27

27

“வடக்கில் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அரசியல் பிரச்சினை உள்ளதே தவிர சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது.” – எல்லே குணவங்ச தேரர்

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அரசியல் பிரச்சினை உள்ளதே தவிர சாதாரண மக்களுக்கு எவ்வித பிரச்சினைகளும் கிடையாது.” என தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

கோட்டை – நாகவிகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடும் பிக்குகளை அடக்கும் வகையில் புதிய சட்டத்தை இயற்ற அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஒருசில தரப்பினரது முறையற்ற செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளையும் குறை கூற முடியாது.

புத்தசாசனத்தில் உரிய கோட்பாடுகள் உள்ளன. பௌத்த பிக்குகள் அந்த கோட்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும். பிக்குளை அடக்கும் வகையில் சட்டங்களை இயற்றுவதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு மக்களாணை கிடையாது.உதிரிபாகங்களை இணைத்த வாகனத்தை போல் இயங்கும் இந்த அரசாங்கம் தன்னிச்சையாக செயற்பட முடியாது. எனது விகாரையின் மாத மின்கட்டணம் 48 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. மின்கட்டணம் அதிகம் என்பதற்காக புத்த பெருமானின் சிலையை இருளிலா வைப்பது.

மின்சார அமைச்சரின் தான்தோன்றித்தனமான பேச்சுக்கள் மக்கள் மத்தியில் வெறுக்கத்தக்கதாக காணப்படுவதுடன்,மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. இதற்கு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது. மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதை விடுத்து அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அரசாங்கம் குறிப்பிட்டுக் கொள்கிறது. தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதிகார பகிர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிப்பதை அரசாங்கம் தவிர்த்துக்  கொள்ளவேண்டும் என்றார்.

“தேர்தலை எதிர்கொள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.” – வாசுதேவ நாணயக்கார

“தேர்தலை எதிர்கொள்ள தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இலங்கை மேலவை கூட்டணியின் உறுப்பினர்களுக்கிடையில் திங்கட்கிழமை (டிச. 26) இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது முன்னெடுத்துள்ளது. 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. தேர்தல் என்பது நாட்டு மக்களின் உரிமை அதனை பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரம் உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் தேர்தலை பிற்போட அரசாங்கம் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்காது என எதிர்பார்க்கிறோம். நாட்டு மக்களின் அடிப்படை உரிமையை உயர்நீதிமன்றம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை முழுமையாக உள்ளது.

இலங்கை மேலவை கூட்டணி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் ஆரம்பக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். பரந்துபட்ட அரசியல் கூட்டணியை நிச்சயம் ஸ்தாபிப்போம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 5 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் எந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளார். வரி வீதத்ததை அதிகரித்து பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு கிடைப்பது நிச்சயமற்றது என்றார்.

அமெரிக்காவில் 50 ஆண்டுகளுக்கு பிறகு அதிகப்படியான பனிப்புயல் – 60 பேர் பலி !

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் பனிபுயல் வீசுவது வழக்கம். பனிப்பொழிவு காரணமாக நியூயார்க் நகர சாலைகள் அனைத்தும் பனி மூடிக்கிடக்கிறது. குறைந்தபட்சம் சுமார் 25 சென்டி மீட்டர் உயரத்திற்கு சாலைகளை பனி மூடிக்கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களும் பனியால் மூடப்பட்டு நகரமே வெண்பனி மூட்டமாக காணப்பட்டது.

