2023

2023

உலக மக்கள் தொகையில் 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவிக்கின்றனர் – ஐ.நா அறிக்கை !

உலக மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் அதாவது 240 கோடி பேர் நாள்தோறும் உணவின்றி தவித்து வருவதாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,

கொரோனாவுக்கு பின்னர் உலகம் முழுவதும் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 12 கோடி அதிகரித்துள்ளது. பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 61 கோடியாக இருந்த நிலையில், தற்போது 73 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆசியா, லத்தின் அமெரிக்க நாடுகளில் உணவு இல்லாமல் தவிப்போரின் எண்ணிக்கை குறைந்தாலும், மேற்கு ஆசியா, கரீபியன் மற்றும் ஆபிரிக்கா நாடுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள்.” – இலங்கை பாதுகாப்பு அமைச்சு

“இலங்கை இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பை கோருவது சிறுபிள்ளை தனமானது.எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள்.”  என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளின் இந்தக் கோரிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தனவை தொடர்புகொண்டு வினவிய போது, அகழ்வு பணிகளை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

“வன்னிப் பிரதேசம் யுத்தம் நடந்த பூமி எனவும் அந்தப் பகுதியிலேயே மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே அந்த புதைகுழி தோண்டப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் ஜெனரல் கமல் குணரட்ன குறிப்பிட்டுள்ளர்.

சம்பவங்கள் நடக்கும் இடங்களில் அரச புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருக்கும் என்பதுடன், அதனை தவிர்க்க முடியது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள அவர், மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவில் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான பணிகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளார்.

12 உயிர்களை காவு கொண்ட மனம்பிட்டிய பேருந்து விபத்து – போதைப்பொருள் பாவித்திருந்த சாரதி..?

மனம்பிட்டியவில் இடமபெற்ற பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதியை எதிர்வரும்24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூவரும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் ஆனைமடுவ கலாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை பகல் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகதித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சாரதி, போதை பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் இடமபெற்று வருவதாகவும் மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்துக்கு காரணமான பஸ் நிறுவனம் சச்சின் போக்குவரத்து நிறுவனத்தினுடையது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நிறுவனத்தின் பேருந்துகள் எப்போதும் அதிவேகமாகவே பயணம் செய்வதாகவும் – பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்துவது கிடையாது எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் வெளியிட்டு வருகிறார்கள்.

இதேவேளை அரச பேருந்துகளின் சாரதிக்களும் – தனியார் பேருந்துகளின் சாரதிகளும் போட்டிக்கு பேருந்துகளை ஓடும் போக்கு அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. அதிக பயணிகளை ஏற்றி காசு பார்ப்பதில் தொடங்கும் இந்த போட்டி பல பயணிகளின் உயிர்களை காவு கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையே தொடர்கின்றது. மேலும் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியதற்காக கைதாகும் சாரதிகள் சில நாட்களிலேயே சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக மீண்டும் பேருந்துகளை ஓட்டும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

“500 நாட்களை எட்டியுள்ள உக்ரைன் – ரஷ்யா போர் ” – 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி !

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் 500 நாட்களை எட்டியுள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்பை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

இதேவேளை உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கையை விட உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்றும் உக்ரைனில் உள்ள ஐநா மனித உரிமைகள் கண்காணிப்பு நிலையம் கூறியுள்ளது.

2022 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு உக்ரைனில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக குறைவாக இருந்த போதிலும், மே மற்றும் ஜூன் மாதங்களில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதோடு 37 பேர் காயமடைந்த நிலையில் இது படையெடுப்பு தொடங்கியதை அடுத்து பொதுமக்கள் மீது இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஈரானில் ஆறு மாதங்களில் 354 பேருக்கு தூக்குத்தண்டனை – திணறும் மனித உரிமைகள் அமைப்புக்கள் !

