29

29

“ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியானார்.”- அனுரகுமாரஅநுர குமார திஸாநாயக்க

தேர்தலுக்கு நிதியில்லை என்பதை ஜனாதிபதியின் பிறிதொரு அரசியல் சூழ்ச்சி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களையும்,மத்திய வங்கி பிணைமுறி மோசடியாளர்களையும் சிறைக்கு அனுப்புவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அனைத்து குற்றங்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் ஒப்படைத்து அவர் நாட்டை விட்டு சென்றார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ விவசாயத்துறையை முழுமையாக சீரழித்து முழு நாட்டு மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்கி விட்டு அவர் தற்போது வெளிநாட்டுக்கு விடுமுறை கால உல்லாச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராஜபக்ஷர்களை பாதுகாப்பதற்காகவே பொதுஜன பெரமுனவினர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று 05 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவர் எந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார் என்பதை நாட்டு மக்கள் ஆராய வேண்டும்.

எரிபொருள்,எரிவாயு தற்போது தடையில்லாமல் கிடைக்கப் பெறுகிறது என அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் குறிப்பிடுவது தவறு.

அரசமுறை கடன்களை மீள் செலுத்த முடியாது,நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது எனகடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து அரச முறை கடன் செலுத்தும் நிதி மிகுதியானது.

அந்த நிதியில் தான் எரிபொருள் மற்றும் எரிவாயு தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது,ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,பாராளுமன்றத்திற்கும் மக்களாணை கிடையாது.நாட்டு மக்கள் அரசியல் மறுசீரமைப்பை எதிர்பார்க்கிறார்கள். எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தீர்மானமிக்கது.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பாரிய முயற்சிகளையும்,சூழ்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தேர்தலை நடத்த நிதி இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா இல்லை என்றால்,2023 ஆம் ஆண்டு அரச செலவுகளுக்கு 7900 பில்லியன் ரூபாவை திரட்டிக்கொள்ளும் எனவும் அவர் கேளவி எழுப்பியுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் ஒன்லைன் கட்டண தளத்தை ஹெக் செய்து 100 மில்லியன் ரூபா நிதி மோசடி – இளைஞனுக்கு விளக்கமறியல்!

இலங்கை மின்சார சபைக்கு (CEB) மின் கட்டணம் செலுத்த பயன்படுத்தப்படும் இணைய கட்டண நுழைவாயிலை ஹெக் செய்து 100 மில்லியன் ரூபா நிதி மோசடி செய்த முக்கிய சந்தேக நபரை 2023 ஜனவரி 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் இணையத்தளத்தை ஹெக் செய்த ஒருவர் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் ஒருவர் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேகநபர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் தன்னை ஒரு தொழிலதிபர் மற்றும் ஒரு மென்பொருள் பொறியியலாளர் என அடையாளப்படுத்தியுள்ளார். மேலும் அவர் 10-20 சதவீத தள்ளுபடிக்கு தகுதியுடையவர் என நுகர்வோரின் மின் கட்டணத்தை அவர்களின் கடன் அட்டைகள் மூலம் செலுத்த முன்வந்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களில் சந்தேகநபர் சுமார் 400 பேரை ஏமாற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தப்பட்டது மற்றும் ரசீது தயாரிக்கப்பட்டது, ஆனால் CEB உண்மையில் செலுத்தப்படவில்லை.

25 வயதுடைய திஸ்ஸமஹாராம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கடவத்தையில் சிறிது காலம் தங்கியுள்ளார். சிஐடியின் கூற்றுப்படி,குறித்த நபர் க.பொ.த (உ/த) வரை கல்வி பயின்றுள்ளார்.

சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை காட்டி துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சகோதரன் கைது !

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் குழந்தையான சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த இளைஞன் சித்தியின் வீட்டில் தங்கி வாழ்ந்துவரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்தியின் குழந்தையை தனது மடியில் வைத்து கையடக்க தொலைபேசியில் ஆபாசபடங்களை காட்டி வந்துள்ளதுடன் அந்த குழந்தை மீது பாலியல் சேட்டை விட்டுவந்த நிலையில் அவர்களது உறவினரான பெண் ஒருவர் கண்டு குழந்தையின் தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையும் தன் மீது மாமா இவ்வாறு நடந்து கொண்டதாக தாயாரிடம் தெரிவித்ததையடுத்து சகோதரியின் மகனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவரை நேற்று கைது செய்தனர்

இவ்வாறு பாதிக்கப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் கைது செய்யப்பட்டவரை நேற்று (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கையில் 24 லட்சம் வறுமையில் – செஞ்சிலுவை சங்கம் அறிக்கை !

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, தற்போதைய நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டில் இலங்கை நாட்டின் மக்கள் தொகையில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் விழுந்துள்ளனர்.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில், கடந்த 2021 ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 11% பேர், அதாவது 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகின்றனர்.