வெப்ப நிலை பூஜியத்திற்கும் கீழ் சென்றதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் கடுமையான பனிபுயல் வீசியது. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து சாலைகளை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பனிபுயலில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கவும் அரசு ஏற்பாடு செய்தது. மேலும் பனிபுயல் கடுமையாக தாக்கிய பகுதிகளுக்கு மீட்பு படையினர் சென்று அங்கு சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகிறார்கள். மேலும் பனி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் பிணங்களையும் மீட்டு வருகிறார்கள். நியூயார்க்கின் பப்பேலா பகுதியில் பனி கட்டிகளுக்கு அடியில் ஏராளமான பிணங்கள் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர். பனிபுயலில் சிக்கி இதுவரை பொதுமக்கள், பெண்கள் உள்பட 60 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளில் இதுபோன்ற பனிபுயல் வீசியதில்லை என்று கூறப்படுகிறது. பனிபுயல் காரணமாக அமெரிக்காவில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விமான நிலையங்களின் ஓடுபாதையில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு பனி படிந்து இருப்பதால் விமானங்கள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பல தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் சேவையை ரத்து செய்தது. சவுத்வெஸ்டு நிறுவனம் மட்டும் சுமார் 2497 விமான சேவைகளை ரத்து செய்ததாக கூறியுள்ளது. நேற்று மட்டும் 3410 உள்நாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டதாக விமான நிறுவனங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா முழுவதும் மொத்தம் 15 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். அமெரிக்காவில் பனிபுயலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் விடுமுறை நாளில் நடந்த இந்த சோகச்சம்பவம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. பனிபுயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி – இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கை கோரிக்கை !

குறைந்த செலவுடனான விசேட விடுமுறை பொதி வழங்கப்படுவதாகவும், இதனால் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு பிரிட்டனின் பிரபல பத்திரிக்கையான Daily Mail உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த பத்திரிகையில் இது தொடர்பாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது வழங்கப்படும் சொகுசு சுற்றுலா பொதியை பெற்றுக்கொள்வதற்காக மிக குறைந்த தொகையை ஒதுக்குவதற்கான சந்தர்ப்பம் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட காலத்திற்கு பின்னர் கிடைக்கும் சந்தர்ப்பமாகும். ஆர்ப்பாட்டம் மற்றும் உணவு பற்றாக்குறை முதலான அச்சத்தின் காரணமாக வருடத்தின் முதல் காலாண்டுப்பகுதியில் பிரிட்டன் தனது சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தது.

இருப்பினும், பிரிட்டிஷ் அரசாங்கம் தனது அறிவிப்பை விலக்கிக் கொண்டுள்ளது. தனது சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு சுற்றுலா செல்வதை பிரிட்டன் தற்பொழுது ஊக்குவித்து வருகிறது. இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கைக்குச் செல்வது வசதியானது என்றும் அந்த பத்திரிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு செல்வதற்காக 36 மணித்தியாலம் என்ற குறுகிய காலப்பகுதி டிஜிட்டல் முறைக்கு அமைவாக விசாவை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அந்த பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.

பேராதனை பல்கலைகழக முன்னாள் உபவேந்தர் தாக்கப்பட்ட விடயம் – மாணவர் ஒன்றியத்தின் தலைவர் இடைநீக்கம் !

பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சாமோத் சத்சர மற்றும் முன்னாள் தலைவர் அனுராதா விதானகே ஆகிய இரு மாணவர்களின் மாணவர் உரிமையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் கடன் உதவி வாங்கி உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி !

இந்தியா வழங்கும் கடன் உதவி வசதியின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான மை இறக்குமதி செய்வது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தியுள்ளது.

அதற்கு முன்னர் தற்போது கைவசமுள்ள மை காலாவதியாகி விட்டதா என பரிசோதிக்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கோரியுள்ளதாக அறிவித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளில் மை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், இறுதியாக 2020 தேர்தலுக்காக உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து மை கொள்வனவு செய்யப்பட்டது.

இதேவேளை இந்திய வழங்கிய கடனுதவியின் கீழ் மருந்துகளை முறையாக பெற்றுக்கொள்ளப் படவில்லை என தெரியவந்துள்ளது.

