2023

2023

சனத்தொகையில் இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் – ஐ.நா கணிப்பு!

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக மாறும் என ஐக்கிய நாடுகள் சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.

சீனாவின் 1,425.7 மில்லியனுக்கு எதிராக இந்தியாவின் மக்கள்தொகை 1,428.6 மில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமது அண்டை நாடான சீனாவை விட இந்தியா 2.9 மில்லியன் மக்களைக் கொண்டிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த இரு நாடுகளினது சனத்தொகை, 70 ஆண்டுகளுக்கும் மேலாக உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், 2011 க்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு இல்லாததால், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒரு கணிப்பாகும்.

மேலும், தங்கள் மதிப்பீட்டில் சீனாவின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஹொங்கொங் மற்றும் மக்காவ் மற்றும் தாய்வானின் மக்கள் தொகை கணக்கிடப்படவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.

எனினும், தாய்வான் தனது சொந்த அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களுடன் சீன நிலப்பரப்பில் இருந்து வேறுபட்டதாகக் கருதுகிறது.

கடந்த வருடம் நவம்பரில், உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியது. எனினும், வளர்ச்சி முன்பு போல் வேகமாக இல்லை என்றும், 1950க்குப் பிறகு இப்போது மிகக் குறைந்த வேகத்தில் இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும், இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் தங்கள் கருவுறுதல் விகிதத்தில் சரிவைக் கண்டுள்ளதாக ஐ. நா. தரவுகள் குறிப்பிடுகின்றன.

பகலில் கூட வெளியே வர அச்சப்படும் மாணவிகள் – வன்முறைகள் நிறைந்த பகுதியாக மாறிக்கொண்டிருக்கும் கிளிநொச்சி!

கிளிநொச்சி மாவட்டத்தில் வேகமாக அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகளை எடுத்துக் காட்டும் ஒரு சம்பவம் அண்மையில் செல்வா நகர் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பாடசாலையில் கல்வி கற்கும் இளைஞர் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதல்.

வடபகுதியில் குறிப்பாக கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் திரும்பும் திசையெல்லாம் இராணுவ முகாம்களும் காவல் நிலையங்களும் காணப்பட்டும் கூட இந்த வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக இந்த வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் கைதாவோர் இளைஞர்களாக காணப்படும் அதேவேளை போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டவர்களாகவும் – கசிப்பு காய்ச்சுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவுமே அடையாளம் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் காணப்படும் வன்முறையான நிலை ஆக மோசமான கட்டத்தை எட்டியுள்ளது என்பதே உண்மை.

இதனை கடந்தகால செய்திகளின் தலைப்புக்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

கிளிநொச்சியில் பரபரப்பு : செல்வாநகர் ஐயப்பன் கோயிலில் ஆண் ஒருவர் சடலமாக மீட்பு. (07.05.2022)

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் கெரொயின் மற்றும் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது. (28.07.2020)

கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் வாள்வெட்டு – கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் படுகாயம். (29.05.2019)

கிளிநொச்சியில் உள்ள தனது காணியை பார்வையிட வந்த அமெரிக்க பிரஜை ஒருவர் அடித்துப் படுகொலை (7.05.2018)

டியூசனுக்கு படிக்க சென்றாலும் ஐந்து மணிக்கு பிறகு எந்த பாடங்களிலும் பங்கு கொள்வதில்லை. ஏனெனில் ஆறு மணிக்கு முன்பாக ஊருக்குள் நுழைந்தால் தான் பாதுகாப்பாக வீடு செல்ல முடியும் என்ற துர்பாக்கிய நிலை உருவாகியுள்ளது.” என அந்த மாணவி தெரிவித்தார்.

சூடானில் இராணுவப்படைகளுக்குள் முரண்பாடு – பொதுமக்கள் பேர் வரை பலி !

சூடான் நாட்டில் இராணுவம், துணை இராணுவத்திற்கு இடையேயான மோதலில் பலியானோர் எண்ணிக்கை 200ஐ கடந்தது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராபிட் சப்போர்ட் போர்ஸ் (ஆர்.எஸ்.எப்) துணை இராணுவ படைகளை, இராணுவத்துடன் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இராணுவ தளபதி அப்தல் பதா அல் புர்கான் ஆர்எஸ்எப் தீவிரவாத ராணுவம் என்று கருத்து கூறியதால், அவருக்கும் துணை இராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தகாலோவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, அந்நாட்டின் கார்டோம், ஓம்டர்மன் பகுதிகளில் இராணுவம், துணை ராணுவ படைகளுக்கு இடையே 3வது நாளாக பலத்த மோதல் நடந்து வருகிறது.ஆர்.எஸ்.எப் துணை இராணுவத்தின் படைத்தளங்களை குறி வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்நாட்டின் தலைநகர் கார்டோமில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக ஆர்.எஸ்.எப் அறிவித்தது.

