2009

2009

அரசாங்க சேவை வெற்றிடங்கள் இவ்வாண்டு இறுதிக்குள் நிரப்பப்படும்

sarath-amunugama.jpgஅரசாங்க சேவை வெற்றிடங்கள் அனைத்தும் இவ்வருட இறுதிக்குள் நிரப்பப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார்.

அரச சேவை ஆணைக்குழுவிடமிருந்து அதற்கான அதிகாரங்கள் பொது நிர்வாக அமைச்சுக்குக்கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதற்கிணங்க நாடளாவிய ரீதியிலுள்ள கிராம சேவகர் வெற்றிடங்கள், நிர்வாக சேவை மற்றும் முகாமைத்துவ இணைந்த சேவையிலுள்ள வெற்றிடங்களும் நிரப்பப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அரச சேவையில் வெற்றிடங்களை நிரப்புதல், இடமாற்றங்கள், சேவைகளுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்றவற்றில் அமைச்சு தற்போது கவனம் செலுத்தி வரு கிறது.

இந்த வகையில் முகாமைத்துவ இணைந்த சேவைக்கு 3,000 பேரையும் கிராம சேவகர்களாக 1,000 பேரையும் இலங்கை நிர்வாக சேவைக்கு 300 பேரையும் நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவர்களுக்கான பரீட்சைகள் நடத்துவது தொடர்பில் இம்முறை செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி உள்ளகப் பரீட்சைகள், பரீட்சைகள் திணைக் களத்தினாலன்றி அமைச்சின் மூலம் இலங்கை நிர்வாக சேவை கல்வி நிறுவனத்தில் நடை பெறவுள்ளது. மேற்படி திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலண்டர் ஒன்றை தயார்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

முகாமைத்துவ சேவை தொடர்பில் கரு த்துத் தெரிவித்த அமைச்சர் அமுனுகம, அரச நிர்வாக சேவையிலிருந்து மாகாண சபைகளுக்குச் சென்றுள்ளவர்கள் அங்கு ஐந்து வருடங்களை நிறைவு செய்ததும் அவர்கள் மீள நிர்வாக சேவையில் இணைத்துக் கொள்ளத்தக்கதாக கட்டாயப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் அரச சேவை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நட த்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இவ் விடயத்தில் நடைமுறையிலுள்ள முறைமைகள் கட்டாயப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

கிராம சேவகர்களை நியமிக்கும் விடயத்தில் சமுர்த்தி அதிகாரிகள் தத்தமது பகுதிகளில் தம்மை கிராம சேவகர்களாக நியமிக்கக் கோருகின்றனர்.  எனினும் இதுவிடயத் தில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி முடிவொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிதிகள் மூலம் நாட்டில் பாரிய அபிவிருத்தி பணிகள் மக்களின் சட்டைப் பைகளுக்குள் இடப்பட்டுள்ளது – லக்ஷ்மன் யாப்பா

laxman_yapa_abeywardena.jpgவெளிநாடு களிலிருந்து கிடைக்கப் பெற்ற நிதியினைக் கொண்டு பாரிய அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், இதன் மூலம் அந்த நிதி யாவும் மக்களின் சட்டைப் பைக்குள்ளேயே இடப்பட்டிருப்பதாகவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறுவதைப் போல், வெளிநாட்டு நிதியை அரசாங்கம் பைக்குள் போட்டுக் கொள்ளவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணத்தைப் பயன்படுத்தியுள்ளதாகவும் 2010 ஆம் ஆண்டில் நாட்டின் சகல குடியிருப் புகளுக்கும் 90% மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை (16) நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அபிவிருத்தி நிதி அரசின் ‘பொக்கெட்டு’ க்குப் போகவில்லை. சகல வீடுகளுக்கும் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் வெளிநாட்டு நிதியே பயன்படுகிறது. ஐந்து துறைமுகங்கள் அபிவிருத்தி செய்யப்படுகி ன்றன. 2007-2017 ஆண்டு வீதி அபிவிருத்திக்கென 484,378.5 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேல், வட மத்திய, வட மேல், ஊவா மாகாண வீதி அபிவிருத்திக் கென கடந்த வருடம் 10671 மில்லியன் செல விடப்பட்டுள்ளது. மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய 298065 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்துத் துறையை மேம்படுத்த 154445 மில்லியன் ரூபாவும், கிராமிய உட்கட்டமைப்புகளை மேம்படுத் தவென 35717 மில்லியன் ரூபாவும் முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.  துறைமுகங்களின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விபரங்களை யும் அமைச்சர் வெளியிட்டார்.

