24

24

கனடியத் தேர்தலில் தமிழ் தரப்பு எதிரும் புதிருமான இரு கட்சிகளிலும் நால்வர் போட்டி !

கனடியத் தேர்தலில் தமிழ் தரப்பு எதிரும் புதிருமான இரு கட்சிகளிலும் நால்வர் போட்டி !

ஏப்ரல் 28 இல் நடைபெறவுள்ள கனடியத் தேர்தலில் எதிரும் புதிருமாக உள்ள ஆளும் லிபிரல் கட்சியில் இருவரும் எதிர்க்கட்சியான பழமைவாத கொன்சவேடிவ் கட்சியில் இருவருமாக நால்வர் போட்டியிடுகின்றனர். நீதி அமைச்சராகவுள்ள ஹரி ஆனந்தசங்கரியும் கனடா தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் ஜொவனிற்றா நாதனும் லிபரல் கட்சியில் போட்டியிடுகின்றனர். லைனல் லோகநாதனும் நிரான் ஜெயநேசனும் கொன்சவேடிவ் கட்சியில் போட்டியிடுகின்றனர்.

மார்க் கார்னி தலைமையிலான லிபிரல் கட்சி விரல் விட்டு எண்ணும் விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றார். ஜஸ்ரின் ரூடோர் தலைமையில் லிபிரல் கட்சி ஏற்கனவே இரு தடவைகள் ஆட்சியில் இருந்ததில் மக்கள் மத்தியில் சலிப்பு ஏற்பட்டுள்ளது. அதனக் காரணமாக கொன்சவேடிவ் கட்சி முன்னணியில் இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம் ஜனாதிபதியாகி கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலம் எனத் தெரிவித்ததும் கனடாவுக்கு எதிராகவும் வர்த்தக வரிகளைப் பயன்படுத்தியதும் கனடாவில் டொனால் ட்ரம்முக்கு எதிராக மார்க் கார்னியின் கருத்துக்கள் வரவேற்பபைப் பெற்றது. சரிந்திருந்து லிபிரல் கட்சி கிசுகிசுவென மேல்நிலைக்கு வந்து தற்போது மூன்று புள்ளிகளால் மட்டும் முன்னணியில் உள்ளது.

டொனால் ட்ரம் உடைய கருத்துக்களோடு ஒத்துப் போகின்ற கொன்சவேடிவ் கட்சியின் தலைவர் பஃரே பொலிவ்ரே தேர்தல் நெருங்கும் தருவாயில் தொழிலுலகிற்குள் நுழையும் இளவயதினரின் ஆதரவை கணிசமான அளவில் பெற்றுவருவதாக அரசியல் சமூக ஆய்வாளர் நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் கொன்சவேடிவ் கட்சி தொழில் முயற்சியாளர்கள், வர்த்தகர்களுக்கான வரிகளைக் குறைப்பதும் குடிவரவாளர்களைக் கட்டுப்படுத்துவது போன்ற இறுக்கமான வலதுசாரிக் கொள்கைகளை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார்.

கனடாவுக்கு முந்திச் சென்றவர்கள் கொன்சவேடிவ் கட்சியை ஆதரிப்பதாகவும் பிந்திச் சென்றவர்கள் தங்களுடைய குடியுரிமை மற்றும் உரிமைகளுக்காக லிபிரல் கட்சியை ஆதரிப்பதாகவும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். தற்போது குடியேறுபவர்களின் வருகையால் வீட்டு வசதி மற்றும் அடிப்படைத் தேவைகளுக்கான போட்டி ஏற்பட்டுள்ளதால் குடிவருவோர் பற்றிய தப்பபிப்பிராயங்கள் பரவலாகக் காணப்படுவதையும் நடராஜா முரளீதரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் அதிகம் வாழும் பிரதேசமாக கனடா உள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய நான்கு மாவட்டங்களதும் மொத்த சனத்தொகைக்கு ஒப்பான தொகையான தமிழ் மக்கள் கனடாவில் வாழ்கின்றனர். இத்தேர்தல் கனடாவில் உள்ள தமிழ் மக்களை மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையிலிருந்து கனடாவுக்குச் செல்வதற்கு பாரிய தடைகள் இருக்கவில்லை. வருகின்ற ஆட்சி மாற்றம் இவ்விடயத்தில் தாக்கத்தைச் செலுத்த வாய்ப்பு உள்ளது.

 

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி !

காஷ்மீரில் தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் – 26 பேர் பலி !

