04

04

வடிகாலமைப்புக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை மோசடி செய்த யாழ்.மாநகர சபை – நாடாளுமன்றில் செ.கஜேந்திரன்

தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு வடிகாலமைப்புக்காக ஒதுக்கப்பட்ட 1,870 மில்லியன் ரூபாயில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாராளுமன்றில் நேற்று இடம்பெற்ற குழு நிலை விவாதத்தில் கருத்துரைத்த அவர், நகர அபிவிருத்தி அதிகார சபையும், யாழ்ப்பாண மாநகர சபையும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

கொக்குவில் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுவன் – வீடியோ பதிவு செய்து பலமுறை சிறுமியை துஷ்பிரயோகம் செய்த சிறுவர்கள் !

மட்டக்களப்பு, கொக்குவில் பகுதியில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை வீடியோ மூலம் பதிவு செய்த குற்றத்தில் மூவர் இன்று (டிச. 4) ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்றுவரும் 16 வயது சிறுமியை, அதே வகுப்பில் கற்கும் சிறுவன் 2 மாதங்களுக்கு முன்னர், தனது வீட்டில் யாரும் இல்லாதபோது அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

அப்போது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படும் காட்சியை சிறுவனின் நண்பர்கள் 3 பேர் மறைந்திருந்து வீடியோ எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து குறித்த சிறுவனின் நண்பர்கள் சிறுமியை தொடர்புகொண்டு, வீடியோ பதிவை பற்றி கூறி, தங்களுடனும் உறவுகொள்ள அழைத்து மிரட்டியுள்ளனர்.

தங்கள் விருப்பத்துக்கு இணங்காவிட்டால்,  வீடியோவை சமூக ஊடகங்களில் பரப்பப்போவதாக சிறுமியை தொடர்ந்து அச்சுறுத்தி வந்துள்ளனர்.   இந்நிலையில் விடயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவனது 16 வயது  நண்பர்கள் உட்பட 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

அந்த நண்பர்களில் சம்பவத்தோடு தொடர்புடைய மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளதாகவும், அவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ள 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வறிய குடும்பங்களை இலக்குவைத்த சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் – வாக்குமூலத்தில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் !

கொழும்பு – பொரளை, கொட்டா வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றினை மையப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் சட்ட விரோத சிறுநீரக வியாபார நடவடிக்கைகள் குறித்த விசாரணைகளின் போது,  சட்ட விரோத விதைப்பை வர்த்தகம் குறித்த தகவலொன்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வறிய குடும்பங்களை இலக்குவைத்த சட்ட விரோத சிறுநீரக வர்த்தகம் தொடர்பில்,  பொரளை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற 5 முறைப்பாடுகள் தொடர்பில், சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, கொழும்பு மேலதிக நீதிவான் ரஜீந்ரா ஜயசூரியவிடம்  முதல் தகவலறிக்கை சமர்ப்பித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சி.சி.டி. பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில்  சில்வாவின் கீழ் இவ்விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவ்விசாரணைகளில் ஒரு அங்கமாக புளூமெண்டல் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யும் போது,  சட்ட விரோத விதைப்பை வர்த்தக நடவடிக்கை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாவுக்கு ஒரு விதைப்பை விலை பேசப்பட்டுள்ளதாக அந்த வாக்கு மூலம்  ஊடாக வெளிப்படுத்தப்பட்டதாக கூறும் பொலிசார்,  அதற்கான ஆரம்பகட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கும் அந்த இளைஞன் உட்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இதுவரை அடையாளம் காணப்படாத நபர் ஒருவரே விதைப்பை  தொடர்பில் விலை பேசியுள்ளதுடன், அவர் சிறுநீரக வர்த்தகத்திலும்  உறுதியளித்த பணத் தொகையை வழங்காமல் இருந்தவர் என தான் அறிந்துகொண்டதால், விதைப் பையை குறித்த பணத்தொகையை பெற்றுக்கொண்டு வழங்க தான் மறுத்ததாக குறித்த இளைஞன் சி.சி.டி. அதிகாரிகளிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கொழும்பு 13 , புளூமெண்டல் வீதி, சிறிசந்த செவன வீடமைப்பில் வதியும் நபர், பொரளை தனியார் வைத்தியசாலை சிறுநீரக வர்த்தக நடவடிக்கைகளுக்கு தரகராக செயற்பட்ட நபர் 5 பேருடன் சென்று பொரளை பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விவகாரத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

கொழும்பு – கொச்சிக்கடையை சேர்ந்த வேல்டிங் தொழிலாளர் ஒருவர்,  கொழும்பு 15 பஞ்ஞானந்த மாவத்தையைச் சேர்ந்த வீதித் துப்புரவு தொழிலாளி, புளூமெண்டல் – சிரி சந்த செவன குடியிருப்பில் வசிக்கும் வேல்டிங் தொழிலாளி,  கொழும்பு 13 மீரானியா வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, மற்றும் கொழும்பு 15 பஞ்ஞானந்த மாவத்தை , மெத் சிறி செவன வீடமைப்பில் வசிக்கும்  ஒன்றரை வயது குழந்தையின் தாயொருவர் ஆகியோர் இந்த முறைப்பாடுகளை செய்திருந்தனர்.

