02

02

15 வயது பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் – விஞ்ஞான பாட ஆசிரியர் கைது !

பன்னல பிரதேசத்தில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பன்னல காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரான ஆசிரியர் குளியாபிட்டிய நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவரை டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாபிட்டிய நீதிவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தங்கொட்டுவ, வென்னப்புவ மற்றும் மாகந்துர பிரதேசங்களில் விஞ்ஞானம் பாடம் கற்பிக்கும் 24 வயதுடைய குறித்த ஆசிரியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான காவல்துறையின் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரான ஆசிரியர் குளியாபிட்டிய நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவரை டிசம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குளியாபிட்டிய நீதிவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தங்கொட்டுவ, வென்னப்புவ மற்றும் மாகந்துர பிரதேசங்களில் விஞ்ஞானம் பாடம் கற்பிக்கும் 24 வயதுடைய குறித்த ஆசிரியரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சீனாவுடனான விவசாய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகம் !

சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்டம் அமையலாம் என கருதுவதால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இதற்கு உடன்பட மறுத்துள்ளது.

இதேவேளை, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தமைக்காக மாணவர் சங்கம் தமது உபவேந்தருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.

பெண் காவல்துறை உத்தியோகத்தரை பாலியல் வன்புணர்வு செய்த இராணுவ வீரர் கைது !

மாவனெல்ல காவல் நிலையத்தில் பெண் காவல்துறை உத்தியோகத்தரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உஸ்ஸாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் இராணுவ வீரர் என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

காவல் நிலையத்திற்கு வந்த இருவர் தன்னிடம் பல ஆபாச வார்த்தைகளை கூறி பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் தன்னைப் பற்றி மற்றவரிடம் மிகவும் கேவலமான முறையில் பேசிக் கொண்டிருந்ததாகவும் குறித்த பெண் முறைப்பாட்டில் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் மாவனெல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளார்.

“கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும்.” – இரா.சாணக்கியன்

“நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டா கோ கம போராட்டத்தை ஆரம்பிப்பதை போன்று கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘வனத்துறை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயற்பாடுகளினால் வடக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் உரையாற்றி இதுவரை பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவர் இவ்விடயத்தில் எம்முடன் இணங்குவார் என எதிர்பார்க்கிறோம்.

மட்டக்களப்பு மாவட்டம், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் யானை மோதல் தாக்குதலினால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை, வவுனத்தீவு, செங்கலடி மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்படுகிறார்கள், விளை நிலங்களுக்கு யானைகள் உட்புகுந்து பயிர்களை நாசம் செய்து, மக்களின் குடியிறுப்புக்களில் புகுந்து வீடுகளையும் உடைத்தெறிகிறது.

வனஜீவராசிகள் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கை திட்டம் வகுக்கப்பட வேண்டும். வனஜீவராசிகள் அதிகாரிகள் மற்றும் வன சேவையாளர்களுக்கு வனவளத்துறை தொடர்பான தொழினுட்ப ரீதியான பயிற்சி வழங்கப்பட வேண்டும். பல ஆண்டு காலமபாக வனவளத்துறையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. வனவள அதிகாரிகளின் சேவை முழுமையாக செயற்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்கள் பாரம்பரியமாக விவசாயம் காணிகளுகளை வனவளத்துறையினர் ஆக்கிரமித்து விவசாய நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளார்கள் ஆனால் மறுபுறம் மட்டக்களப்பு வாகரை பகுதியில் வனவளத்துறை திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளில் மண்நிரப்பி மண்மேடு உருவாக்கப்பட்டுள்ளது.

வனவளத்தறை இருவேறுப்பட்ட சட்டங்களை செயற்படுத்துகிறது. மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான மயிலன்தலை மேய்ச்சல் நிலப்பகுதியில் கிழக்கு மாகாண ஆளுநர் பிற மாகாணங்களில் இருந்து வந்தவர்களை குடிமயமர்த்தியுள்ளார்.

நாட்டில் மோசடி நிறைந்த அமைச்சராக சுற்றாடல் துறை அமைச்சு காணப்படுகிறது. புவிசரிதவியல் மற்றும் சுரங்க திணைக்களத்தின் தற்காலிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளவருக்கு எதிராக திணைக்களத்தின் அதிகாரிகள் குற்றச்சாட்டுள்ளார்கள். நாட்டின் மண்வளத்தை பாதுகாக்க வேண்டிய இந்த தலைவர் மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

சூழல் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி பெருமிதமாக குறிப்பிடுகிறார். ஆனால் புவிசரிதவியல் திணைக்களம் சூழல் பாதிப்புக்கு பிரதான நிறுவனமாக காணப்படுகிறது. ஆகவே புவிசரிதவியல் மற்றும் சுரங்க திணைக்களத்தின் தலைவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். 15 நாட்களுக்கு காலவகாசம் வழங்குவேன். 15 நாட்களுக்குள் பதவி நீக்காவிடின் சுற்றுச் சூழல் தொடர்பில் சர்வதேச ஊடக சந்திப்பை நடத்துவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மையங்களை அடையாளப்படுத்துமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் கிழக்கு மாகாணத்திற்கு சுற்றுலா பயணிகள் எவரும் வருகை தரவில்லை.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பினரை மாத்திரம் இணைத்துக் கொள்ளாமல் எம்மையும், ஜனாதிபதி இணைத்துக் கொண்டால் உண்மை விபரங்களை அவருக்கு தெரிவிப்போம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக கடன் மறுசீரமைப்பு குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் ஊழியர்மட்ட பேச்சுவார்த்தையை நிறைவு செய்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உரையில் குறிப்பிட்டேன். இது மிகவும் முக்கியமானது.

நான் இலங்கை மக்கள் சார்பாகவே சபையில் உரையாற்றினேன். ஆனால் இலங்கையில் உள்ள சீன தூதரகம் இவ்விடயத்தில் எனது டுவிட்டர் கணக்கை இணைத்து டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளது.

20 ரில்லியன் வெளிநாட்டு கையிருப்பை சீனா கொண்டுள்ளது. பொருளாதாரத்தில் சீனா முன்னிலையில் உள்ளது. 7.4 பில்லியன் டொலர்களை இலங்கை சீனாவிற்கு கடனாக வழங்க வேண்டும். 22 மில்லியன் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டேன்.

20 ரில்லியன் வெளிநாட்டு கையிருப்பை கொண்டுள்ள சீனா இலங்கையின் உண்மையான நண்பனாயின் எரிபொருள், மற்றும் உணவு பொருட்களை வழங்குவதை விடுத்த சீனா இலங்கைக்கு கடன் மறுசீரமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும், அதுவே உண்மையான ஒத்துழைப்பாகும்.

22 மில்லியன் இலங்கை மக்கள் இனம், மதம் என்ற அடிப்படையில் வேறுப்பட்டு இருக்கலாம், ஆனால் நாடு எனும் போது ஒன்றிணைந்து செயற்படுவார்கள். பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்ந்து கடன் வழங்கி இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளியள்ளது.

நாட்டை பாதுகாக்க இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோட்டா கோ கம போராட்டத்தை ஆரம்பிப்பதை போன்று கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் சீனா இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்காவிடின் கோ ஹோம் சைனா போராட்டத்ததை ஆரம்பிக்க நேரிடும்.

அதற்கு நாங்கள் தலைமைத்துவம் வழங்குவோம் என்பதை சீன அரசாங்கத்திற்கும், இலங்கையில் உள்ள சீன தூதரகத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட ஊழியர்களுக்காக 1480 மில்லியன் ரூபாய்க்கு மேல் அள்ளிக் கொடுத்த முன்னாள் ஜனாதிபதிகள் – அதிலும் மைத்திரிபால சிறீசேனா முன்னிலையில் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட ஊழியர்களுக்காக ஜனாதிபதி ஒதுக்கீட்டில் 43 வீதத்தையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 57 வீதத்தை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

