இந்தியாவில் கேரள மாநிலம் கோழிக்கோடிலுள்ள உம்மலத்தூர் என்ற பகுதியிலுள்ள தம்பதிகளான சஹத் – ஜியா இருவரும் மூன்றாம் பாலின தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களில் கணவனாக இருக்கும் ஜியாவுக்கும் மனைவியாக இருக்கும் சஹத்திற்கும் முதல் குழந்தை பிறக்கவிருப்பதை புகைப்படங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இதனை தொடர்ந்து திருமணம் செய்துக் கொண்ட பின்னர் இவர்களுக்கு என ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்து குறிப்பிட்ட ஒரு பிரபல வைத்தியசாலையில் ஆலோசனை கேட்டுள்ளார்கள்.
அதற்கு மருத்துவர், ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய சஹத் தந்தையாகவும் பெண்ணாக பிறந்து கணவனாக இருக்கும் ஜியா தாயாகவும் இருந்து குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என கூறியுள்ளார்.
இந்த முறையை சரியாக செயற்படுத்தி தற்போது ஜியா கர்ப்பமாக இருக்கிறார். இவர்களின் அன்பு குழந்தை எதிர்வரும் மார்ச் மாதம் இந்த உலகிற்கிற்கு வரவிருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் மூன்று உயிர்களும் ஒன்றாக இருப்பது போன்று போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் தொல்லையில் சிக்கியுள்ளது. கடன் தொல்லைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தையின் போது சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) அரசாங்கத்திற்கு ‘கடினமான சூழலை’ அளித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நேதன் போர்ட்டர் தலைமையிலான ஐஎம்எஃப் மிஷன், 7 பில்லியன் அமெரிக்க டொலர் உதவிப் பொதியின் ஒன்பதாவது மறுஆய்வுக்காக நிதி அமைச்சர் இஷாக் டார் தலைமையிலான பாகிஸ்தான் தரப்புடன் ஜனவரி 31 அன்று பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.
பெஷாவரில் நடைபெற்ற அபெக்ஸ் கமிட்டி கூட்டத்தில் உரையாற்றும் போது பாகிஸ்தான் பிரதமர் தனது கருத்தை தெரிவித்தார். இந்த குழு தீவிரவாதத்தை கையாள்வதற்கான மிக உயர்ந்த மாகாண அமைப்பாகும்.
பாதுகாப்பு நிலைமை குறித்து பேசுகையில், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை எடுத்துரைத்த ஷெரீப், “இந்த நிலைமை முழு தேசத்திற்கும் முன்னால் உள்ளது” என்று கூறினார்.
“நான் பேசும் இந்த வேளையில், ஐஎம்எஃப் தூதுக்குழு இஸ்லாமாபாத்தில் உள்ளது. அவர்கள் நிதியமைச்சர் இஷாக் தர் மற்றும் அவரது குழுவினருக்கு கடினமான, இக்கட்டான சூழலை ஏற்படுத்தி வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.
இந்த கட்டத்தில் உள்ள பொருளாதார சவால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நிலையில் உள்ளது. நாடு சந்திக்க வேண்டிய ஐஎம்எஃப் நிபந்தனைகளும் கற்பனைக்கு அப்பாற்பட்டவை என்று ஷெரீப் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது கட்டாயம் என்பதையும் அவர் தெரிவித்தார்.
கடந்த நிதியாண்டு வார முடிவில், பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு 16.1 சதவீதம் குறைந்து 3.09 பில்லியன் டாலராக உள்ளதாகவும், இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக பாகிஸ்தானின் மத்திய வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இதேநேரத்தில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தை இலங்கை எதிர்பார்த்துள்ள அதே நேரம் மார்ச் மாத இறுதியில் சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதி முடிவு எட்டப்படும் என அமைச்சர் அலி சற்று நேற்றைய தினம் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). இவர் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக்காக அனுமதிக்கப்படாத தலிபான் அரசின் உத்தரவை கடுமையாக விமர்சித்தார். மேலும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மேற்படிப்பு சான்றிதழை தொலைகாட்சிக் நேர்காணல் ஒன்றில் எரிந்தார். மேலும், வீதிகளில் நின்று புத்தகங்களையும் வழங்கி வந்தார்.
இந்த நிலையில், மஷால் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்ற புகாரில் தலிபன் அரசால் கைது செய்யப்பட்டார். கைதின்போது மஷாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தலிபான் அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மஷாலின் கைது ஆப்கானிஸ்தானில் உள்ள சமூக ஆரவலர்களிடத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி பள்ளிகளிலும் பெண்கள் படிக்க இடைக்கால தடைக்கு தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பைக் கேட்டு, ஆப்கானிஸ்தான் பெண்கள் பலர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், பெண்களின் உரிமையை தொடர்ந்து பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.