இந்நிலையில், சூடானில் இராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் 200 பேர் கொல்லப்பட்டனர் என தெரிய வந்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் என மொத்தம் 1800 பேர் காயமடைந்திருப்பதாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழு தெரிவித்தது.

இலங்கையையும் – இந்தியாவையும் இணைக்க கடலுக்கடியில் சுரங்கப்பாதை – மோடியிடம் கோரிக்கை !

தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும் எனவும் இந்தியா, இலங்கையில் வாழும் மக்கள் இதன்மூலம் பாரிய நன்மையடைவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

பங்களாதேஷிடமிருந்து இலங்கை பெற்ற கடன் – 6 மாத கால அவகாசம் !

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடுத்து கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கடன்களை மீளச்செலுத்துவதற்கு வழங்கிய கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களால் நீடிப்பதாக பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதம் பங்களாதேஷிடமிருந்து 200 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றது. அதனைக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீளச்செலுத்தவேண்டியிருந்த போதிலும், சுமார்  51 பில்லியன் டொலர் வெளியகக்கடன்களை மீளச்செலுத்தமுடியாத நிலையில் இருப்பதாகக் கடந்த ஆண்டு ஏப்ரலில் இலங்கை அறிவித்தது.

அதனையடுத்து அந்த 200 மில்லியன் டொலர் கடனை இலங்கை மீளச்செலுத்துவதற்கு இவ்வாண்டு மார்ச் மாதம் வரை பங்களாதேஷ் கால அவகாசம் வழங்கியது. இருப்பினும் இன்னமும் கடன் மறுசீரமைப்பு செயன்முறை முழுமையாகப் பூர்த்தியடையவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ‘கடன்களை மீளச்செலுத்துவதற்கு இலங்கை மேலும் 6 மாத காலஅவகாசத்தைக் கோரியிருக்கின்றது. அதன்படி முதற்கட்டமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திலும், இரண்டாம் கட்டமாக எதிர்வரும் செப்டம்பர் மாதத்திலும் கடன்தொகையை மீளச்செலுத்துவதாக இலங்கை தெரிவித்துள்ளது’ என்று பங்களாதேஷ் வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் குறிப்பிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி இதன்பின்னர் மேலும் கால அவகாசம் கோரப்போவதில்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடன்களை மீளச்செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்கும்போது, அது ‘இலவசமாக’ வழங்கப்படுவதில்லை என்றும் மாறாக அக்காலப்பகுதிக்குரிய வட்டி அறவிடப்படும் என்றும் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் – சர்வதேச மன்னிப்பு சபை வேண்டுகோள்!

இலங்கையின் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தனது எதிர்ப்பை வெளியிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை மக்களின் உரிமைகளை முக்கியமானவையாக பெறுமதிமிக்கவையாக பைடன் நிர்வாகம் கருதினால் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கு பைடன் நிர்வாகம் தெளிவான செய்தியை தெரிவிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மனித உரிமையின் அனைத்து அளவுகோல்களிலும் தோல்வியடைந்துள்ளது என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களின் உரிமைகள் மிக முக்கியமானவை என பைடன் நிர்வாகம் கருதினால் இந்த சட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்படவேண்டும் அல்லது முற்றாக கைவிடப்படவேண்டும் என்ற செய்தியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசி;ங்க அரசாங்கத்திற்கு தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நான்கு தசாப்தகாலமாக சிறுபான்மையினத்தவர்களையும் தன்னை விமர்சிப்பவர்களையும் தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து பைடன் நிர்வாகமும் அமெரிக்க காங்கிரசும் அமைதியாகயிருந்தால் அது மாற்றுநிலைப்பாடுடையவர்களை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் இலங்கை அரசாங்கத்தின் திறனை மேலும் வலுப்படுத்தும் என தெரிவித்துள்ள நாஸ் பல தசாப்தகாலங்களாக மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக குரல்கொடுத்துவந்துள்ள இலங்கையின் சிவில் சமூகத்தை அவமதிக்கும் செயலே உத்தேச சட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் அல்லது மோசமான சட்டத்தை மாற்றியமைக்கும் நோக்குடன் அதிகாரிகள் உத்தேச சட்டத்தை கொண்டுவரவில்லை மாறாக அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை இலக்குவைத்து அவர்களை மௌனமாக்கும் நோக்கத்துடனேயே இந்த உத்தேச சட்டம் கொண்டுவரப்படுகின்றது எனவும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசியாவிற்கான பரப்புரை இயக்குநர் கரொலின் நாஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை – ஐக்கிய நாடுகள் சபை

2030ஆம் ஆண்டு இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டில் அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் 4 வது இலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அல்லது யுனெஸ்கோ இதற்கு 3 டிரில்லியன் டொலர் நிதி தேவை என்று மதிப்பிட்டுள்ளது.

