2009

2009

இஸ்ரேலிய – பாலத்தீன தலைவர்களை ஒபாமா கூட்டாக சந்திக்கிறார்

210909_flatboyafp.jpgமத்திய கிழக்கு சமரச பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்கும் நோக்கமாக இஸ்ரேலியப் பிரதமர் பின்யாமின் நெதன்யாகு மற்றும் பாலத்தீன அதிபர் மஹ்முத் அப்பாஸ் ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஒபாமா அவர்கள் கூட்டு சந்திப்பு ஒன்றை செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளார்.

நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டம் நடக்கும் போது இந்தச் சந்திப்பும் நடக்கும். உடனடியாக இந்த விடயத்தில் ஒரு பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுவிடும் என்பது தொடர்பில் அனைத்து தரப்பும் நம்பிக்கையற்றே இருக்கின்றன.

இஸ்ரேலுக்கு அதிபர் அப்பாஸ் அவர்கள் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களையும் செய்துவிடக் கூடாது என்று போட்டி பாலத்தீனக் குழுவான ஹமாஸ் எச்சரித்துள்ளது. அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான ஜோர்ஜ் மிட்சேல் அவர்கள் மத்திய கிழக்குக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் பகிரங்கமான முன்னேற்றங்கள் எதுவும் தெரியாததை அடுத்து, தற்போது இந்தச் சந்திப்பு நடக்கவிருக்கிறது.

உலக அமைதி நாள் (International Day of Peace) – புன்னியாமீன்

international_day_of_piece.jpgஉலக அமைதி நாள் (International Day of Peace)  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் பிரகடனத்தின் மூலம் ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகளின் சபையின் சகல உறுப்பு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தினம் 1981இல் இருந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க் கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. 2002 ஆம் ஆண்டில் இருந்து இத்தினம்  செப்டம்பர் 21இல் கொண்டாடப்படுகிறது. அமைதி என்பதற்குப் பல பொருட்கள் தமிழில் உள்ளன. குறிப்பாக யுத்தம் பகைமை, வன்முறை என்பவற்றுக்கு எதிர்ச் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலப் பயன்பாட்டில் அமைதி என்பது, பகைமை இல்லாத ஒரு நிலையைக் குறிக்கும் ஒரு கருத்துருவாகும். சர்வதேச ரீதியில் இது போர் இல்லாத நிலையையும் குறிக்கும். மகாத்மா காந்தியின் கூற்றுப்படி,  ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், சமூகநீதி இன்மை காரணமாக அங்கே அமைதி இருப்பதாகக் கூறமுடியாது. காந்தி, அமைதி குறித்த ஒரு நோக்கைக் கொண்டிருந்தார். நீதி என்பது அமைதிக்கு அடைப்படையானதும் கட்டாயமானதுமான அம்சம் என்று அவர் கருதினார். இதன்படி, அமைதிக்கு வன்முறை இல்லாமை மட்டுமன்றி, நீதி இருக்கவேண்டியதும் அவசியம்.

உலகின் சகல முன்னேற்றத்திற்கும் அடிப்படையானது சமாதானமாகும். வரலாற்றில் பல யுத்தங்கள் நடை பெற்றுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் இரு பெரும் உலக மகா யுத்தங்கள் கோடிக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் பழி கொண்டுள்ளன. 2ஆம் உலக மகா யுத்தத்தின் பின் உலக  சமாதானத்திற்காக 1945 இல் நிறுவப்பட்ட ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உலக நாடுகளிடையே பூசல்களையும், போர்களையும் தடுக்க உயரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கூட துப்பாக்கிகளுக்கும் குண்டுகளுக்கும் ஓய்வு கொடுக்க முடியவில்லை. உலகின் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் பாரிய பணி யுனெஸ்கோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உலக சமாதான முயற்சியொன்றின் போது ஐ.நாவின் பொதுச் செயலாளர் ஹாமர்சீல்ட் விமான விபத்தில் உயிர் துறந்தமை 1961 வரலாற்றுச் சுவடாகும். அவர் உயிர் துறந்த செப்டம்பர் மூன்றாம் வாரத்தின் செவ்வாய்க் கிழமையிலாகும்.