பெப்ரவரி 2இல் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த ஆசாமிக்கு 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அறியாப் பருவத்தில் பெண் பிள்ளையை தன் பாலியல் இச்சைக்கு உட்படுத்திய தமிழ் வர்த்தகப் பிரமுகரான பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கே 30 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பிரேமகுமார் ஆனந்தராஜா ( Anandarajah Bremakumar ) வுக்கு எதிரான பாலியல் இம்சைக் குற்றச்சாட்டு டிசம்பர் முற்பகுதியில் நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு இருந்தது முதற் தடவையாக தேசம்நெற்றில் வெளியாகி இருந்தது. வூட் கிரீன் கிரவுண் நீதிமன்றில் நடந்த பிரேமகுமார் ஆனந்தராஜாவின் வழக்கின் முடிவில் இன்று பெப்ரவரி 02இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு 30 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் அவருடைய பெயர் பாலியல் துஸ்பிரயோகம் செய்வோர் பட்டியலிலும் சேர்க்கப்படும் எனவும் அதனால் இவர் சிறுமிகள் சிறுவர்கள் உள்ள பொது இடங்களில் நடமாடவும் தடை செய்யப்படும் எனவும் தெரியவருகின்றது.
அறுபத்தியொரு வயதான பிரேமகுமார் ஆனந்தராஜா சம்பந்தப்பட்ட சிறுமியைவிடவும் ஏனைய சிலருடனும் தவறாக நடந்துகொண்டவர் என்றும் அனால் மற்றையவர்கள் நீதிமன்று வரை செல்லவில்லை எனவும் தெரியவருகின்றது. பிரேமகுமார் ஆனந்தராஜாவுக்கு டயபிற்ரீஸ் மற்றும் நோய்க் காரணங்களைச் சுட்டிக்காட்டி அவருக்கு வழங்கப்பட்ட தண்டணை மனிதாபிமான அடிப்படையில் 30 மாதங்களுக்குக் குறைக்கப்பட்டது. தண்டனை வழங்கும் போது தனது குற்றத்தை பிரேமகுமார் ஆனந்தராஜா ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என நீதிபதி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றவாளியின் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணுடைய தாயின் நன்நடத்தையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடந்துகொண்டதையும் நீதிபதி வன்மையாகக் கண்டித்திருந்தார்.
பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவி, சகோதர சகோதரிகள் மற்றும் ஆச்சுவே ஆலயம் சார்ந்தவர்கள் அவருடைய மோசமான பாலியல் துஸ்பிரயோகத்தை அறிந்திருந்தும் அவருக்கு சாதகமாகச் செயற்பட்டனர். இவருடைய தங்கைகளில் ஒருத்தி அண்ணனுக்கு கொஞ்சக்காலம் தான் தண்டனை கொடுக்கப்பட்டு உள்ளது என்று அதற்குள் பெருமையடித்துள்ளார். பிரேமகுமார் ஆனந்தராஜா இவ்வாறான மோசமான பாலியல் துஸ்பிரயோகம் செய்த போதும்: அவருடைய பண வசதி, சமூகத்தில் ஆனந்தம் கிரியேசன் என்ற அமைப்பினூடாக பரதநாட்டியம், அரங்கேற்றம் போன்ற நிகழ்வுகளை நடாத்தி பெற்றுவந்த செல்வாக்கு, ஆலயங்களுக்கு மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொடுப்பது என்று பிரேமகுமார் ஆனந்தராஜா சமூக அந்தஸ்தைப் பெற்றிருந்தார். அதனைப் பயன்படுத்தியே இவர் இந்தப் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு இருந்தார்.