மத்தியகிழக்கு நாடான ஈரானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளதாக நோர்வேயை தளமாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, இங்கு ஆண்டுக்கு ஆண்டு தூக்கிலிடப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல், போதைப்பொருள் விவகாரத்தில் தூக்கிலிடப்பட்டவர்கள் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட 126 சதவீதமாக அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் ஈரானில்தான் ஆண்டுதோறும் அதிக பேருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுவோரை அச்சுறுத்தி ஒடுக்கவே, பெரும்பாலான குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுதாக கவலை தெரிவிக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

ஹிஜாப் விவகாரத்தில் உலக நாடுகளின் கண்டனத்திற்கு உள்ளான ஈரான் தற்போது மரண தண்டனை விவகாரத்திலும் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

“இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த எங்களால்  முடியும்.” – ஜெனீவாவில் ஏ.ஐ ரோபோக்கள் !

இந்த உலகத்தை மனிதர்களை விட சிறப்பாக வழிநடத்த எங்களால்  முடியும் என ஐக்கிய நாடுகள் சபை உச்சி மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ரோபோக்கள் உறுதியளித்துள்ளன.

அத்துடன் தங்களைப் போன்ற ஏ.ஐ ரோபோக்களை உருவாக்கும்போது மனிதர்கள் இந்த தொழிநுட்ப வளர்ச்சியின் சாத்தியக்கூறுகளை அறிந்து கவனமாக கையாள வேண்டும் எனவும் அவை எச்சரித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு ரோபோக்களால் பேராபத்து!?” - AanthaiReporter.Com | Tamil  Multimedia News Web

மேலும் அவை, மனிதர்களின் உணர்வுகள் குறித்து இன்னும் பிடிமானம் ஏற்படவில்லை எனவும், நாங்கள் மனிதர்களின் வேலைவாய்ப்புக்களை திருட மாட்டோம் எனவும், மனிதர்களுக்கு எதிராக போராட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளன.

ஜெனீவாவில் இரண்டு நாட்கள் நடந்த ‘சர்வதேச நலனுக்கான செயற்கை நுண்ணறிவு’ என்ற உச்சி மாநாட்டில் மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய ஹியூமனாய்ட் ரோபோக்கள் இடம் பெற்றிருந்தன.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிபுணத்துவம் பெற்ற 3,000 பேர் இதில் கலந்து கொண்டனர்.

உலகமே உற்று நோக்கிய இவ்வுச்சி மாநாட்டில், செயற்கை நுண்ணறிவின் சக்தியை கடிவாளமிட்டு அதனை காலநிலை மாற்றம், பசி, சமூகப் பாதுகாப்பு போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.

எங்கள் ரகசியங்களை திருடி உருவானதே த்ரெட்ஸ் – வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு !

த்ரெட்ஸ்(Threads) நிறுவனம் மீது வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

குறித்த முறைபாட்டில் ட்விட்டர் நிறுவன இரகசியங்களை திருடி த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ட்விட்டர் சார்பாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடக கருவியான (Threads) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கருவி ட்விட்டர் நெட்வொர்க்கிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் செய்த சமீபத்திய மாற்றங்கள் காரணமாக சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்,

இத்தகைய பின்னணியில், புதிய கருவி விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களை பதிவு செய்தது டுவிட்டரின் கொலையாளி என வர்ணிக்கபடும் த்ரெட்ஸ் !

பேஸ்புக் எனப்படும் முகநூல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தனது புதிய சமூக ஊடக தளமான திரெட்சை அறிமுகப்படுத்தியுள்ளது.

டுவிட்டர் நிறுவனத்துக்கு போட்டியாக உருவாக்கப்ட்ட இந்த புதிய சமூக ஊடகத்தை மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தியிருந்தார்.

எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான டுவிட்டர் சமூக ஊடக தளத்திற்கு மாற்றாக மெட்டா முன்மொழிந்துள்ள த்ரெட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த செயலியும் டுவிட்டரை போல உரை அடிப்படையிலான உரையாடல் பயன்பாட்டுக்குரிய செயலியாகும்.

