28

28

“மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும்.”- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும், குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்தினை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டகளஸ் தேவானந்தா, 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்ற வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்.

“மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்கத்தயார்.”- சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களின் நன்மை கருதி, தற்போது தமிழ் கட்சிகள் சேர்ந்தே பயணிக்க வேண்டும் எனவும் அதற்கு மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 6 பேரின் கூட்டணிக்கு மாவை சேனாதிராஜா தலைமை வகிப்பதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அவர் சிரேஷ்ட உறுப்பினர் என்பதால், அதற்கு பொருத்தமானவர். ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு விடயங்களை எடுத்துக்கூறும் விவகாரத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டும். தனித்து போட்டியிட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் சிலர் கூறினாலும் மக்களின் நலன் கருதி இந்த காலகட்டத்தில் சேர்ந்து போவது தான் சிறந்தது என்ற முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல் அல்லவெனவும் உத்தியோகபூர்வ கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்து தமக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தமக்கு கடிதம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே நேரம் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்றாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் எனவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

 

பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கையின் பனங்கள்ளு !

அண்மையில் பிரான்ஸுக்கு அதிகளவான பனங்கள்ளு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் அதன் மூலம் நாற்பத்தைந்தாயிரம் அமெரிக்க டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி கிருஷாந்த பத்திராஜா தெரிவித்தார்.

மேலும், கடந்த டிசம்பரில் இங்கிலாந்துக்கு ஒரு தொகை மீன்கள் அனுப்பியதன் மூலம் சுமார் 6300 டொலர்கள் வருமானம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்த பதிராஜா, ஏனைய நாடுகளுக்கு மீன்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் ஒரே வருடத்தில் 497 கொலைகள் உட்பட 29,930 குற்றங்கள் பதிவு !

இந்த வருடத்தில் 29,930 குற்றங்கள் பதிவாகியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல, 497 கொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் இந்த புள்ளிவிபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

37% குற்றங்கள் மேல் மாகாணத்திலும், 13% வடமேற்கு மாகாணத்திலும், 10% தென் மாகாணத்திலும், 09% சப்ரகமுவ மாகாணத்திலும், 08% மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த வருடத்தில் சொத்துக்களுக்கு எதிரான 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிரான 5,964 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

கடந்த 11 மாதங்களில் மாத்திரம் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராசிரியர் அத்துகோரலவின் கூற்றுப்படி, மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி திருட்டு வழக்குகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் 39% பதிவாகியுள்ளன, கொள்ளை சம்பவங்களில் 14% வடமேல் மாகாணத்திலும் தென் மாகாணத்தில் இருந்து.13% கொள்ளை சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்த வருடத்தில் களனி பொலிஸ் பிரிவிலேயே அதிகளவான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 2,287 ஆக உள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும், அனுராதபுரத்தில் 2,058 குற்றங்களும், நுகேகொட பொலிஸ் பிரிவில் 2,018 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

நீர்கொழும்பு, கண்டி, குருநாகல், கல்கிஸ்ஸ, கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, குளியாபிட்டிய மற்றும் பாணந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் 1,000 க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தாண்டில் மாத்திரம் 3,596 கடத்தல் வழக்குகள், 6,208 வீடுகளை உடைத்து, 2,159 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2021ஆம் ஆண்டில் இலங்கையில் பாரிய குற்றச் செயல்களின் எண்ணிக்கை 4,336 ஆக அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் 31,098 குற்றங்கள் பதிவாகியுள்ளன, 2021 ஆம் ஆண்டில் 35,434 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியே குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்றும் தொடர்புடைய அறிக்கை தெரிவிக்கிறது.

“2022 இல் நடந்த குற்றங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை இன்னும் தயாரிக்கப்படவில்லை. எவ்வாறாயினும் கிடைத்த தகவல்களின்படி, சுமார் 29,930 கொடூரமான குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதில் 36% மேல் மாகாணத்திலும், 13% வடமேற்கு மாகாணத்திலும், 10% தென் மாகாணத்திலும், 9% சப்ரகமுவ மாகாணத்திலும், 8% மத்திய மாகாணத்திலும் பதிவாகியுள்ளன.

