07

07

பெண்களுக்காக அரசியலில் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 25வீத ஒதுக்கீட்டை உறுதி செய்ய வலியுறுத்தி பெண்கள் போராட்டம் !

கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சிமன்ற பெண்களினால் பெண்களுக்காக அரசியலில் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ள 25வீத ஒதுக்கீட்டை அரசியல் கட்சிகள் உறுதிப்படுத்த வலியுறுத்தி மட்டக்களப்பில் கையெழுத்துப்போராட்டமும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாட்டில் 16நாள் செயற்பாட்டு வாரத்தினை முன்னிட்டு இந்த கையெழுத்துப்பெறும்போராட்டம் மற்றும் கவன ஈர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு காந்திபூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.

பெண்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தவும் என்னும் தலைப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் உள்ள மாநகரசபை,நகரசபை,பிரதேசசபைகளில் உள்ள பெண் உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறுபட்டவர்கள் கலந்துகொண்டார்கள்.

பெண்களுக்கான 25வீத ஒதுக்கீடு கடந்த ஆட்சிக்காலத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால் பெண்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையே காணப்படுவதாகவும் அதனை உறுதிப்படுத்துமாறும் இங்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இதன்போது ஜனாதிபதி,பிரதமர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பனவற்றுக்கு மகஜர்கள் அனுப்புவதாற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பெண்கள் உரிமையினை வலியுறுத்தும் வகையில் கலந்துகொண்ட அனைத்து பெண்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் மீனவர் பிரச்சினை தொடர்பான முழு அதிகாரத்தையும் எனக்கு வழங்கியுள்ளார் – அமைச்சர் டக்ளஸ்

“இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லை.” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் போது ஜேவிபி எம்பி விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த காலத்தில், அத்துமீறி நாட்டுக்குள் பிரவேசிக்கும் இந்திய மீன்பிடி படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமென்று மன்னாரில் வைத்து தெரிவித்தார். அது, இப்போது செயற்படுத்தப்படுமா? என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி முழு அதிகாரத்தையும் தமக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

அமைச்சர் அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்

”கைது செய்யப்பட்டு நீதிமன்ற தீப்பின்படி அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளை, தேர்ந்தெடுக்கப்படும் எமது கடற்றொழிலார்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படகுகளின் தொழில் முறைமைகளை மாற்றி சட்டரீதியிலான தொழில் முறைமைக்கென வழங்கும் திட்டமும் உள்ளது. இதன் பயனாக இராட்சத இந்திய இழுவை மடி வலைப்படகுகளுக்கு முகங்கொடுத்து எமது கடற்றொழிலாளர்களாலும் பயமின்றி கடற்றொழிலில் ஈடுபடக்கூடிய சூழலை உருவாக்குவதே நோக்கம்.

முள்ளை முள்ளால் எடுப்பதைப்போன்ற ஒரு செயற்பாடுதான் இது இந்திய இழுவை மடி வலைப்படகுகளின் எல்லை தாண்டியதும் சட்டவிரோமானதுமான செயற்பாடுகள் காரணமாக எமது கடல் வளம் பாரியளவில் அழிக்கப்படுவகிறது.மேலும், எமது கடற்றொழிலாளர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டு வருகின்றன.இதனால் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றது.

ஏற்கனவே, கைது செய்யப்பட்டு பழுதடைந்த இந்திய இழுவை மடி வலைப் படகுகளை பல்வேறு அழுத்தங்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் ஏலம் விட்டிருந்தோம்.

அந்நிதியை, மேற்படி இந்திய இழுவை மடி வலைப் படகுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு தீர்மாளித்துள்ளோம்.

அத்துடன் அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளைத் திருத்தியமைத்து பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் வியாஷ்காந்த் அசத்தல் – Jaffna Kings இலகுவான வெற்றி !

2022 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியில் Jaffna Kings அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற Dambulla Aura அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய Dambulla Aura அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் Jordan Cox அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் விஜயகாந்த் வியாஷ்காந்த் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் Jaffna Kings அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் Jaffna Kings அணி சார்ப்பில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணாட்டோ 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

“அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்ட தேசம்தான் இங்கிலாந்து.” எனக்கூறி மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசி தாக்கிய இளைஞன் கைது !

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மரணத்துக்குப் பிறகு அரசராகப் பதவியேற்றுள்ள 3-ம் சார்லஸ், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், வடக்கு லண்டனில் இருந்து 46 கி.மீ. தொலைவில் உள்ள லூட்டன் நகரத்துக்கு நேற்று சென்ற அரசர் சார்லஸ், அங்கு நகர்மன்ற கட்டிடத்துக்கு வெளியே பொதுமக்களைச் சந்தித்தார்.