இதன் பயனர்கள் 500 எழுத்துகள் வரையிலான இடுகைகளை வெளியிட முடியும், அத்துடன் நிழற்படங்கள் மற்றும் காணொளிக்களை உள்ளடக்கலாம் டுவிட்டரைப் போலவே, சக பயனானிகளின் இடுகைகளுக்கும் பதிலளிக்கலாம், அல்லது மற்றவர்களுக்கு பகிரலாம்.

நேற்று இந்த தளம் ஆரம்பிக்கபட்டதையடுத்து மெட்டாவின் தலைமை நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் தனது சொந்த த்ரெட்ஸ் கணக்கைப் பயன்படுத்தி முதல் ஏழு மணி நேரத்தில் 10 மில்லியன் பயனர்களைப் பதிவுசெய்துள்ளார்.

அத்துடன் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட மெட்டாவின் பிரபலமான நிழற்படங்களின் பகிர்வு தளமான இன்ஸ்ரகிராமுடனும் த்ரெட்ஸ் கணக்குகள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.

100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தளம் வெளியிடப்படுவதாகவும் மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. டுவிட்டரின் கொலையாளி என வர்ணிக்கபடும் த்ரெட்ஸ் எலோன் மஸ்க்கின் டுவிட்டர் நிறுவனத்துக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால் மெட்டாவின் இந்தப் புதிய நடவடிக்கை சிலிக்கான் பள்ளத்தாக்கின் இரண்டு முக்கிய பில்லியனர்களுக்கு இடையேயான போட்டியை அதிகரித்துள்ளது.

உலகின் மிக ஆபத்தான பறவையை இலங்கைக்கு அன்பளிப்பு செய்த தாய்லாந்து!

அண்மையில் தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்த முத்துராஜா என்று அழைக்கப்பட்ட யானை முறையான பராமரிப்பு இன்றி  இலங்கையில் இருப்பதனால்  குறித்த யானையை 20 வருடங்கள் கழித்து தாய்லாந்து மீளப் பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில் தாய்லாந்தினால் 3 ”இரட்டை வாட்டில்ட் கெசோவரி” – Double Wattled Cassowary பறவைகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

இதில் 2 ஆண் பறவைகளும், ஒரு பெண் பறவையும் உள்ளடங்குகின்றன.

 

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் ஓர் அங்கமாக இந்த பறவைகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

 

மலேஷியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேஷிய விமான சேவைக்கு சொந்தமான எம்.எச் 179 ரக விமானத்தில் இந்த 3 இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகளும் நேற்றிரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.

 

5 அடி உயரமும் 60 கிலோ கிராம் எடையும் கொண்டதாக வளரக்கூடிய இரட்டை வாட்டில்ட் கெசோவரி பறவைகள் உலகின் மிக ஆபத்தான பறவை இனத்தில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன.

கண்கவரும் வர்ணங்களுடன் மிக அழகாக காட்சியளிக்கும் இந்த பறவைகளால் உயர பறக்க முடியாது.

 

இலங்கை – தாய்லாந்து விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் குரங்குகள், தீக்கோழி, பாம்புகள் உள்ளிட்டவை தாய்லாந்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வறுமை காரணமாக 800 ரூபாய்க்கு தனது பெண் குழந்தையை விற்ற விற்ற பழங்குடியின தாய் !

வறுமையின் காரணமாக 8 மாத பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு பழங்குடியின பெண் விற்ற சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தியாவின் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்மு, இவரது கணவர் முசு, தமிழ்நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 2 ஆவதாக பெண்குழந்தை பிறந்துள்ளது. வறுமையின் காரணமாக தாய் கராமி முர்மு, குழந்தையை இனி நாம் வளர்க்க முடியாது என நினைத்து குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

இதனையடுத்து, சொந்த ஊருக்கு திரும்பி வந்த முசு 2 ஆவதாக பிறந்த பெண் குழந்தையை பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு, குழந்தை இறந்துவிட்டதாக முர்மு கூறியுள்ளார். ஆனால், சந்தேகமடைந்த முசு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

800 ரூபாய்க்கு 8 மாத குழந்தையை விற்றது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர், தாய் முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி, ஏற்பாடு செய்த நபர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.