இந்த வருடத்தில் சொத்து சேதத்திற்கு எதிராக பதிவான குற்றங்களின் எண்ணிக்கை 16,317 ஆகும். மேலும், மக்களுக்கு எதிராக 5,964 குற்றங்கள் பதிவாகியுள்ளன என பேராசிரியர் அத்துகோரள தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டின் முதல் 10 மற்றும் 11 மாதங்களுக்கு இடையில் 1,466 வாகனத் திருட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 39% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இந்த 11 மாதங்களில் 497 கொலைகள் பதிவாகியுள்ளன, அதில் 49%, அதாவது 223 கொலைகள் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களால் நடந்துள்ளன, என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

151 இலங்கையர்களை இலங்கைக்கு நாடுகடத்தியது வியட்நாம் – விசாரணைகள் ஆரம்பம் !

வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடமை முகாமையாளர் தெரிவித்தார்.

வியட்நாமில் இருந்து நாட்டை வந்தடைந்த 151 இலங்கையர்கள் - பெறப்பட்ட  வாக்குமூலம்! - ஐபிசி தமிழ்

அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், மேலதிக விசாரணைகளுக்காக அவை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட 303 இலங்கையர்களையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான முயற்சிகளை வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட நிலையில் அவர்களில் 151 பேர் வியட்நாமில் இருந்து இலங்கைக்கு திரும்புவதற்கு உடன்பட்டதையடுத்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட வியட்நாம் அதிகாரிகள் மேற்கொண்ட முயற்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு இலங்கையர்கள் தமது உயிரை மாய்க்க முயற்சித்த நிலையில் யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் பாவனையால் இளைஞர் மரணம் – குறுகிய காலத்தில் யாழ்ப்பாணத்தில் 15ஆவது பலி !

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அதிகளவான ஹெரோயின் பாவனையே இந்த மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையினால் அண்மைக்காலத்தில் பதிவான 15 ஆவது மரணமாகும்.

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது?

எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது என்பதற்கு இன்னும் தான் எனக்கு விடைதெரியவில்லை. இன்னும் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. 2006 மாவிலாறு மூடியதிலிருந்து 2009 ஜனவரிவரை இறுதி யுத்தத்தில் இறந்தவர்களின் புலிகள் இராணுவம் பொதுமக்கள் என கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு ஆயிரமளவிலேயே இருந்தது. யுத்தத்தை அப்போதே நிறுத்துங்கள் மக்களைக் கொல்லக் கொடுத்து யுத்தத்தை வெல்ல முடியாது. கொல்லப்பட்டவர்களுக்கு மனிதவுரிமை கோஷம் எழுப்புவதில் பயனில்லை என பதிவுக்கு மேல் பதிவுகள் எழுதினேன். எழுதினோம். என்ன ஆச்சு. கொத்துக்கொத்தாக கொல்லக் கொடுத்தார்கள். எனக்கு இன்னமும் புரியாத விசயம் கொல்லப்படுவதை நிறுத்துவது நல்லதா? அல்லது கொல்லப்பட்ட பின் அதை வைத்து மனித உரிமைக்காகப் போராடுவது நல்லதா?

இக்கீழுள்ள பதிவை மணியம் சண்முகம் டிசம்பர் 26 அன்று தன் முகநூலில் பதிந்துள்ளார். என்னை ஏதோ ஒரு காரணத்திற்காக அந்தப் பதிவு மிகவும் ஈர்த்தது. அதிஸ்ட் வசமாக சம்பந்தப்பட்டவர் ஒன்றரை வருடங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டார். ஆனால் விடுவிக்கப்படாமல் ‘அங்காலை அனுப்பப்பட்டவை எத்தனைபேர்? துரதிஷ்டவசமாக இங்கு மனித உரிமைகள் பேசுகின்ற பெரும்பாலானோர் அவர்கள் தனிமனிதர்களாக இருந்தாலென்ன அமைப்புகளாக இருந்தாலென்ன, நாடுகளாக இருந்தால் என்ன? சமாதானத்துக்காக நோபல் பரிசு வழங்கும் நாடாக இருந்தாலென்ன அவர்கள் ஒன்றும் மனித உயிர்கள் மீதும் மனித நேயத்தின் மீதும் அக்கறைகொண்டவர்கள் கிடையாது. அவர்கள் மனித உரிமையை ஒரு அரசயல் ஆயுதமாகவே பயன்படுத்துகின்றனர். அதனால் தான் மனித உரிமைகள் மனிதம் அற்ற வெற்றுக் கோஷங்கள் ஆகிவிட்டது. மனித உரிமையைச் பேசுவோர் தான் எப்போதும் வன்முறையை உற்பத்தி செய்பவர்களாகவும் வன்முறையை ஏற்றுமதி செய்பவர்களாகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாக உள்ளனர். மனிதவுரிமை என்பது கேலிக் கூத்தாக்கப்பட்டு ஆண்டுகள் தசாப்தங்கள் கடந்துவிட்டது.

