஒருவர் 1 கோடியே 83 லட்சம் ரூபாய் கொடுத்து அந்த ஆட்டை வாங்கினார். உலக சந்தையில் ஒரு ஆடு இவ்வளவு விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும். இந்த ஆடு விற்பனை மூலம் அதன் உரிமையாளருக்கு ரூ. 1 கோடியே 80 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. ஒரு ஆடு இந்த அளவுக்கு விலை போனது டெக்சல் பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி இன்று லிபியா பயணமானார்.

pr-mahi.jpgஇரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று லிபியா பயணமானார்.

லிபிய புரட்சியின் 40 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் பங்குபற்றவுள்ள ஜனாதிபதி லிபியாவின் அரசியல் தலைவர்கள் பலரையும் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி இவ்விஜயத்தின்போது இவ்விழாவில் கலந்து கொள்ளும் பல்வேறு நாட்டு தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா முகாம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : சிவசக்தி ஆனந்தன்

idp tamilsவவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்கள் சிலர் மறுபக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள்மீது ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“வவுனியா இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று தமது உற்றார் உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இத்தருணத்தில், தமது இன்ப துன்பங்களைப் பக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்ததைக் கவனித்த இராணுவத்தினர் அம்மக்கள் மீது மூர்க்கத்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அத்துடன் அங்கிருந்த மக்களை முழந்தாளிட வைத்தும், மண்மூடைகள், முட்கம்பிச் சுருள்கள், கம்பிக்கட்டைகள் ஆகியவற்றைத் தலையில் சுமக்க வைத்தும் தண்டித்துள்ளனர்.முகாமிலுள்ள மக்களை உள்ளக இடம்பெயர்ந்தோராக வெளியுலகுக்குக் காண்பிக்கும் இலங்கை அரசாங்கம், எமது மக்களைக் கைதிகளைப் போன்று நடத்துவதைக் கைவிடவேண்டும்.

மேலும், தாங்கள் விரும்பிய பொழுதெல்லாம் குளித்துத் துணி துவைத்த இம்மக்கள் இன்று இருபது லிட்டர் தண்ணீருக்காக பத்து பதினொரு மணித்தியாலங்கள் வரை வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. இதனால், பெரும்பாலான மக்களின் இரவுகள் முகாம்களிலுள்ள கூடாரங்களுக்கு வெளியே குழாய்க் கிணற்றுக்கருகில்தான் கழிகின்றது. இதற்குத் தக்க மாற்று ஏற்பாட்டினை அரசாங்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்.” இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பில்லியன் டொலர் நிதி சுவிஸ் வங்கியில் வைப்பு;விசாரணையில் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை தகவல்

kp.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமார் மூன்று பில்லியன் பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
பிரான்ஸ், சுவீடன், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் திரட்டப்பட்ட பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது என கே.பி. கூறியுள்ளதாகவும், சுவிஸ்சர்லாந்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு நிதி உதவி கிடைக்கப் பெற்றதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் ஈழம் மலருவதை யாராலும் தடுக்க முடியாது – வைகோ

vaico9999.jpgஇலங் கையில் தமிழ் ஈழம் மலரப் போவது நிச்சயம். அதைத் தடுக்க யாராலும் முடியாது என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் சார்பில் மாமன்னன் பூலித்தேவனின் 294-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடந்தது.

டாக்டர் சேதுராமன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் வைகோ பேசுகையில்,

இந்தியாவில் முதல் சுதந்திர போர் 1857-ம் ஆண்டு நடைபெற்றதாக நம் வரலாறு கூறுகிறது. ஆனால் அதற்கும் 100 ஆண்டுகளுக்கு முன்பே 1750களில் தென் தமிழகத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து பல வீரம் மிகுந்த போராட்டங்களை நடத்தியவர் பூலித்தேவன்.  ஆங்கிலேயருக்கு மிகப்பெரிய சவாலாக திகழ்ந்தவர் பூலித்தேவன். பூலித்தேவன் வரலாறு புத்தகத்தில் இல்லை. இந்த இருட்டடிப்பை ஜெயலலிதா தலைமையில் நாங்கள் முறியடிப்போம்.

இலங்கையில் தமிழர்கள் படும் துயரங்கள் இன்னும் தொடருகிறது. மத்திய- மாநில அரசுகள் அங்கு நடப்பதை வேடிக்கைதான் பார்க்கிறார்கள். இலங்கையில் தமிழ்  ஈழம் மலர்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

பஸ் கட்டணங்களை 7 வீதத்தால் அதிகரிக்க வேண்டியது அவசியம் – தனியார் பஸ் உரிமையாளர் சங்கம்

bus-2222.jpgதனியார் பஸ் கட்டணங்களை 7 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும். 5.3 வீத அதிகரிப்பானது போதுமானதல்ல என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் முதல் தனியார் பஸ் கட்டணங்களை 5.3 வீதத்தினால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே பஸ் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் கோரியுள்ளனர்.