03

03

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை – விக்கினேஸ்வரனின் கருத்துக்கு மேதானந்த தேரர் பதிலடி !

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை ,  பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது எச்சரிக்கை கலந்த தொனியில்  கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை” இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மாறாகப் பிரச்சினைகள்தான் உருவாகும்”  எனவும் அவர் தெரிவித்தார்.

“ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை இருக்கின்றது.ஆனால் வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக்கூடாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது.” எனவும் அவர் அழுத்த திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

கூகிளில் Sex (‘செக்ஸ்’) எனும் வார்தையை தேடிய உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம் . – முதல் நிலையில் எத்தியோப்பியா!

2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகிளில் Sex (‘செக்ஸ்’) எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் எத்தியோப்பியா  முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இவ்வரிசையில் எத்தியோப்பியாவை தொடர்ந்து இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன.

இதற்கு முன்னர் கூகிளினால் வெளியிடப்பட்ட வருடாந்த பட்டியலில் இலங்கை முதலாம் இடத்தையும் கடந்தாண்டு (2019) ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது

அத்தோடு, 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகிளில் ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தை வகித்து வந்தது.

கூகிளின் கடந்த 2012ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம்,  ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகிப்பதோடு, 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்திலுள்ளது.

குறிப்பாக வடமத்திய மாகாணத்தில் கட்டுவன்வில, கல்கடவெல, இராஜாங்கனை, புல்மோட்டை, பூனாவை ஆகிய நகரங்கள் முன்னிலையிலுள்ளன.

கூகிளில் ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை அதிகளவில் தேடிய மாகாணங்களின் வரிசையில் முறையே ஊவா, வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மத்திய மாகாணங்களும் நகரங்களில் முறையே சியம்பலாண்டுவ, தேராவில், மஹாஓயா, பொரலுவகே அய்னா, ஹோமாகம, மேல் புளியங்குளம், வருகந்தெனிய, ஹரஸ்பெத்த ஆகியனவும்  அடங்குகின்றன.

தொடரும் உலக அரசியல் பிரபலங்களின் ட்விற்றர் கணக்கு முடக்கங்கள் . – இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு முடக்கம் !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு, ஹெக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருடைய தனிப்பட்ட இணையத்தள ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் முடக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது தனிப்பட்ட இணையத்தளத்திற்கான @narendramodi_in என்ற ட்விற்றர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியான பல்வேறு பதிவுகளை இட்டனர்.
அதில் கொவிட்-19 பாதிப்பிற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திற்கு அனைவரும் நிதியுதவி செலுத்துங்கள். இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சி முறை பரவலாக தொடங்கியிருக்கிறது. எனவே பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என்று கூறி குறிப்பிட்ட குறியீடும் பதிவிடப்பட்டிருந்தது.
இது பற்றி தகவலறிந்த ட்விற்றர் நிறுவனம் உடனே மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஈ-மெயில் வாயிலாக ட்விற்றர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தளத்திற்கான  ட்விற்றர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். வேறு ஏதேனும் ட்விற்றர் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறதா? என விசாரணை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விற்றர் கணக்கிற்கும், பிரதமர் அலுவலகத்தின் ட்விற்றர் கணக்கிற்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.’’ எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக பிரதமர் அலுவலகமோ அல்லது அவரது தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் முதல் உலகின் பல்வேறு பிரபலங்களின் ட்விற்றர் கணக்குகள் ஹெக் செய்யப்பட்டன. இதில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரபல கோடீஸ்வரர் எலன் மாஸ்க் உள்ளிட்டோர் அடங்குவர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரோந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தளத்திற்கான ட்விற்றர் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனாவைரஸ் பாதிப்பு 2.5 கோடியை எட்டியது . – பிரேசிலில் பாதிப்பு 40 லட்சத்தை தாண்டியது!

பிரேசிலில் கொரோனாவைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரேசில் சுகாதாரத் துறை தரப்பில், “பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 48,632 பேருக்கு கொரோனாவைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரேசிலில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,01,422 ஆக அதிகரித்துள்ளது. 1,23,899 பேர் பலியாகினர். 32,10,405 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிக பாதிப்பைச் சந்தித்துள்ளன. கொரோனாவைரஸ் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாம் இடத்திலும் உள்ளன.