யுத்தங்கள் உற்பத்தி செய்யப்பட்டால் தான் வருமானம் பெருகும் லாபம் குவியும். அதற்காக மக்கள் கொல்லப்பட வேண்டும். காயப்பட வேண்டும். வரலாறு காணாத துன்பத்தை அனுபவிக்க வேண்டும். அதேசமயம் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டி மனித உரிமை நாடகம் போடவேண்டும்.

உங்களுக்கு ஏதாவது விளங்கிச்சு? எனக்கும் அப்படித்தான்.

இப்போது மணியம் சண்முகத்தின் கதையல்ல நிஜத்தைப் பார்க்கலாம்:

31 ஆவது ஆண்டு நினைவாக…..

1991 டிசம்பர் 26 ஆம் திகதி (இதே தினம்) முன்னிரவு நேரம் நல்லூர் பண்டாரிக்குளம் ஒழுங்கையிலுள்ள ஒரு இரண்டுமாடிக் கட்டிடத்தின் கீழ் அறையொன்றில் நான் அடைக்கப்படுகின்றேன். என்னை அங்கே அடைக்கும் போதே அந்த அறையில் ஏற்கெனவே ஏழெட்டுப் பேர் இருக்கின்றனர்.

அறைக்குள் நுழைந்ததும் மூத்திரவாடை குப்பென்று அடிக்கிறது. மங்கலான ஒளியுடன் அல்லாடிக் கொண்டிருந்த குப்பி விளக்கின் ஒளியில் அந்த அறையின் மூலையில் ஒரு உலோகச் சட்டி இருக்கிறது. அது மூத்திரத்தால் நிறைந்திருக்கிறது. அதன் மணம் வயிற்றைக் குமட்டுகிறது. சுவர்களில் மூட்டைப் பூச்சிகளையும், நுளம்புகளையும் நசுக்கிய இரத்தக்கறை.

அவர்கள் என்னைப் பிடிக்க வந்தபோது, நான் யாழ். நகரின் ஸ்ரான்லி வீதியில் இருந்த எமது புத்தகக் கடையில் இருக்கிறேன். கூட இன்னொரு வயோதிபத் தோழரும் என்னுடன் இருக்கிறார். வழமையாகத் தினமும் வருபவர்.

எனது பெயரைச் சொல்லி ‘நீங்கள் தானா அவர்?’ என வந்த மூன்று பேரில் ஒருவன் கேட்கிறான். எனக்கு அவர்களது தோற்றத்தையும் பாவனைகளையும் பார்த்தவுடன் விளங்கிவிட்டது. இருந்தாலும் கேட்கிறேன்:
‘என்ன விசயம் தம்பி?’

