20

20

பிள்ளையானின் சாரதி CID யால் அதிரடியாக கைது !

பிள்ளையானின் சாரதி CID யால் அதிரடியாக கைது !

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதி இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு நேற்றைய தினம் ஏப்ரல் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காதலில் தகராறு ஏற்பட்டதில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை!

காதலில் தகராறு ஏற்பட்டதில் இளம் பெண் கழுத்து அறுத்து கொலை!

ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி மத்துகம, தொலஹேன பகுதியில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர், 33 வயதுடைய மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என மத்துகம பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன. காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

எலிக்காய்சல் பரவும் அபாயம்

எலிக்காய்சல் பரவும் அபாயம் !

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். விசேடமாகப் புத்தாண்டு காலப் பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, தசை உளைவு, மூட்டுகளில் வலி, சரும எரிச்சல் போன்றவற்றுடன் வாந்திபேதி, தசை வீக்கம் என்பனவும் எலிக்காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாட வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய மாணவி !

கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் பலியான இந்திய மாணவி !

கனடாவில் உள்ள ஒண்டாரியோ மாகாணத்தில் ஹாமில்டன் எனும் பிரதேசத்தில் ஏப்ரல் 18 அன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இந்தியப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொஹாவ்க் கல்லூரியில் படித்து வந்த ஹர்சிம்ராத் ரான்தவா எனப்படும் மாணவியே உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சம்பவத்தன்று மாணவி சவுத் பெண்ட் சாலையில் பேருந்துக்காக காத்திருந்த போது இரண்டு கார்களில் வந்த நபர்களிடையே ஏற்பட்ட மோதலில் உருவான துப்பாக்கி சண்டையில் ஒருவரை ஒருவர் தாக்கிய போது மாணவி மீது தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் படுகாயம் அடைந்துள்ளார்.
மேலும் அவரை அங்குள்ளவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல்கள் குறித்து கனடாவின் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்தோடு இந்திய துணை தூதரகம் மிகவும் ஆழ்ந்த இரக்கம் தெரிவித்ததோடு தாம் மாணவியின் குடும்பத்துடன் தொடர்பிலிருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவோம் என தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து தெரிவிக்கையில் கனடாவில் கடந்த சில நான்கு மாதங்களாக நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றனர். அதில் பஞ்சாபை சேர்ந்த 22 வயதை உடைய மாணவர்கள் 2024 டிசம்பர் 1 ஆம் திகதி இறந்துள்ளார்கள் , அதில் குறாஸ் சிங் எனும் முதுகலை மாணவன் கத்தியால் குத்தபட்டும் , மற்றொரு மாணவி ராஜ்புத் மரம் விழுந்தும் உயிரிழந்துள்ளார் எனவும் , டிசம்பர் 6 ஆம் திகதி ஹார்ஷன் தீப் சிங் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தோடு இந்த மாணவியும் இறந்த சம்பவம் கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு பெருமச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !

இனவாதத்திற்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி அநுரகுமார !

மக்களின் உரிமைகளும் கருத்துச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் அரசியல் முன்னெடுக்கப்படுவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார். தலவாக்கலையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இனவாதத்துக்கு இடமளிக்கும் எந்த முயற்சியையும் அரசாங்கம் பொறுக்காது என்றும், சட்டத் திருத்தங்கள் தேவையாக இருந்தாலும் அதை மேற்கொண்டு இனவாதத்தை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மலையக மக்கள் இலங்கையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுபவர்கள் என தெரிவித்த ஜனாதிபதி, “200 வருடங்களாக இங்கு வாழும் மக்களை எங்கிருந்து வந்தவர்கள் எனத் தேடுவதில் அர்த்தமில்லை” என்றார். சமநீதி மற்றும் இணக்கம் கொண்ட நாடொன்றை கட்டியெழுப்புவதே இன்றைய அரசாங்கத்தின் இலக்காக உள்ளதாகவும், இனங்களுக்கிடையே மீண்டும் மோதல்கள் ஏற்படாத ஒரு நிலையை உருவாக்குவதே அவசர தேவையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

வன்னி அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து வடக்கு ஆளுநருடன் ரவிகரன் சந்திப்பு !