2022 டிசம்பர் முற்பகுதியில் இவ்வழக்கில் பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்டு 2023 பெப்ரவரி 2இல் அவருக்கு தண்டணை வழங்க்பட்ட போதும் இவ்வழக்கின் வரலாறு 13 ஆண்டுகள் நீண்டது. 2010இல் அப்போது 13 வயதேயான குழந்தையான சிறுமிiயையே பிரேமகுமார் ஆனந்தராஜா அவளே அறியாத பருவத்தில் துஸ்பிரயோகம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயும் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் மனைவியும் மிக நெருங்கிய நண்பிகள். பாதிக்கப்பட்ட சிறுமியின் பூப்புனித நீராட்டுவிழாவில் கூட அக்குழந்தையின் தாய்மாமனாகவும் மாமியாகவும் ஆனந்தராஜா தம்பதிகளே அழைக்கப்பட்டுடிருந்தானர். அவ்வளவு நம்பிக்கையோடு பழகியவர்களின் வீட்டுச் சிறுமியையே பிரேமகுமார் ஆனந்தராஜா அனுபவிக்க முற்பட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தாரின் சிநேகிதி தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். 2010இல் சிறுமிக்கு 13 வயதாக இருக்கும் போதே இத்துஸ்பிரயோகங்கள் இடம்பெற்றது. ஆனாலும் அது வேறு யாருக்குமே தெரியாது.
சிறுமி தனது 21வது பிறந்த தினத்தன்று தாயாருக்கு தனக்கு ஏற்பட்ட அக்கொடிய அனுபவங்களை சொல்லியுள்ளார். அதனைக் கேட்டு கதிகலங்கிய தாயார் தன்னுடைய நெருக்கமான தோழியான ஆனந்தராஜாவின் மனைவிக்கு இதனைத் தெரிவித்து நியாயம் கோரியுள்ளார். அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் கெஞ்சி மன்றாடிய ஆனந்தராஜாவின் மனைவி தன்னுடை பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவிடாமல் தடுத்தார்.
அதன் பின் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண், ஒரு விரிவுரையின் போது பெண் பிள்ளைகள் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாவதை எவ்வாறு அறிந்துகொள்வது என்பது பற்றிய விரிவுரை நடந்தது என்றும் அதன் போது சம்பந்தப்பட்ட பெண் அழ ஆரம்பிக்கவே பல்கலைக்கழகம் அப்பெண்ணின் நிலையை உடனேயே அறிந்து கொண்டனர். பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அன்று சந்தேக நபரான பிரேமகுமார் ஆனந்தராஜாவை விசாரணைக்கு வருமாறு கோரியும் இருந்தனர். அப்போது மருத்துவத்துறையில் பயின்று கொண்டிருந்த அப்பெண் தன் கல்வி முன்னேற்த்தை எதுவும் தடைப்படுத்தக் கூடாது என்பதால் உடனடியாக நடவடிக்கையில் இறங்கவில்லை. தன்னுடைய இறுதித்தேர்வின் இறுதிப் பரிட்சையையும் முடித்துக்கொண்ட பின் நேரடியாக் பொலிஸாரிடம் சென்று பிரேமகுமார் ஆனந்தராஜா மீதான குற்றச்சாட்டை மீள்புதுப்பிக்கும்படி கோரி; பொலிஸாருக்கு முழமையான ஒத்துழைப்பை வழங்கினார்.
அதனைத் தொடர்தே பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கி சந்தேக நபரைக் கைது செய்து அவர் குற்றவாளி என்பதையும் நிரூபித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணோடு கூடப் படித்தவர் இது பற்றித் தெரிவிக்கையில் “அவர்கள் அனுபவித்த துயரை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது” எனத் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பாதிப்பு வலியுடன் இருக்கின்ற போது பிரேமகுமார் ஆனந்தராஜாவை காப்பாற்றும் சில முயற்சிகளிலும் சில சமூகப்பெரும் புள்ளிகள் ஈடுபட்டுள்ளனர். அது பற்றி பாதிக்கப்பட்டவர் “இவங்களுக்குள்ளையா நாங்கள் வளர்ந்தனாங்கள்” என்று மனம் வெதும்பியதாக அப்பெண்ணின் சிநேகிதி தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த பதிவில்.
அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் விக்டோரியா நுலாண்ட் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இலங்கையில் சீனா தொடர்பில் வெளியிட்ட கருத்துக்கு சீனா பதில் வழங்கியுள்ளது.
இலங்கைக்கான கடன் நிவாரணத்துக்காக சர்வதேச நாணய நிதிய நிபந்தனை விடயத்தில் சீனா காட்டியுள்ள முனைப்பு போதாது என்று நூலன்ட் தெரிவித்திருந்தார்.
எனினும் உண்மையில் அமெரிக்கா இலங்கைக்கு ஏதாவது செய்யவேண்டுமானால், தமது நேர்மையைக் காட்ட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று வியாழன் அன்று வழக்கமான செய்தியாளர் சந்திப்பில், கருத்துரைத்த, சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர்-மாவோ நிங், அமெரிக்க ராஜதந்திரி கூறியதில் உண்மை இல்லை என்று தெரிவித்தார்.
சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவைத் தெரிவிக்கும் கடிதத்தை வழங்கியுள்ளது. இலங்கையும் அதற்கு சாதகமாக பதிலளித்துள்ளது மற்றும் அதற்காக சீனாவிற்கு நன்றி தெரிவித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் இலங்கையுடனான சீனாவின் நெருங்கிய ஒத்துழைப்பைக் கண்டு துவண்டு போவதை நிறுத்துமாறு வோஷிங்டனை அவர் எச்சரித்தார்.
உண்மையான நண்பன் என்ற வகையில் சீனா இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்களையும் சவால்களையும் உன்னிப்பாகக் கவனித்து அதன் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான உதவிகளை மிகச் சிறந்த முறையில் வழங்கி வருகிறது என்றும் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த விமானம் லித்தியம் பேட்டரியால் இயங்ககூடியது. இந்த விமானத்துக்கு எக்ஸ்-57 என பெயரிடப்பட்டுள்ளது. இதன் இறக்கையில் 14 புரொபல்லர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 இருக்கைகள் கொண்ட சிறிய விமானமாக எக்ஸ்-57 தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் இறக்கைகள் மிக நீளமாக உள்ளன. இவற்றை தேவையற்ற நேரத்தில் மடித்துக் கொள்ள முடியும். வழக்கமான பெட்ரோலிய எரிபொருளை பயன் படுத்தும்போது, எரிபொருள் தீர தீர, விமானத்தின் எடை குறையும்.
பேட்டரியில் இருந்து கிடைக்கும் சக்தி அதன் எடை மற்றும் அளவை பொருத்ததாக உள்ளது. அதிலிருந்து கிடைக்கும் சக்தியும், வழக்கமான விமான எரிபொருளில் இருந்து கிடைக்கும் சக்தியைவிட 50 மடங்கு குறைவாக உள்ளது. தற்போது குவாண்டம் தொழில்நுட்பத்தில் பேட்டரிகள் உருவாக்கப்படுகின்றன. இவற்றை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பேட்டரிகளில் லித்தியம் பேட்டரி சிறப்பானதாக உள்ளது. ஆனாலும் அவற்றின் எடை அதிகமாக உள்ளது. லித்தியம் எளிதில் தீப்பிடிக்ககூடியது என்பதால், அது தீங்கு விளைவிக்கும் அபாயமும் உள்ளது.
நாசா உருவாக்கியுள்ள எக்ஸ்-57 மின்சார விமானத்தில் 160 கி.மீ தூரம் வரை பறக்கலாம். இதற்கு ஒரு மணி நேரம் ஆகும். பரிசோதனை முயற்சியாக தயா ரிக்கப்பட்டுள்ள இந்த மின்சார விமானம் இந்த ஆண்டு பறக்க விடப்படவுள்ளது.
அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் 7 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 தீயணைப்பு வீரர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தாக்குதல் நடத்திய போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டென்னசே மாகாணத்தை சேர்ந்த மெம்பிஸ் நகரில் டைரே நிக்கோலஸ்(29) என்ற கருப்பின இளைஞர் கடந்த ஜனவரி 7-ம் திகதி தனது காரை வீட்டிலிருந்து தாறுமாறாக ஓட்டிச்சென்றுள்ளார்.
அவரது வாகனத்தை வழிமறித்து நிறுத்திய போலீஸார் டைரே நிக்கோலஸை கண்மூடித்தனமாக தாக்கினர். முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்தனர். வீட்டுக்கு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் விரட்டிப்பிடித்து, தீயணைப்பு படையினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்த்தனர். 3வது நாளில் அந்த நபர் இறந்தார். இச்சம்பவத்துக்கு அமெரிக்காவில் கடும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய மெம்பிஸ் போலீஸ் நிர்வாகம், இந்த தாக்குதலில் தொடர்புடைய 7 போலீஸாரையும் பணியிடை நீக்கம் செய்துள்ளது. இவர்களில் 5 பேர் கருப்பினத்தவர்கள். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்கப்பட்ட டைரே நிக்கோலஸின் உடல் நிலையை மதிப்பீடு செய்து போதிய மருத்துவ உதவிகளை வழங்காத காரணத்துக்காக தீயணைப்பு வீரர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மோசமான குற்றங்களில் ஈடு படும் நபர்களை விரட்டிப்பிடிக்க ‘ஸ்கார்பியன்ஸ்’ என்ற பெயரில் அதிரடிப்படையை மெம்பிஸ் காவல்துறை 2021-ம் ஆண்டு உரு வாக்கியது. இந்தப் படையைச் சேர்ந்தவர்கள்தான் நிக்கோலஸ் மீது தாக்குதல் நடத்தினர். இந்தப் படை தற்போது கடும் கண்டனத்துக்கு ஆளாகியதால், ஸ்கார்பியன் படையை நிரந்தரமாக கலைப்பதாக மெம்பிஸ் காவல் துறை அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரித்தானியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களாக விலைவாசி அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக இரு பிரதமர்கள் இராஜினாமா செய்தனர். இதையடுத்து, தற்போது ரிஷி சுனக் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் ஓய்வூதியம், சம்பள உயர்வு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள், ரயில் ஓட்டுநர்கள், விமான பணியாளர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், அரசு ஊழியர்கள் என 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் நேற்று ஈடுபட்டனர்.
