வடக்கு – கிழக்கில் பெண்களின் வேலை வாய்ப்புக்கு அச்சுறுத்தல் – ஜிஎஸ்பி வரிச்சலுகைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், டிரிஎன்ஏ தங்கள் நிலைப்பாடட்டைச் சொல்லவும் !
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் அதனை இலங்கைக்கு மறுக்க வேண்டும் என்ற தொனியிலேயே தமிழ் தேசியக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளன. ஆனால் அவர்கள் அதனை முழுமையாக மக்கள் முன் தெரிவிப்பதாகத் தெரியவில்லை. வெளிநாட்டில் உள்ள அவர்களின் எஜமானர்கள் இலங்கை அரசைப் பழிவாங்கும் எண்ணத்தில் மனித உரிமைகளின் அடிப்படையில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கக்கூடாது என வாதிடுகின்றனர்.
ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையை இலங்கைக்கு வழங்குவது குறித்து மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய குழு இன்றைய தினம் நாட்டுக்கு வருகை தரவுள்ளது. எதிர்வரும் மே 7ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருந்து அவர்கள் தங்களுடைய மதிப்பீட்டை மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவினர் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரசஅதிகாரி கள், எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள், சிவில் சமூகம், வணிக சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என பல தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளது.
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படக் கூடாது என புலம்பெயர்ந்து வாழ்கின்ற சில தமிழ் அமைப்புகள் கோரிவருகின்றனர். பிரித்தானிய தொழிற்கட்சியின் முக்கிய பிரமுகர் சென் கந்தையா தாங்கள் இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை வழங்கவிடாமல் தடுப்போம் என தேசம்நெற் இல் சூழுரைத்து இருந்தார். மனித உரிமைகள் விடயத்தில் வன்னி யுத்தத்திற்கு சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசு மறுப்பதால் அதற்கு அழுத்தம் கொடுப்பதற்காக தாங்கள் இந்த அழுத்தத்தை வழங்குவதாக சென் கந்தையா தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தார்.
இதே நிலைப்பாட்டையே தமிழ் தேசியக் கட்சிகள் கொண்டிருந்த போதும் அவர்கள் இதனை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. ஊடகங்களும் அவர்களுடைய கருத்தை பெற்றுக்கொள்ளவில்லை. இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐரோப்பிய ஒன்றியக் குழுவை தமிழ் கட்சிகள் சந்திக்க உள்ளனவா? அவர்கள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டும் என்று கோருவார்களா, வழங்க வேண்டாம் என்று குறுவார்களா? இது தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்களுடைய கருத்துக்களை மிக வெளிப்படையாக வைக்க வேண்டும். ஜிஎஸ்பி வரிச்சலுகை மறுக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாதிக்கப்படும். அதனால் இது தொடர்பில் தமிழ் கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக தெரியப்படுத்த வேண்டும்.
அமெரிக்கா இறக்குமதிக்கான தீர்வை யை இலங்கைக்கு சடுதியாக அதிகரித்துள்ளதால் இலங்கை மிகுந்த பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி உள்ளது. இதனால் மூன்று லட்சம் வரையான பெண்கள் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. ஜிஎஸ்பி வரிச்சலுகையையும் இலங்கை இழந்தால் வேலையிழக்கும் பெண்களின் எண்ணிக்கை ஐந்து லட்சம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் பின்னணியில் இன்றைய தினம் கூடும் அமைச்சரவை, பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பன குறித்து முக்கிய தீர்மானங்களை எடுக்கவுள்ளனர். இதன்படி, நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முழு மையாக நீக்கவும் புதிய சட்டம் ஒன்றை
நிறைவேற்றவும் அரசாங்கம் அவதானம் செலுத்துகின்றது என்பதனை தேசம்நெற் சில தினங்களுக்கு முன் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஜி. எஸ். பி. பிளஸ் வரிச் சலுகையில் பயனடையும் குறைந்த அல்லது நடுத்தர வருமானமட கொண்ட 8 நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். மனித உரிமை கள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் நல்லாட்சி தொடர்பான 27 சர்வதேச மரபுகளை அங்கீகரித்த
பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக் கூடிய வளரும் நாடுகளின் நலன் கருதி இந்த சலுகை வழங்கப்படுகிறது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை பெறும் நாடுகளை இரு வருடங்களுக்கு ஒருமுறை மதிப்பீடு செய்து சலுகைக்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும்.
இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி இடமாக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. கடந்த ஆண்டு
270 கோடி யூரோவை இலாபமாக இலங்கை ஈட்டியது. இந்த ஏற்றுமதிகளில் 85 சதவீதம் ஜி. எஸ். பி. பிளஸ்
வரிச் சலுகை மூலம் கிடைத்தது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. ஆனாலும் இலங்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகளுக்கே தன்னுடைய பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் இந்த ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அதனாலேயே அமெரிக்கா இறக்குமதித் தீர்வையை அதிகரித்ததும் இலங்கை மிகப்பெரிய தாக்கத்தை எதிர்கொண்டது. ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் தற்போது அதிகரித்துள்ளது.
இலங்கைப் பொருளாதாரம் – தேசியவாதம் பற்றி சமூக அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் ஈரோஸ் உறுப்பினர் ரவி சுந்தரலிங்கம் குறிப்பிடுகையில் ஜேவிபி தேசியவாதத்தைக் விட்டுவிட்டதாகவும் தமிழ் கட்சிகளும் தேசியவாதத்தைக் கைவிட வேண்டும் என்றும் தெரிவித்தார். புலத்திலிருந்து சென் கந்தையா போன்றவர்களும் தமிழ் தேசியக் கட்சிகளும் ஜிஎஸ்பி பிளஸ் யை நிராகரிக்கக் கோருவது முட்டாள்தனம் என்பதையும் அவர் தேசம்நெற்க்கு வழங்கிய நேர்காணலில் சுட்டிக்காட்டினார்.