யுனெஸ்கோவின் முகவுரை வாசகம் “மனித உள்ளங்களில் தான் போர் தோன்றுவதனால் மனித உள்ளங்களில் தான் அமைதிக்கான அரண்களும் அமைக்கப் பெறல் வேண்டும்” என்பதாகும். விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் தான் அதனைப் பெற முடியும்” என்றார். இந்நோக்கத்தில் யுனெஸ்கோவின் பொறுப்பும் பணியும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். யுனெஸ்கோவின் சட்ட யாப்பின் 1வது உறுப்புரை பின்வருமாறு கூறுகின்றது. உலக மக்களை இனம், பால், மொழி, அல்லது சமய பேதமின்றி ஐ.நா சாசனத்தின் உறுதி செய்யப்படுகின்ற நீதிக்கும் சட்ட ஆட்சிக்கும் மனித உரிமைகளுக்கும், அடிப்படை சுதந்திரங்களுக்கும், உலகளாவிய நன்மதிப்பினை வளர்ப்பதற்கென கல்வி, அறிவியல்,  பண்பாடு மூலமாக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். அதாவது யுனெஸ்கோவின் பணி, கல்வி, அறிவியல, பண்பாட்டுத் தொடர்களின் வழியாக உலக சமாதானம், மனித இனத்தின் பொது நலன் ஆகிய குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும். ஐ.நா அமையமும்,  ஐ.நா சாசனமும் இக்குறிக்கோள்களின் பேரிலேயே நிறுவப் பெற்றுள்ளது.

மனித உரிமைகளையும்,  கடமைகளையும் செயற்படுத்துவதற்கு இன்றியமையாது தேவைப்படுவது சமாதானமாகும். அதாவது குடிமக்கள் அனைவரும் முதன்மை பெறும் ஒருங்கிணைந்து வாழும் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான,  நியாயமான  சட்ட ஆட்சியுடைய சமத்துவம்,  ஒருமைப்பாடு  என்பது தான் சமாதானம் ஆகும். சமாதானம்,  மேம்பாடு, சனநாயகம் போன்ற மூன்றும் ஒன்றுக்கொன்று உருதுணைபுரியும் முக்கோணங்களாகும். அவை ஒன்றையொன்று வலுப்படுத்துகின்றன.

மிக அண்மையில் வடகொரியா நடத்திய அணு ஆயுத சோதனை காரணமாக உலகின் அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக  அவர், அணு ஆயுத வல்லமை மற்றும் ஏவுகணைத் திறனை மேம்படுத்திக் கொள்ள வடகொரியா மேற்கொள்ளும் முயற்சிகள் ஐ.நா. பாதுகாப்பு பேரவை விதிகளை மீறுவதாகவே உள்ளது. இதனால் சர்வதேச சமூகத்தின் அமைதிக்கும்,  பாதுகாப்புக்கும் வடகொரியா பெரும் அச்சுற்றுத்தலாகவே விளங்குகிறது. சர்வதேச விதிகளை மீறி அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இதுமட்டுமின்றி குறுகிய தூர இலக்குகளை தாக்கும் ஏவுகணையையும் அந்நாடு இன்று சோதித்துள்ளதாகத் தெரிகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் அனைத்து நாடுகளுக்கும் பலத்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக ஒபாமா கூறியுள்ளார்.

ஒபாமா வடகொரியாவை மையமாகக் கொண்டு இக்கருத்தினை வெளியிட்டாலும் கூட உலகில் அணுஆயுதங்களுக்கு ஐக்கிய அமெரிக்க நாடுகள்,  ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்), சீனா, பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் உரிமை கொண்டாடிக் கொண்டுள்ளன. உலக அமைதியை வலியுருத்தும் நாடுகள் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையையே தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நாடுகள் கூட பாதுகாப்பு என்ற போர்வையில் அணு ஆயுதற்கள் உற்பட ஆயுத பலத்தை பெருக்குகின்றன அன்றி அவற்றை முடிவுக்குக் கொண்டு வருவது காணமுடியாமல் இருப்பதும் விந்தைக்குரிய விடயமே.

கடந்த ஐந்து தசாப்தங்களாக பயங்கரவாதம் என்ற போர்வையிலும் அமைதிக்கான அசசுருத்தல்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. சமாதானம் கோட்பாடு மட்டுமல்ல, அது செயற்பாடு செயல்பட்டால்தான் சமாதானம் அர்த்தமுள்ளதாகும். அறிஞர் கார்லோஸ் பியூண்டஸ் கூறுவது போல “சமாதானம் என்பது மாறுபாடுகளின் சேர்க்கை. கலாசாரங்களின் இனக்கலப்பு. அது அருவக்கோட்பாடு அல்ல. மாறாக, பண்பாட்டு அரசியல் சமூக,  பொருளாதார சூழல்களில் ஆழ வேரூண்றிய ஒன்றாகும்”.

