09

09

“2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் ” – ஜப்பான் உறுதி.

இந்த ஆண்டு சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகினுடைய 200க்கும் மேற்பட்ட நாடுகளை வாட்டி வருகின்ற நிலையில் 2020,2021 ஆகிய வருடங்களில்  நடைபெறவிருந்த உலககூட்டத்தொடர்கள், விளாயாட்டுப்போட்டிகள் என்பன ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2021-ம் ஆண்டு கொரோனா இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என ஒலிம்பிக்கிற்கான ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், கடந்த ஜூலை மாதம் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. இதற்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு செலவிட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஓராண்டுக்கு இப்போட்டி தள்ளி வைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜூலை 23 ம் தேதி போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டோக்‍கியோவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஒலிம்பிக்கிற்கான அமைச்சர் ஹஷிமோடோ, கொரோனா இருந்தாலும், இல்லையென்றாலும் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்காக அனைவரும் இணைந்து செயல்படுவதாகவும், விளையாட்டு வீரர்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் அரசு, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது, விளையாட்டு வீரர்கள் கிராமத்தில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்களை சமாளிப்பது உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் கவனித்து வருவதாக ஹஷிமோடோ தெரிவித்துள்ளார்.

9 லட்சத்தை கடந்தது கொரோனா உயிர்ப்பலி ! – அமெரிக்காவில் உயிரிழப்பு 1,94,011.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 1 கோடியே 98 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 9 லட்சத்து 843 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 1,94,011
பிரேசில் – 1,27,517
இந்தியா – 71,642
மெக்சிகோ – 67,781
இங்கிலாந்து – 41,586
இத்தாலி – 35,563
பிரான்ஸ் – 30,764
ஸ்பெயின் – 29,594
பெரு – 29,976
ஈரான் – 22,542
கொலம்பியா – 21,817

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தம் ! – பரிசோதனை செய்யப்பட்ட நபருக்கு விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக் குறைவு. – ஏமாற்றத்தில் உலகம்.

பிரிட்டனின் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசியின் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதே இதற்கு காரணம்.

“விவரிக்க முடியாத அளவிற்கான உடல்நலக் குறைவு” ஏற்பட்டதால் பரிசோதனை நிறுத்திவைக்கப்பட்டதாக ஆஸ்ட்ராசெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனை முன்னேற்றங்களை உலகம் கூர்ந்து கவனித்துவரும் நிலையில், ஆஸ்ட்ராசெனிகா மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த இந்த தடுப்பூசி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், சந்தைக்கு வரக்கூடிய முதல் கொரோனா தடுப்பூசி இதுவாக இருக்கலாம் என கருதப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கப்பட்டதில், அமெரிக்காவில் சுமார் 30,000 பேர், அதோடு பிரிட்டன், பிரேசில், மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும் மக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை என்பது பொதுவாக பல ஆண்டு காலம் ஆயிரக்கணக்கான பேர் மீது செய்யப்படும்.

சர்வதேச அளவில் இந்த தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை மீண்டும் தொடங்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதற்கு முன்னால், தனிப்பட்ட விசாரணை மூலம் இது தொடர்பான பாதுகாப்பு தரவுகள் ஆய்வு செய்யப்படும்.

“பெரிய அளவில் பரிசோதனை நடத்தப்படும்போது, தற்செயலாக இவ்வாறு உடல்நலக்குறைவு ஏற்படலாம். ஆனால், அதனை கவனமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்ய வேண்டும்” என்று ஒக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

பெரிய அளவில் பரிசோதனை செய்யப்படும் போது இது நடக்கக்கூடிய ஒன்றுதான் என்றும், பரிசோதனை செய்யப்படும் நபருக்கு உடனடியாக எந்த உடல்நலக்குறைவு ஏற்படாமல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது எந்நேரத்திலும் நடக்கலாம்.

எனினும் இன்னும் சில நாட்களில் பரிசோதனை மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை முதல்முறையாக வெளியிட்ட ஸ்டாட் நியூஸ் என்ற சுகாதார வலைதளம் கூறுகையில், தடுப்பூசி செலுத்தப்பட்ட பிரிட்டன் நபர் ஒருவருக்கு பாதகமான விளைவு எப்படி ஏற்பட்டது என்று உடனடியாக தெரியவரவில்லை என்றும், ஆனால் அவர் அதில் இருந்து மீண்டு வருவார் என்று தகவல்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டது.

