2023

2023

IMF உடனான பயணம் நல்லதல்ல எனக்கூறும் பெரும்பான்மையான இலங்கையர்கள் – ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் !

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தம் இறுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என இலங்கை சனத்தொகையில் 28% மட்டுமே நம்புவதாக வெரிட்டி ரிசர்ச் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெரிட்டி ரிசர்ச் கடந்த ஜூன் மாதம் 1008 இலங்கைப் பிரஜைகளை உள்ளடக்கிய கணக்கெடுப்பை நடத்தியது. கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 45% பேர் சர்வதேச நாணய நிதியத்துடனான பயணம் நல்லதல்ல என்று கூறியுள்ளனர்.

ஐஎம்எஃப் உடனான இந்த ஒப்பந்தம் நல்லதாக இருக்குமா இல்லையா என்பது குறித்து தங்களால் திட்டவட்டமான கருத்தை தெரிவிக்க முடியாது என்று கணக்கெடுப்பில் பங்கேற்ற 27% பேர் கூறியுள்ளனர். 28 வீதம் பேர் மட்டுமே IMF ஒப்பந்தம் நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என நம்புகின்றனர்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது என நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதியமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தேவையாக இருந்த உள்நாட்டுக் கடன் உகப்பாக்கம் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், எனவே வெளிநாட்டுக் கடனை மேம்படுத்துவதையும் விரைவில் முடிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் !

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேரை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்காரணமாக சுமார் 800 மீன்பிடி படகுகள் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்படிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கடற்படையினர் கடந்த புதன்கிழமை இரவு எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 பேரும் என 17 மீனவர்களை கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று மீன்பிடி படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியிருந்தனர்.

 

குறித்த மீனவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இந்தநிலையில், இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, இலங்கை கடற்படையினர் இந்த ஆண்டில் இதுவரையில் 17 இழுவை படகுகளை கைப்பற்றியுள்ளதுடன், 110 இந்திய மீனவர்களை கைது செய்துள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் மணிப்பூரில் தொடரும் கலவரம் – 175 பேர் கொலை – தீக்கிரையாக்கப்பட்ட 4000 வீடுகள்!

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

மேலும், இந்த கலவரத்தில் 32 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

4,786 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும், 386 மதக் கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொலியார் குறிப்பிட்டுள்ளனர்.

 

காணாமற்போன ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு வகையான 15,050 வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

வன்முறையில் உயிரிழந்த 175 பேரில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

 

79 உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளதாகவும், 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபியா புயல் தாக்கம் – 20,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் !

லிபியாவில் புயல் தாக்கத்தை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் 20,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என டெர்னா நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 6000 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியாவில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் இரண்டு அணைகள் உடைப்பெடுத்தன.

 

இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

 

மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த டொ்னா நகருக்குள் வெள்ளம் வெகு சீற்றத்துடன் பாய்ந்து, அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச்சென்றது.

 

அதேபோல், பலர் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

பலர் உறக்கத்தில் இருந்த போது சுனாமி போன்ற ஒரு பெரிய வெள்ளம் கடலை நோக்கி மக்களை அடித்துச்சென்றிருக்கிறது.

 

இதனால், கடலுக்குள் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

 

லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரை முழுவதும் வீசிய புயல் காரணமாக கனமழை பெய்தது. செப்டம்பர் மாதம் முழுவதும் நாடு பொதுவாகப் பெறும் 1.5 மிமீ மழையுடன் ஒப்பிடுகையில், 24 மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் 400 மிமீ வரை மழை பெய்திருக்கிறது.

 

இந்த அசாதாரண வெள்ளம், நகரின் வழியாக ஓடும் டெர்னா ஆற்றின் இரண்டு முக்கிய அணைகளை உடைத்து, பல முக்கிய பாலங்களையும் சிதறடித்தது.

 

நகரம் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பு ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், வெள்ளம் கிட்டத்தட்ட 10 அடி உயரத்திற்கு வந்ததாகவும் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

மீட்பு பணிகளுக்கு எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து லிபியாவிற்கு உதவிகள் வரத் தொடங்கியுள்ளன

 

ஆனால், லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளன.

உலகின் தலைசிறந்த சுற்றுலாத்தீவாக இலங்கையை பட்டியலிட்டு ஏமாற்றும் தீவு என பெயரிட்ட Big 7 Travel !

பயண இணையத்தளமான பிக் 7 ட்ரவல் (Big 7 Travel) வெளியிட்ட “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

50 தீவுகளில் 13 வது இடத்தில் உள்ள இலங்கை உள்ள நிலையில் அவ்வறிக்கையில் “ஏமாற்று”(beguiling) தீவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பில் அவ்வறிக்கையில்,

“அத்துடன், எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொற்றுநோய்கள் காரணமாக இலங்கை சில ஆண்டுகளாக சுற்றுலா நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தது ஆனால் அதன் கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.