அந்தத் தகவல்களின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரை 630 மில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளதுடன், 2 ஆயிரத்து 578 தனியார் ஊழியர்களைப் பணிக்கமர்த்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆயிரத்து 317 தனிப்பட்ட ஊழியர்களைக் கொண்டிருந்ததுடன், 2015 முதல் 2019 வரை 850 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து பதவியேற்ற இரண்டு ஜனாதிபதிகளும் தமது தனிப்பட்ட ஊழியர்களை பராமரிப்பதற்காக 1480 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி செயலகம் வழங்கிய தகவலில் தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிக செலவில் தனியார் ஊழியர்களை பராமரிப்பதில் முன்னோடிகளை மிஞ்சியுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாற்றுக் கொள்கை மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளர் லயனல் குருகே 2019ஆம் ஆண்டு உரிய தகவல்களை கோரியிருந்த போதிலும் ஜனாதிபதி செயலகம் அதனை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி செயலகத்தின் தீர்மானத்திற்கு எதிரான மேன்முறையீட்டை பரிசீலித்த தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில், 2022 நவம்பர் 14 ஆம் திகதி இது தொடர்பான தகவல்களை வெளியிட அதிகாரிகள் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

“என் தந்தை அமெரிக்காவால் கொல்லப்பட்ட போது நான் அழவில்லை.” பின்லேடனின் மகன் !

அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் திகதியன்று, அந்த நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையம் மீதும் பின்லேடன் ஆதரவு அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதிபயங்கர தாக்குதல்களை அரங்கேற்றினர். 3 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

 

சரியாக 10 ஆண்டுகள் கழித்து, இந்த பின்லேடன், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, 2011-ம் ஆண்டு, மே மாதம் 2-ந்திகதி, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த பின்லேடனின் 4-வது மகன் உமர் பின்லேடன் (வயது 41) ஆவார்.

இவர் ஓவியர், எழுத்தாளர், கலாசார தூதர், தொழில் அதிபர் என பல முகங்களைக் கொண்டவர் ஆவார். இவர் பின்லேடனின் முதல் மனைவி நஜ்வாவுக்கு 1981-ம் ஆண்டு, மார்ச் மாதம் பிறந்தவர் ஆவார். இவர், இங்கிலாந்தைச் சேர்ந்த தனது மனைவி ஜேன் என்ற ஜைனா பின்லேடனுடன் பிரான்சில் உள்ள நார்மண்டி என்ற இடத்தில் வசிக்கிறார். உமர் பின்லேடன் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி சன்’ பத்திரிகையில் சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நான் ஆப்கானிஸ்தானில் உள்ள தோரா போராவில் குழந்தைப் பருவத்தைக் கழித்தேன். அங்கு எனது செல்ல நாய்கள் ரசாயன ஆயுதங்களை சோதிக்க பயன்படுத்தப்பட்டன. என் தந்தையின் உதவியாளர்கள் அந்த சோதனையில் ஈடுபட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு அது மகிழ்ச்சியைத் தரவில்லை. எனக்கு பயங்கரவாத பயிற்சி முகாம்களில் ஏ.கே.47 துப்பாக்கியால் சுடுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நான் பயங்கரவாதி ஆக வேண்டும் என்றுதான் அப்பா விரும்பினார். நான் என்னால் முடிந்த அளவு, அந்த மோசமான தருணங்களை மறக்கத்தான் விரும்புகிறேன். நான் 2001 ஏப்ரல் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி விட்டேன். கடைசியாக நான் அப்பாவிடம் பேசியது, அவரிடம் விடைபெற்றபோது ‘குட்பை’ சொன்னதுதான். அவரும் எனக்கு ‘குட்பை’ சொன்னார். எனக்கு அந்த உலகம் போதும். நான் அங்கிருந்து வெளியேறியதில் அப்பா மகிழ்ச்சி அடையவில்லை. அதன்பின்னர்  நான் அப்பாவிடம் பேசியதே இல்லை. என் அப்பா கொல்லப்பட்டபோது நான் அழவில்லை. எல்லாமே முடிந்து விட்டது.

நான் இனியும் கஷ்டப்பட விரும்பவில்லை. என்னையும் தவறாக நினைத்து விட்டார்கள். மக்கள் இன்னும் என்னை நியாயம் தீர்த்து வருகிறார்கள். என் அப்பாவை அடக்கம் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவரது உடல் எங்கே இருக்கிறது என்றாவது தெரிந்துகொண்டிருக்க முடியும். ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் எங்களுக்கு தரவில்லை.