நவம்பர் மூன்றாம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பு தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் கூறுகிறார். ஆனால், அரசியலுக்காக அவசர அவசரமாக தடுப்பூசி கண்டுபிடிப்பது என்ற விஷயம் பல தரப்பினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவுக்கான தடுப்பூசி தயாரிப்பதில் அறிவியல்பூர்வமான தரநிலை மற்றும் நெறிமுறைகள் கடைபிடிப்போம் என “வரலாற்று உறுதிமொழி” ஒன்றை ஒன்பது தடுப்பூசி தயாரிப்பாளர்கள் குழுவினர் செவ்வாய்கிழமை அன்று எடுத்துள்ளனர்.

இதில் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனமும் ஒன்று.

மூன்று கட்ட முறையான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே ஒழுங்காற்று ஆணையத்தின் அனுமதிக்காக விண்ணப்பிக்கப்படும் என்ற உறுதிமொழியை அந்நிறுவனம் எடுத்துள்ளது.

ஜான்சன் அண்ட் ஜான்சன், பையோ என் டெக், கிளாக்ஸோஸ்மித் க்ளைன், Pfizer, மெர்க், மாடர்னா, சனோஃபி, மற்றம் நோவாநாக்ஸ் நிறுவனங்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

“தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் நபர்களின் பாதுகாப்புக்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றுள்ளனர்.

உலகளவில் சுமார் 180 தடுப்பூசி தயாரிப்பாளர்கள், தங்கள் தடுப்பூசியை பரிசோதனை செய்துவருவதாகவும், ஆனால், இதில் யாரும் இன்னும் மருத்துவ பரிசோதனை கட்டத்தை முடிக்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

தடுப்பூசியை பாதுகாப்பாக பரிசோதிக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், செயல்திறன் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல் அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு தடுப்பூசி இந்தாண்டு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்நிலையில், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்த தொடங்கிவிட்டன. ஆனால், இந்த தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனை நிலையில் இருப்பதாகவே உலக சுகாதார நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

மறுபக்கம், மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை முடிக்கும் முன்பே கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான அனுமதி வழங்கலாம் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

மேலும், நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பதால், ஒரு சில நெறிமுறைகளை தளர்த்துமாறு அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பல மாகாணங்களை வலியுறுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்னால் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று அதிபர் டிரம்ப் கூறிவந்தாலும், விஞ்ஞானிகளின் பேச்சை கேட்டு, வெளிப்படையான முறையில் இதுகுறித்து டிரம்ப் செயல்படுவாரா என எதிர்முனையில் இருக்கும் ஜோ பைடன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

“மாடறுப்பது தொடர்பில் பிரதமர் யோசனை முன்வைத்தாலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை“ – மஸ்தான்

இறைச்சிக்காக மாடறுப்பதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் நேற்று நடைபெற்ற ஆளும் தரப்பு கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டதாக ஆளும் தரப்பு எம்.பிக்கள் பலரும் தெரிவித்தனர். ஆளும் தரப்பு பாராளுமன்ற குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையில் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.  இதன் போது 20 திருத்தம் நாட்டின் தற்போதைய பொருளாதார சமூக நிலைமைகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வினவிய போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 20 ஆவது திருத்தம்,13 ஆவது திருத்தம் மற்றும் இறைச்சிக்காக மாடறுப்பதை தடைசெய்தல் என்பன குறித்து பேசப்பட்டதாக குறிப்பிட்டார்.இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் பிரதமர் யோசனை முன்வைத்துள்ளார்.

ஆளும் தரப்பு பாராளுமன்ற கூட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த காதர் மஸ்தான் எம்.பி, இறைச்சிக்காக மாடறுப்பது தொடர்பில் பிரதமர் யோசனை முன்வைத்தாலும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. யாரும் யோசனை முன்வைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமக, கூறுகையில்,

இறைச்சிக்காக மாடறுக்கும் யோசனை பிரதமர் முன்வைத்தார். இதற்கு வரவேற்புள்ளது. உள்நாட்டில் பால் உற்பத்தியை மேம்படுத்தி தன்னிறைவு காண திட்டமிடப்பட்டுள்ளது. இறைச்சிக்காக காளை மாடுகள் அறுக்கப்படுவதால் அவற்றின் தட்டுப்பாடுள்ளது என்றார்.

இதேவேளை 13 ஆவது திருத்தத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் இங்கு கருத்து முன்வைக்கப்பட்டதாக அறிய வருகிறது.