வன்னி அபிவிருத்தி மற்றும் காணி விவகாரங்கள் குறித்து வடக்கு ஆளுநருடன் ரவிகரன் சந்திப்பு !

வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விவாதங்கள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்களை, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதனாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று சனிக்கிழமை (19) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட ரவிகரன், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களில் நிலவும் சிக்கல்கள் குறித்து ஆளுநருடன் விரிவாக கலந்துரையாடியதாக தெரிவித்தார். குறிப்பாக, காணிவிவாதங்கள் மற்றும் வன்னி அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் ஆளுநர் கவனம் செலுத்துவதாக உறுதியளித்தார் எனவும், இந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி அனுர பேசியது தவறா ? தமிழ் கட்சிகளின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி!

ஜனாதிபதி அனுர பேசியது தவறா ? தமிழ் கட்சிகளின் விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி!

ஜனாதிபதி அனுரவின் அரசியல் நிலைபாடு குறித்து விமர்சனம் தெரிவிக்க தமிழ் மக்களை ஏமாற்றிய தமிழ் கட்சிகளுக்கு உரிமை இல்லை எனஅமைச்சர் பிமல் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அனுர மற்றும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சியினர் எப்போதும் இனவாதம் அல்லது மதவாத அரசியலை ஆதரிக்கவில்லை’ என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அனுர ஆற்றிய உரைகள் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாக தமிழ் கட்சிகள் தெரிவித்திருந்தன. இதைத் தொடர்ந்து சில தமிழ் தலைவர்கள் மற்றும் அமைப்புகள் விமர்சனங்களையும் எழுப்பினர். இதற்கிடையே அமைச்சர் பிமல், “தமிழ் மக்களை உண்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தத் தவறும் தமிழ் கட்சிகள் திசாநாயக்காவின் உரையை விமர்சிப்பது தவறானது” என தெரிவித்தார்.

அவரது உரையின் நோக்கம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதேயாக இருந்ததாகவும், இனவாதத்திலிருந்து விலகி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான அரசியல் யோசனைகளை வழங்கும் கட்சி தான் தேசிய மக்கள் சக்தி எனவும் அவர் வலியுறுத்தினார்.

 

ஜேவிபி – என்பிபி உள்ளுராட்சியோடு நிறுத்திக் கொள்ளுமா ?

ஜேவிபி – என்பிபி உள்ளுராட்சியோடு நிறுத்திக் கொள்ளுமா ? அல்லது மாகாணசபை ஊடாக தமிழ் மக்களோடு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளுமா ?

வடமாகாண அளுநரின் ஆலோசணைக் குழு உறுப்பினர், அரசியல் மற்று சமூக செயற்பாட்டாளர் மயில்வாகனம் சூரியசேகரம் அவர்களுடனான கலந்துரையாடல்

புலிகள் – கருணா பிளவின் பின் நின்ற நோர்வே புலனாய்வு முகவரின் நூல் வெளியீட்டில் கஜேந்திரகுமார் !

புலிகள் – கருணா பிளவின் பின் நின்ற நோர்வே புலனாய்வு முகவரின் நூல் வெளியீட்டில் கஜேந்திரகுமார் !

புலிகள் – கருணா பிளவின் இழப்புகள், புலிகளின் முடிவு பற்றிய ஆய்வுகள், மதிப்பீடுகள் நடந்துகொண்டிருக்கும் 20 ஆண்டுகள் இம்மாதம் நினைவு கூரப்படுகின்றது. இந்தப் பிளவின் பின்னணியில் நோர்வே புலனாய்வுப் பிரிவினர் இருந்தது அனைவரும் அறிந்த இரகசியம். அதனை தேசம்நெற் 2004 முதல் எழுதி வந்திருக்கின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனையும் பொட்டம்மானையும் தங்களால் இணங்க வைக்க முடியாத நிலையில் அவர்களை அணுகவே முடியாத நிலையில் கருணாவை புலனாய்வு முகவர்கள் அணுகினர்.

அவர்களில் ஒருவர் தான் இலங்கையில் பிறந்து சிறுவயதிலேயே நோர்வேக்குப் புலம்பெயர்ந்து வாழும் நோர்வே பிரஜையான மரியநாயகம் நியூட்டன்.