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப்பயணிகள் மீதான தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் கோடை காலத்தில் பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழமையாகும். கடந்த 22 ஆம் திகதி ஏப்பிரல் பஹல்கமுக்கு வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரி உட்பட 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட செயல்படும் தடைசெய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் இத் தாக்குதலைத் தொடர்ந்து பெரிய அளவிலான தேடுதல் வேட்டையைஅப்பகுதியில் ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தொடங்கியுள்ளனர் என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இத்தாக்குதலை கண்டித்துள்ளனர். அந்தவகையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தனது எக்ஸ தளத்தில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

“இந்தியாவில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எங்கள் இதயங்கள் உள்ளன. இலங்கை எப்போதும் இந்திய மக்களுடன் ஒற்றுமையுடன் நிற்கிறது” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

என்பிபி வெல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என கூறவில்லை ! ஜனாதிபதி

என்பிபி வெல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என கூறவில்லை ! ஜனாதிபதி

உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான தனது கருத்து எதிர்க்கட்சிகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலவாக்கலயில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். என்பிபி கட்சி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கு அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டோம் என ஜனாதிபதி அச்சுறுத்தி வாக்குச் சேகரிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தனர். அத்துடன் இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்றும் முறையிட்டிருந்தன.

இவற்றுக்கெல்லாம் பதிலழித்த ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க மத்திய அரசு திருடாது. ஆகவே உள்ளூராட்சி சபைகளும் திருடக் கூடாது என தான் நான் கூறினேன். என்பிபி வெற்றியடையாத சபைகளுக்கு நான் நிதி ஒதுக்கீடு செய்ய மாட்டேன் என நான் கூறவில்லை எனக் குறிப்பிட்டார். ஊழலற்ற ஆட்சியையே தான் வலியுறுத்துவதாகவும் கூறினார்.

வாக்கு வங்கியற்றவர்கள் கஜாவோடு சைக்கிளில் டபிள்ஸ் – றிபிள்ஸ் ஓடுகிறார்கள் !

வாக்கு வங்கியற்றவர்கள் கஜாவோடு சைக்கிளில் டபிள்ஸ் – றிபிள்ஸ் ஓடுகிறார்கள் !

தமிழ்த்தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் தம்மை பாதுகாக்கலாம் என யாழ் முஸ்லிம் மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பரீக் ஆரீப் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் பேரவைக்கு உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் முஸ்லீம் மக்கள் ஒன்றியம் ஆதரவு கொடுப்பதாக யாழ் ஊடக அமையத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு உள்ளூராட்சித் தேர்தலில் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழரசுக் கட்சியில் தனியொரு நபர் ஆதிக்கம் செலுத்துகிறார். தமிழரசுக் கட்சி தன்னை தள்ளி வைத்து விட்டதாகவும் சரவணபவன் வருத்தம் தெரிவித்தார். எச்சூழலிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலின அணியினரே தொடர்ந்து தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகவும் பாராட்டினார். அதனாலேயேயும் தனது அரசியல் எதிர்காலம் கருதியும் சைக்கிளை ஆதரிக்கும் முடிவை எடுத்ததாகவும் கூறினார்.

யாழ் நகரின் நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் ! என்பிபி கபிலன்

யாழ் நகரின் நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் ! என்பிபி கபிலன்

யாழ் நகர மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்குகின்ற, கடந்த காலங்களில் தீர்க்கப்படாத: நீர், சுகாதாரம், போக்குவரத்து, கழிவகற்றல், முன்பள்ளி என சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணுவோம் என என்பிபி யாழ் மாநகர முதல்வUf;fhd வேட்பாளர் விரிவுரையாளர் கபிலன் சுந்தரமூர்த்தி தெரிவிக்கின்றார். நேற்று ஏப்ரல் 23 இரவு தேசம்நெற்க்கு வழங்கிய சிறப்பு நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

