“தமிழ்ப் பேசும் அனைத்து மக்களுக்கும் நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப் பெற பிரார்த்திப்போம்” என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் விடுத்துள்ள புனித ரம்ழான் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அச்செய்தியில், “ஈதுல் பித்ர் நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் என் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்வதில் மிக மகிழ்ச்சி அடைகின்றேன்.
இப்பண்டிகையானது வெறும் சடங்காகவோ கேளிக்கையாகவோ அல்லாமல் பல தத்துவங்களையும் மனிதனின் சுபீட்சமான எழுச்சிக்கான வழிகாட்டுதல்களையும் எடுத்துக் காட்டுவதாக இருப்பதை நான் காண்கின்றேன். முப்பது நாட்கள் ஆகாரமின்றி, ஆன்மாவை ஒருநிலைப்படுத்தி நோன்பிருக்கும் முஸ்லிம் சகோதரர்கள், இதன் மூலம் மிகப்பெரும் யதார்த்தமான தத்துவத்தை எடுத்து இயம்புகின்றனர்.
மனதை ஒருமைப்படுத்துவது இறைவனுக்கு மட்டும் கட்டுப்படுவதாகும். இதன் மூலம் பிறரை மதித்தல், பிறருக்கான உரிமைகளை வழங்குதல், மற்றவர்களுடன் சகோதரத்துவத்துடனும், புரிந்துணர்வுடன் பழகுதல் போன்ற பல நன்மைகள் கிட்டுகின்றன. இவ்வாறான தத்துவங்களும். குணாதிசயங்களுமே இன்று எல்லோருக்கும் தேவைப்படுகின்றன. மதங்கள் அனைத்துமே மனிதனின் மனங்களை ஒருநிலைப்படுத்தி நல்வாழ்வுக்காக வழிகாட்டுகின்றன.
ஆனால் துரதிஷ்டவசமாக எல்லா மதங்களிலும் மத விழுமியங்களை துறந்து தமது சுகபோகங்களுக்கும் அளவுகடந்த ஆசைகளுக்கும் மற்றவர்களை துன்பப்படுத்தி, காயப்படுத்தி வாழ்பவர்கள் உள்ளனர். எமது நாட்டை பொறுத்தளவில் பல்லின பல கலாசார பரம்பரை கொண்டவர்களே வாழ்கின்றனர். இச்சூழலில் நாம் எமது மத விழுமியங்களையும் சகோதர மதங்கள் கூறும் நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிப்போமானால், பிரச்சினைகள் என்பது எம்மை எள்ளளவும் நெருங்க மாட்டாது.
அண்மையில் நடந்து முடிந்த யுத்தத்தின் காரணமாக சுமார் மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தமது உடைமைகளை, உறவுகளை இழந்து நிர்க்கதியான நிலையில் அகதி முகாம்களில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இம்மக்களின் வாழ்வில், நிம்மதியும் மகிழ்ச்சியும் விரைவில் கிடைக்கப் பெற இந்நன்நாளில் அனைவரும் பிரார்த்திப்போம். எமது நாட்டின் இனப் பிரச்சினைக்கு அடிகோலாகத் திகழும் தமிழ்ப் பேசும் மக்களுக்கான நியாயமான அரசியல் உரிமைகளுடன் அதிகாரங்களும் கிடைக்கப்பெற வழிகள் பிறக்கட்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது