25

25

தமிழினி – ஜெயன் தேவா உறவின் பின்னணி – தேசம் ஜெயபாலனுடன் மனம் விட்டு பேசுகிறார் ஜெயன் தேவா

தமிழினிக்கு தடுப்பு முகாமில் நடந்தது என்ன?

தமிழினி – ஜெயன் தேவா உறவின் பின்னணி என்ன?

தமிழினியை ஜெயன் தேவா ஏன் திருமணம் செய்தார்?

தமிழினியின் கூர்வாளின் நிழலில் – யார் எழுதியது?

தேசம் ஜெயபாலனுடன் மனம்விட்டு பேசுகிறார் ஜெயன் தேவா!

(குறிப்பு: இந்நேர்காணல் 2016 ஓகஸட் 21இல் கிளிநொச்சி திருநகரில் ‘தேசம்நெற்’க்காகப் பதிவுசெய்யப்பட்டது.)

“சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும்.”- சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை !

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் உதைபந்தாட்ட விதிகளுக்கமைய செயற்படாவிட்டால், சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொஷான் ரணசிங்கவிற்கு நேற்று அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமே இவ்வாறு குறிப்பிட்ப்பட்டுள்ளது.

இலங்கையில் விளையாட்டுச் சட்டத்தில் சில புதிய ஒழுங்குமுறைகளை உள்ளடக்கியிருந்ததோடு, அதற்கு எதிராக தற்போது பல தேசிய விளையாட்டு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனமும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைமை உறுப்பினர் சங்க அதிகாரி கென்னி ஜீன் மேரி அனுப்பியுள்ள கடிதத்தில்,

“இலங்கையில் கால்பந்து அதிகாரிகளுக்கான தேர்தலில் வெளியுலக தலையீடுகள் இடம்பெறுவதை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கடுமையாக எதிர்க்கிறது. 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் 22 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அரசியலமைப்பு மற்றும் காலக்கெடுவிற்கு அமைவாக உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

இதற்கு அடுத்த வருடம் ஜனவரி 22ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இல்லை என்றால் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இலங்கையில் கால்பந்தாட்டத்தை தடை செய்வதுடன், நிதித் தடைகள் விதிக்கப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் வெளிநாட்டில் இருப்பதால், சர்வதேச கால்பந்து சம்மேளனம் அனுப்பிய கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரிடம் கையளிப்பதற்காக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் முன்னாள் செயலாளர் உபாலி ஹெவே ஆகியோர் விளையாட்டு அமைச்சுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

“உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுக்கின்றன.”- விளாடிமிர் புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 305-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா சமீபத்தில் அதிநவீன ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொறுத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டொலர்கள் ராணுவ உதவி வழங்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் ஆயுத உதவியால் போர் தொடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். உக்ரைன் போர் தொடர்பாக அனைத்து தரப்புடனும் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருப்பதாகவும் ஆனால், உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் புதின் தெரிவித்துள்ளார்.

“தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடாகும்.”- உதய கம்மன்பில சாடல் !

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் மற்றுமொரு செயற்பாடாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே உதய கம்மன்பில .தனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்த போது,

இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவே ஜனாதிபதி ரணில் முயற்சிக்கிறார்.

இலங்கையில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு எதிர்வரும் 75ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னர் தீர்வு காண்பதாக அதிபர் குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது. ஆனாலும், கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் மாறுபட்ட பல கருத்துக்களை தமிழ் தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடம் முதலில் ஒற்றுமை கிடையாது. சமஷ்டி அடிப்படையிலான தீர்வும் சாத்தியமற்றது. பொருளாதார நெருக்கடியை பகடைக்காயாக கொண்டு நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை செயற்படுத்துவதாயின், 30 வருடகால யுத்தத்தை வெற்றிகொள்ளாமல் இருந்திருக்கலாம்.

இனப் பிரச்சினைக்கு தீர்வாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது குறுகிய அரசியல் நோக்கத்துக்காக மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்துக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கவில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது கூட மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டது. மாகாண சபை தேர்தலை நடத்தினால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும்” – என்றார்.

“தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவை அழைக்க நேரிடும்.” – சி.வி.விக்னேஸ்வரன்

“தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவை அழைக்க நேரிடும்.” என தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மேற்பார்வை அவசியம் என்று தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் 5ஆம் திகதி இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதெனவும், 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ள நிலையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினை பொறுத்தவரையில், தமிழ் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எட்டவேண்டிய இக்கட்டான நிலைமையில் உள்ளது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்வது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல தேவைப்பாடுகள் உள்ளன.