தென் அமெரிக்க நாடுகளில் பிரேசிலும், அர்ஜென்டினாவும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன என்றும், தென் அமெரிக்காவின் கொரோனாவைரஸ் மையமாக பிரேசில் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு முன்னரே தெரிவித்திருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 2.5 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

கொரோனாவைரஸ் ஊரடங்கினால் பலநாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கைக்கு அனுமதித்து வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டனர்.

”உண்மையான எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை விட, சீனாவில் அதிகம்’’ – ட்ரம்ப்

சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனாவைரஸ் தொற்று பரவியது. அங்கிருந்து உலக நாடுகளுக்கு வைரஸ் பரவியது. வைரஸ் பரவுவதைத் தடுக்க சீனா தவறிவிட்டதாகவும், இதில் சீனா உண்மையை மறைக்கிறது. அதை நாங்கள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம் என்று தொடக்கம் முதலே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவைரஸ் தொற்றில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால், சீனாவில் தொற்றுக்கு உயிரிழந்தோர் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளது என்று அந்நாட்டு அரசு கூறியது. இதுகுறித்து ‘பாக்ஸ் நியூஸ்’ சேனலின் செய்தியாளர் லாரா இங்கரஹாமுக்கு,  ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறும்போது, ‘‘சீனாவில் கொரோனாவைரஸ்க்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உண்மையான எண்ணிக்கையை சீன அரசு மறைக்கிறது. உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள உயிரிழப்பை விட, சீனாவில் அதிகம்’’ என்று தெரிவித்துள்ளார்.

‘‘பேட்டியின் போது, சீனாவில் உயிரிழப்பு அதிகம் என்பது எப்படி உங்களுக்கு தெரியும்?’’ என்று செய்தியாளர் லாரா கேள்வி எழுப்பினார். அதற்கு நேரடியாக ட்ரம்ப் பதில் அளிக்கவில்லை.

அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கொரோனாவைரஸ் பிரச்சினையை ட்ரம்ப் சரியாக கையாளவில்லை என்று அமெரிக்கர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால், குடியரசுகட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை சமாளிக்க சீனா மீது மிகத் தீவிரமாக அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

நான் சாராயம் கொடுத்தோ ? 5000 ரூபா கொடுத்தோ? வெற்றி பெற்றதை விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு விலக தயார் ! – அங்கஜன்.

தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ..? அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ..? சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போக தாம் தயாராக உள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.

இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன்,

சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அங்கஜன் ராமநாதன் கருத்து வெளியிடுகையில்,

தன் மீதான குற்றச்சாட்டுக்களை சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவதற்கு தாம் தயாராக உள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விலகல்!

ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தின்ஸ்  அணியில் முக்கிய மாற்றமாக, அந்த அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான லசித் மலிங்காவுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு சீசனில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.

அணியின் திருப்புமுனை பந்துவீச்சாளராக இருந்த மலிங்கா இல்லாதது மும்பை  அணிக்குப் பெரும் பின்னடைவுதான். இருப்பினும், ஆஸி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் வருகை, அந்த அணிக்கு வலு சேர்க்கும்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ”ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் சீசன் டி20 தொடரில் தனிப்பட்ட காரணங்களால் தன்னால் பங்கேற்க முடியாது என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். அவர் குடும்பத்துடன் இலங்கை செல்ல உள்ளார். ஆதலால், மும்பை  அணியில் ஆஸி.யின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அபுதாபி வந்து அணியில் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட செய்தியில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும் ஜேம்ஸ் பேட்டின்ஸனை வரவேற்கிறேன். மலிங்காவுக்குத் தேவையான ஆதரவை அணி நிர்வாகம் வழங்கும். எங்களுக்குப் பொருத்தமானவராக பேட்டின்ஸன் இருப்பார், எங்களின் வேகப்பந்துவீச்சு வலுப்பெறும், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழலுக்குச் சிறப்பாக இருக்கும்.

