2009

2009

ரெட்டி உடல் – சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள்

004funeral.jpgஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று அவரது சொந்த ஊரான புலிவெண்டுலுவுக்கு கொண்டு வரப்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

முன்னதாக ஹைதராபாத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, கனிமொழி எம்.பி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக அரசின் சார்பி்ல் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஆகியோர் இன்று ஹைதராபாத் சென்று ரெட்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

கர்னூலிலிருந்து கொண்டு வரப்பட்ட ரெட்டியின் உடல் அடங்கிய பெட்டி, அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்கில் அவரது முகாம் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் ராஜசேகர ரெட்டியின் உடல் பேகம்பேட் விமான நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கடப்பாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் ரெட்டியின் கிராமமான புலிவெண்டுலுவை உடல் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி சென்றடைந்தது. இன்னும் சற்று நேரத்தில் இறுதிச் சடங்குகள் தொடங்கவுள்ளன.

மைக்கேல் ஜாக்சன் உடல் 2 மாதத்துக்கு பின் அடக்கம்

04-mj-laid-to-rest.jpgபாப் மன்னன் மைக்கேல் ஜாக்சனின் உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இறந்து சுமார் 2 மாதங்களுக்கு பின் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதில் அவரது உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். பாப் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தால் ஏற்பட்ட சர்ச்சைகள் இரண்டு மாதங்களை தாண்டியும் ஓய்ந்தபாடில்லை.

அதேபோல் தான் அவரது உடல் அடக்கத்திலும் சர்ச்சை எழுந்தது. அவரது உடல் நெவர்லேன்ட் பண்ணையில் அடக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது கைகூடவில்லை. இந்நிலையில் ஜாக்சனின் உடல் அடக்கத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு வடக்கே சுமார் 13 கிமீ., தொலைவில் உள்ள பாரஸ்ட் லான் கிளன்டேல் பகுதியில் இடம் வாங்கப்பட்டதாக நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் அவரது வக்கீல் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்று இரவு நடந்த அவரது உடல் அடக்க நிகழ்ச்சியில் ஹாலிவுட் நடிகை  எலிசபெத் டெய்லர், ஜாக்சனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். 7 மணிக்கு துவங்கவிருந்த இந்த இறுதி அஞ்சலி நிகழ்ச்சி ஜாக்சனின் பெற்றோர்கள் ஜோ மற்றும் காத்ரின் ஜாக்சன் தாமதமாக வந்ததால் சற்று தாமதமாக துவங்கியது. அவர்களுடன் ஜாக்சனின் மூன்று குழந்தைகளும் வந்திருந்தனர். பின்னர் இரவு 8.30 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது.

உலக நாடுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த சிறந்த முன்மாதிரி – வெனிசூலா ஜனாதிபதி பாராட்டு

mainpic.jpgஒரு போதும் தோற்கடிக்க முடியாதென உலக நாடுகளால் கருதப்பட்ட எல். ரி. ரி. ஈ. அமைப்பினை தோற்கடித்திருப்பதன் மூலம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதம் நிலவும் நாடுகளுக்கு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்வதாக வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் தெரிவித்துள்ளார்.

லிபியாவின் 40வது சுதந்திர தின வைபவத்தில் கலந்து கொள்வதற்காக அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று முன்தினம் (02) அங்கு வைத்து சந்தித்த போதே நேற்று தனது கருத்தை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இருவருக்குமிடையிலான பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரம் பேணப்படும் முறையை உலக நாடுகளுக்கு விளக்குவதற்கு இதுவே சிறந்த தருணமெனக் கூறிய வெனிசூலா ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கை கனியவள உற்பத்தியில் முன்னணியில் திகழும் நாடாக வருமெனவும் இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார ரீதியான உறவு வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இச்சந்திப்பின் போது தெளிவுபடுத்தினார்.

