தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் சுமார் 3,000 அகதிகளுக்கு இந்த வருடம் இலங்கை குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுமார் 20 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக பெப்ரவரி 23ஆம் திகதிக்கும் டிசம்பர் 15ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாக, தி இந்து பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு ஒன்று பதிலளிக்கையில் சென்னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அக்டோபர் 2021 இலிருந்து டிசம்பர் 2022 வரை 25 சிறப்பு தூதரக முகாம்கள் ஊடாக மாநில புனர்வாழ்வு நிலையங்களில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கையர்களுக்கு சுமார் 900 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
2021வரை பிறப்பு பதிவு மற்றும் குடியுரிமை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கு சிறப்பு தூதரக முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும், பிரதி உயர்ஸ்தானிகர் ரீ. வெங்கடேஸ்வரனின் முயற்சியால் இலங்கை பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமை பிறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அவை யாவும் இலங்கை அரசின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திலிருந்து பெறப்பட்டன.
மாநிலத்தில் உள்ள புனர்வாழ்வு முகாம்களைப் பார்வையிட இந்திய வெளியுறவு அமைச்சரிடமும் தமிழ்நாடு மாநில அரசிடமும் இணக்கப்பாட்டை கோரியுள்ளது. மேலும், அந்த புனர்வாழ்வு முகாமுக்குள் பிரவேசிப்பதற்கும் அத்தகைய முகாம்களில் வாழ்ந்துவரும் இலங்கையர்களுடன் நேரடித் தொடர்பைப் பேணுவதற்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதி உயர்ஸ்தானிகர் பதிலளித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 14,000 தூதரக பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்து ஆவணங்களும் சீராக இருந்தால் விண்ணப்பதை சமர்ப்பித்த அதே நாளில் தூதரக பிறப்புச் சான்றிழை எந்தவித தாமதமும் இன்றி பிரதி தூதரகம் வழங்குகிறது.
மேலும், குடியுரிமை விண்ணப்பமும் ஏக காலத்தில் இந்த பிரதி தூதரகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சுயமாக முன்வந்து இலங்கைக்கு திரும்ப விரும்பும் அகதிகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, பதிலளித்த அவர், ‘ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயம் ஊடாக சுமார் 500 இலங்கை அகதிகளை திருப்பி அனுப்பி முடிந்தது’ என்றார்.