‘ஒரு சின்ன விசாரணை. எங்களுடன் வாருங்கள்’. அவன் எனது முகத்தைப் பார்க்காமல் எங்கோ பாரத்துக்கொண்டு பதில் சொல்கிறான். பின்னர் தான் புலனாய்வுப் பிரிவிலிருந்து வருவதாகக் கூறி தனது அடையாள அட்டையைக் காண்பிக்கிறான். வந்தவர்கள் மூவருக்கும் 20 வயதுக்குள்தான் இருக்கும்.
புத்தகக் கடையைப் பூட்டி திறப்பைத் தாங்களே எடுத்துக் கொள்கின்றனர் அங்கிருந்து நேரே தமது இருப்பிடத்துக்கு என்னை அழைத்துச் செல்ல முயல்கின்றனர். நான் ஒருவாறு அவர்களை வலியுறுத்தி சுமார் அரை மைல் தூரத்திலுள்ள எனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு எனது சைக்கிளை நிறுத்திவிட்டு, இரவு உணவுக்காக வாங்கிவந்த பாணை மனைவியிடம் கொடுத்து விடயத்தைக் கூறுகிறேன். மனைவி அழத் தொடங்குகிறார். ஒன்றரை வயது கைக்குழந்தையான எனது மகள் ஒன்றும் புரியாது மிரண்டுபோய் இருக்கிறாள்.

அவர்கள் புத்தகக் கடையைச் சோதனையிட்டது போல எமது வீட்டின் அறைகளுள்ளும் புகுந்து சோதனையிட்ட பின்னர் என்னைத் தமது சைக்கிளில் ஏற்றிக்கொண்டு புறப்படுகிறார்கள். புறப்படும் போது வாசல்வரை வந்த மனைவியின் முன்னால், ‘என்னை எப்ப விடுவியள் தம்பி?’ எனக் கேட்கிறேன்.
‘அது உங்கடை விசாரணையைப் பொறுத்தது’ எனப் பதிலளிக்கிறான். அவனது சுருதி மாறியிருந்ததை அவதானித்தேன்.

அறைக்குள் இருந்தவர்களில் பலர் தாடியுடன் காணப்படுகின்றனர். அவர்களது உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. அவர்கள் நீண்ட நாட்களாக முகச்சவரம் செய்யாதது மட்டுமின்றி, குளிக்கவும் இல்லை என்பது புரிந்தது, அவர்களில் ஒருவர் எழுந்து சென்று மூலையில் இருந்த சட்டிக்குள் சிறுநீர் கழித்தார். இனிமேல் நானும் இப்படித்தான் என்பது புரிந்தது.

‘என்ன விசயத்துக்காக உங்களைப் பிடிச்சவங்கள்’ என ஒருவர் என்னிடம் கேட்கிறார்.

‘காரணம் ஒண்டும் சொல்லேல்லை’ என நான் பதில் சொல்கிறேன்.

‘உங்களை என்ன காரணத்துக்காகப் பிடிச்சவை?’ என நான் அவரைத் திருப்பிக் கேட்கிறேன்.

‘உம்மைப் போலைதான் எனக்கும் காரணம் சொல்லேல்லை’ அவர் கூறுகிறார்.

‘எவ்வளவு காலமாக இஞ்சை இருக்கிறியள்?’ திரும்பவும் அவரிடம் கேட்டேன்.

‘ஆறு மாசம் வரும். ஆனா ஒரு வருசம் ஆன ஆக்களும் இருக்கினம்’.

இடையே மேல்மாடியிலிருந்து சிங்களத்தில் ஏதோ ஒலி வருகிறது. நான் ஒன்றும் விளங்காமல் அங்கிருந்தவர்களைப் பார்க்கிறேன். எனது நிலையைப் புரிந்து கெண்ட அவர்களில் ஒருவர்:
‘அது பிடிச்சு வைச்சிருக்கிற சிங்களப் பொலிஸ்காரர் பிரித் ஓதுறாங்கள். இது ஒவ்வாரு நாளும் நடக்கும். என்னத்தை ஓதினாலும் அவங்களை இவங்கள் விடப்போறதில்லை. அங்காலை அனுப்பிப் போடுவாங்கள்’ என்று கூறுகிறார். ‘அங்காலை’ என்பதை சற்று அழுத்திக் கூறுகிறார். நானும் ‘அங்காலை’தான் போகவேண்டி வருமோ என மனம் துணுக்கிறுகிறது.

கொஞ்ச நேரத்தில் ஒரு பையன் கதவைத் திறந்து ஒரு பிளாஸ்ரிக் சட்டியில் சிறிதளவு கொத்து ரொட்டியைக் கொண்டுவந்து அங்கிருந்த கோப்பைகள் ஒவ்வொன்றிலும் கொட்டிவிட்டுப் போகிறான். போகும்போது ‘புதுசா வந்தவருக்கும் குடுங்கோ’ என்று சொல்லிவிட்டுப் போகிறான்.