அவருக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பது எனக்கு தெரியாது. அவரை அவர்கள் கடலில் வீசி விட்டதாக சொன்னார்கள். ஆனால் நான் அதை நம்பவில்லை. அவரது உடலை மக்கள் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு எடுத்துச்சென்று விட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் – விசாரணைக்காக விசேட குழு நியமனம் !

ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கான அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்ய 6 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 39(3) வது பிரிவின்படி குறித்த குழுவை நியமித்துள்ளார்.

இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சின் செயலாளர் கிங்ஸ்லி பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற பிரதி பொலிஸ் மா அதிபர் சுதத் நாகஹமுல்ல, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ், முன்னாள் கிரிக்கட் வீரர் நளின் டி அல்விஸ் மற்றும் சட்டத்தரணி ஷலனி ரோஷனா ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக செயற்படவுள்ளனர்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி !

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் கண்ணிவெடி அகற்றும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 6 இலட்சத்து 48 ஆயிரத்து 148 அமெரிக்க டொலர்களை சுரங்க ஆலோசனைக் குழு (MAG) வழங்கியுள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம், ஜப்பானின் தூதுவர் Mizukoshi Hideaki மற்றும் சுரங்க ஆலோசனைக் குழுவின் இலங்கைக்கான பணிப்பாளர் Cristy McLennan ஆகியோருக்கு இடையில் மானிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜப்பானின் உதவியுடன் சுரங்க ஆலோசனைக் குழுவால் அமுல்படுத்தப்பட்ட 14ஆவது கண்ணிவெடி அகற்றும் திட்டம் இதுவென ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய திட்டமானது மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலதிகமாக 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றவுள்ளது.

குறித்த அகழ்வாராய்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களாக மாற்றுவதுடன், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, முந்தைய 13 திட்டங்கள் 15 ஆயிரத்து 831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகளை அகற்றியுள்ளன என்றும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தை விட்டு 14000க்கும் அதிகமானோர் சட்டவிரோதமாக தப்பிச்சென்றுள்ளனர் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து சிலர் கருத்து தெரிவிக்கிறனர். ஆனால் அவர்களின் கருத்துப்படி, பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை எந்த அடிப்படையும் இல்லாமல் குறைக்க முடியாது. மேலும் சில அறிவியல் ஆய்வுகளின் பின்னர் இராணுவத்தை சரியான மட்டத்தில் முன்னெடுப்பது தான் நாட்டிற்கு ஏற்றது என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் கூறினார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த, செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், பாதுகாப்பு மூலோபாய திட்டங்களின் கீழ், நாட்டுக்கு ஏற்ற வகையில் இராணுவத்தை மாற்றியமைக்க வேண்டும். நாட்டின் முப்படைகளையும் தற்போதைய நிலைக்கு ஏற்ற வகையில் தயார்படுத்துவதற்கு இது வசதியாக அமையும் என நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

தற்போதைய மற்றும் எதிர்கால சவால்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு ஏற்ற வகையில் இந்த நாட்டின் முப்படைகளையும் தயார்படுத்த எதிர்பார்க்கின்றோம். ஒவ்வொரு தனிப்பட்ட அமைப்புக்கள் அல்லது தனிநபர்களின் தேவைக்கு ஏற்ற விதத்தில் இராணுவத்தை குறைக்கும் எந்தவித அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் அவர் கூறினார். தற்போது இராணுவம் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது, அதன்படி, நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய இராணுவத்தினருக்கு பொது மன்னிப்புக் காலத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இது முதன்முறையாக வழங்கப்படும் பொது மன்னிப்பு காலமாக இல்லாவிடினும், வெளிநாடு சென்றுள்ள இராணுவப்படை உறுப்பினர்களுக்கும் இப்பொது மன்னிப்பை பெற்றுக் கொள்ளவும் அல்லது அவர்களுக்கு வர முடியாவிட்டால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உரிய ஆவணங்களை கையளித்து பொதுமன்னிப்பை பெற்றுக் கொள்ள முடியுமான வாய்ப்பை இராணுவம் முதன்முறையாக வழங்கியுள்ளது.