இன்று தகவல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விரல் நுனியின் சிறு அசைவினால் எண்ணற்ற தகவல்களைப் பெற்று பெருமிதம் அடைகிறோம். ஆனால், இந்த முன்னேற்றம் கோடிக்கணக்கான இளைஞர்களின் உயிர்களைப் பலிகொண்டு அப்பாவி மக்களின் வாழ்வை அழித்தொழிக்கும் போர்களுக்கு மாற்றீடாக அமையவில்லை. போரினதும், சமாதனத்தினதும் சொல்லொனாத் துயரங்களை வீடுவீடாகக் கொண்டு செல்லும் ஒலி,  ஒளி ஊடகங்களால் போரின் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் உணர்வினை சமாதான உணர்வாக மாற்ற முடியுமானால் அது உலகளாவிய கிராமத்தின் (Global Village)  மிக உன்னத சாதனையாக அமையும்.

நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்த காலம் முதல் சமாதானத்திற்காக பங்களிப்ப வழங்கியோருக்கும் நிறுவனங்களுக்கும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுக் கொண்டே உள்ளன.கடந்த மூன்று தசாப்த காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றோர் விபரங்கள் வருமாறு

2008 மார்ட்டி ஆட்டிசாரி (Martti Ahtisaari),
2007 ஆல் கோர் (Al Gore), காலநிலை மாற்றல் பல அரசு சபை (Intergovernmental Panel on Climate Change)
2006 முகமது யூனுஸ் (Muhammad Yunus), கிராமின் வங்கி (Grameen Bank)
2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency), மொகம்மது எல்பரதேய் (Mohamed ElBaradei)
2004 வங்காரி மாதாய் (Wangari Maathai)
2003 ஷிரின் எபாடி (Shirin Ebadi)
2002 ஜிம்மி கார்டர் (Jimmy Carter)
2001 ஐ.நா. (United Nations), கோஃபி அணான் (Kofi Annan)
2000 கிம் டே-ஜுங் (Kim Dae-jung)
1999 எல்லைகளில்லா மருத்திவர்கள் அமைப்பான மெடிசின்ஸ் சாண்ஸ் ஃப்ராண்டியர்ஸ் (Médecins Sans Frontières)
1998 ஜான் ஹ்யூம் (John Hume), டேவிட் ட்ரிம்பில் (David Trimble)
1997 கன்னிவெடிகளை தடைசெய்யக்கோரிய உலகலாவிய பிரச்சாரம் (International Campaign to Ban Landmines, ஜோடி வில்லியம்ஸ் (Jody Williams)
1996 கார்லோஸ் ஃபிலிபெ சிமிணெஸ் பெலோ (Carlos Filipe Ximenes Belo), ஜோஸ் ராமோஸ்-ஹார்தா (José Ramos-Horta)
1995 ஜோஸஃப் ரோட்ப்ளாட் (Joseph Rotblat), அறிவியல் மற்றும் உலக நாடுகள் உறவு பற்றிய பக்வாஷ் கருத்தரங்குகள் (Pugwash Conferences on Science and World Affairs)
1994 யாசர் அராஃபத் (Yasser Arafat), ஷிமோன் பெரேஸ் (Shimon Peres), இட்ஷாக் ரபின் (Yitzhak Rabin)
1993 நெல்சன் மண்டேலா (Nelson Mandela), F.W. டி க்ளார்க் (F.W. de Klerk)
1992 இரிகபெர்டா மென்ஷூ டும் (Rigoberta Menchú Tum)
1991 ஆங் ஸாங் சூ கி (Aung San Suu Kyi)
1990 மிக்கெயில் கார்பஷெவ் (Mikhail Gorbachev)
1989 14வது தளாய் லாமா (The 14th Dalai Lama)
1988 ஐ.நா. அமைதி காக்கும் படை (United Nations Peacekeeping Forces)
1987 ஆஸ்கார் ஏரியேஸ் சான்செஸ் (Óscar Arias Sánchez)
1986 எளீ வெய்செல் (Elie Wiesel)
1985 அணுவாயுத போர் தடுக்கும் பன்னாட்டு மருத்துவக்குழு (International Physicians for the Prevention of Nuclear War)
1984 டெஸ்மாண்ட் டூட்டூ (Desmond Tutu)
1983 இலெய்ச் வலெய்சா (Lech Walesa)
1982 ஆல்வா மிருதால் (Alva Myrdal), அல்ஃபோன்ஸோ கார்சியா ரௌபிள்ஸ் (Alfonso García Robles)
1981 ஐ.நா. அகதிகள் ஆணைய உயரதிகாரி அலுவலகம் (Office of the United Nations High Commissioner for Refugees)
1980 அடோல்ஃபோ பெரீஸ் எஸ்க்யுவெல் (Adolfo Pérez Esquivel)
1979 அன்னை தெரேசா (Mother Teresa)
1978 அன்வர் அல் சதாத் (Anwar al-Sadat), மென்கெம் பெகின் (Menachem Begin)