“உள்ளுராட்சி அமைப்புகளின் தேர்தல் முறைமையில் ஒரு தனிக்கட்சி வெற்றபெற்று ஆட்சி அமைக்கின்ற வாய்ப்புகள் இல்லை. தமிழ் தேசியக் கட்சிகள் என்பிபி ஆட்சியைக் கைப்பற்ற தாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்பதில் மிக உறுதியாக உள்ளனர். அப்படியிருக்கையில் உங்களுடைய கனவுத் திட்டங்களை எப்படி நடைமுறைச் சாத்தியமாக்க முடியும் ” எனத் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த முதல்வர் வேட்பாளர் எஸ் கபிலன், “யாழ் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய பூரண ஆதரவைத் தந்து தேசிய மக்கள் சக்தியை மிகப் பெரும்பான்மையுடன் வெற்றியடையச் செய்ய வேண்டும். வெற்றியடையச் செய்வார்கள்” எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வருக்கான வேட்பாளர் அனுராவின் நிதி தேவையில்லை. அது இல்லாமலேயே நாங்கள் யாழ் மாநகரத்தை கட்டியெழுப்புவோம்’ எனச் சூளுரைத்து இருந்தார். அத பற்றி கபிலனிடம் கேட்ட போது, “அப்படியென்றால் ஏன் இவ்வளவு காலமாக அவர்கள் அதனைச் செய்யாமல் இருந்தனர். இவர்களுக்கு செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தும் இவர்கள் செய்யவில்லையே. இப்ப இவர்கள் தேர்தலுக்குப் பிறகு சேருவோம் என்று சொல்வது கூட மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை. தேசிய மக்கள் சக்தி வந்து அபிவிருத்தியைச் செய்துவிடாமல் தடுப்பதற்கே” எனத் தெரிவித்தார் கபிலன்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் நாங்கள் அளித்த உறுதிமொழிக்கு அமைய அனைத்தையும் சாதித்துக் காட்டுவோம். அப்படிச் செய்ய முடியாது போனால் அதற்கான முழுப்பொறுப்பையும் நான் எடுப்பேன். நாங்கள் எங்கள் மக்களுக்குச் சாதித்துக் காட்டுவோம். உள்ளுராட்சி, நகராட்சி, மாநகராட்சி எப்படி இயங்கும் அதில் எதையெல்லாம் சாதிக்கலாம் என்பதை மக்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பார்ப்பார்கள்” எனத் தெரிவித்தார் கபிலன்.

 

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தின் கோளையா “ டான் பிரியசாத்”

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தின் கோளையா “ டான் பிரியசாத்”

2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 இல் நடந்த ஈஸ்டர் குண்டுத்தாக்குதலிற்கு மூளையாக செயற்பட்டவருக்கு டான் பிரியசாத் உதவியர் என்று கூறப்படுகிறது. இனவாதி டான் பிரியசாத் ராஜபக்ச குடும்பத்தின் கோளையா அதாவது உதவியாளராக செயற்பட்டவர். அவர் சுட்டுக்கொல்லப்படும் வரை ராஜபக்ச குடும்பத்துடன் நெருக்கமாக இருந்திருக்கின்றார். பாதாள உலக நடவடிக்கைகளிலும் கலவரங்களிலும் ஈடுபடுபவர் டான் பிரியசாத் எனவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

என்பிபி அரசாங்கம் மக்களுக்கு ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளை கடந்த ஈஸ்டர் தினமான ஏப்பிரல் 21 முன்னர் வெளிப்படுத்துவதாக வாக்களித்திருந்தது. ஆனால் இதுவரை என்பிபி அரசாங்கம் பகிரங்கமாக ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மற்றும் அவரது சாரதி போன்றோரின் கைதுடன் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி தொடர்பான ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. என்பிபி கிட்டத்தட்ட சூத்திரதாரியை நெருங்கி விட்டதாகவே என்பிபியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களிலிருந்து தெரியவருகின்றது.

இந்தப் பின்னணியிலேயே ராஜபக்ச குடும்பம் டான் பிரியசாத்தை இல்லாதொழித்து ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான முக்கிய சாட்சியத்தை அழித்து விட்டதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது. குறிப்பாக நாமல் ராஜபக்சவுடன் நெருங்கி நட்புப் பாராட்டுபவர். இந்தமுறை உள்ளூராட்சித் தேர்தலில் மொட்டுக்கட்சியின் வேட்பாளராகவும் உள்ளார்.

நவ சிங்ஹலே என்ற அமைப்பின் தலைவராக செயற்படும் டான் பிரியசாத் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களிடையே இனவாதத்தை தூண்டியவராவர். தனது முகநூல் கணக்குகளூடாக இஸ்லாமிய போவியா கருத்துக்களை பரப்பி வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

டான் பிரியசாத் கொலை தொடர்பில் ஆரம்பத்திலிருந்து முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வெளியாகியிருந்தன. டான் பிரியசாத் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இறந்து விட்டார் என்றும் இல்லை அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாகவும் செய்திகள் வெளியாகின. இறுதியாக நேற்றைய தினம் பொலிஸார் அவர் இறந்து விட்டார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். டான் பிரியசாத்தின் கொலைக்கான காரணங்கள் மர்மமாகவே உள்ளன.

