13

13

வடக்கில் 1660 கால்நடைகள் பலியானதற்கான பின்னணி என்ன..?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவாகியுள்ள கால்நடைகளின் இறப்புகள், கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டதாக, பேராதனை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால்நடைகள் இறந்ததற்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்துமாறு பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அமைச்சர் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய கால்நடைகள் உயிரிழந்தமை தொடர்பான அறிக்கை இன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாடுகள், எருமைகள் மற்றும் ஆடுகள் உட்பட கிட்டத்தட்ட 1660 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

இந்த இறப்புகள் சுகவீனம் காரணமாக ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய அறிக்கை, கடுமையான குளிர் காலநிலையினால் ஏற்பட்ட அதிர்ச்சியினால் இறப்புகள் ஏற்பட்டதாக கூறுகிறது

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அண்மையில் கடுமையான பாதகமான காலநிலையை காணப்பட்டது. இதன் விளைவாக வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி மற்றும் மிகவும் குளிரான காலநிலை ஏற்பட்டது. குளிர் நிலையை தாங்க முடியாமல் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பேராதனையின் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

“உலகில் ஊழல் நிறைந்த 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று. இதை மாற்ற வேண்டும்.”- சந்திரிக்கா குமாரதுங்க

நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமைத்தும் அவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் மாவட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

“உலகில் ஊழல் நிறைந்த 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று. நாட்டை முன்னேற்ற இளைஞர்களின் தலைமை அவசியம். அரகலய என்ற போராட்டத்தினால் செய்த புரட்சியை ஒரு போதும் மறக்க முடியாது.

இளைஞர் போராட்டம் இலங்கையில் ஒரு முக்கியமான மற்றும் மதிப்புமிக்க முன்னேற்றம், அத்துடன் ஒரு வரலாற்று நிகழ்வு. புரட்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வை மக்கள் மத்தியில் இருந்து மறக்கடிக்க பலர் முயற்சிக்கின்றனர்.

70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளையும், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் மக்கள் நிராகரிக்கின்றனர். எனவே புதிய தலைமையும் புதிய தத்துவமும் வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் நாசாவின் “ஆர்டெமிஸ்“ திட்டம் – பூமியை வந்தடைந்தது ‘ஓரியன்’ விண்கலம் !

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப ‘ஆர்டெமிஸ்’ என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்ல ‘ஓரியன்’ என்கிற விண்கலத்தை நாசா உருவாக்கியுள்ளது.

சோதனை முயற்சியாக ஆளில்லா ஓரியன் விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்ட நிலையில், ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளால் அந்த முயற்சி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கடந்த மாதம் 16-ந் திகதி ‘ஆர்டெமிஸ்-1’ ராக்கெட் மூலம் ‘ஓரியன்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது.

பின்னர் ரொக்கெட்டில் இருந்து பிரிந்த ‘ஓரியன்’ விண்கலம் நிலவை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 6 நாட்கள் பயணத்துக்கு பின் ‘ஓரியன்’ விண்கலம் நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. சுமார் 26 நாட்கள் நிலவின் சுற்றுவப்பட்டப்பாதையில் சுற்றி வந்த ‘ஓரியன்’ விண்கலம் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டது. பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

நட்டத்தை ஈடு செய்வதற்காக மின் கட்டண அதிகரிப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

மின்சார சபை எதிர்கொண்டுள்ள நட்டத்தை ஈடு செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் கடுமையான நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி மின்கட்டணத்தை அறவிடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார். மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (13) முறைப்பாடு செய்திருந்தது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவித்த நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே மேலும் கூறுகையில்,

நாம் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளோம். ஜனவரி மாதம் முதல் மின்கட்டணத்தை அதிகரிப்பிற்கு எதிராக இந்த முறைப்பாட்டினை முன்வைத்துள்ளோம்.

அதாவது 30 அலகினை விட குறைந்த அளவில் பாவித்த மின் அலகொன்றுக்கான கட்டணமாக செலுத்தப்பட்ட 8 ரூபாய் தற்போது 60 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.

30 அலகுகள் பாவித்த ஒருவரின் மின் கட்டணம் இதன்மூலம் 420 ரூபாவாக செலுத்த வேண்டி ஏற்படும். மேலும் நாட்டு மக்கள் ஜனவரி மாதத்திலிருந்து 2,500 ரூபாவாக செலுத்த வேண்டி ஏற்படும்.