அண்மையில் வத்திக்கான் வானொலியில் அடுத்த ஆண்டு உலக அமைதி நாள் தின விழாவுக்கு திருத்தந்தை மையக்கருத்தொன்றை வழங்கியிருந்தார். அக் கருத்தின்படி  ‘அமைதியைக் காக்கவேண்டுமென்றால் இயற்கையைப் பாதுகாக்கவேண்டும். இதனடிப்படையிலேயே 2010 ஆம் ஆண்டில் உலக அமைதி தினம் கொண்டாடப்படும்” . இங்கு இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதற்கும், உலக அமைதிக்கும் உள்ள தொடர்பைக் காணுமாறு திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.  சுற்றுப்புறத்தைப் பாதிக்கும் செயல்களும் இயற்கையைப் பயன்படுத்தும் முறையும் வெப்பமாற்றமும் மக்கள் தொகையும் தொடர்புடையவை எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் தெரிவித்துள்ளார். இந்த சவால்களை நீதியின் அடிப்படையில், சமூகச் சமத்துவக் கண்ணோட்டத்தோடு மக்களுக்கு நலம் பயக்கும் எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார். சுற்றுப்புரத்தைப் பாதுகாப்பது அவசரத்தேவை எனத் திருத்தந்தை கூறுகிறார். அதுவே அமைதிக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கிறார். இவ்விடத்தில் ஆலோசணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உயரிய கருத்தாகும்.
 

அமைச்சர் முரளி பயணித்த வாகனம் கொழும்பில் விபத்து – மயிரிழையில் தப்பினார்; 2 காயம்

karuna000.jpgதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயணித்த ஜீப் வாகனம் நேற்று விபத்துக்குள்ளானது. இதில் அமைச்சர் தெய்வாதீனமாக உயிர் தப்பினாரென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் நிமல் மெத்திவக்க கூறினார்.

கொழும்பு, கறுவாத்தோட்டம் ஃப்ளவர் வீதி ஜே. ஓ. சி. சுற்று வட்டத்துக்கு அருகாமையில் வைத்து நேற்று மாலை 4.45 மணியளவில் இவ்விபத்து நடந்துள்ளது. அமைச்சர் சென்ற ஜீப் வாகனத்துடன் ‘154’ இலக்க தனியார் பயணிகள் பஸ் வண்டி மோதியதிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தின் காரணமாக அமைச்சரின் மெய்பாதுகாவலாளியும் வாகனச் சாரதியும் காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

தற்கொலை அங்கிகள், ஆயுதங்கள் மீட்டெடுப்பு

udaya_nanayakkara_brigediars.jpg 35 கிலோ எடையுள்ள அதிசக்திவாய்ந்த சி-4 ரக வெடிமருந்துகள்,  இரண்டு தற்கொலை அங்கிகள், 25 கிலோ எடையுள்ள இரும்பு குண்டுகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் மீட்டெடுத்துள்ளனர். முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், சி. ஐ. டி. யினரும் மேற்கொண்ட பாரிய தேடுதல்களின் போதே இந்த பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் சுதுமலை பிரதேசத்தில் இராணுவத்தின் 52வது படைப் பிரிவினர் நடத்திய தேடுதல்களில்; 5 கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த தற்கொலை அங்கிகள் – 02, குண்டுகளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் 10 கிலோ எடையுள்ள சிறிய இரும்பு குண்டுகள், 15 கிலோ எடையுள்ள நடுத்தர இரும்பு குண்டுகள், 10 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகள், 2 கிலோ எடையுள்ள கிளேமோர் குண்டுகள், ரேடியோ தொலைத் தொடர்பு கருவிகள் – 08, கைக்குண்டுகள் – 08, செய்மதி தொலைபேசிகள் – 02, ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள் – 155, வெடிக்க வைக்கும் கருவிகள் மற்றும் பெருந்தொகையான பொருட்களை மீட்டெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு, நரகமுல்லை பிரதேசத்தில் சி. ஐ. டி.யினரும், பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட பாரிய தேடுதல்களில் 25 கிலோ எடையுள்ள சி-4 ரக வெடிமருந்துகள், பல்குழல் துப்பாக்கி ரவைகள் – 10, புலிகளால் தயாரிக்கப்பட்ட பல்வேறு குண்டுகளை கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இராணுவத்தின் மூன்றாவது அதிரடிப் படையினர் நடத்திய தேடுதல்களில் பிஸ்டல் துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் ரவைகள் – 50, 12.7 மி. மி. ரவைகள் – 850, 81 மி.மீ. மோட்டார் குண்டுகள் மற்றும் உபகரணங்களை மீட்டெ டுத்துள்ளனர் என்று பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.