டெங்கு : இதுவரை 253 பேர் பலி

dengue22222.jpgநாடெங் கிலும் இவ்வருடம் 253 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் இது வரை 48 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி 36, கொழும்பு 30,கேகாலை 22, மட்டக்களப்பு 17, குருநாகல் 17 என்ற எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் தேசிய ரீதியாக இது வரை 25 ஆயிரத்து 777 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.  கண்டி 3507 பேர், கேகாலை 3417 பேர், கொழும்பு 3325 பேர், கம்பஹா 30233 பேர், குருனாகல் 2447 பேர் எண்ற எண்ணிக்கையில் மாவட்ட ரீதியாக டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டோர் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஷவ்வால் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு

ramadan-mosque.jpgஹிஜ்ரி 1430 ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை மறுதினம் (19) சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.09 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கின்றது.

அவ்வாறு ஷவ்வால் மாதத்திற்கான தலைப் பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 0112390783, 2432110, 2434651, மற்றும் 0777366099 தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறி யத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலமாக்கள், கதீப்மார்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஸாவியாக்கள், தக்கியாக்கள் ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

தேசிய அபி. ஊடக நிலையம்: 24 மணி நேரமும் இயங்க ஏற்பாடு; புதிய குழுவும் நியமனம்

laxman_yapa_abeywardena.jpgதேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தை 24 மணி நேரமும் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இதற்காக, நிலையத்தின் பணிப்பாளர் நாயகமாக ஆரிய ரூபசிங்கவை ஜனாதிபதி நியமித்துள்ளாரென்றும் 36 பேர் கொண்ட உத்தியோகத்தர் குழுவொன்று நியமிக்கப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார். தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான அபிவிருத்திப் பணிகள் தொடர்பான தகவல்களையும் இந்த ஊடக மத்திய நிலையம் திரட்டுவதோடு, ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு முன்பதாக அபிவிருத்தி தொடர்பான அனைத்துத் தகவல்களும் ஜனாதிபதிக்குப் பெற்றுக்கொடுக்கப்படும்.

அதேநேரம், தகவல்களை வழங்குவதற்கும், பெற்றுக் கொள்வதற்கும் இந்த நிலையத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார்.

அரச துறைகளில் நியமிக்கப்பட்ட 44,000 பட்டதாரிகளுக்கும் பொருத்தமான பதவிகள்

sarath-amunugama.jpgஅரசாங் கத்தால் பல்வேறு துறைகளிலும் நியமிக்கப்ப ட்ட 44,000 பட்டதாரிகளுக்கும் அவர்களுக்குப் பொருத்தமான பதவிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.

இவர்கள் பட்டதாரிகள் நியமனத்திற்கான சம்பளத்தைப் பெற்றுக் கொள்கின்ற போதும் சகல வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் சேவையை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், அரச துறையில் ஆங்கில மொழி தேர்ச்சியுள்ள சுருக்கெழுத்தாளர்களுக்கு மிகவும் தட்டுப்பாடு நிலவுகிறது. அவ்வாறு திறமையுள்ளவர்களும் அரசதுறைக்கு வர விரும்புவதில்லை. தனியார் துறைகளில் அதிக சம்பளத்தை எதிர்பார்த்து செல்கின்றார்கள்.

மேற்படி 44,000 பட்டதாரிகளில் பெருமளவிலானோர் ஆசிரியர்களாகவே தொழில் புரிகின்றனர். இவர்கள் கூடிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டு சாதாரண ஆசிரியர்களாகவே சேவையாற்றுகின்றனர். இவர்களை அவர்களுக்குப் பொருத்தமான பதவிகளில் நியமிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகளிடம் இந்தியா தோற்கிறது: மன்மோகன் சிங்

170909ndianmaoistnaxal.jpgஇந்தியா வில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போரில் தாங்கள் தோல்வியடைந்து வருவதாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கிளர்ச்சியாளர்களின் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இந்திய சமூகத்தில் பெரும்பாலானவர்களிடையே மாவோயிஸ்டுகளுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், மாநில காவல்துறை தலைவர்களிடையே உரையாற்றிய போதே மன்மோகன் சிங் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ஏழைகளின் உரிமைகளுக்காக தாங்கள் போராடி வருவதாக கிளர்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் மத்தியப் பகுதியில் பெருமளவிலான நிலப்பரப்பில் அவர்கள் செயற்பட்டு வருகிறார்கள். சில இடங்களில் கிட்டத்தட்ட உள்ளூர் ஆட்சியையும் அவர்களே நடத்தி வருகிறார்கள்.