இலங்கை பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையமாகும். அந்த வகையில் கிழக்கு மற்றும் மேற்குலக நாடுகளின் சிறந்த பொருளாதார மையமாக விளங்குவதனையும் வெனிசூலா ஜனாதிபதி சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெனிசூலா ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார். இரு நாடுகளுக்குமிடையிலான இரு தரப்பு சந்திப்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, மற்றும் அதிகாரிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இலங்கை ராணுவத்தின் கொடூரச்செயல்: அமெரிக்கா கண்டனம்

susan-rice1111.jpgஇலங்கை தமிழர்களின் கைகளையும் கண்களையும் கட்டி, நிர்வாணமாக்கி சுட்டுக் கொன்ற வீடியோ காட்சிகளை இங்கிலாந்து டி.வி. சமீபத்தில் வெளியிட்டது.  இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்போதைய தலைவருமான சூசன் ரைஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், ‘தமிழர்களை சுட்டுக் கொன்றதாக வெளியான படக்காட்சிகள் மிகவும் துயரமளிப்பவையாக உள்ளன. அவை மிகவும் கண்டனத்துக்குரியவை. அமெரிக்காவின் சொந்த தேசிய பொறுப்புணர்வின் அடிப்படையில் இது தொடர்பாக மேலும் பல தகவல்களை நாங்கள் திரட்டுவோம் என்றார்.

அமெரிக்க பகிரங்க டென்னிஸ்; பெடரர், வீனஸ், செரீனா 3 வது சுற்றுக்கு தகுதி

serena-williams.jpgஅமெரிக்கப் பகிரங்க டென்னிஸ் போட்டியில் பெடரர், வீனஸ், செரீனா, நடால், ஜிலிஸ்டர்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் 3 வது சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அதன் விபரம் வருமாறு,

உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் 6-3, 7-5, 7-5 என்ற நேர்செட் கணக்கில் ஜெர்மனியை சேர்ந்த சைமனை தோற்கடித்தார். மற்ற ஆட்டங்களில் மார்ட்டின் டெல போட்ரோ (அர்ஜென்டினா) லைடன் ஹெவிட் (அவுஸ்திரேலியா) டேவிட் பெரர் (ஸ்பெயின்) ஆகியோர் வென்றனர். 3 ம் நிலை வீரரான ரபெல் நடால் 2 வது சுற்றுக்கு முன்னேறினார்.

வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸ், செரீனா 3 வது சுற்றுக்கு தகுதி பெற்றனர். இரண்டாம் நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-1, 6-1 என்ற நேர் செட்கணக்கில் மெலின்டாவை (ஹங்கேரி) தோற்கடித்தார்.

மூன்றாம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டைச் சேர்ந்த பெதானியை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் முன்னாள் முதனிலை வீராங்கனையான கிம் கிலிஸ்டர்ஸ் (பெல்ஜியம்), ஜூவானேரவா (ரஷ்யா) டேனிலா (சுலோவாக்கியா) ஆகியோர் வென்றனர்.

இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சானியா மிர்சா 2 வது சுற்றில் தோல்வி அடைந்தார். அவர் 0-6, 0-6 என்ற கணக்கில் உலகின் 10 ஆம் நிலை வீராங்கனையான பிளவியாவிடம் தோற்றார். இதேபோல 17 ஆம் நிலை வீராங்கனையான அமெய்லி மவ்ரஸ்மோவும் அதிர்ச்சி கரமாக தோற்றார்.

உலகப் புலனாய்வு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனர்

உலகப் புலனாய்வு அமைப்புக்களைச் சேர்ந்த சில அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  அண்மையில் அமெரிக்காவிற்கு சென்ற நபர் ஒருவர் இந்த புலனாய்வு அதிகாரிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இதற்கு முன்னரும், ரஸ்ய ஆயுத விநியோகஸ்தர்கள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை மற்றும் இடம்பெயர் முகாம்களில் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரிகளே இவ்வாறு நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாகவும், இலங்கைக்கு எதிரான தகவல்களை திரட்டும் நோக்கில் இவர்கள் ஊடுருவியுள்ளதாககவும் குறிப்பிடப்படுகிறது.