750 கிலோ கடல் அட்டைகளுடன் கல்பிட்டியில் இருவர் கைது – இந்தியாவிலிருந்து கடத்தல்

nimal_madiwaka.jpgஇந்தியா விலிருந்து சட்டவிரோத மாக கொண்டுவரப்பட்ட 750 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ள கல்பிட்டி பொலிஸார் இரு சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர். சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கடல் அட்டைகளையே கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

¡ன் ஒன்றில் எடுத்துச் சென்றுகொண்டிருந்த போதே பொலிஸார் இந்த கடல் அட்டைகளை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :- 30 ஸ்ரீ 8818 என்ற இலக்கமுடைய வான் கல்பிட்டி, மங்டல துடாவ பிரதேசத்தில் வேகமாக சென்றுள்ளது. அதில் சந்தேகம் ஏற்பட்ட பொலிஸார் அதனை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அந்த வானில் ஏதோ பொதிகள் இருந்துள்ளதை அவதானித்த பொலிஸார் அதனை முழுமையாக சோதனையிட்டுள்ளனர். இதன்போது 20 பொலித்தீன் பொதிகளில் சுற்றப்பட்ட நிலையில் 750 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை மீட்டெடுத்துள்ளனர். இந்த கடல் அட்டைகள் எவ்வாறு கொண்டு வந்துள்ளனர் என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ. டி. எச். பந்துசேன தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தானில் புதிய செயற்கை கோள்

210909flag.jpgதகவல் தொடர்பை வலுப்படுத்துவதற்காக பாகிஸ்தான் புதிதாக ஒரு செயற்கை கோளை தயாரிக்கிறது. இதற்கு பக்சாட் – 1 ஆர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை தயாரிக்க சீனா உதவி செய்கிறது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதன்படி சீனா பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர் உதவி செய்யும்.

பாகிஸ்தானின் விண்வெளி மையம், மற்றும் சீனாவின் நெடுஞ்சுவர் தொழிற் கூட்டமைப்பும் இணைந்து இந்த செயற்கை கோளை உருவாக்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது.

இடம்பெயர் மக்களின் நடமாட்ட சுதந்திரத்துக்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் : அமெ. புதிய தூதுவர்

170909us_ambassado.jpgஇலங் கையின் வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நடமாட்ட சுதந்திரத்துக்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்று இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக பொறுப்பேற்றுள்ள பற்றீசியா ஏ. பியூடெனிஸ் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர். தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :

ஜனாதிபதி ஒபாமாவின், அறிமுக நற்சான்றுக் கடிதத்தை ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் கையளிக்கும் பெருமையும் ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைத் தூதுவராக எனது பணிக்காலத்தை ஆரம்பிக்கும் பெருமையும் கடந்த வியாழக்கிழமை எனக்குக் கிட்டியது.

இலங்கை நாட்டைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அதன் கலாசாரப் பொக்கிஷங்கள் பலவற்றையும் இயற்கைப் பொக்கிஷங்களையும் பற்றி அறிந்து கொள்வதற்கும் ஐக்கிய அமெரிக்காவைப் பற்றிய உங்களுடைய தகவு நோக்குகள், எண்ணக் கருத்துக்கள் பற்றியும் இவ்விரு நாடுகளுக்கிடையில் நிலவும் தொடர்புகள் பற்றியும், கேட்டறிந்து கொள்வதற்கும் நான் ஆர்வத்துடன் காத்திருக்கின்றேன்.

ராஜதந்திர சேவையில் கடந்த 30 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள நான், முப்பதாண்டு காலத்தில் ஏறத்தாழ அரைப்பகுதியை தென் ஆசியாவில் கழித்திருக்கிறேன் என்ற வகையில், தென் ஆசியாவுக்கு மீண்டும் திரும்புவதையிட்டு தனிப்பட்ட முறையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நமது நாடுகள் முதன் முதலாக இராஜதந்திர உறவுகளை நிறுவிய கடந்த ஆறு தசாப்தங்களில், நமது உறவுகள், பல கூறுகளைக் கொண்டனவாகவும் பரஸ்பரம், நன்மை பயக்கும் தோழமையுடன் கூடியனவாகவும் இருந்து வந்துள்ளன. சர்வதேச அரங்கில், பெருந்தொகையில் மக்கள் அழிவை ஏற்படுத்தும் ஆயுதப் பரவல் சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல் பற்றியும் கடல் மார்க்கங்களைப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருத்தல் பற்றியும் நம் இரு நாடுகளும் அக்கறை கொண்டுள்ளன. வணிகத்திலும் வர்த்தகத்திலும் இலங்கைப் பொருட்களுக்கு, ஐக்கிய அமெரிக்காவே முன்னணி வகிக்கும் ஏற்றுமதிச் சந்தையாகத் திகழ்கின்றது.

