December

December

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம். – இரா.சாணக்கியன்

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்துக்கு ஒரு முறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம். மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும், அவரை போல நாம் நேரத்துக்கு நேரம், மூன்று மாதத்துக்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் கிடையாது. எடுத்த முடிவில் எமது கட்சி இறுதி வரை செயற்படும்.

இதேவேளை, தமிழ் தரப்புக்களுக்கு தீர்வினை வழங்குவதாக கூறுகின்ற ரணில் விக்கிரமசிங்க தொடர்ச்சியாக மார்ச் மாதம் தீர்வுத் திட்டத்தினை வழங்குவதாக பொய்யுரைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில், பல ஏமாற்றங்கள் இருந்தாலும், நாம் சந்திப்புக்களில் கலந்துகொள்கின்றோம். இதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல விடயங்களை என்னால் முன்னெடுக்க முடிகிறது.

தேர்தலினை நடத்துவது தொடர்ச்சியாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மூலம் நிதி ஒதுக்கீட்டினை மேற்கொண்டு தேர்தல் அரசியலை மேற்கொள்ளவுள்ளார். குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகளில் கூட மோசடிகள் இடம்பெறுகின்றன என்றார்.

தொடரும் யுக்திய விசேட சோதனை நடவடிக்கை – 24 மணித்தியாலங்களில் 1,554 பேர் கைது !

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைய, நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் யுக்திய விசேட சோதனை நடவடிக்கைகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதில் 84 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், கைதானவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் இருவருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் – யாழில் சம்பவம் !

யாழ். கைதடி  ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த குறித்த முதியவர் பாரிச வாதம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை பராமரிப்பதற்கு ஒருவர்  2,500 ரூபா சம்பளத்திற்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த முதியவர் மீது நேற்று வெள்ளிக்கிழமை அந்த பராமரிப்பாளர் தாக்குதல் நடாத்தியுள்ளார். இந்நிலையில் அந்த முதியவரை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலையகம் 200 – கௌரவித்து புதுடில்லியில் ஞாபகார்த்த முத்திரை வெளியிட்டது இந்தியா !

இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டும் அவர்களுக்கான அங்கீகாரத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் இன்று சனிக்கிழமை (30) புதுடில்லியில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையின் பேரிலும் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் கே.அண்ணாமலையின் ஏற்பாட்டிலும் மலையக மக்களை கௌரவிக்கும் வகையில் இந்திய தபால்துறை அமைச்சினூடாக இந்த நினைவுத் தபால் தலை வெளியிடப்பட்டு, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி தமிழர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வின்போது, பாரதீய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நடாவால் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு நினைவுத் தபால்தலை கையளிக்கப்பட்டது.

இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கைக்கு இடம்பெயர்ந்தமை தொடர்பான நூற்றுக்கணக்கான ஆவணங்கள், கோப்புகள் பரிசீலிக்கப்பட்டு, உரிய வரலாற்றுச் சுவடுகளோடு இந்த முத்திரையை வெளியிடுவதற்கு இந்திய தபால்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன் மூலம் இலங்கைக்கு இடம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பிலான வரலாறு இந்தியர்களுக்கு எளிதில் எடுத்துரைக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், சீனா, ஈரான், மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பூட்டான் உள்ளிட்ட 210க்கும் மேற்பட்ட நாடுகளில் கிட்டத்தட்ட 32,285,425 இந்திய வம்சாவளி மக்கள் வசித்து வருகின்ற போதிலும், இலங்கையில் 200 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்காக முத்திரை வெளியிடப்பட்டுள்ளமை மலையக மக்களுக்கு அளிக்கப்படும் மரியாதையாகவே பார்க்கப்படுகிறது.

 

 

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவி – வௌ்ளை மாளிகை அனுமதி !

உக்ரைனுக்கு மேலும் 250 மில்லியன் டொலர் இராணுவ உதவிகளுக்கு வௌ்ளை மாளிகை அனுமதி அளித்துள்ளது.