அத்தோடு மருந்துக்கள் கடன் உதவியின் கீழ் இரும்பை இறக்குமதி செய்யும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“ஒன்று உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை கட்டுங்கள். அல்லது மின்வெட்டில் வாழப்பழகுங்கள்.” – அமைச்சர் காஞ்சன விஜேசேகர

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என்றால் நாளாந்த மின்வெட்டை மக்கள் எதிர்நோக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி தினமும் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வாழ்க்கை முறைக்கு மக்கள் மாறிக் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் 05, 09 மற்றும் 13 ஆம் திகதிகளில் 03 நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கான புதிய நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் சட்டமா அதிபரின் பரிந்துரைகளைப் பெற்றதன் பின்னர் இந்தோனேசிய நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புகையிலை மற்றும் மதுபான பழக்கத்தால் இலங்கையில் வருடாந்தம் 40,000க்கும் மேற்பட்டோர் பலி !

புகையிலை மற்றும் மதுபான பாவனையால் இலங்கையில் நாளொன்றுக்கு 110 பேர் உயிரிழப்பதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

புகைபிடித்தல் மற்றும் புகையிலை பாவனையால் வருடாந்தம் 40,000 பேர் உயிரிழப்பதாக தெரிவித்த அவர், இதனால் இறப்பவர்களின் மனைவிகள், பெற்றோர்கள், பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2021 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முன்வைக்கப்பட்ட புகையிலை வரிச்சூத்திரத்தை நடைமுறைப்படுத்தினால், இறப்பு எண்ணிக்கையை குறைத்து, அரசாங்கத்திற்கு தேவையான 11 பில்லியன் ரூபாவை சம்பாதிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார் .

குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு USAID உதவி !

நாட்டின் 7 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட நெல் விவசாயக் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக ஒரு குடும்பத்திற்கு 15,000 ரூபாய் ($42) உதவித்தொகை வீதம்  வழங்க சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) முன்வந்துள்ளது.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, வவுனியா, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் மாதாந்த வருமானம் 41,500 ரூபாவுக்கும் குறைவாக பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சு, விவசாய அபிவிருத்தி திணைக்களம் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக அந்த மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானம் பெறும் விவசாய குடும்பங்களுக்கு இத்தொகையை வழங்குமாறு USAID அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இந்த தொகை ஜனவரி மாதம் இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச். எல். அபேரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை 12 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு 08 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்பாடு செய்துள்ளது. விவசாயிகளுக்கு 10,000 முதல் 20,000 ரூபாய் வரை வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக 04 பில்லியன் ரூபாவை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் 04 பில்லியன் ரூபா எதிர்வரும் ஜனவரி மாதம் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என கமநல மக்கள் அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் கீழ், 1 ஹெக்டேர் வரை நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, 10,000 ரூபாயும், 2 ஹெக்டேர் வரை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, 20,000 ரூபாவும் வழங்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து இந்தப் பணம் மீள அறவிடப்பட மாட்டாது என்றும், இந்த சர்வதேச உதவிகள் அனைத்தும் நாட்டின் விவசாயிகளுக்கு இலவச மானியமாக வழங்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் கூறுகிறார்.

பட்டினி அபாயமுள்ள 121 நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 64வது இடம் !

உலகளாவிய உணவு தட்டுப்பாடு காணப்படும் 121 நாடுகளில் நாடுகளில் (பட்டினி) இலங்கை 64 ஆவது இடத்தில் உள்ளது.

இது குறித்த தரப்படுத்தலின் சுட்டெண்ணின் படி, 13.6 புள்ளிகளுடன், இலங்கையில் ஓரளவு பட்டினி நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த தரப்படுத்தலுக்கமைய 107 ஆவது இடத்தில் உள்ள அண்டை நாடான இந்தியாவை விட இலங்கை முன்னணியில் உள்ளது.

உலகலாவிய பட்டினி குறியீட்டில் பெலாரஸ் முதலிடத்திலும், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களில் யேமன், சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் புரூண்டி ஆகிய நாடுகளும் காணப்படுகின்றன.