அதேவேளை, அமெரிக்கப் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் இலங்கை, ஒரு பிரதான சேரிடமாக அமைந்துள்ளது. இராணுவக் கூட்டுறவைப் பொறுத்தளவில், இலங்கை இராணுவத்தின் நூற்றுக்கணக்கான அங்கத்தவர்கள், ஐக்கிய அமெரிக்கப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களிலும் மாநாடுகளிலும் கல்விப் பரிமாற்ற நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றியுள்ளனர். அபிவிருத்திக்கான உதவியை நோக்கும் போது, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்களுக்காக, இரண்டு பில்லியனுக்கும் அதிகமான ஐக்கிய அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இவ்வருடத்தில் மட்டும், இலங்கையின் வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏழு பில்லியன் உணவுப் பொட்டலங்களை வழங்குவதற்கு உதவியாகக் கொடுக்கப்பட்ட நிதியும் இதிலடங்கும். கல்வித்துறையை எடுத்துக்கொண்டால், ஐக்கிய அமெரிக்கக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கற்பதற்கு, வருடாந்தம் 2000இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பதிவு செய்து கொள்கிறார்கள்.

அமெரிக்க அறிஞர்கள் பலரும் அமெரிக்க மாணவர்கள் பலரும், இலங்கையின் கலாசாரத்தைப் பற்றியும் மரபுகளைப் பற்றியும் கற்பதற்காக இலங்கைக்கு விஜயம் செய்கிறார்கள்.

கலாசாரத்தையும் கலைகளையும் எடுத்துக் கொண்டால், இடைவிடாது, அமெரிக்க, இலங்கைச் சமயத் தலைவர்களும் புலமை சார்ந்த சிறப்பறிஞர்களும் கலைஞர்களும், நம் இரு நாடுகளினதும் மரபுரிமைக்குப் பங்களிப்புச் செய்துள்ளனர்.

உதாரணமாக, இலங்கைக்கு வந்த ஹென்றி ஸ்டீல் ஒல்கொட், இத்தீவில் பல பௌத்த பாடசாலைகளை நிறுவினார். இவற்றுட் பல இன்னமும் இயங்கி வருகின்றன. இவ்வுறவுகளை விரிவுபடுத்தி ஆழமாக்குவதற்காக உழைப்பதே என் கடமையும் விருப்பமுமாகும்.

வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த நேரத்திலும் பெரும் சந்தர்ப்பம் நிலவும் நேரத்திலும், நான் உங்கள் நாட்டிற்கு வந்திருக்கிறேன். ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாகப் போர் இலங்கையை அழித்தது. இந்நாட்டில் வாழும் மக்களுள் ஏறத்தாழ அரைவாசிப்பேர், இம் மோதலுக்கு முற்பட்ட காலத்தை நினைவுபடுத்திக் கொள்ள முடியாத அளவிற்கு இளையோராக இருக்கிறார்கள். மோதலின் முடிவை, ஐக்கிய அமெரிக்கா வரவேற்கின்றது.

1997 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய அமெரிக்கா, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்த்துக் கொண்டது. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் பொருள் உதவி வழங்கியோரைப் பற்றிப் புலனாய்வு செய்து, வெற்றிகரமாக தண்டனை வழங்கியுள்ளது.

இராணுவ மோதல் முடிவுக்கு வந்த பின்னர், நீண்ட செயன்முறையாகிய இணக்கப்பாடு ஆரம்பமாகின்றது. நாடு முழுவதிலும், மக்களுக்கிடையிலும் எவ்வாறு நம்பிக்கையையும் சகிப்புத்தன்மையையும் ஏற்படுத்தலாம் என்பதை இலங்கை மக்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கான வழியை வேறு எவரும் அமைத்துக் கொடுக்க முடியாது.