மீண்டும் புத்துணர்வு பெற மாவோயிஸ்டுகள் எடுத்துவரும் போராட்டங்களின் காரணமாக கடந்த இருபது ஆண்டுகளில் ஆறாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

யாழ் தொழில்நுட்பக் கல்லூரியின் தேவைகள் விரைவில் பூர்த்தி செய்யப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி

170909daglas-dewa.jpgயாழ் தொழில்நுட்பக் கல்லூரியின் பிரச்சினைகள் யாவும் கூடிய விரைவில் தீர்க்கப்படுமெனவும் தேவைகள் யாவும் படிபடிப்யாகப் பூர்த்தி செய்யப்படுமெனவும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இக்கல்லூரியில் இடம்பெற்று வரும் நிர்வாகச் சீர்கேடு மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் (16) கல்லூரியின் நிர்வாகத் தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

விரிவுரையாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் உட்பட ஊழியர்களின் ஊதியப் பிரச்சினை தொடர்பில் தான் உடனடி கவனஞ் செலுத்தி வருவதாகவும் ஏனைய அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் தொழிற்பயிற்சி அமைச்சருடனும் உரிய அதிகாரிகளுடனும் கலந்துரையாடி விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்ää

யாழ் தொழில்நுட்பக் கல்லூரியானது எமது சமூகத்தின் முன்னேற்றம் கருதி செயற்பட வேண்டுமே அன்றி இவ்வாறான நிலைக்கு அது தள்ளப்படக்கூடாது. அதனை நான்; ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இக்கல்லூரி ஒழுங்குறப் பராமரிக்கப்படாமையே இன்று இந்தக் கல்லூரியின் பாரிய பின்னடைவுக்குக் காரணம்;

இக்கல்லூரியை முன்னேற்ற அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும.; கல்லூரியில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு தொழிற்பயிற்சி அமைச்சில் இருந்து அதிகாரி ஒருவர் வரவுள்ளார்; அந்த விசாரணையின்போது அனைவரும் சுதந்திரமாகத் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆறு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈரான்

170909iran-flag.jpgஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும்,  6 நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் துருக்கியில் நடைபெறவுள்ளதாக  ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை வகுக்கும் பிரிவின் தலைவர் ஜாவியர் சொலோனர் தெரிவித்தார்.  இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா,  ரஷ்யா, பிரிட்டன்,  பிரான்ஸ்,  சீனா மற்றும் ஜேர்மனியின் பிரதிநிதிகள் பங்கேற்பர். ஈரான் சார்பில் அதன் அணுசக்தித் திட்ட முக்கிய அதிகாரியான சய்யீத் ஜலிலி பங்கேற்பார்.

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான இந்தப் பேச்சுவார்த்தையின் போது உலக நாடுகளுடனான வர்த்தகம்,  பொருளாதாரத் தடை குறித்த விஷயங்களும் விவாதிக்கப்படும் என்றார் அவர். அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ற பிறகு, ஈரானுடன் நடைபெறவிருக்கும் முதலாவது உயர் நிலையிலான பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஈரான் விஷயத்தில் வெளிப்படையான கொள்கையைப் பின்பற்றுவதற்கான முயற்சிகளை ஒபாமா மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய ராஜீயத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடைசியாக கடந்த ஆண்டு,  ஜூலை மாதம் ஜெனீவாவில் ஈரானுக்கும்,  அமெரிக்கா உள்ளிட்ட உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு பாரிய சதித்திட்டம் அரங்கேற்றம் – அரசாங்கம்

dallus_allahapperuma.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கி ஆட்சிமாற்றத்தைக் கொண்டுவருவதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் திட்டமிடப்பட்ட பாரிய சதித்திட்டம் ஒன்று அரங்கேற்றப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை முன்வைத்தார்.

உள்நாட்டில் உள்ள அரசியல்வாதிகள் இருவர் மற்றும் இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு தூதுவர்கள் மேலும் தூதுவராக பதவி வகித்துவிட்டு சென்றவர்கள் என பலர் இந்த சதித்திட்டத்தில் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் மேலும் பல தகவல்களை வெளியிடுவோம் என்று ஸ்ரீலங்கா சதந்திர கட்சியின் பொருளாளரும் போக்குவரத்து அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற விவகாரங்களை முன்வைத்து சர்வதேச மட்டத்தில் அழுத்தங்களை பிரயோகித்து ஜனாதிபதியை அந்த பதவியிலிருந்து நீக்கி ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. எனவே நாட்டைக் காட்டிக்கொடுத்து அதிகாரத்தை கைப்பற்ற முயற்சிக்கவேண்டாம் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்