இந்நிலையில் நாட்டு மக்களுக்கு மின்வலு அமைச்சரை பார்க்கும் போது அச்சம் ஏற்பட்டுள்ளது. அதாவது பாதாளக் குழுக்களின் உறுப்பினர் ஒருவர் போன்று செயற்படுகிறார். பாவனையாளர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை விடுக்கிறார். அதாவது மின்கட்டணத்தை அதிகரிக்கவில்லை என்றால் ஜனவரி மாதம் முதல் நீண்ட மின்துண்டிப்பை முகங்கொடுக்க வேண்டும் என்கிறார்.

நுகர்வோர்கள் என்ற வகையில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துளோம்

மேலும் மின் கட்டணத்தை அதிகரிக்க கூடிய சாதாரண தெரு மட்டத்திற்கு மாத்திரமே அதிகரிக்க முடியும். அதற்கு மேலதிகமாக கட்டணம் அறவிடப்படும் என்பது நியாயமற்ற தாகும்.

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ள மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் நியாயமற்ற தாகும். மேலும் இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் – 10 மாணவர்களுக்கு விளக்கமறியல் !

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அத்துல சேனாரத்ன மற்றும் அவரின் மகன் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 10 பேரும் இன்று கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் இரண்டு பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் கடந்த 10 ஆம் திகதி முன்னாள் உபவேந்தரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலின் போது சுமார் 300 மாணவர்கள் அங்கு சென்றிருந்ததாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் உபவேந்தரின் மகன் மீது தாக்குதல் மேற்கொண்ட 12 மாணவர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் !

பாலியல் துன்புறுத்தல் மற்றும் அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாகக் கருதி, அதற்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கான புதிய சரத்தை அறிமுகப்படுத்தி, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்க, சட்ட வரைவாளர் ஒருவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்குள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சர் பந்துல

பல்கலைக்கழகங்களுக்குள் ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைப் பாதுகாக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குள் போதைப்பொருள் உட்புகுந்தமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் அச்சம் இன்றி பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் வகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு – விட்டுக்கொடுப்பதற்கு இடமேயில்லை என்கிறார் இரா.சம்பந்தன் !

“தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அதிபர் செயலகத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகும் சர்வகட்சிக் கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்புக்கிணங்க இன்று பேச்சை ஆரம்பிக்கின்றோம்.

தெரிவித்துள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் பேச்சை முன்னெடுப்பதாக இருந்தால் அவரின் வாக்குறுதியின் பிரகாரம் புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

அந்தப் புதிய அரசமைப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். இந்த நோக்கத்துடன் தான், அதிபருடன் பேச்சை ஆரம்பிக்கின்றோம்.

எங்களுடைய முதல் கவனம் தமிழர் பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு தொடர்பானதே. இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைகின்ற போதிலும் தமிழ் மக்களுக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வுக்காக எம்மாலான அனைத்துப் பங்களிப்புக்களையும் வழங்கி வருகின்றோம்.

ஆனால், தமிழர்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை. அந்தத் தீர்வைக் காணும் நோக்குடன் தான் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சை ஆரம்பிக்கின்றோம். ஆகவே எமது நிலைப்பாட்டில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை. நாங்கள் ஏமாறவும் தயாரில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உதவ தயார் – இந்தியா!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைக்க இந்தியா தயாராக இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் விமான சேவையை மீண்டும் ஆரம்பித்தமைக்கு இலங்கை அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்த அவர், இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பலாலி விமான நிலையத்திற்கு நேற்று மூன்று வருடங்களின் பின்னர் விமானம் வந்திறங்கியதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே கோபால் பாக்லே இதனைத் தெரிவித்துள்ளார்.

காங்கசந்துறை துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு பின்னர், அங்கிருந்து காரைக்கால் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே படகு சேவையை விரைவில் தொடங்குவது குறித்து அரசாங்கத்துடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

6வயது சிறுவனை தாக்கிக் கொலைசெய்த தாயின் சட்டரீதியற்ற கணவர்!

தாயின் சட்டரீதியற்ற கணவர் எனக் கூறப்படும் நபரால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவனொருவன் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (13) அதிகாலை 2.30 மணியளவில் பஹல்கம பிரதேசத்தில் உள்ள குறித்த வீட்டுக்குச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் குறித்த சிறுவனை மீட்டு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிறுவன் உயிரிழந்துள்ளதாகவும், சிறுவனின் தாயின் சட்டரீதியற்ற கணவரை சந்தேகத்தின் பேரில் கம்பஹா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.