இப்பதவியில் முன்னர் இருந்தவர்களைப் போல, நமது ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு நான் செயலார்வத்துடன் முயற்சி செய்வேன். அவர்களைப் போலவே, ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் மூலமாக எப்பொழுதுமே அமைந்திருந்த சில அடிப்படைத் தத்துவங்களை நானும் கடைப்பிடித்து நடப்பேன்.

மனித உரிமைகளை முன்னேற்றுதல் நமது முக்கியமான, உலகளாவிய அக்கறைகளுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்கா உட்பட, எந்தவொரு நாடுமே, மனித உரிமைகளைக் காத்தல் தொடர்பாக முழுமையான பதிவைக் கொண்டதாக இல்லை. நாங்களும் விமர்சிக்கப்பட்டிருக்கிறோம் எனினும் நமது சொந்தக் குறைபாடுகளை அணுகுவதற்கு முயலும் அதேவேளை, உலகம் முழுவதிலும் வாழும் மக்களின் உரிமைகளுக்காகவும் சுதந்திரங்களுக்காகவும் செயற்பட வேண்டியது நமது பொறுப்பென்று நாம் நம்புகின்றோம்.

எனவே, இலங்கையில், வடக்கில், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் நடமாட்டச் சுதந்திரத்திற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம் என்பதே இதன் கருத்தாகும். இந்த இலங்கைப் பிரஜைகள், பல தசாப்தங்களாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடுங்கோன்மையின் கீழ் இன்னல்பட்டுள்ளார்கள்.  புதிய இலங்கையில் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. அவர்கள், அவ்வாறு செய்வதற்கு அவர்களை அனுமதிக்க வேண்டுமென்று நாம் தூண்டுகின்றோம்.

ஊக்கமும் ஆக்கமும் உள்ளதும் சுதந்திரமானதுமான ஊடகம், ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சங்களுள் ஒன்றாகும். மாறுபட்ட கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும். சகித்துக் கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களை அடக்குபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் முழு நாட்டிற்கும் கேடு விளைவிப்போராவர். நீண்ட வரலாற்றுடன் கூடிய நமது தொடர்பு, வளர்வதற்கும் விரிவடைவதற்கும் உள்ளார்ந்த பெரும் சாத்தியப்பாடு உண்டு. இதை யதார்த்தமாக்குவதற்காக எனது பதவிக்காலத்தில் மக்களோடும் அரசாங்கத்தோடும் சேர்ந்து உழைப்பதற்கும் நான் காத்திருக்கின்றேன்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்

அனைத்துத் தமிழர்களுக்கும் நியாயமான உரிமைகள் கிடைக்கட்டும் : நோன்பு பெருநாள் செய்தியில் சந்திரகாந்தன்

210909pillayan.jpg“தமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப் பெற பிரார்த்திப்போம்” என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள புனித ரம்ழான் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில்,  “ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.

இப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபீட்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக் காட்டுவதாக இருப்பதை நான் காண்கின்றேன். முப்பது நாட்கள் ஆகாரமின்றி, ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.

மனதை ஒருமைப்படுத்துவது இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும். இதன் மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல், மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுதல் போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன.  இவ்வாறான தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்படுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன.

ஆனால் துரதிஷ்டவசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுகபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர்.  எமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாசார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மத விழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிப்போமானால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்க மாட்டாது.

அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடைமைகளை, உறவுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.  இம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரைவில் கிடைக்கப் பெற இந்நன்நாளில் அனைவரும் பிரார்த்திப்போம். எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு அடிகோலாகத் திகழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும். அது இந்தியாவிலா? இலங்கையிலா? – சீமான்

seeman-prabhakaran.jpg“நாம் தமிழர்” இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான். தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார்.  இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார். அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை என்பதைக்கூட நாலு சுவற்றுக்குள் இருந்துகொண்டுதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றபோது ஆர்.எஸ்.எஸ்.  இயக்கத்திற்கு தடை விதித்தார்கள்.  ஆனால் அந்த இயக்கத்தை ஆதரித்து பேச தடை விதிக்கவில்லை. அந்த தடையையும் 16 மாதற்குள் நீக்கிவிட்டார்கள்.  20 வருடங்களாக தமிழ் சாதிக்கு மட்டும் ஏன் தடை? இதற்காக குரல் கொடுத்தால் நமக்காகத்தான் கட்டப்பட்டிருக்கிறது சிறைச்சாலைகள். நான் சிறையை நிரப்பினால்தான் சிறை பணியாளர்கள் வயிறை நிரப்ப முடியும். 

