24

24

வடக்கில் தொடரும் தற்கொலைகள் – வவுனியா – செட்டிக்குளம்பகுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.!

அண்மைக்காலங்களில் தமிழர் பகுதிகளில் தற்கொலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. காதல்தோல்வி, நுண்கடன் பிரச்சினை, கல்வியில் பின்னடைவு, குடும்பப்பிரச்சினை என ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த தற்கொலைகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் வவுனியா – செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இரவு வீட்டில் தூங்கச்சென்ற குறித்த நபர் அறைக்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

காலை எழுந்திருந்த மனைவி தனது கணவன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார். அதனையடுத்து, பொலிஸாருக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டு சடலம் மீட்கப்பட்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த சு.நாகேந்திரன் (வயது-34) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரஜை ஒருவரின் முறைப்பாட்டை தீர்த்து வைக்க வீடமைப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் விஜயம் !

வீடமைப்பு அதிகார சபையின் கீழ் உள்ள நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திடீர் கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

சேவை பெறுநர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய ஜனாதிபதி நேற்று (23.09.2020) பிற்பகல் இவ் அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சேவை ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பல தடவைகள் வருகை தந்தபோதும் அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என்பதுடன், போதுமானளவு பணிக்குழாமினர் இல்லை எனக் கூறி அச்சேவை நிறைவேற்றப்படவில்லை என முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்தார்.

அலுவலகத்தை கண்காணித்த ஜனாதிபதி போதுமானளவு ஊழியர்கள் இருப்பதை கண்டறிந்தார்.

அங்கு சேவை பெற்றுக்கொள்வதற்கு வருகை தந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்ததைக் கண்ட ஜனாதிபதி அவரது தேவை மற்றும் விபரங்களை கேட்டறிந்தார்.

ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்
மக்கள் தேவைகளை வினைத்திறனாகவும் குறைவின்றியும் நிறைவேற்றுவது அரச ஊழியர்களின் அடிப்படை பொறுப்பாகுமென ஜனாதிபதி பணிக்குழாமினரிடம் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி.விக்கினேஸ்வரன் நன்றி தெரிவித்து கடிதம்!

இலங்கை அரசினுடைய கடுமையான போக்கு தொடர்பாக ஜெனீவாவில் பேசியிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் அவர்களுக்கு  தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் நன்றிகளையும் பாராட்டுக்கயைளும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில், “2020 செப்ரெம்பர் 14ஆம் திகதி உங்களால் வெளியிடப்பட்ட கருத்துரைக்கு இலங்கை என்ற தீபகற்பத்தின் தமிழ் மக்கள் தங்களது மனமார்ந்த நன்றியையும் வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

இலங்கை அரசாங்கத்தினுடைய கவலைதரும் போக்கினை நீங்கள் அறிந்துள்ளமை எமக்கு மகிழ்வைத் தருகின்றது. அதாவது, அதிகார நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பேணாதிருத்தல், குடியியல் பதவிகளுக்கு இராணுவத்தினரை நியமித்தல், போர்க்குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்றவற்றினோடு தொடர்பிருக்கும் அலுவலர்களின் குற்ற ஆராய்வு சம்பந்தமாக பொறுப்புக் கூறல் அற்ற நிலை போன்றவை அவையாகும்.

மேற்கூறிய, அரசியல் ரீதியான குறைபாடுகளை வெளிக்கொண்டு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதை தமிழ் மக்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றார்கள். இது தனிப்பட்ட ஒரு ஜனாதிபதிக்கு அப்பால் தொடர்ந்து வந்த நிர்வாக அலகுகளின் செயற்பாடுகள் தங்களால் குறிப்பிடப்பட்ட பண்பியல்புகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.

இவை, இலங்கையின் இதுவரை கால அரசாங்க முறைமையின் குறைபாடுகளாகும். இந்த நாட்டினுடைய அரசியல் ரீதியான தத்துவார்த்த வெளிப்பாடுகள் இவை. இப்பிராந்தியத்தின் சமாதானத்திற்கும் நிரந்தர அபிவிருத்திக்கும் நீங்கள் கூறுவதுபோல் இவை பாதிப்பாக அமையக்கூடும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும், சர்வதேச வழிமுறைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அமைய சகலரும் நடந்துகொள்வதில்தான் உண்மையான நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் தமிழ் மக்களிடையே மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதற்கான முக்கிய அடிப்படைக் கருத்துருவாக்கம் ஐக்கிய நாடுகள் சாசனத்தின் முதலாவது உறுப்புரையில் இடம்பெற்றுள்ளது.அதாவது, சர்வதேச சமாதானமும் பாதுகாப்பும் வெவ்வேறு மனித குழுமங்களின் சம உரித்துக்களிலும் சுயநிர்ணயத்திலும் பிரிக்க முடியாதவாறு தங்கியிருக்கின்றன என்பதே அதுவாகும்.

மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை மீதான பார்வை சர்வதேச சமூகங்களுக்கு மீண்டும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக் காட்டுகின்றது. இதனை அடைய எடுக்கப்படும் சகல முயற்சிகளுக்கும் தமிழ் மக்கள் உற்ற துணையாக இருப்பார்கள் என்பதை உங்களுக்கு சொல்லி வைக்கின்றேன். அதிமேதகு தங்களுக்கு என்னுடைய நன்றிகள் உரித்தாகுக” என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் இரண்டாவது நாளாகவும் போராட்டம்!

வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் மற்றும் களனி பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகள் சங்கம் ஆகியன ஆரம்பித்த போராட்டம் இன்று (24) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

அரச தொழில் வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாகவே வேலையற்ற பட்டதாரிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று (23) கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி அங்கிருந்து அவர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகத்தை அண்மித்து செல்லும் போது பொலிஸார் தடையேற்படுத்தினர்.

தொலைபேசி ஊரையாடலின் போது உரிய தீர்வு கிடைக்காதமையால் அவர்கள் மீண்டும் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்தனர்.

கடந்த மார்ச் மாதம் தமக்கு புதிய வேலைகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் புதிய அரசாங்கத்தின் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களின் நியமனங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

பதில் கிடைக்கும் வரை அவர்கள் ஜனாதிபதி செயலகத்தை அணிமித்து நின்றிருந்தவேளை, எதிர்ப்பில் ஈடுபட்டவர்களில் பிரதிநிதிகள் 8 பேருக்கு ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் கிடைத்தது.

எவ்வாறாயினும், குறித்த அறிவிப்பு எழுத்து மூலம் வேண்டுமென கோரிய அவர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து மீண்டும் கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக வந்து எதிர்ப்பை தொடர்ந்தனர்.