 

இதில் வான் பாதுகாப்பு, ஆட்டிலரி மற்றும் ஆயுதங்கள் என்பன உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ரஷ்யாவுடனான போரில் மேற்குலக நாடுகளின் உதவிகள் கிடைக்காவிட்டால் போர் முயற்சி மற்றும் தனது திறைசேரி மிகவும் ஆபத்தான நிலையை அடையுமென உக்ரைன் தெரிவித்திருந்த நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

இதேவேளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அமெரிக்காவே தொடர்ந்தும் உக்ரைனுக்கு போர் உதவிகளை வழங்கி போரை தூண்டுகிறது என குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

 

இருப்பினும் இதற்கு பல எதிர்ப்புக்கள் வெளியானதை அடுத்து திருத்த முன்மொழிவுகள் கோரப்பட்டு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

 

எவ்வாறாயினும் அன்றையதினம் இணையப் பாதுகாப்பு சட்டமூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டது. எனவே இந்த திருத்தங்கள் அடங்கிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை ஜனவரியில் சமர்ப்பிப்பதாக விஜயதாச ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்க விசேட அறிக்கை மார்ச் மாதத்தில் என்கிறார் ஜனாதிபதி ரணில்!

நாடு எதிர்நோக்கும் இரு முக்கிய சவால்களில் ஒன்று நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றொன்று இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆகவே கட்சி வேறுபாடின்றி இந்த இலக்குகளை அடைவதற்கு அனைவரும் கைகோர்க்க வேண்டும் என ஜனாதிபதி அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

 

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளை நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

 

இதற்கு தீர்வு காணும் பொருட்டு எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடரும் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை – ஒரு நாளில் 240 பேர் பலி !

காசாவில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை தொடர்வதால், கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 241 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மேற்குக் கரையில், துல்கரேமில் உள்ள நூர் ஷம்ஸ் அகதிகள் முகாமில் ஒரே இரவில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேநேரம் குறித்த 24 மணி நேரத்தில் 382 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

11 வாரங்களுக்கும் மேலாக நடந்துவரும் மோதலில் குறைந்தது 20,915 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள அதேநேரம் அதில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குறித்த போர் தனது மக்களுக்கு எதிரான கடுமையான குற்றம் என பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கூறியுள்ளார்.

 

இதேநேரம் ஹமாஸுடனான மோதல் இன்னும் பல மாதங்களுக்கு தொடரும் என்று இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி தெரிவித்துள்ளார்.

 

அதன்படி நேற்று 100 க்கும் மேற்பட்ட தளங்களை தாக்கியதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீடுகள் !

கொழும்பில் குடிசை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் துரித வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

 

கொழும்பிலுள்ள 26 தோட்டங்களில் 61,000 இற்கும் அதிகமான மக்கள் வசித்து வருவதாக அமைச்சின் செயலாளர் W.S.சத்யானந்த குறிப்பிட்டார்.

 

அவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கான புதிய யோசனை, அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக நிறைவேற்றப்பட்டது.

 

இதன் கீழ் தோட்டங்களில் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்காக உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்களினால் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

 

இவ்வாறு நிர்மாணிக்கப்படும் வீடுகளில் மக்களை குடியமர்த்தியதன் பின்னர், எஞ்சியுள்ள இடங்கள் முதலீட்டாளர்களுக்காக முதலீட்டு செயற்றிட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

 

செயற்றிட்டங்களுக்காக முதலீட்டாளர்களின் யோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

“தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.” – இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும்.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர்,

 

“தமிழ் மக்களைப்பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்தத் தேர்தலை பகிஸ்கரிப்பதுதான். அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

 

தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது.

 

அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள் குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுடைய பெயரைத் தானாகவே வந்து முன்மொழிந்திருக்கின்றார்.

 

முக்கியமாக ஈ.பி.ஆர்.எல்.எப் தரப்பின் தலைவர் மற்றும் இன்னுமொரு அணி மனோ கணேசன் ஆகியோரை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

 

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்களத் தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

 

அந்த சிங்களத் தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்புக் கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம்.

 

ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம்.

 

அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம் தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம்.

 

இவை அனைத்தும் சம்பந்தமாக சிங்களத் தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.