தமிழ் ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை வாக்கெடுப்பு நடத்தினால் தெரிந்துவிடும்.  ஆனால் இந்திய அரசாங்கம் அதை செய்யாது.  ஏன் தெரியுமா?வாக்கெடுப்பு நடத்தினால் 61\2 கோடி தமிழர்களும் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்வார்கள்.  அதனால் வாக்கெடுப்பு நடத்த மாட்டார்கள். ஆனாலும் நாம் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. தமிழுக்கு ஒரு தேசம் வேண்டும்.  அது இந்தியாவிலா? இலங்கையிலா? இந்திய அரசாங்கமே உடனே அறிவித்திடு’’ என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர், இயக்குநர் சீமான் பேசினார்.

கடைசி ஆட்டத்தில் மானம்காத்த இங்கிலாந்து

200909eng-cr-team.bmpஇங்கி லாந்து மற்றும் அவுஸ்திரேலியா இடையிலான  7 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில்  அவுஸ்திரேலியா முதல் 6 போட்டிகளிலும்  வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில் இன்று நடைபெற்ற 7 வது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தனது மானத்தை ஓரளவு காத்துக்கொண்டது.

இந்த தோல்வியின் மூலம் அவுஸ்திரேலியா 7 போட்டி கொண்ட தொடரில் 6-1 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரில் 1-2 என தோல்வி அடைந்த அவுஸ்திரேலியா அதற்கு பழி தீர்க்கும் வகையில் ஒருநாள் தொடரில் இங்கிலாந்தை மண்ணைக் கவ்வவைத்து வந்தமை தெரிந்ததே.

Australia 176 (45.5 ov)
England 177/6 (40.0 ov)
England won by 4 wickets (with 60 balls remaining)
NatWest Series [Australia in England] – 7th ODI

Played at Riverside Ground, Chester-le-Street
20 September 2009 (50-over match)
       
 Australia innings (50 overs maximum)
 SR Watson  c Swann b Anderson  0
 TD Paine†  c †Prior b Onions  4 
 RT Ponting*  c Collingwood b Swann  53 
 MJ Clarke  run out (Morgan/Collingwood)  38 
 MEK Hussey  c Denly b Bresnan  49 
 CL White  b Swann  1
 JR Hopes  c & b Swann  11 
 MG Johnson  c Anderson b Swann  10 
 NM Hauritz  c & b Shah  3
 B Lee  b Swann  0 
 BW Hilfenhaus  not out  2
 Extras (lb 1, w 4) 5     
      
Total (all out; 45.5 overs) 176 (3.84 runs per over)

Fall of wickets1-0 (Watson, 0.4 ov), 2-17 (Paine, 3.4 ov), 3-96 (Ponting, 24.5 ov), 4-110 (Clarke, 27.6 ov), 5-112 (White, 28.5 ov), 6-138 (Hopes, 36.3 ov), 7-158 (Johnson, 40.4 ov), 8-158 (Lee, 40.6 ov), 9-163 (Hauritz, 43.1 ov), 10-176 (Hussey, 45.5 ov) 
        
 Bowling
 JM Anderson 7 0 36 1
 G Onions 9 1 28 1
 TT Bresnan 6.5 0 25 1
 PD Collingwood 7 0 37 0
 GP Swann 10 1 28 5
 RS Bopara 1 0 7 0 
 OA Shah 5 1 14 1

England innings (target: 177 runs from 50 overs)
 AJ Strauss*  c Hilfenhaus b Hauritz  47 
 JL Denly  run out (†Paine/Ponting)  53 
 RS Bopara  lbw b Watson  13 
 OA Shah  c †Paine b Hopes  7
 PD Collingwood  not out  13
 EJG Morgan  c †Paine b Lee  2
 MJ Prior†  c Ponting b Hilfenhaus  11
 TT Bresnan  not out  10  
 Extras (b 4, lb 2, w 6, nb 9) 21     
      
Total (6 wickets; 40 overs) 177 (4.42 runs per over)
Did not bat GP Swann, JM Anderson, G Onions 
Fall of wickets1-106 (Strauss, 20.4 ov), 2-129 (Denly, 27.1 ov), 3-133 (Bopara, 28.6 ov), 4-137 (Shah, 29.2 ov), 5-141 (Morgan, 31.4 ov), 6-162 (Prior, 36.2 ov) 
        
 Bowling O M R W Econ  
 B Lee 10 3 33 1 
 BW Hilfenhaus 6 1 38 1
 MG Johnson 5 0 29 0  
 NM Hauritz 8 0 30 1
 JR Hopes 6 1 29 1
 SR Watson 5 0 12 1 

Match details
Toss England, who chose to field
Series Australia won the 7-match series 6-1