இவர் நல்ல வசதிபடைத்த செல்வந்தரான நோர்வேஜிய பெண்ணைத் திருமணம் செய்து வாழ்கின்றார். உளவியல் நிபுணரும் கூட. இவர் கருணா பிரிந்து செல்வதற்கு முன் கருணா பிரிந்து செல்வதற்கு வேண்டிய கருத்தியலை கருணாவுக்குள் விதைத்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.

இவர் எழுதிய ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு ஏப்ரல் 19 நேற்றுக் காலை யாழ். மாவட்ட செயலகம் அருகிலுள்ள வை. எம். சி.ஏ. மண்டபத்தில் யாழ். கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் என். இன்பம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை யாழ். கிராமிய உழைப்பாளர் சங்கம்இ தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளரும் உலக மீனவ சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஹேமன் குமார, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தனர். வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ. அன்னராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

மரியநாயகம் நியூட்டன் அறகலய போராட்ட காலத்தில் இலங்கையில் தங்கியிருந்து அப்போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டவர். அதற்காக அவர் பின்னர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இலங்கை வந்துள்ள மரியநாயகம் நியூட்டன் முன்னணி சோசலிசக் கட்சியோடு இணைந்து செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரியநாயகம் நியூட்டனைப் போன்று நோர்வே புலனாய்வுப் பிரிவோடு இணைந்து செயற்படுவதாக பெருமையுடன் கூறிவருபவர் ‘ஊத்தை சேது’ என கருணா பிரிவின் பின்னணியில் செயற்பட்ட லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளர் ஆர் ஜெயதேவனால் விமர்சிக்கப்பட்டு வந்த நடராஜா சேதுரூபன்.

அண்மையில் தேசம்நெற்றைத் தொடர்புகொண்ட அவர் ஜேவிபி அரசு நீண்டகாலம் நிலைப்பதற்கு அனுமதிக்கப்படாது என்ற கருத்தை வெளியிட்டு இருந்தார். இவர் இலங்கைக்குச் சென்றிருந்த போது கைது செய்யப்பட்டு பலமாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

மரியநாயகம் நியூட்டன் இலங்கை விடயங்களில் மட்டுமல்லாமல் வேறு புலனாய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலின் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவரது குழுவினர் ஈடுபட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.மரயநாயகம் நியூட்டனின் குழுவினர் ஹிஸ்புல்லா போராளிகள் மீது பேஜர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதிகளில் அங்கு தங்கியிருந்துள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

நோர்வே சுத்தமான சுவாமிப்பிள்ளை வேடம் போட்டபோதும் அந்நாடு அமெரிக்காவின் ஒரு மென்மையான முகமாகவே பார்க்கப்படுகின்றது. தற்போது மரியநாயகம் நியூட்டன் இலங்கையில் நிற்பதன் நோக்கம் என்ன என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது. முன்னனி சோசலிசக் கட்சியூடாகவும் தற்போது ஜேவிபிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த முனையில் அமெரிக்கத் தூதுவர் யூலி சங் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார். நியூட்டன் தன்னுடைய நூல்வெளியீட்டை பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை வைத்து வெளியிட்டுள்ளார். நாடு உள்ளுராட்சி சபைத் தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது.

இலங்கை ஒரு குட்டித்தீவாக இருந்தாலும் அதனை ஏகாதிபத்திய நாடுகள் சமாதானமாக நிம்மதியாக வாழ அனுமதிக்கப் போவதில்லை என்பதையே இவை கட்டியம் கூறுகின்றது.

புலிகளுக்குள்ளும் மேட்டுக்குடி மனோநிலை இருந்தது. கிழக்குப் போராளிகள் கீழாக நடத்தப்பட்டனர் ! யாழ் மேட்டுக்குடி மனோநிலை இன்றும் தலைவரித்தாடுகின்றது !

புலிகளுக்குள்ளும் மேட்டுக்குடி மனோநிலை இருந்தது. கிழக்குப் போராளிகள் கீழாக நடத்தப்பட்டனர் ! யாழ் மேட்டுக்குடி மனோநிலை இன்றும் தலைவரித்தாடுகின்றது !

இடதுசாரிச் சிந்தனையாளரர், அரசியல், சமூக செயற்பாட்டாளர் நல்லதம்பி ஜெயபாலன்