நெருக்கடியின் தொடக்கத்தில் ஏழ்மையான குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்ததாக அது கூறுகிறது.

அக்குடும்பங்கள் சொத்துக்களை விற்று கடனாளிகளாக ஆவதற்கும் , அவர்களின் சாப்பாட்டைக் குறைத்து, பிள்ளைகளை பாடசாலைக்குச் செல்லவிடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்தக் கணக்கெடுப்பு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மக்கள் தொகையில் 26%, அதாவது 57 லட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் அறிக்கை காட்டுகிறது.

இந்த நாட்டில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

மேலும், இந்த நெருக்கடி 3.45 மில்லியனுக்கும் அதிகமான விவசாய மக்களையும், 2.43 மில்லியனுக்கும் அதிகமான ஊட்டச்சத்து தேவையுள்ள மக்களையும், அத்தியாவசிய மருந்துகள் தேவைப்படும் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களையும் கடுமையாக பாதித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

50 நாட்களில் 15  வயது பாடசாலை மாணவி உட்பட 11  பேர்   தற்கொலை – பின்னணி என்ன..?

ஹோமாகம மரண விசாரணை அதிகாரியின்  அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த  50 நாட்களில் 15  வயது பாடசாலை மாணவி உட்பட 11  பேர்   தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதிவான்  சிந்தக உதயகுமார தெரிவித்துள்ளார்.

பனாகொட, ஹபரகட, நியதகல, பிடிபன, ஹிரிபிட்டிய, மீகொட, ஹங்வெல்ல மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே  இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் 15-65 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.  அவர்களில் ஏழு பேர் மது மற்றும் போதைப்பொருளுக்கு  அடிமையானவர்களாவர்.

மேலும் பல மரணங்கள் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தினால் ஏற்பட்டதாகவும்  தெரிவித்துள்ள அவர்,  பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதுடன், காதல் உறவினால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த தற்கொலைக்கு  காரணம் என தெரிய வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் தாய் வெளிநாட்டில் இருப்பதாகவும், தந்தை வேறு ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும் கூறப்படுவதாகவும் அவர்  கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது !

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி, இந்த போதைப் பொருள் வியாபாரத்தை முன்னெடுத்து வந்ததாக கைது செய்யப்பட்டவரிடம் மேற்கோண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞனை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தரமான கல்வி வாய்ப்புகள் அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் – கல்வி அமைச்சர்

வெற்றிகரமான மனித வளத்தை உருவாக்குவதற்கு தரமான கல்வி வாய்ப்புகளை அனைத்து பிள்ளைகளுக்கும் பாடசாலை முறை ஊடாக வழங்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்

எதிர்காலத்தில் பாடசாலைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துவது இலகுபடுத்தப்படும்; ஆரம்ப, கனிஷ்ட இரண்டாம் நிலை மற்றும் சிரேஷ்டஇரண்டாம் நிலை மற்றும் 8,000 பட்டதாரிகள் நிதி நிர்வாகத்திற்காக வைக்கப்படுவார்கள்.

தற்போதுள்ள 100 கல்வி வலயங்கள் 120 ஆக அதிகரிக்கப்படும் என்றும் ஆசிரியர்களுக்கான சேவை பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகில் பல அபிவிருத்தியடைந்த நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள STEM கல்வி (விஞ்ஞானம், தொழிநுட்பம், பொறியியல், கணிதம்) நாட்டின் கல்வி முறையில் பிரபல்யப்படுத்தப்படும் அதேவேளை தேசிய கல்வி நிறுவகம் ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டங்களை வழங்கும் நிறுவனமாக.அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள கல்வி சீர்திருத்தங்கள் மாத்திரம் போதாது என்றும், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிர்வாக அதிகாரிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் செயலூக்கமான பங்களிப்பை எதிர்பார்க்கும் அதே வேளையில் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக அரசினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட அரிசி மூடைகளையும் பதுக்கிய அபிவிருத்தி சங்க திருடர்கள்- புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்குதவாது போன சோகம் !

தமிழக அரசினால் வழங்கப்பட்ட அரிசி மூடைகள் வவுனியா – ஆசிக்குளம், மதுராநகர் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கிராம மக்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழக அரசினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு தொகுதி அரிசி மூடைகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், மதுராநகர் கிராமத்தில் சுமார் 1000 கிலோவிற்கும் மேற்பட்ட அரிசி மூடைகள் கிராம அபிவிருத்தி சங்க கட்டட அறையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த அரிசி மூடைகள் பழுதடைந்து புழுக்களும் வண்டுகளும் நிறைந்து பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் நாகலிங்கம் கமலதாசன் நியூஸ்ஃபெஸ்டிற்கு கருத்து தெரிவிக்கையில், அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை குறித்த இடத்திற்கு அனுப்பி அறிக்கையிடுமாறு தெரிவித்துள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்க முடியும் எனவும் கூறினார்.