லசித் லெஜெண்ட் வீரர். மும்பை அணியின் தூண்களில் ஒருவர். இந்த சீசனில் லலித் மலிங்காவை நாங்கள் இழக்கிறோம் என்பது வருத்தம்தான், அதுதான் உண்மை. இந்த நேரத்தில் லசித் அவரின் குடும்பத்தாருடன் இலங்கையில் இருப்பது அவசியம் என நம்புகிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி, வீரர்களின் நலன், அவர்களின் குடும்பத்தாரின் நலனில் அதிகமான அக்கறை வைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை அணி தங்கள் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது. அந்த தொடரில் மலிங்கா இடம் பெற்றார். ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடி ஏறக்குறைய ஓராண்டு ஆகிவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

சீனா அதன் அயல்நாடுகளை துன்புறுத்துகின்றது! – மைக்பாம்பியோ

சீனா அதன் அண்டை நாடுகளைத் துன்புறுத்துகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக் பாம்பியோ கூறுகையில், “தனது சொந்த மக்களை அடக்குவதற்கும், அதன் அண்டை நாடுகளைத் துன்புறுத்துவதற்கும் சீனா முயல்கிறது. உள்நாடு மற்றும் சர்வதேச விவகாரங்களில் சீனாவின் ஆக்ரோஷம் கவலைக்குரியது. இதனை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்தியா – சீனா எல்லை மோதல் விவகாரத்தில், இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தென் சீனக் கடல் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா- சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அண்டை நாடுகளுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென் சீனக் கடல் பகுதிக்கு அமெரிக்கா 2 போர்க் கப்பல்களை அனுப்பி ஜூலை மாதம் பயிற்சியில் ஈடுபட்டது.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தென் சீனக் கடல் பகுதியில் 2 ஏவுகணைகளைச் செலுத்தி போர்ப் பயிற்சி மேற்கொண்டது சீனா. இதன் காரணமாக தென் சீனக் கடல் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

PUBG உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை!

இந்தியாவில் பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஒஃப் கிங்டொம் உட்பட மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஏற்கனவே, 58 சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (புதன்கிழமை) மேலும் 118 செயலிகளுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69-A இன் கீழ் சீன செயலிகள் இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

லடாக் எல்லையில் நடைபெற்ற இந்திய-சீன இராணுவ மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் இந்தியா முழுவதும் வலுத்துவருகிறது.

இதன் ஒரு கட்டமாக  டிக்டொக் உள்ளிட்ட 58இற்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு அண்மையில் தடை விதித்திருந்தது. இந்நிலையில், மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த செயலிகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் குறித்த செயலிகள் மீது ஏராளமான முறைப்பாடுகள் தொடர்ச்சியாக வந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வமற்ற வகையில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு இந்தியாவுக்கு வெளியேயுள்ள இலத்திரனியல் சேமிப்பகத்தில் சேமிக்கப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது

200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

முக்கியமாக தேவைப்படும் பொரு ட்களுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சலுகை மற்றும் COVID-19 இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுதலின் அடிப்படையில் வழங்கப்படும் 200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை (மூச்சு க்காற்றூட்ட கருவி) சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. இந்த வென்டிலேட்டர்களானது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸினால் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டன.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. அவை கச்சிதமானவை மற்றும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியவை என்பதுடன், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இலங்கைக்கு நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும்.

இலங்கையர்களின் நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் அமெரிக்கா நீண்டகால உறுதிப்பாடொன்றைக் கொண்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா இலங்கைக்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சுகாதார உதவிகளை வழங்கியுள்ளது.

எமது நீடித்த உதவியானது அமெரிக்க மக்களிடமிருந்தான இன்னுமொரு அன்பளிப்புடன் தொடர்கிறது.

அமெரிக்க புத்தாக்கங்கள் மற்றும் தனியார் தொழில்துறையின் சக்தியை பயன்படுத்துவதன் மூலம், COVID-19 இற்கு எதிராக போராடுவதற்கும் உயிர்களை காக்க உதவுவதற்கும் இந்த அதிநவீன வென்டிலேட்டர்களை இலங்கைக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

COVID-19 தொற்றுப் பரவலினால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான சேவைகளை வழங்கிய இலங்கைக்கான 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான COVID-19 உதவிக்கு மேலதிகமானதாகவே இந்த வென்டிலேட்டர் அன்பளிப்பு அமைந்துள்ளது.