புலிகள் – கருணா பிளவின் பின் நின்ற நோர்வே புலனாய்வு முகவரின் நூல் வெளியீட்டில் கஜேந்திரகுமார் !
புலிகள் – கருணா பிளவின் இழப்புகள், புலிகளின் முடிவு பற்றிய ஆய்வுகள், மதிப்பீடுகள் நடந்துகொண்டிருக்கும் 20 ஆண்டுகள் இம்மாதம் நினைவு கூரப்படுகின்றது. இந்தப் பிளவின் பின்னணியில் நோர்வே புலனாய்வுப் பிரிவினர் இருந்தது அனைவரும் அறிந்த இரகசியம். அதனை தேசம்நெற் 2004 முதல் எழுதி வந்திருக்கின்றது. புலிகளின் தலைவர் பிரபாகரனையும் பொட்டம்மானையும் தங்களால் இணங்க வைக்க முடியாத நிலையில் அவர்களை அணுகவே முடியாத நிலையில் கருணாவை புலனாய்வு முகவர்கள் அணுகினர்.
அவர்களில் ஒருவர் தான் இலங்கையில் பிறந்து சிறுவயதிலேயே நோர்வேக்குப் புலம்பெயர்ந்து வாழும் நோர்வே பிரஜையான மரியநாயகம் நியூட்டன்.
இவர் நல்ல வசதிபடைத்த செல்வந்தரான நோர்வேஜிய பெண்ணைத் திருமணம் செய்து வாழ்கின்றார். உளவியல் நிபுணரும் கூட. இவர் கருணா பிரிந்து செல்வதற்கு முன் கருணா பிரிந்து செல்வதற்கு வேண்டிய கருத்தியலை கருணாவுக்குள் விதைத்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகின்றார்.
இவர் எழுதிய ‘காட்டிக் கொடுக்கப்பட்ட கடலும் கைவிடப்பட்ட மக்களும்’ நூல் வெளியீட்டு நிகழ்வு ஏப்ரல் 19 நேற்றுக் காலை யாழ். மாவட்ட செயலகம் அருகிலுள்ள வை. எம். சி.ஏ. மண்டபத்தில் யாழ். கிராமிய உழைப்பாளர் சங்க தலைவர் என். இன்பம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வை யாழ். கிராமிய உழைப்பாளர் சங்கம்இ தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அமைப்பாளரும் உலக மீனவ சம்மேளனத்தின் பொதுச் செயலாளருமான ஹேமன் குமார, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்தனர். வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அ. அன்னராசா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ. கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.
மரியநாயகம் நியூட்டன் அறகலய போராட்ட காலத்தில் இலங்கையில் தங்கியிருந்து அப்போராட்டத்தின் பின்னணியில் செயல்பட்டவர். அதற்காக அவர் பின்னர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இலங்கை வந்துள்ள மரியநாயகம் நியூட்டன் முன்னணி சோசலிசக் கட்சியோடு இணைந்து செயற்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மரியநாயகம் நியூட்டனைப் போன்று நோர்வே புலனாய்வுப் பிரிவோடு இணைந்து செயற்படுவதாக பெருமையுடன் கூறிவருபவர் ‘ஊத்தை சேது’ என கருணா பிரிவின் பின்னணியில் செயற்பட்ட லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் உரிமையாளர் ஆர் ஜெயதேவனால் விமர்சிக்கப்பட்டு வந்த நடராஜா சேதுரூபன்.
அண்மையில் தேசம்நெற்றைத் தொடர்புகொண்ட அவர் ஜேவிபி அரசு நீண்டகாலம் நிலைப்பதற்கு அனுமதிக்கப்படாது என்ற கருத்தை வெளியிட்டு இருந்தார். இவர் இலங்கைக்குச் சென்றிருந்த போது கைது செய்யப்பட்டு பலமாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.
மரியநாயகம் நியூட்டன் இலங்கை விடயங்களில் மட்டுமல்லாமல் வேறு புலனாய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இஸ்ரேலின் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இவரது குழுவினர் ஈடுபட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது.மரயநாயகம் நியூட்டனின் குழுவினர் ஹிஸ்புல்லா போராளிகள் மீது பேஜர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதிகளில் அங்கு தங்கியிருந்துள்ளதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
நோர்வே சுத்தமான சுவாமிப்பிள்ளை வேடம் போட்டபோதும் அந்நாடு அமெரிக்காவின் ஒரு மென்மையான முகமாகவே பார்க்கப்படுகின்றது. தற்போது மரியநாயகம் நியூட்டன் இலங்கையில் நிற்பதன் நோக்கம் என்ன என்ற சந்தேகம் தவிர்க்க முடியாதது. முன்னனி சோசலிசக் கட்சியூடாகவும் தற்போது ஜேவிபிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது. அடுத்த முனையில் அமெரிக்கத் தூதுவர் யூலி சங் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு நெருங்கிய உறவைக் கொண்டுள்ளார். நியூட்டன் தன்னுடைய நூல்வெளியீட்டை பொன்னம்பலம் கஜேந்திரகுமாரை வைத்து வெளியிட்டுள்ளார். நாடு உள்ளுராட்சி சபைத் தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டுள்ளது.
இலங்கை ஒரு குட்டித்தீவாக இருந்தாலும் அதனை ஏகாதிபத்திய நாடுகள் சமாதானமாக நிம்மதியாக வாழ அனுமதிக்கப் போவதில்லை என்பதையே இவை கட்டியம் கூறுகின்றது.