ஏமாற்றும் தீவுக்குச் செல்ல ஆயிரம் காரணங்கள் உள்ளன, குறைந்தது அதன் மக்கள், சுவையான உணவு, முடிவில்லா கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள், யானைகள் நிறைந்த வனவிலங்கு பூங்காக்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இடிபாடுகள் என்பன அதில் அடங்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் வரிசைப்படுதல்களை மேற்கொள்ள ஒரு நுட்பமான தேர்வு செயன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இந்த இடங்களை நேரடியாக ஆராய்ந்த சமூக ஊடக பார்வையாளர்கள் மற்றும் பயண நிபுணர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, மதிப்பெண்கள் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

08 வயது சிறுமிக்கு இடது கை அகற்றப்பட்டதன் எதிரொலி – யாழ்.வைத்தியசாலை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணிப்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் கடமையின் பொது ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வீதியில் இரத்த ஆறு போல் ஓடிய 20 லட்சம் லீட்டர் கருந்திராட்சை மதுபானம் !

தென்மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு போர்த்துக்கல். இதன் தலைநகரம் லிஸ்பன். தலைநகரிலிருந்து சுமார் 240 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அனாடியா பகுதி.  இங்குள்ளது சவோ லவுரென்கோ டோ பைர்ரோ பகுதி. சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த ஊரில் டெஸ்டிலேரியா லெவிரா எனும் மது உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் ரெட் வைன் எனப்படும் கருந்திராட்சைகளில் இருந்து காய்ச்சி வடிகட்டி, பதப்படுத்தப்படும் மது தயாரிக்கப்படுகிறது. இங்கு இவர்கள் தயாரிக்கும் மது, மிக பெரிய அளவிலான பீப்பாய்களில் தேக்கி வைக்கப்படும். இந்நிலையில் அவ்வாறு தேக்கி வைக்கப்பட்ட இரு பீப்பாய்கள் உடைந்ததால், அதிலிருந்த மது சாலைகளெங்கும் ஓடியது. ரத்த ஆறு போல சிவப்பு நிறத்தில் ஓடிய இதனை பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

ஓடிய மதுவின் அளவு சுமார் 20 லட்சம் லிட்டர் (2.2 மில்லியன் லிட்டர்) இருக்கலாம் என்றும் சுமார் 20 லட்சம் மது பாட்டில்களுக்கான கொள்ளளவு இருக்கும் என்றும் அந்நாட்டு பத்திரிக்கைகள் கணிக்கின்றன. இந்த மது ஆறு ஒரு வீட்டின் கீழ் தளத்தின் உள்ளே புகுந்தது. அதிர்ஷ்டவசமாக, தற்போது வரை இதனால் யாருக்கும் எந்தவித ஆரோக்கிய கேடும் ஏற்படவில்லை.  அந்த ஊரில் உள்ள செர்டிமா ஆற்றில் இது கலந்து விடக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்தனர். ஆனால், தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மது ஆற்றின் ஓட்டத்தை தடுத்து, அதனை அங்குள்ள ஒரு வயல்வெளியில் செல்லுமாறு பாதை அமைத்தனர். இதனால், செர்டிமா நதியில் இது கலப்பது தடுக்கப்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்திற்கும் தாங்களே பொறுப்பேற்பதாகவும், ஊரை சுத்தம் செய்யும் செலவையும் முழுவதும் ஏற்பதாகவும் டெஸ்டிலேரியா லெவிரா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் கண்ட மதுப்பிரியர்கள், வீணாக சாலையில் உயர் ரக மது ஓடுவது குறித்து வேடிக்கையான கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர்.

நிரந்தர விசா கோரி நடைபயணம் செய்த இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் – அவுஸ்ரேலிய அரசு வழங்கிய பதில் !

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல்  பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளது.

பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் நியாயமான பதிலை வழங்கவேண்டும் என கோரி நெய்ல் பரா நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார்

அவர் அவுஸ்திரேலியாவில் தனது குடும்பத்தவர்களுடன்  பிரிட்ஜிங் விசாவில் வசித்துவருகின்றார்.

பரா தனது நடைபயணத்தை முடிவை நெருங்கிக்கொண்டிருந்தவேளை விசா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது – சட்டத்தரணி கரினா போர்ட் இதனை தெரிவித்துள்ளார்.

நான் மகிழ்ச்சியும் நன்றியும் உடையவனுமாக உள்ளேன் என பரா தெரிவித்துள்ளார். நன்றி அவுஸ்திரேலியா இது எனது நாடு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012 இல் படகு மூலம் அவுஸ்திரேலியா வந்த பரா தனது மனைவிஇரண்டு பிள்ளைகளுடன் பாதுகாப்பு கோரியிருந்தார்.