20ஆவது திருத்தமானது, நாட்டு மக்கள் மீதான தாக்குதல் – 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை !

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ள பின்னணியில், 19 பிளஸ் என்ற திருத்தத்தை மேற்கொள்ள பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பத்திரிகை நிறுவனங்களின் பிரதானிகளை எதிர்கட்சி அலுவலகத்தில் நேற்று (08.09.2020) சந்தித்து கலந்துரையாடிய போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமூலத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய அவர், அதற்கு பதிலாக தாம் 19 பிளஸ் என்ற திருத்த வரைவை தயாரிக்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் 19 ஆவது திருத்தத்திலுள்ள முக்கிய விடயங்களை பாதுகாத்து 19 பிளஸ் உருவாக்கப்படவுள்ளதாகவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

19 பிளஸ் சட்ட திருத்தத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் காணப்படுகின்ற மிக மோசமான விடயங்கள் திருத்தி அமைக்கப்பட்டு, ஜனநாயகத்தை நிலைநிறுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட 19ஆவது திருத்தத்தை இல்லாது செய்து, அதற்கு பதிலாக சர்வதிகாரம் கொண்ட திருத்தமொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் முயற்சி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி, 19ஆவது திருத்தத்திலுள்ள ஊழல் ஒழிப்பு விடயங்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள், சிறந்த அரச நிர்வாக முறைமை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தற்போது பாதுகாக்கப்பட வேண்டியவை எனவும் அவர் கூறியிருந்தார்.

அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள 20ஆவது திருத்தமானது, நாட்டு மக்கள் மீதான தாக்குதல் எனவும் சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

19 பிளஸ் அரசியல் தலையீடுகள் இருக்காத வகையிலும், தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் தயாரிக்கப்படவுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்துடன், இந்த விடயத்திற்கு தாம் நாட்டிலுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பியிருந்தனர்.

13ஆவது திருத்தம் காட்டாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், அதிலுள்ள மாகாண சபை முறை தற்போதுள்ளதை விடவும் வலுப்படுத்தப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறினார்.

நாட்டில் தற்போதுள்ள மாகாண சபை முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதாகவும், அதனை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், புதிய அரசியலமைப்பில் 13ஆவது திருத்தத்திலுள்ள விடயங்களில் எவ்வாறான மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன என்பது தொடர்பிலான வரைவு வெளியானதை அடுத்தே, அது தொடர்பிலான மேலதிக விபரங்களை தம்மால் கூற முடியும் எனவும் அவர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், 13ஆவது திருத்தத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பிலான தமது நிலைபாட்டில் எந்தவித மாற்றமும் கிடையாது என சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தார்.

அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் ! – உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்றல்ல. அடுத்து வரும் வைரஸ் பெருந்தொற்றை சமாளிக்க உலகம் தற்போதை விட சிறப்பாக தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளபோதும் உலகம் முழுவதும் 02 கோடியே 70 இலட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் பல இலட்சத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் ஆதனாம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்,’இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்றல்ல.

பெருந்தொற்றும், சமூகப்பரவலும் வாழ்க்கையில் உண்மையானவை என்பதை வரலாறு நமக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டுதான் உள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் நிலையை விட இன்னும் சிறப்பாக சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.

முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என்பதில் மாற்றமில்லை ! – ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் ரவூப் ஹக்கீம்

இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாகவும், தற்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த திங்கட்கிழமை (07.09.2020) மாலை சாட்சியம் அளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் ஸ்திரமற்றமையை உருவாக்க சஹ்ரான் உள்ளிட்ட வேறு ஒரு தரப்பினர் மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிடுவதாகவும், ஊடகங்கள் இல்லாத நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதனை தெரிவித்திருக்க முடியும் என்வும் ஹக்கீம் கூறினார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சாய்ந்தமருதில் உள்ள வீடொன்றில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சஹ்ரானின் சகோதரர் ரில்வான் ஹாசீமுடன் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காணப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் ஆணைக்குழு நேற்று (07) ஹக்கீமிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், தனது கட்சியில் உறுப்பினராக இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பார்க்க 2015 ஒகஸ்ட் 21 ஆம் திகதி மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு சென்ற போது, காயமடைந்த ரில்வான் ஹாசீமின் உடல் நிலை குறித்தும் விசாரித்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்கள் மூலம் காண்பிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

தான் அவ்வாறு சந்தித்தது சஹ்ரான் ஹாசீமின் சகோதரர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரே அறிந்துக்கொண்டதாகவும் தாக்குதலுக்கு முன்னர் ஒரு போதும் அவரை அறிந்திருக்கவில்லை எனவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.

இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழு, தனியார் செய்தியில் ஒளிபரப்பப்பட்ட, சஹ்ரான் ஹாசிமுடன், சிபிலி பாரூக் மற்றும் சாட்சியாளர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துரையாடிய வீடியோவை ஜனாதிபதி ஆணைக்குழு முன் வைத்தது.

அதற்கு பதிலளித்த ஹக்கீம், தேர்தல் காலத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் காத்தான்குடியில் உள்ள ´தேசிய தவூபிக் ஜமாத்´ அமைப்பின் பள்ளிவாசல் சேதமடைந்தாகவும் அதனை பார்வையிட அங்கு சென்றதாகவும் அவர் கூறினார்.

மேலும் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் குடும்பங்கள் வாழ்வதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றில் தெரிவித்த கருத்து குறித்து முன்னாள் அரச புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன முஸ்லிம் அமைச்சர்களை தெளிவுப்படுத்தினாரா? என ஆணைக்குழுவின் தலைவர் வினவினார்.

அவ்வாறு யாரும் தெளிவுப்படுத்தவில்லை என ஹக்கீம் பதிலளித்தார்.

புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்காமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களா? என ஆணைக்குழு வினவியதற்கு பதிலளித்த ஹக்கீம், அதற்கான பொறுப்பை தேசியமட்ட தலைவர்களுக்கு வழங்க போவதில்லை எனவும் புலனாய்வாளர்கள் தமக்கு கிடைக்கும் புலனாய்வு தகவல்களை உரியவாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என கூறினார்.

எவ்வாறாயினும் சஹ்ரான் உள்ளிட்ட குழுவுக்கு ஐ.எஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு இல்லை எனவும் ஹக்கீம் கூறினார்.

இதன்போது விசேட கேள்வி ஒன்றை தொடுத்த அரச சிரேஸ்ட சொலிட்டர் நாயகம், 2015 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதா? என வினவினார்.

இதற்கு பதிலளித்த ஹக்கீம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களுக்கான தனி ஒரு நிர்வாக மாவட்டமாக அமைய வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தாக கூறினார்.

2015 ஆம் ஆண்டு கொண்டிருந்த அதே நிலைப்பாட்டையா? இப்போதும் கொண்டுள்ளீர்கள்? என ஆணைக்குழுவின் தலைவர் ஹக்கீமிடம் வினவினார்.

இதற்கு பதிலளித்த ஹக்கீம், தனது பேச்சு மொழியிலேயே நிர்வாக நீதியான கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தால் சிறந்தது என்ற நிலைப்பாட்டிலேயே தற்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளதாகவும் ரவூப் ஹக்கீம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

“பெரும்பான்மை மக்களுடைய கருத்துக்கு அமைவாகவே 19வது திருத்தம் நீக்கப்படுகின்றது ” – கெஹலிய ரம்புக்வெல்ல

அரசியல் யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கவே மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்  என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டத் துறைச்சார்ந்தோர் இதற்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதற்கமைவாகவே இதற்கான திருத்த வரைவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கை மன்றக் கல்லூரிக்கு அமைச்சர் நேற்று (08) காலை விஜயம் செய்தார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், 19 ஆவது அரசியல் அமைப்பு நீக்கப்படும் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கம் தெரிவித்திருந்தது. இதற்காக மக்கள் வரலாற்றில் முதல் தடவையாக மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை சமகால அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளார்கள்.

இதனை துரிதமாக நிறைவேற்ற முடியாவிட்டால் அது மக்களுக்கு எதிரான துரோகச் செயலாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

“புலிகள் இழைத்த தவறுகளைப் பற்றி கூறுகிறீர்களே தவிர அரசாங்கமும் அரச படைகளும் இழைத்த தவறுகளை மறந்து விட்டு பேசுகிறார்கள்“ – விக்னேஸ்வரன்

புலிகள் இழைத்த தவறுகளைப் பற்றி கூறுகிறீர்களே தவிர அரசாங்கமும் அரச படைகளும் இழைத்த தவறுகளை மறந்து விட்டுப் பேசுகிறீர்கள். 1958 இல் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளே சிறுவனாக இருந்த பிரபாகரனின் மனதை மாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் க.வி.விக்னேஸ்வரன் இதை தெரிவித்துள்ளார்.

