09

09

உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவி – அமெரிக்காவே போரை தூண்டுகிறது என குற்றஞ்சுமத்தும் ரஷ்யா !

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தொடங்கிய போர் 10 மாதங்களைக் கடந்துள்ளது.

போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு இராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டொலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 19.3 பில்லியன் டொலர் மதிப்பிலான அதிகமான இராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் “உக்ரைன் மீதான போர் தொடரந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கு அமெரிக்கா போரில் தலையிட்டுள்ளமையும் – அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதுமே” காரணம் என ரஷ்யா சாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

கைதிகளான ரஷ்யாவின் ஆயுதக்கடத்தல்காரனையும் – அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனையையும் மாற்றிக்கொள்ளும் ரஷ்யாவும் அமெரிக்காவும் !

12 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரஷ்ய ஆயுதக் கடத்தல்காரன் விக்டர் பௌட்டை மீட்டு, ரஷ்யக் காவலில் இருந்த அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை பிரிட்னி கிரைனரை விடுவிப்பதில் அமெரிக்க அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது .

முப்பத்திரண்டு வயதான பிரிட்னி கிரைனர் அமெரிக்க தேசிய கூடைப்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான வீராங்கனை . அவர் ஒரு ஒலிம்பிக் சாம்பியனும் கூட.

கடந்த பெப்ரவரியில், க்ரைனர் தனிப்பட்ட பயணமாக ரஷ்யாவுக்குச் சென்றபோது ‘கஞ்சா எண்ணெய்’ வைத்திருந்த குற்றச்சாட்டில் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கஞ்சா எண்ணெய் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக இருந்தாலும், ரஷ்யாவில் அது தடைசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரஷ்ய நீதிமன்றத்தால் கிரைனருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கிரைனரை விடுவிக்கும் முயற்சியில் பைடன் நிர்வாகம் தலையிட்டு ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. கூடைப்பந்து வீரர் கிரைனர் சார்பாக, அமெரிக்க சிறையில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஷ்ய ஆயுத வியாபாரி விக்டர் போட்டை வழங்க வேண்டும் என ரஷ்யா வழக்கு தொடர்ந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இந்த கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

அமெரிக்க ஏஜெண்டுகள் விக்டர் பௌட்டை தனி விமானத்தில் அழைத்து வந்து ரஷ்ய முகவர்களிடம் ஒப்படைத்தனர், ரஷ்ய முகவர்கள் கிரைனரை அழைத்து வந்து அமெரிக்க ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்தனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த விக்டர் பௌட், உலகின் மிகவும் பிரபலமான துப்பாக்கி கடத்தல்காரர். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு,பௌட் ஆயுதக் கடத்தலுக்குத் திரும்பினார்.

2008 ஆம் ஆண்டு, தாய்லாந்தின் பெங்கொக்கில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ​​பாதுகாப்புப் படையினரால் பௌட் கைது செய்யப்பட்டு பின்னர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மக்கள் – 2022ல் கூகுளில் (Google) அதிகம் தேடப்பட்ட முதல் 10 சொற்கள் என்னென்ன தெரியுமா..?

2022 ஆம் ஆண்டு உலக அளவில் கூகுளில் (Google) அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதல் 10 இடங்களைப் பெற்றுள்ள வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நமக்குத் தேவையான பல தகவல்களை உடனடியாகப் பெற கூகுள் தேடுபொறியையே நம்பியுள்ளோம். அந்த அளவிற்கு அதன் தேவை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள் எவை என்பது குறித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் இருப்பதால், கூகுள் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில் உலக அளவில் அதிகம் தேடப்பட்ட சொற்களில், வோர்டில் (Wordle) என்ற சொல் முதலிடம் பிடித்துள்ளது. இது இணைய வார்த்தை விளையாட்டு. உலக அளவில் அதிக அளவிலான மக்கள் இந்த சொல்லை கூகுளில் தேடியுள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக இந்தியா – இங்கிலாந்து (India vs England) சொல் உள்ளது.

கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட உக்ரைன் போரால், உக்ரைன் (Ukraine) எனும் சொல் 3 ஆவது இடம்பிடித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக ராணி எலிசபெத் (Queen Elizabeth), 5 ஆவது இடத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா (Ind vs SA), 6 ஆவது இடத்தில் உலகக்கோப்பை (World Cup), 7 ஆவது இடத்தில் இந்தியா – மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies),  8 ஆவது இடத்தில் ஐ-போன் 14 (iPhone 14), 9 ஆவது இடத்தில் அமெரிக்க சீரியல் கில்லரான ஜெஃப்ரெ தாமெர் (Jeffrey Dahmer), 10 ஆவது இடத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) சொல் அதிகம் தேடப்பட்டுள்ளது.

கூகுளில் நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் விளையாட்டு தொடர்பான சொற்களே அதிகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.