நாங்கள் அனைவரும் ஒருநாள் விடுதலையாவோம். என நம்புகின்றோம் நாங்கள் அவுஸ்திரேலியாவிற்கு பங்களிப்பு செய்வோம் என உறுதியளிக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

“கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருக்கின்றது.” – ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர்

கடந்தகால மனித உரிமை மீறல்களை ஒப்புக்கொள்ள வேண்டிய கடப்பாடு இலங்கைக்கு இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகிய நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணையை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அது சர்வதேச உதவியுடனும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளின் முழுமையான பங்களிப்புடனும் இடம்பெற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜெனீவாவில் உள்ள இலங்கை மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளில் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்க அரசாங்கம் விசாரணைகள் மற்றும் வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உண்மையைத் தேடுவது மட்டும் போதாது என்றும் பொறுப்புக்கூறலுக்கான தெளிவான அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நஷிப் தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான அறிக்கை,

 

ஆழமான அரசியல் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களைக் கோரி போராட்டம் இடம்பெற்று ஒரு வருடத்திற்குப் பிறகும், நீண்டகால சவால்களை எதிர்கொள்ள எதிர்பார்த்த மாற்றம் இன்னும் நிறைவேறவில்லை. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் 13வது திருத்தத்தின் கீழ் மாகாண சபைகளை மறுசீரமைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் பங்கேற்பதற்கான மக்களின் உரிமையையும் வாக்காளர்களின் சுதந்திரமான கருத்துக்களையும் மட்டுப்படுத்தியுள்ளது.

 

பொருளாதார நெருக்கடியானது இலங்கையில் பெரும்பான்மையினரின் உரிமைகளை கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அது ஏழைகளையே அதிகம் பாதித்துள்ளது. நாட்டின் வறுமை விகிதம் 2021 இல் 13% இலிருந்து 2022 இல் 25% ஆக இரு மடங்காக உயர்ந்துள்ளதால், மேலும் 2.5 மில்லியன் மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் மற்றும் 37% குடும்பங்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்.

 

அரசாங்கம் அதன் பொருளாதார மீட்சிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தினால், அது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்காக பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் அதன் கடமைகளால் வழிநடத்தப்பட வேண்டும். வதேச நிதி நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகம், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் உதவி தொடர்பான கடப்பாடுகளுக்கு இணங்க, இலங்கையின் மீட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும்.

 

பொருளாதார நெருக்கடி, சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு மத்தியில் இராணுவ மயமாக்கல் நடவடிக்கை, வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பௌத்த பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் நடைபெறும் விடயங்கள் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நினைவுகூருவதற்கான முயற்சிகளும் தடுக்கப்பட்டுள்ளன. எதிர்ப்பு தெரிவிப்பதற்கான உரிமையை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் நாட்டில் மேலும் பதற்றத்தையே உருவாக்கும்.

 

கருத்து சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கும், நல்லிணக்கம் மற்றும் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் சூழலை அரசாங்கம் உறுதி செய்வது இன்றியமையாததாகும். மேலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், ஊடக ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்தும் கவலைகள் எழுந்துள்ளன.

 

 

மொராக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை இரண்டாயிரத்தை தாண்டியது !

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. சீட்டு கட்டு சரிவது போல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. நள்ளிரவு நேரத்தில் இது நடந்ததால் உறங்கி கொண்டிருந்த பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என நேற்று மதியம் அறிவிக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அதிகபட்சமாக அல்-ஹவுஸ் பிராந்தியத்தில் 1,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் டரவ்டான்ட் பகுதியில் 452 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்க பகுதிகளில் இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் 2,059 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 1,404 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. நில நடுக்கத்தால் பல மலை கிராமங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. அங்கு வீடுகள், கற்குவியலாக காட்சி அளிக்கின்றன. அங்கு மீட்புப்பணிகள் நடந்து வந்தாலும், தொலை தூரத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு அதிகமாக மீட்புக்குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதனால் மலை கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மராகெச் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்கள், கடுமையான விரிசல்கள் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளன. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இடிந்து விழுந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் யாராவது இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலநடுக்கம் மொராக்கோ நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள மொராக்கோவுக்கு பல்வேறு நாட்டினர் உதவிகளை வழங்கி வருகின்றனர். அண்டை நாடான அல்ஜீரியா மனிதாபிமான அடிப்படையில் தனது வான்வெளியில் மொராக்கோவுக்கு செல்லும் விமானங்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. மொராக்கோவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டுடன் தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா, தனது வான்வெளியை மொராக்கோ பயன்படுத்த தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் உதவிகளை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளன. வட ஆப்பிரிக்காவில் கடந்த 120 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.