கிழக்கு மற்றும் தெற்காசியா நாடுகளில் கல்வித் தரம் குறைவாக இருந்த போதிலும் இலங்கை முன்னணியில் இருப்பதாக உலக அமைப்பு கூறுகிறது.

2030ஆம் ஆண்டில் இலங்கையின் இடைநிலைக் கல்வி நிலை 81 சதவீதமாக இருக்கும் என்றும் அந்த அறிக்கைகள் கூறுகின்றன.

மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், இடைநிலைக் கல்விக்குத் தகுதியானவர்களில் 60% பேர் பாடசாலைக்கு செல்வதில்லை, இருபது சதவீதம் பேர் ஆரம்பக் கல்வியைப் பெறவில்லை.

அதற்காக 70 பில்லியன் டொலர்கள் ஒதுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.

ரஷ்ய தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக நோர்வே குற்றச்சாட்டு!

ரஷ்யா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்ய தூதர்கள் தங்களது நாட்டில் உளவு தகவல்களை சேகரிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பேரில் பல நாடுகள் தங்களது நாடுகளில் ரஷ்ய தூதரக அதிகாரிகளுக்கு தடை விதிக்க தொடங்கின.

மேலும் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கவும் மறுக்கப்பட்டது. இதேபோல் தற்போது ரஷ்யாவின் அண்டை நாடான நோர்வேயிலும் அரங்கேறி உள்ளது. அதாவது நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் ரஷ்ய தூதரகம் செயல்படுகிறது. அங்கு பணிபுரியும் தூதரக அதிகாரிகள் தங்களது நாட்டின் உளவுத்தகவல்களை சேகரிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதனை தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக நோர்வே கருதியது. எனவே அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையிலும் அவர்களது செயல்பாடுகள் ராஜதந்திர நடவடிக்கைகளுடன் பொருந்தவில்லை என நோர்வே முடிவு செய்தது.

இதனையடுத்து நோர்வேயில் உள்ள ரஷ்யாவின் தூதரக அதிகாரிகள் 15 பேரை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையை நோர்வே அரசாங்கம் வெளியிட்டது.

இது குறித்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி அன்னிகென் ஹூய்ட்பெல்ட் கூறுகையில், “ரஷ்யாவின் உளவுத்துறை நடவடிக்கைகளின் நோக்கத்தை எதிர்ப்பதற்கும், அதன் மூலம் தேசிய நலன்களை பாதுகாப்பதற்கும் இது ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும்’ என தெரிவித்தார். கடந்த ஆண்டிலும் இதுபோல 3 தூதரக அதிகாரிகளை நோர்வே வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது. நோர்வே அரசாங்கத்தின் இந்த செயலுக்கு ரஷ்யா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் கூறியதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்தது.

ஓமானில் பாலியல் தொழிலாளர்களாக ஏலம் விடப்பட்ட இலங்கை பெண்கள் – விசாரணைகளை ஆரம்பித்தது ஆரம்பித்தது ஐ.நா !

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதிக்கான குறிப்பிட்ட கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள இரண்டு விசேட அறிக்கையாளர்களும் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலா விசாவில் ஓமானிற்கு சென்ற 90 பெண்கள்  இலங்கை அரசாங்கத்தின் புகலிட இல்லம் உட்பட புகலிட இல்லங்களில் சிக்குண்டனர் என தமக்கு கிடைத்துள்ளதாக  அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பல பெண்கள் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன  ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பு என்ற போர்வையிலேயே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பெண்கள் ஏலத்தில் விடப்பட்டனர் தனியார் வீடுகளில் வைக்கப்பட்டு துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டனர் போதுமான உணவோ அல்லது உறங்குவதற்கான வசதிகளோ இருக்கவில்லை எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் நடைபெற்ற சீக்கியப் படுகொலைகளை இனப்படுகொலை என குறிப்பிட்டு கலிபோர்னியா மாகாண சட்டசபையில் தீர்மானம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ந் திகதி அவரது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான இந்த வன்முறையை இனப்படுகொலை என்று முறைப்படி அங்கீகரித்து இந்தியாவை கண்டிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தை கலிபோர்னியா மாகாண சட்டசபை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த மாகாண சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியரான ஜஸ்மீத் கவுர் பெயின்ஸ் என்ற பெண் உறுப்பினர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.