இதில் ‘புலிகளை அமெரிக்காவிலும் ஐக்கிய நாடுகள் சபையிலும் பயங்கரவாத இயக்கமாகவே தரப்படுத்தியிருக்கிறார்கள். தற்கொலைப் படையை உருவாக்கினார்கள். பெண்களை மனித குண்டுகளாக மாற்றினர். சிறுவர்களை போர் வீரர்கள் ஆக்கினர். இரு தேசியத் தலைவர்கள் உள்ளிட்ட புத்திஜீவிகள் பலரை கொலை செய்தனர். இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

‘கெப்பட்டிபொல திசாவயை பிரிட்டிஸார் ஆபத்தான கிரிமினல் என்று தரப்படுத்தினார்கள். ஆனால் நாம் அவரை தேசிய ஹீரோவாக கருதுகிறோம் ஏன்?

பிரிட்டிஸார் நாட்டுக்குள்ளே நுழைந்தவர்கள், வெளியில் இருந்து வந்தவர்கள், எமது வளங்களை சூறையாடியவர்கள். எமது வணக்கத் தலங்களை அழித்தவர்கள், எமது காணிகளை கைப்பற்றியவர்கள். எனவே கெப்பெட்டிபொல உயர்குடியை சேர்ந்தவராக இருந்த போதும் ஊவா கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து பிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்டார்.

அவரை நாம் ஹீரோ என்கிறோம். ஆனால் பயங்கரவாதி என்ற சொல்லின் அர்த்தம் பிரிட்டிஸாருக்கு தெரிந்திருந்தால் அவர்கள் கெப்பிட்டிபொலவை அவ்வாறுதான் அழைத்திருப்பார்கள்.

புலிகள் இயக்கத்தில் சிறந்த அறிவுசாலிகள் இருந்தனர். படிப்பை தொடர முடிந்திருந்தால் அவர்கள் இந்த நாட்டுக்கு சிறந்த சொத்தாக இருந்திருப்பார்கள்.

1958 இல் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளே சிறுவனாக இருந்த பிரபாகரனின் மனதை மாற்றின. அதன் பிறகும் சிங்கள பெரும்பான்மையினரால் இழைக்கப்பட்ட பல கொடுமைகளை கேள்வியுற்ற பிரபாகரன் வன்முறைப் பதிலே இதற்கு தகுந்த தேவை என நம்பினார்.

1961 அளவில் இராணுவம் வடக்குக்கு அனுப்பப்பட்டது. கேர்ணல் உடுகமவின் கீழ் என்று நினைக்கிறேன். அப்போதைய அரசாங்கங்கள் செய்த தவறுகளுக்கு அமைதியாக தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்தமைக்காகவே இராணுவம் அங்கு அனுப்பப்பட்டது. அரசாங்கத்தின் கைக்கூலியாக அப்போது இயங்கிய பஸ்தியாம்பிள்ளையை புலிகள் கொன்றனர்.

அமெரிக்காவை விட்டு விடுங்கள். அரசாங்கமல்லவா? சட்ட மா அதிபர் அல்லவா? இவ்வாறு பயங்கரவாதி என்று தரப்படுத்தியது. அரசாங்கம் இவ்வாறு கூறியதை பின்பற்றியே வெளிநாடுகளும் வெளிநாட்டு நிறுவனங்களும் அவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரித்தன.

புலிகள் இழைத்த தவறுகளைப் பற்றி கூறுகிறீர்களே. அரசாங்கமும் அரச படைகளும் இழைத்த தவறுகளை மறந்து விட்டுப் பேசுகிறீர்கள்.

அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. தேசிய தலைவர்கள் இலக்காகக் கொள்ளப்பட்டனர். அவ்வாறு இலக்குகளாக மாறு முன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள்.

ஒரு தரப்பினரை பயங்கரவாதிகள் என்று கூறு முன் மறுதரப்பு இழைத்த குற்றங்களை பாருங்கள். அவர்கள்தான் மிகப் பெரிய பயங்கரவாதிகள். என்று கூறினார்.

பாராளுமன்றில் இரா.சாணக்கியனுக்கு கிடைத்த புதிய அங்கீகாரம்!

தனது நாடாளுமன்ற கன்னி உரையில் பாராளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தவர் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன். குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற இரா.சாாணக்கியனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு இலங்கை பாராளுமன்றில் உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவருக்கு சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரா.சாணக்கியன் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது சிறிது நேரம் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.