September

September

இஸ்ரேலிலிருந்து முதல் நேரடி வணிக விமானம், ஐக்கிய அரபு தலைநகர் அபுதாபியில் தரையிறக்கம் !

இஸ்ரேலிலிருந்து முதல் நேரடி வணிக விமானம், ஐக்கிய அரபு தலைநகர் அபுதாபியில் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம் இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவை ஆரம்பமாகியுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையே வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தானதன் பின்னணியில், நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் உயர்மட்ட உதவியாளர்கள் டெல் அவிவிலிருந்து ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கு நேரடி விமானத்தில் பயணம் செய்தனர்.

ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் வேண்டுகோளுக்கு ரியாத் ஒப்புக் கொண்டதையடுத்து விமானம் எல்.வை 971 சவுதி அரேபியா வான்பரப்பில் பறந்தது. சவுதி அரேபியா வான்பரப்பு வழியாக பறக்க இஸ்ரேல் விமானத்துக்கு அனுமதி வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

அபுதாபிக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளை ஏற்றிச் செல்லும் விமானத்தில் ஆங்கிலம், ஹீப்ரு மற்றும் அரபு மொழிகளில் ‘அமைதி’ என்ற வார்த்தை எழுதப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இடையே தூதரக உறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த 13ஆம் திகதி இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்தியுள்ள முதல் வளைகுடா நாடாகவும், 3ஆவது அரபு நாடாகவும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியுள்ளது.

இதனிடையே தொலைத்தொடர்பு, வர்த்தகம், வேலைவாய்ப்பு என அனைத்து துறைகளிலும் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டிருந்த சட்டத்தை ஐக்கிய அரபு அமீரகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரத்து செய்தது.

இதன் மூலம் இஸ்ரேலியர்கள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வர்த்தகம் செய்ய முடியும். மேலும் இது விமான போக்குவரத்து, வங்கி மற்றும் நிதி பரிவர்த்தனை உள்ளிட்டவற்றுக்கான கதவுகளை திறந்து உள்ளது.

ஐக்கிய அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகள் மீதான புதிய கோணத்திலான  அரசியல் நகர்வாக இது பார்க்கப்படுகின்ற அதே நேரம் ஜனாதிபதி டொனால்ட்ரம்ப் அவர்களுடைய தேர்தலை மையப்படுத்திய அரசியல்நகர்வாகவும் இது பார்க்கப்படுகின்றது.

சிங்கள அரசின் ஒரு இனச்சார்பான நகர்வுகளுக்கு எதிராக குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள் ! – சுரேஷ்பிரேமச்சந்திரன்.

பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்து மத விவகாரம், அரச கருமமொழிகள் அமுலாக்கம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஆகிய அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இதுவரை அது முழுமையாக நடைமுறையில் இல்லை என்பதும் அரசாங்கத்தினுடைய பல்வேறு திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் இன்னமும் தனிச்சிங்களத்திலேயே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. என்பதும் தமிழாசிரியர்கள் உட்பட பல அரச தரப்பினரும் இன்னமும் சிங்கள மொழியிலேயே கடிதங்களையும் சுற்றுநிரூபங்களையும் பெறுகிறார்கள் என்பதும் வெளிப்படையான உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு அல்லது அரச கருமமொழி அமுலாக்கல் அமைச்சு என்பதை இல்லாமல் செய்தது என்பது, தான் விரும்பியவாறு தனிச் சிங்களத்தில் அரச கருமங்களை நடத்துவதற்கான ஓர் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம்.

அதனைப் போலவே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக கடந்த அரசாங்கத்தில் பெயரளவிற்காவது தேசிய நல்லிணக்க அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இன்று அதுவும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், இந்து சமய கலாசார அமைச்சோ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் தொடர்பான அமைச்சுக்களோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த அரசாங்கத்தினுடைய சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

பௌத்த சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கமானது பத்தொன்பதாவது திருத்தத்தை மாற்றுவது, பதின்மூன்றாவது திருத்தத்தை மாற்றுவது, புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வருவது என்று பல்வேறுபட்ட கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டுவருகின்ற அதேசமயம், ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்கக்கூடிய வகையிலும் அந்த குடும்ப ஆட்சியினூடாக சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தக்கூடிய வகையிலும் செயற்பட்டு வருகின்றது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் அண்மைக்காலமாக எடுத்துவரும் ஒவ்வொரு முடிவுகளும் நடவடிக்கைகளும் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தொழிக்கும் அடிப்படையிலும் அவர்களின் இருப்புக்களைக் கேள்விக்குள்ளாக்கும் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்களை அடையாளமிடுவதற்கும் பாதுகாப்பதற்கும் முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையில் மூழ்கித் திளைக்கின்ற அதிகாரிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதென்பது குறிப்பிடக்கூடியது.

