பலாலியை மூடுங்கள் வன்னியில் திறவுங்கள் – சர்வதேச விமான நிலையத்திற்கு வன்னியே பொருத்தமான இடம் ! எம் பி கஜேந்திரகுமார்

பலாலியை மூடுங்கள் வன்னியில் திறவுங்கள் – சர்வதேச விமான நிலையத்திற்கு வன்னியே பொருத்தமான இடம் ! எம் பி கஜேந்திரகுமார்

தற்போது இருக்கின்ற பலாலி விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்பதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த திட்டத்தை என்பிபி நிறைவேற்ற முனைகின்றது. சர்வதேச விமான நிலையமும் சர்வதேச கிரிக்கெட்ட மைதானத்தையும் யாழ்ப்பாணத்தில் கட்டித்தருவதாக கங்கனம் கட்டிக் என்பிபி அரசாங்கம் நிற்கின்றது. இது வாக்குகளுக்காக யாழ்ப்பாண மையவாதத்தை குளிர்விக்கும் செயற்பாடோ எனவும் சந்தேகம் எழுகின்றது. அபிவிருத்தியை யாழ்ப்பாணத்திற்குள் மட்டும் குவிப்பது பொருத்தமானதல்ல. இதனை தேசம்நெற்றும் யாழ் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த விடயத்தில் ஏனைய தமிழ்த்தேசிய கட்ச்சித் தலைவர்கள் போல அல்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரிடமிருந்து எழுந்த முதலாவது எதிர்ப்புக் குரல் வரவேற்கத்தக்கது. யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு பலாலியை தெரிந்தெடுத்தமை பொருத்தமற்றது என்று கூறும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தின் ஒரு மூலையில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்குப் பதிலாக ஏன் வன்னியிலோ, வவுனியாவிலோ, அநுராதபுரத்திலோ அல்லது கிழக்கிலோ ஒரு இடத்தை தெரிவு செய்யக் கூடாது என கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாணம் ஒரு குடாநாடு. மிக நெருக்கமான மற்றும் குறுகலான நிலப்பகுதியாகும். பலாலி சர்வதேச விமான நிலையத்திற்காக 1,000 ஏக்கர் விவசாய மற்றும் தோட்ட தனியார் நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இது மரக்கறி மற்றும் விவசாய பொருட்கள் உற்பத்தியிலும் கால்நடை வளர்ப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காணிகளை இழந்து தமது வாழ்வாதாரத் தொழில்களை செய்ய முடியாது நிலங்களுக்குச் சொந்தக்காரான மக்கள் வறுமையை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

தனியே வாக்கரசியலுக்காக யாழ்ப்பாண மையவாதிகளை திருப்திப்படுத்துவதை விட நிலைபேறான அபிவிருத்தியை நோக்கியே அரசாங்கங்களின் செயல்த்திட்டங்கள் இருக்க வேண்டும்.

வன்னி மாவட்டமே ஈழப்போரில் கோரமான அழிவுகளைச் சந்தித்த மாவட்டம், அபிவிருத்தியில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. யுத்ததின் வடுக்களை சுமந்து நிற்கின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை 1995 இல் நடந்த சூரியகதிர் இராணுவ நடவடிக்கையின் போது யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2009 அல் முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் வரையும்மே யாழில் நேரடி யுத்தம் ஒன்று இடம்பெறவில்லை. 1995 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த யாழ் மாவட்ட மக்களில் வன்னியிலேயே நிரந்தரமாக தங்கியவர்களைத் தவிர ஏனைய யாழ்ப்பாண மக்கள் நீண்ட காலம் யுத்ததின் கொடிய அழிவுகளிலிருந்து தப்பிக் கொண்டனர்.

1995 க்கு பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பூர்வீக மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெளியேறி விட்டனர். பலர் புலம்பெயர்ந்து சென்றவர்களை விட ஏனையோர் தென்னிலங்கையில் கொழும்பில் குடியேறிவிட்டார்கள்.

வன்னி மாவட்டம் கிளிநொச்சியைப் பொறுத்தவரை ஏ 9 நெடுஞ்சாலை ஊடறுத்துச் செல்வதும் வாகனப் போக்குவரத்து நெரிசல் இல்லாத பயணிக்கலாம். வடக்கு கிழக்கை இணைக்கும் இடத்தில் வன்னி மாவட்டம் உள்ளது. மேலும் வன்னி மாவட்டத்தில் பெருமளவான அரசாங்க காணிகள் உள்ளன. தனியார் காணிகளை சுவீகரித்து பணம் கொடுக்கத் தேவையில்லை. மேலும் இலங்கையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த பிரதேசமாக வன்னி உள்ளது. அந்த வகையில் சர்வதேச விமான நிலையத்துக்கான பொருத்தமான இடம் வன்னியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமாரின் கோரிக்கை மிகப் பொருத்தமானதே.

நீண்ட கால நோக்கில் சனத்தொகை அடர்த்தி மிக்க யாழ்ப்பாணத்திலிருந்து சனத்தொகை அடர்த்தி குறைந்த வன்னிக்குக் கொண்டு செல்வதன் மூலமே அபிவிருத்தியை ஜனநாயகப்படுத்த முடியும். எதிர்கால விஸ்தரிப்புக்கும் இதுவே பொருத்தமானது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தை கிளிநொச்சி அறிவியல் நகருக்குக் கொண்டு சென்ற முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயற்பாடு பாராட்டுக்குரியது.

குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டுடனான தொப்புள் கொடி உறவை பேண வலுப்படுத்த தற்போது கப்பல் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காங்கேசன் துறை இறங்குதுறைக்கு நாகப்பட்டினத்திலிருந்து கப்பல் போக்குவரத்து கிரமமாக இடம்பெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு 90 நிமிடங்களில் வந்து விடலாம். கிளிநொச்சி துரிதமாக வளர்ந்து வரும் நகரமாகும். யாழ் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை, மத்தியப்படுத்தப்பட்ட கழிவகற்றல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை மற்றும் ஒடுங்கிய சன நெருக்கடி அதிகமான பலாலி வீதி என எப்படி பார்த்தாலும் சர்வதேச விமானநிலையம் வன்னி மாவட்டத்தில் அமைவதே பொருத்தமானதாகவிருக்கும். யாழ்ப்பாணத்திற்கு இரணைமடு குளத் தண்ணீரை குடிக்க கொடுக்க மறுக்கும் சிறிதரன், கிளிநொச்சிக்கு சர்வதேச விமான நிலையம் வர வேண்டும் என கோரிக்கை விடுக்கவில்லை என்பது தான் இராஜதந்திரமாகும். சிறிதரனுக்கு யாழ்ப்பாண வாக்கும் வேண்டும் கிளிநொச்சி வாக்கும் வேண்டும்.

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை தீவகத்திற்குள் கொண்டு வருவது கூட பொருத்தமானதாக அமையலாம். பெரும்பாலன தீவுகள் மக்கள் இல்லாது வெறிச்சேடிக் கிடக்கின்றன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட சர்வதேச ரீதியாக கிரிக்கெட் ரசிகர்கள் வரும் போது தீவகத்தில் உல்லாச பயணத்துறையையும் அபிவிருத்தி செய்யலாம். தீவகத்தில் அதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *