15

15

இந்த வருடத்தில் 640,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலா அமைச்சு!

நாட்டிற்கு இதுவரை 640,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் முதல் ஏழு நாட்களில் 16,168 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் நாட்டிற்கு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாபயணிகளின் வருகை மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது. அதன்படி, 106,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள்.

20 நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதோடு. அதில் 108,510 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாகவும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ் வருடத்தில் இதுவரை 78,827 பிரித்தானிய பிரஜைகளும், 74,713 ரஷ்ய பிரஜைகளும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள்.”- சஜித் பிரேமதாச

தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியலமைப்புப் பேரவைக்கு அழையுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற சர்வ கட்சி கலந்துரையாடலின் போது அதிபர் மற்றும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்க வேண்டும்.

வடக்கு – கிழக்கு சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குத் தேவையான சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும்.

பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு ஒருபோதும் வாய்ப்பளிக்கக் கூடாது” – எனத் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிலிருந்து விலகி தனித்தனியே தேர்தலில் போட்டியிடக் தயாராகும் பங்காளி கட்சிகள் – உறுதிப்படுத்திய சுமந்திரன்!

விரைவில் நீக்கப்படுகிறது உலகலாவிய கொரோனா அவசரநிலை – உலக சுகாதார அமைப்பு

சீனாவின் வூகான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டின் இறுதியில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

தற்போது அந்த பாதிப்புகளில் இருந்து சர்வதேச நாடுகள் படிப்படியாக மீண்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் சுமார் 66 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு இன்னும் சர்வதேச சுகாதார அவசரநிலை தேவைப்படுகிறதா..? என்பதை தீர்மானிக்க உலக சுகாதார அமைப்பு சார்பில் சில மாதங்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் எதனோம் பேசுகையில்,

2023-ம் ஆண்டில் நாம் சந்திக்க வேண்டிய சவால்கள் நிறைய இருப்பதாகவும், எதிர்காலத்தில் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவல்களை எதிர்கொள்ள தயார்நிலையில் இருக்கவேண்டும் என்பதே நாம் கற்க வேண்டிய பாடம் என்றும் கூறினார்.

கடந்த வாரம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ள நிலையில், வரும் 2023-ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் பரவலை உலகளாவிய அவசரநிலையாக கருதவேண்டிய அவசியம் இருக்காது என டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம், கொரோனா வைரசின் தோற்றத்தை நன்கு புரிந்துகொள்வதற்காக, நாங்கள் கேட்டுள்ள தரவுகளை பகிர்ந்துகொள்ளவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் சீனாவிடம் தொடர்ந்து கூறிவருவதாக டெட்ரோஸ் கூறினார்.

டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ள இலங்கையின் கல்வி – 100 கோடி ரூபாய் வரை செலவு !

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லை இசுருபாயவில் உள்ள கல்வியமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆயிரம் பாடசாலைகளுக்கு குறித்த இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஆயிரம் பாடசாலைகளுக்கு சுமார் 100 கோடி ரூபா செலவில் இணையத்தள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் செயற்திட்டத்தின் அடிப்படையில், அடுத்த தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் போது, குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் உள்ள கல்வி வலயங்களுக்கு மேலதிகமாக இன்னும் 20 கல்வி வலயங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகரிப்பின் மூலம் ஆசிரியர்களின் நிர்வாகப் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும் எனவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மஞ்சளுடன் கைதான இருவருக்கு இலட்ச ரூபாய் தண்டப்பணம் !

யாழ்ப்பாணத்தில் மஞ்சளுடன் கைதான இருவருக்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மஞ்சளை அரசுடமை ஆக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த கடந்த 2 ஆயிரத்து 448 கிலோகிராம் மஞ்சளுடன் சுதுமலை பகுதியை சேர்ந்த இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , விசாரணைகளில் போது இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிட்ட மன்று , சான்று பொருளாக மன்றில் சமர்ப்பித்த 2448 கிலோ மஞ்சளையும் அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்டது.

“கடத்தலில் பொலிசாருக்கும், இராணுவத்தினருக்கும் பங்கு – அதுவே போதைப்பொருளை கட்டுப்படுத்தமுடியாமைக்கு காரணம் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிசாருக்கும், படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில் “போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்த்தியை பாதிக்கின்ற விடயம். இதனை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற கட்டாயதேவை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. இவற்றை மூன்று வகையாக பிரித்து பார்க்கலாம்.

போதைப்பொருள் வருவதை தடுப்பது முக்கிய செயற்பாடு. அரச அதிகாரிகளோடு பொலிசாரோடு இணைந்து இதை செய்வதில் பாரிய இடர்பாடுகள் காணப்படுகிறது.

காரணம் அதிகாரிகள், பொலிசார், படைத் தரப்பினருக்கு போதைபொருள் வியாபாரிகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள்.

இதற்கான பல தகவல்கள் எங்களிடம் இருக்கிறது .இதனை தடுப்பதற்காக இதனை செய்பவர்களை காட்டிகொடுக்கின்ற போதேல்லாம் அவர்களோடு பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் இணைந்து செயற்படுவது அம்பலமாகி இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய முறையில் பயிற்றப்பட்டவர்களைக் கொண்டு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும். இதற்கு அரசாங்கத்தினால் மட்டுமன்றி தனியார் நிறுவனங்களையும் உள்வாங்கி செயற்பட வேண்டும்

இதற்கான செயல்பாடுகளையும் நாம் மேற்கொண்டு வருகின்றோம். அடுத்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் நாம் பாடசாலை ரீதியாக இதனை ஆரம்பிக்கின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக இறந்து போன மாடுகளுக்கு எந்த நோயும் இல்லை – மட்டக்களப்பு கால்நடை அபிவிருத்தி திணைக்களம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக சுமார் 271 மாடுகள் இறந்துள்ள போதிலும் மாடுகளுக்கு எவ்வித நோய்களும் இல்லை என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்த மாவட்ட கால்நடை அபிவிருத்தி திணைக்கள பிரதி பணிப்பாளர் வைத்தியர் உதயராணி குகேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த சில நாட்களாக இறைச்சி வகைகளை உணவாக உள்டகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வளவு செலவாகிறது தெரியுமா..? – கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம்

இலங்கையில் ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதந்தம் குறைந்த பட்சம், 13,810 ரூபா தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தினால், வெளியிடப்பட்ட ஒக்டோபர் மாதத்திற்கான தேசிய வறுமை மட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

மாவட்ட அடிப்படையின்படி, கொழும்பு மாவட்டத்தில் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய 14,894 ரூபாவுக்கும் அதிகமான தொகை தேவையாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மொனராகலை மாவட்டம் மிகக் குறைந்த செலவைக் கொண்டுள்ளதுடன் அந்த தொகை 13,204 ரூபாவாகும்.

இலங்கையில் அசுர வேகத்தில் ஐஸ் போதைப்பொருள் பாவனை- ஒரே ஆண்டில் 6000+ கைதுகள்!

இந்த வருடத்தில் இதுவரை ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 6,728 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருவதாகவும் தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனையிடும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

5 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளை வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வகையில் விஷம், அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு அண்மையில் நாடாளுமன்றத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.