வெளிநாடுகளில் தலைதூக்கியிருக்கும் புலி செயற்பாடுகளை ஒடுக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய

வெளிநாடுகளில் தலை தூக்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது. சில மேற்குலக நாடுகளுடன் இணைந்து புலி செயற்பாட்டாளர்கள் நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குறிப்பாக சில மேற்குலக நாடுகள் இலங்கையின் உள் விவகாரத்தில் தலையீடு செய்யும் நோக்கில் புலி செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவளித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெறும் ஆதரவு ஆரோக்கியமானதல்ல என கட்சியின பொதுச் செயலாளர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
 
மேற்குலக நாடுகள் புலம்பெயர் தமிழர்களை பயன்படுத்தி இலங்கைக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தில் ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் – கோதபாய ராஜபக்ஷ

யுத்தம் காரணமாக ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என கோதபாய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நாட்டை பாதுகாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட படைவீரர்களை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் கைவிடாதென குறிப்பிட்ட அவர், ஊனமுற்ற படைவீரர்களை வாழ் நாள் முழுவதும் பராமரிப்பதற்கான விசேட செயற் திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
படைவீரர்களுக்காக அமைக்கப்பட்ட வீடுகளை ஒப்படைக்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பு ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதல்ல – ஊடகத்துறை அமைச்சர் விளக்கம்

anurapriyadarsanayapa.jpgதிஸ்ஸ நாயகம் ஓர் ஊடகவியலாளர் என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அவருடைய செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நீதிமன்றத்தால் அவருக்கு வழங்கப்பட்ட 20 வருட கடூழிய சிறைத் தண்டனை ஊடக சுதந்திரத்துக்கு எதிரானதல்ல என தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷய யாபா தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற  அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நாட்டில் சட்டம் யாருக்கும் பொதுவானது. அனைவருக்கும் பார்க்கக்கூடிய வகையில் பகிரங்கமான முறையிலேயே அவருக்கெதிரான விசாரணைகள் நடைபெற்றன.

பயங்கரவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த விசாரணையின் அடிப்படையிலேயே அவருக்கு தற்போது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். அவருக்கு இதற்கு மேலும் மேன்முறையீடுகளைச் செய்யலாம். அந்த அளவுக்கு நாட்டில் நீதிச் சுதந்திரம் உள்ளது.

சட்டத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக்கொண்டு அது ஊடக சுதந்திரத்தை பாதிப்பதாகக் கூறுவதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாட்டில் ஊடகச் சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூற முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கி.மா. இறைவரி திணைக்களத்தின் அம்பாறை பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு

epcm.jpgகிழக்கு மாகாண இறைவரித் திணைக்களத்தின் அம்பாறை பிராந்திய அலுவலகத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் திறந்து வைத்தார்.கிழக்கு மாகாண சபையில் இறைவரி தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்;டதையடுத்து மூன்று  மாவட்டங்களிலும் இவ் அலுவலகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான நிகழ்வில் மாகாண அமைச்சர்களான எம்.எஸ். உதுமாலெப்பை, துரையப்பா நவரட்ணராஜா மற்றும் இறைவரித் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த நாட்களாக அம்பாறை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயததை மேற் கொண்டுள்ள முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பொன்றில் கலந்து கொண்டார். அவ் வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் கல்வி அபிவிருத்தி மற்றும் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இச் சந்திப்பின் போது அவர் கேட்டறிந்து கொண்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆரர்யும் கூட்டமொன்றிலும் அவர் கலந்து கொண்டு உரையாற்றினார். இக் கூட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தலைவர்கள் ,உறுப்பினர்கள் ,அதிகாரிகள் மற்றும் மாகாண அமைச்சர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.