இதன்படி, இம்மாதம் 29ஆம் திகதி வரையில் 14,127 பேர் சட்டவிரோதமாக தப்பிச் சென்றுள்ளனர் என்று ஆயுதப்படையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது மன்னிப்பின் கீழ் அவர்கள் சுதந்திரமாக சேவையை விட்டுச் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் நலனுக்காக போர் வீரர்களுக்கான நலன்புரி பிரிவை நிறுவி அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கான நலன்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியாவில் இரட்டை கொலைவழக்கு – எதிராளிக்கு மரண தண்டனை – நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட நகைகளை களவாடிய அதிகாரி !

வவுனியா, ஓமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2012.01.19 ஆம் திகதி கணவன் மனைவி இருவரையும் வெட்டிக்கொலை செய்த வழக்கில் வவுனியா மகாறம்பைக்குளத்தைச் சேர்ந்த எதிரிக்கு இரட்டை மரண தண்டனையும் கொல்லப்பட்டவர்களின் நகைகளைக் கொள்ளையடித்தமைக்கு 20 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் தங்க ஆபரணங்களைக் கொள்ளையடித்த குற்றத்திற்கு எதிரிக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முதலாம் எதிரியின் சகோதரராகிய இரண்டாம் எதிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வியாழனன்று வழங்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் எதிரிகள் கைது செய்யப்பட்டு முதலாம் எதிரியின் உடைமையில் இருந்து, கொலை செய்யப்பட்டவர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் தொலைபேசிகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.

முதலாம் எதிரி கொலையுண்டவர்களின் வீட்டில் வேலை செய்து வந்தவராவார். இறந்துபோன கணவருடன் இறுதியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்திற்கு வருமாறு எதிரி அழைத்ததை அடுத்து, அங்கு சென்றபோதே கணவன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் வீட்டில் வைத்து அவரது மனைவி கொலை செய்யப்பட்டார்.

கொல்லப்பட்டவர்களின் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. துண்டாடப்பட்ட விரல்கள் சடலங்களின் அருகில் கண்டுபிடிக்கப்பட்டன. கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட கோடரி கிணற்றில் இருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது. கத்தி சடலத்தின் அருகில் இருந்து எடுக்கப்பட்டது.

கொலையுண்ட கணவனுடன் எதிரி இறுதியாகத் தொலைபேசியில் கதைத்தது தொடர்பில் வவுனியா நீதவான் நீதிமன்ற நீதவானின் விசேட கட்டளையின்பேரில் டயலொக் நிறுவன அறிக்கை பெறப்பட்டு அதன் மூலம் அந்த அழைப்பை ஓமந்தை தொலைதொடர்பு கோபுரப் பிரதேசத்தில் முதலாம் எதிரியே ஏற்படுத்தினார் என்பதும் பொலிஸ் புலன் விசாரணையில் கண்டறியப்பட்டு இந்தக் கொலைகள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்ததாக ஓமந்தை பொலிஸ் நிலையப் புலனாய்வு பொறுப்பதிகாரி நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.

இறந்தவர்களின் மகள், எதிரியின் உடைமையில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் தனது தாய்தந்தையரின் நகைகள் என பொலிஸ் நிலையத்தில் வைத்து அடையாளம் காட்டி சாட்சியளித்ததாகவும், வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த நகைகள் பின்னர் நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளரினால் களவாடப்பட்டு அவர் தற்சமயம் தலைமறைவாகி இருப்பதாகவும் வவுனியா நீதிமன்றப் பதிவாளர் மன்றில் சாட்சியமளித்தார்.

இறந்தவர்களின் உடல்களில் கொடூரமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும், இரு சடலங்களிலும் விரல்கள் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும், மொட்டையான ஆயுதத்தினால் தலையில் தாக்கப்பட்ட நிலையில் இருவரும் மரணமடைந்ததாகவும் மருத்துவப் பிரசோதனை செய்த வைத்திய நிபுணர் வைத்தியரத்ன அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்த விடயங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இரட்டைக் கொலை மற்றும் நகைகளைக் கொள்ளையடித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு முதலாம் எதிரியே குற்றவாளி என அறிவித்தார்.

அத்துடன் இரண்டு கொலைகளுக்கும் முதலாம் எதிரிக்கு இரட்டை மரண தண்டனையும் கொல்லப்பட்டவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்தி நகைகளைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டிற்கு தலா 20 ஆண்டுகள் வீதம் 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிக்குத் தண்டனை விதித்தபோது மன்றில் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.