குறித்த ஐவரிடமும் மோசடியான முறையில் சிறுநீரகங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளன. அவர்களிடம் இருந்து சிறுநீரகங்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், சட்டத்தை விவரித்து அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பணத் தொகையை வழங்காமல்  அவர்கள் துரத்தியடிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகளில் கூறப்பட்டுள்ளது.

இந் நிலையில், இந்த வர்த்தக வலையமைப்பில்,  பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்புபட்டுள்ளமை தொடர்பிலும் இதுவரையிலான விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

உறுதியளிக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை கோரி  உரியவர்கள் செல்லுமிடத்து, குறித்த பொலிஸ் அதிகாரி அவர்களை கண்டித்து சிறு தொகை பணத்துடன்   திருப்பியனுப்பும் நடவடிக்கைகளை முனெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந் நிலையிலேயே பொரளை பொலிஸ் நிலையத்தில்  செய்யப்பட்ட முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் சி.சி.டியினரால் முன்னெடுக்கப்படுவதாக நீதிமன்றுக்கும் கடந்தவாரம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை !

இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தனியாரின் கைகளுக்கு மாற்றப்படும் தபால் திணைக்களம் !

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்கு தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், குறுகிய கால முதலீட்டிற்காக தபால் துறையில் சேர தனியார் துறையினரை அழைப்பதாகவும் அவர் கூறினார்.

மத்துகம தபால் நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தபால் துறையின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே தனியாரிடமிருந்து உரிய ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

14 வயது சிறுமி மீது பாலியல் வன்புணர்வு – சிறுமியின் பெரிய தந்தை கைது !

அநுராதபுரம், கல்னேவ – ஹுரிகஸ்வெவ பிரதேசத்தில் 14 வயது சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அச்சிறுமியின் பெரிய தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

தமது மகள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர்கள், ஹுரிகஸ்வெவ காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அந்த காவல்நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம், குற்றப் விசாரணைப் பிரிவினர் மற்றும் விசேட பணியக அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இந்தக் குற்றத்தை புரிந்ததாக கருதப்படும் 60 வயதான சந்தேக நபர் நேற்று (3) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் திருமண வாழ்க்கையிலிருந்து விலகியுள்ள சந்தேகநபர், நீண்ட நாட்களாக சிறுமியின் வீட்டில் தங்கியிருந்ததாக காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமியின் பெற்றோர் விவசாயத்திற்காக வீட்டிலிருந்து வெளியேறிய சந்தர்ப்பமொன்றில் சந்தேகநபரால் சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சிறுமி சற்று உளநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை மருத்துவ பரிசோதனைக்காக அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கு காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (4) கெக்கிராவ மாவட்ட நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியைக் கொலை செய்த இலங்கையர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது !

மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியைக் கொலை செய்தமை தொடர்பில் 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள Sandhurst பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெலோமி பெரேரா என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கத்தியால் குத்தப்பட்ட போது அவரது மகள் வீட்டிற்கு வெளியே வந்து, அண்டை வீட்டுக் கதவைத் தட்டி உதவி கோரியமை அருகில் இருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணின் இளம் மகள் அவர்களிடம் வந்து, “என் அம்மா இறந்துவிட்டார், என் அம்மா இறந்துவிட்டார்” என்று கூறியதாக அயலவர்கள் தெரிவித்தாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

குறித்த சந்தேக நபர் தனது மகனையும் தாக்கியதில் மகனின் தலையில் காயம் ஏற்பட்டு தற்போது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த பெண்ணும் கொலையை செய்த அவரது கணவரும் தற்போது பிரிந்து வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை செல்வது தொடர்பில் அவதானமாக இருங்கள் – பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இலங்கைக்கு விஜயம் செய்தால் தேவையான மருந்துகளை கொண்டு வருமாறு அறிவித்துள்ளனர்.

கொழும்பிற்கு வெளியே மருத்துவ வசதிகள் குறைவாக இருப்பதாக கூறியுள்ள அமெரிக்கத் தூதரகம், கொழும்பு நகரில் கூட ஆறு பெரிய மருத்துவமனைகள் மட்டுமே இருப்பதாகவும், அந்த ஆறு மருத்துவமனைகளில் மூன்று மருத்துவமனைகளில் மட்டுமே அவசர சேவைகள் இருப்பதாகவும் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.