பொலிஸாரின் முதல்கட்ட விசாரணையின்படி ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுவின் ஒப்பந்த துப்பாக்கிதாரிகளால் தான் டான் பிரியசாத் சுடப்பட்டுள்ளார். இதுவரை டான் பிரியசாத்தின் தங்குமிடம் பற்றிய தகவல்களை வழங்கிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் சமீப காலங்களில் சில விடயங்களை மறைப்பதற்காகவே முற்கூட்டியே இக்கொலைகள் இடம்பெறுவதாகவும் கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

 

மே தின ஊர்வலத்தில் அதிரடித் தகவலை ஜனாதிபதி வெளியிடலாம் ! உள்ளுராட்சி சபைகளில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளை NPP எதிர்பார்க்கின்றது !

மே தின ஊர்வலத்தில் அதிரடித் தகவலை ஜனாதிபதி வெளியிடலாம் ! உள்ளுராட்சி சபைகளில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வாக்குகளை NPP எதிர்பார்க்கின்றது !

 

மே 6 இல் நடக்கவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் 80 லட்சத்திலிருந்து ஒரு கோடி வரையான வாக்குகளைப் பெற்று இலங்கையில் சரித்திரம் படைக்க முற்பட்டுள்ளது தேசிய மக்கள் சக்தி. கட்சியின் மத்திய குழுக் கூட்டங்களில் உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றுவது என்பதற்கும் அப்பால் தனது வாக்கு வங்கியை மிகப் பலமானதாகக் கட்டியெழுப்பும் பணிகளில் தேசிய மக்கள் சக்தி கவனம் செலுத்தி வருவதாக அதனுடன் நெருங்கிய வட்டாரங்கள் தேசம்நெற்க்குத் தெரிவிக்கின்றன.

மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மேதினக் கொண்டாட்டங்கள் வரலாறு காணாத மக்கள் செல்வாக்குடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கொழும்பு காலிமுகத்திடல் மே தினக் கூட்டம் மிகப் பிரமாண்டமான அளவில் மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

இந்தப் பிரம்மாண்டமான மக்கள் வெள்ளத்தில் வைத்து ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸ நாயக்க சில முக்கிய தகவல்களை வெளியிட உள்ளார். இதில் ஈஸ்டர் குண்டு வெடிப்புக்கு பின்னால் இருந்தவர்கள் என்பதைக்காட்டிலும் நாட்டைச் சூறையாடியவர்கள் தொடர்பில் சில முக்கிய தகவல்களை ஜனாதிபதி வெளியிடலாம் எனத் தெரிகிறது. ஈஸ்டர் குண்டுவெடிப்போடு தொடர்புடைய இதுவரை வெளிவராத சில தகவல்களும் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளது.

மே முதலாம் திகதி வெளிவரவுள்ள தகவல்களும் பிரம்மாண்டமான மே தினக் கொண்டாட்டங்களும் மே ஆறாம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஜனாதிபதித் தேர்தலில் என்பிபி 57 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. இது அளிக்கப்பட்ட வாக்குகளில் 42 சதவிகிதம். பாராளுமன்றத் தேர்தலில் என்பிபி தனது வாக்கு வங்கியை 62 சதவிகிதமாக அதிகரித்து 68 லட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டது. உள்ளுராட்சித் தேர்தலிலும் என்பிபி உடைய வெற்றி மிகப்பலமாக இருக்கும் என்றே கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. உள்ளுராட்சித் தேர்தலில் 80 லட்சம் முதல் ஒரு கோடி வாக்குகளை என்பிபி எதிர்பார்க்கின்றது என்பது அவர்களுடைய அதித நம்பிக்கையாகவும் அமையலாம். அவர்கள் தங்கள் இலக்குகளில் மிகத் தெளிவாக உள்ளனர். தமிழ், சிங்கள, முஸ்லீம் தேசியக் கட்சிகள் தங்களுடைய இருப்புக்காக படாதபாடு படுகின்றனர்.

புதிய முற்போக்கான மாற்று அணி ஒன்றே தேசிய மக்கள் சக்திக்கு எதிர்காலத்தில் சவாலாக முடியும். பிற்போக்குத் தேசியவாதிகள் அவர்கள் தமிழர்கள், முஸ்லீம்கள், சிங்களவர்கள் என்ற அடிப்படை பிற்போக்குவாதக் கட்சிகள் முயவரியற்றுப் போகும் காலம் ஆரம்பித்துவிட்டதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.