கோப்பைகள் பற்றாக்குறையால் ஒரு கோப்பையில் இருவர் சேர்ந்து சாப்பிடுகின்றனர். என்னையும் அழைக்கின்றனர். நான் ‘பசிக்கவில்லை’ என்று சொல்லிவிட்டு சுவருடன் சாய்ந்து எனது எதிர்காலம் குறித்து சிந்திக்கத் தொடங்குகிறேன்.

அறைக் கதவு மீண்டும் திறக்கப்படுகிறது. என்னை மாலையில் அங்கு கொண்டு வந்து விட்டவன் என்னைத் தன்னுடன் வருமாறு அழைக்கிறான். நான் எழுந்து அவனுடன் போகிறேன். அந்த வீட்டின் முன்னால் உள்ள காவல் குடிலில் எல்.எம்.ஜி. ரக துப்பாக்கியுடன் இருப்பவன் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு, வாசலைப் பார்த்து குறி வைத்தபடி இருக்கிறான்.

என்னை அழைத்துப்போக வந்தவன் ஒரு கறுப்புத் துணியால் எனது கண்களை மூடிக் கட்டிவிட்டு என்னைக் கைகளில் பிடித்து அழைத்துப் போய் தனது சைக்கிளில் ஏற்றுகிறான்.

‘எங்கை தம்பி கூட்டிக்கெண்டு போறியள்?’ எனக் கேட்கிறேன்.
‘எங்களிட்டை வந்திட்டால் கேள்வி ஒண்டும் கேட்கக் கூடாது’ என எச்சரிக்கிறான்.
எனது ஒன்றரை வருட நரக வாழ்வுக்கான பயணம் ஆரம்பமாகிறது என்பதை அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் 1994 யூன் 6 ஆம் திகதி வெளியே வருகிறேன். அந்த ஒன்றரை வருடங்களில் எனது கண்ணீர் எல்லாம் வற்றி கண் வரண்டுபோய் விட்டது. என்னைப் போன்ற பலரினதும் கண்ணீரும்தான்.

அந்தக் கண்ணீர் எல்லாம் திரண்டு 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கடல் அலைகளாக ஆர்ப்பரிக்கின்றன.

இலங்கையின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் – அதற்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பாரா ஜனாதிபதி ரணில் ..?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

ஜனாதிபதியின்  உத்தரவின் பேரில் மூன்று முக்கியமான நிகழ்வுகள் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன குறிப்பாக பெப்ரவரி நான்காம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

அதற்கு பின்னராக பெப்ரவரி 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு இருக்கின்ற கலாச்சார மத்திய நிலையத்தில் அதனுடைய ஒரு முழுமையான செயல்பாட்டு நிகழ்வோடு சுதந்திர விழா ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

அதற்கான ஆரம்ப கலந்தரையாடல் இன்று முன்னெடுக்கப்பட்டது , குறிப்பாக கலாச்சார மத்திய நிலைத்தினுடைய ஒரு இணைப்பு முகாமைத்துவ குழுவில் இருக்கிற   ஆளுநர் மற்றும் இந்திய துணை தூதுவரத்தின் அதிகாரிகள் மற்றும் யாழ் மாநகர சபையின் அதிகாரிகள் மத்திய கலாச்சார அமைச்சுடன் இணைந்ததாக கலாச்சார மத்திய நிலையத்தில் கலாச்சார நிகழ்வுகளை நடத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு ஒட்டியதாக சுதந்திரதின நிகழ்வினை முக்கியமாக மாகாண மட்டத்திலே இணைப்பான ஒரு விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே நேரம், இலங்கையின் 75ஆவது சுதந்திரதினத்துக்கு முன்னதாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இனம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவேன் என தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதான விம்பம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் உண்மையிலேயே ஜனாதிபதி ரணில் தீர்வு வழங்குவாரா..? அல்லது முன்பு கிடைத்த அதே ஏமாற்றம் தான் இப்போதும் தமிழ் தரப்புக்கு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பாரக்க வேண்டும்.