ஆகவே, தமிழர்கள் தரப்பினை புறமொதுக்கிவிட்டு அவர்களால் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையில் தான் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அவ்விதமான சூழலில் நாம் ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை.

எமக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி விட்டுக்கொடுப்பற்ற பேச்சுக்களுக்கு தயாராக வேண்டும். குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான பேச்சை முன்னெடுப்பதென்பதில் தளர்ந்துவிடக்கூடாது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இறுக்கமான பிடிமானத்தில் இல்லாது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முயலுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்கம், பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மை அழைத்து வருவதற்கான சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் உள்ளன.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவின் மத்தியஸ்தை கோருவோம்.

ஆகக்குறைந்தது பேச்சுக்களின்போது இந்தியாவின் மேற்பார்வையையாவது கோருவோம். இதன் மூலம் அரசாங்கத்தின் நழுவல் போக்கினை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

குழந்தையின் நோய்க்கு கோயிலில் நூல் வாங்கி கட்டிய பெற்றோரின் முட்டாள்தனம் – யாழில் 08 மாத குழந்தை பலி !

குழந்தையின் வயிற்றோட்டத்தை நிறுத்த, பெற்றோர் ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் குழந்தை உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியை சேர்ந்த 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று, பூஜை செய்து, நூல் கட்டியுள்ளனர்.

இருப்பினும், குழந்தைக்கு வயிற்றோட்டம் நிற்காத காரணத்தால், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை குழந்தையை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையிலேயே குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குழந்தையின் மரண விசாரணையின் பின்னர், வயிற்றோட்டம் காரணமாக அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

“நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் ஜே.வி.பியிடம் இல்லை.” – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் மக்கள் விடுதலை முன்னணியிடம் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபலமடைவதற்காக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் மத்தியில் கட்டுக்கதைகளை கூறிவருவதாகவும் சாடியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.

அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பிரபலத்தை தேர்தலில் வாக்குகளாக மாற்ற முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

“இலங்கையிலுள்ள மொத்தமான 5000 மதுபானசாலைகளில் 2000க்கும் அதிகமானவை அரசியல்வாதிகளுடையது.” – நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும

குடும்பத்தை மையமாக கொண்ட தேர்தல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நாடு முழுவதிலும் இருக்கும் மதுபான விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு சொந்தமானது என்பதாலேயே மதுபான அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்பது கஷ்டமான காரியமாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் சட்ட ரீதியாக அனுமதிப் பெற்ற 4 ஆயித்து 910 மதுபான விற்பனை நிலையங்கள் இருக்கின்றன.

அவற்றில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்களின் உரிமை தற்போது அரசியலில் ஈடுபட்டு அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 128 மதுபான விற்பனை நிலையங்கள் இருப்பதாகவும் டலஸ் அழகப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் !

பாடசாலை மாணவர்களை சிரமம் ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்கள் தலைமையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் எழுத்துமூல அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பாடசாலை மாணவர்களின் பைகளை முற்றிலும் நம்பகமான தகவல்கள் இல்லாமல் சோதனை செய்வது நியாயமானதல்ல என காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பாடசாலையொன்றில் பயிலும் மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் மாத்திரமே விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென காவல்துறை மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

உறுதிப்படுத்தப்பட்ட தகவலின் அடிப்படையில் இவ்வாறான தேடுதல் நடத்தப்பட்டால், அதனை பகிரங்கமாகச் செய்யக்கூடாது எனவும், அவ்வாறான சந்தர்ப்பங்களை புகைப்படம் எடுக்கவோ அல்லது காணொளி எடுக்கவோ கூடாது எனவும் காவல்துறை மா அதிபர் தனது உயர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

தேசத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்கள் !

மகிழ்ச்சியையும் மன அமைதியையும் தருகின்ற நத்தார் பண்டிகையாக அமையவேண்டுமெனத் தெரிவித்துக்கொள்வதுடன் தேசம் நெற் இன் வாசகர்கள்   அனைவருக்கும் இனிய நத்தார் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்நிலையில் எமது வாசகர்களுக்கு நத்தார் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்கள் !