அப்போது அவரை நோக்கி ஒரு முட்டை வீசப்பட்டது. உடனடியாக அரசர் சார்லசை வேறொரு இடத்துக்கு அவரது பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

மன்னர் மீது முட்டைகளை வீசிய  இளைஞர் அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்ட தேசம்தான் இங்கிலாந்து, நீங்கள் மன்னரே அல்ல என கோசம் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னர் மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னர் மீது முட்டை வீசப்பட்டது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

ஏற்கனவே, கடந்த மாதம் வடக்கு இங்கிலாந்து சென்ற மன்னர் சார்லஸ், அவரது மனைவி ராணி கமிலா மீது முட்டைகள் வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும்.” – சாணக்கியன்

“மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பேசிய போது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலக பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் சுபீகரிக்கப்பட போவதாக 05 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

இதன்போது எழுந்து உரையாற்றிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தகுதியான தரப்பினரை தெரிவு செய்யுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு பணிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தாவிட்டால் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரம் ஏக்கர் காணியில் அனுமதியில்லாத வகையில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறையான வழிமுறையில் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஒரு தரப்பினர் அனுமதியில்லாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய மாவட்ட மக்கள் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் விவசாயத்திற்காக காணிகள் வழங்கப்படும். அது சிறந்ததாக அமையும் என்றார்.

இதன்போது எழுந்த உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என மகாவலி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார். சட்டத்தின் பிரகாரம் விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுப்போம் என்றார்.

10 மாத காலப்பகுதியில் 251,151 இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு !

மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2022 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.

தொற்றுநோய் தொடங்குவதற்கு முன்னர் வருடாந்தம் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில் இது பாரிய அதிகரிப்பு என்று மத்திய வங்கி கூறுகிறது.

இதேவேளை, 2022 ஒக்டோபர் மாதத்தில் 28,473 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 11,399 திறனற்ற தொழிலாளர்கள், 7,887 பயிற்றப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் 6,165 பேர் உள்நாட்டு சேவைகளுக்காக சென்றுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் பதிவாகியுள்ள வெளிநாட்டுப் பணம் 355 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2022 ஜனவரி-அக்டோபர் இல் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 2,929 மில்லியன் டொலர்கள். 2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில், இந்த மதிப்பு 4,895 மில்லியன் டொலர்களாக பதிவாகியுள்ளது.

யாழ்.பழைய பூங்காவில் சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் !

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதியுதவியுடன், சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் யாழ்ப்பாணம் மாநகர சபையினால் நிறுவப்பட்டது.

இதன் நினைவுக்கல்லை யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் திறந்து வைத்ததுடன் காற்று தரக் கண்காணிப்பு நிலைய பொறிமுறையை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹ ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வில் , மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் எஸ் பத்திரகே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் பி.ஹேமந்த ஜெயசிங்கே, உலக சுகாதார நிறுவனத்தினைச் சேர்ந்த கலாநிதி வேர்கிங் மல்லவராச்சி, யாழ் மாவட்ட மேலதிக செயலாளர் ம.பிரதீபன், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் து.சுபோகரன், வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டிலீப் லியனகே,யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,
யாழ் மாநகர ஆணையாளர் இ.த. ஜெயசீலன், மாநகர சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை !

தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார்.

2023ல் 6.2 மில்லியன் இலங்கையர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் – UNICEF எச்சரிக்கை !

UNICEF அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கையில் ஒவ்வொரு குடும்பங்களிலும் மேற்கொள்ளும் செலவில் 75 சதவீதம் உணவுக்காக செலவிடப்படுகிறது.

அறிக்கையின்படி, ஒருவரின் மாதச் சம்பளம் அல்லது வருமானத்தில் 75 சதவீதம் உணவுக்காகச் செலவிடப்படும்போது, ​​சுகாதாரம் மற்றும் கல்விக்கு மிகக் குறைவாகவே மிஞ்சும்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி 2023 ஆம் ஆண்டு முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அடுத்த ஆண்டு 6.2 மில்லியன் இலங்கையர்களுக்கு அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் 2.9 மில்லியன் குழந்தைகள் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி, கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மேலும் மோசமடையக்கூடும் என்றும், எதிர்வரும் மாதங்களில் குழந்தைகளின் போசாக்குக் குறைபாட்டின் நிலைமை மேலும் மோசமடையலாம் என்றும் யுனிசெப் கணித்துள்ளது.

தென்கொரிய நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு மரண தண்டனை கொடுத்த வடகொரியா – அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட தென்கொரியா !

தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரிய இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சியோல் வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.

வடகொரியாவில் உள்ள அரசு ஊடகம் சொல்வது தான் செய்தி என்கிற நிலை உள்ளது. ஆனால் பக்கத்து நாடான தென்கொரிய  ஊடகங்கள்  வடகொரியாவில் நடப்பதை பெரும்பாலும் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றன.

இத்தகைய நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். அதில் தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் ‘வீடியோ, சிடி’க்களை விற்பனை செய்தது அல்லது அப்படங்களை பார்த்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் தென்கொரியா டி.வி. நாடகம் பார்த்ததாக கடந்த அக்டோபர் மாதம் அந்நாட்டு இராணுவத்திடம் சிக்கினர். இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு சமீபத்தில் நிருபனமானது. இதையடுத்து ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து பொதுமக்கள் மத்தியில் இரு சிறுவர்களும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வட கொரியாவின் இச்செயலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.