இந்த வேலைநிறுத்தம் இடையூறுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் அலுவலகம் எச்சரிக்கை விடுத்திருந்தது. எனினும், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெற்றதால் பிரிட்டனில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் சுமார் 85 சதவீத பள்ளிகள் பாதிப்பை சந்தித்தன.
லண்டனில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் இணைந்த முன்னாள் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், வரிவிதிப்பு முறை நியாயமானதாக இருக்க வேண்டும் என்றும் சமத்துவமின்மை மிகப் பெரிய அளவில் அதிகரித்துவிட்டது. இதனை நாடு தாங்காது. பிரிட்டனில் முன்பை விட கோடீஸ்வரர்கள் அதிகரித்துவிட்டனர். கோவிட் காலத்தில் கோடீஸ்வரர்கள் நிறைய பணம் சம்பாதித்தனர். அதற்கு ஏற்ப அவர்களுக்கு வரி விதிக்கப்படவில்லை” என அவர் குற்றம் சாட்டினார்.
“அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் பொறுப்பற்ற செயலால் கொரிய தீபகற்ப நிலை சிவப்புக்கோட்டை எட்டியுள்ளது.” என வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட வட கொரிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நட்பு நாடுகளின் பயிற்சிகளின் விரிவாக்கம் கொரிய தீபகற்பத்தை பெரிய போர் ஆயுதக் களஞ்சியமாகவும் மிகவும் முக்கியமான போர் மண்டலமாகவும் மாற்ற அச்சுறுத்துகிறது.
மிகப்பெரும் அணுசக்தியுடன் நட்பு நாடுகளின் எந்தவொரு குறுகிய கால அல்லது நீண்ட கால இராணுவ சவாலையும் எதிர்கொள்ள வடகொரியா தயாராகவுள்ளது.
அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் பொறுப்பற்ற இராணுவ மோதல் சூழ்ச்சிகள் மற்றும் விரோதச் செயல்கள் காரணமாக கொரிய தீபகற்பம் மற்றும் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் அரசியல் நிலைமை தீவிர சிவப்புக் கோட்டை எட்டியுள்ளது.
அணுவாயுதத்திற்கான அணுகுண்டு மற்றும் ஒரு முழுமையான மோதலுக்கு ஒரு முழுமையான மோதல் என்ற கொள்கையின் அடிப்படையில், அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ முயற்சிக்கும் வடகொரியா கடுமையான எதிர்வினையை எடுக்கும்.
கொரிய தீபகற்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமெரிக்கா தொடர்ந்து மூலோபாய சொத்துக்களை அறிமுகப்படுத்தினால், வடகொரியா அதன் இயல்புக்கு ஏற்ப அதன் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் தெளிவுபடுத்தும்’ என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.
வட கொரியா பல தசாப்தங்களாக தென் கொரியாவுடன் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகளை ஒரு சாத்தியமான படையெடுப்பிற்கான ஒத்திகை என்று விபரித்துள்ளது, இருப்பினும் நட்பு நாடுகள் அந்த பயிற்சிகளை தற்காப்பு என்று விபரித்துள்ளன.
பல ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பயிற்சியை நேச நாடுகள் மீண்டும் தொடங்கியதால் வடகொரியா கடந்த ஆண்டு தனது சொந்த ஆயுத இருப்புகளை அதிகரித்தது.
வட கொரியாவின் நடவடிக்கைகள் ஏவுகணை மற்றும் பீரங்கி ஏவுகணைகளை உள்ளடக்கியது, இது தென் கொரியா மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது உருவகப்படுத்தப்பட்ட அணு ஆயுத தாக்குதல்கள் என்று விபரிக்கப்பட்டது.