வடக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதும் அதேபோன்று படையினர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளைப் பலாத்காரமாக பறித்து வருவதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயங்களாகும்.

அத்துடன், காலாதிகாலமாக செய்கை செய்யப்பட்டுவந்த வயல் நிலங்கள் உட்பட தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மிகப்பெருமளவில் வனவளப் பாதுகாப்புக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பிற்குமாக தான்தோன்றித்தனமான முறையில் பறிமுதல் செய்யப்படுவதையும் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் தமது உயிர்ப்பாதுகாப்புக்கு அச்சப்படுவதற்கும் மேலாக, தமது வாழ்வாதாரங்கள், காணிகள், நிலங்கள் அனைத்தும் அவர்களின் கைகளைவிட்டுப் பறிக்கப்படும் ஒரு அச்சசூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவருமே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான பல்வேறுபட்ட கொள்கைகளை வெளியிடுபவர்களாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்று பேசுபவர்கள், இந்த நாட்டில் பல்வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன, அவர்களுக்கான மத, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் இருக்கின்றன என்பதுடன், அம்மக்களுக்கான பாரம்பரியம் மிக்க தேசவழமைச் சட்டங்களும் அவர்களது மதவிழுமியங்களைக் காப்பதற்கான சட்டதிட்டங்களும் இருந்து வருகின்றன.

அவை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக பல இலட்சம் மக்களை இழந்து அவர்கள் போராடி வந்துள்ளனர் என்பதை மறந்து, அவ்வாறானவர்களின் கருத்துக்களைத் தூக்கியெறிந்து அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இவர்கள் எதேச்சாதிகாரமாக நடப்பது என்பது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மேலும் மேலும் விரிசல்களை உருவாக்குவதற்கே உதவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! – டக்ளஸ் தேவானந்தா.

சர்வதேச சட்டம் மற்றும் இலங்கை செயல்பாட்டுச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட நபர்க பணிபுரிய அனுமதி இல்லை. ஆகவே 18 வயதுக்குட்பட்ட நபர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர்களை முறையான கல்விக்கு வழிநடத்துவது கட்டாயமாகும் என்றார்.

நீங்கள் ஒரு மீனவராக இருந்தால், சிறுவர்களை உதவியாளராகவோ அல்லது வேலைவாய்ப்பாகவோ எடுத்துக் கொள்வதால், அவர்களின் கல்வி சீர்குலைவு மற்றும் அவர்கள் மன மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற பல சமூக பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் நீங்களும் சட்டத்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றார்.

ஒவ்வொரு மீன்பிடி பயணத்திலும் உங்கள் உதவியாளரின் சேவைகளைப் பெறும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டை அல்லது மீன்வள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கூறப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாத நிலையில், மூன்று மாதங்களுக்குள் பெறப்பட்ட புகைப்படத்துடன் ஒரு கடிதத்தை தயாரிப்பது கட்டாயமாகும்.

அந்த நபரின் அடையாளத்தை அவரது வசிப்பிடத்தின் கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டும். என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை ;இராணுவமே அவர்களை கொலை செய்தது – சி.வி.விக்கினேஸ்வரன்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த நேர்காணலின் சுருக்கமான கேள்விகளும் பதில்களினதும் தொகுப்பு.

 

கேள்வி :- விடுதலைப் புலிகள் அமைப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?

பதில்:- விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது . தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டனர்.

கேள்வி :- உலக நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை ஏன் பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை?

பதில் :- அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

கேள்வி :- இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைத் தவிர்த்து அப்பாவி மக்களை கொலை செய்தனரா.?

பதில் :- 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள். பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை என்றும் இராணுவமே அவர்களை கொலை செய்தது.

கேள்வி :-முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் மயானத்தில் ஏன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டீர்கள் என  கேள்வி எழுப்பப்பட்டது.

பதில் :- அந்த இடத்திற்குச் சென்று மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும் அதனாலேயே நான் அங்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்.

கேள்வி :- தமிழ் மொழியை இலங்கையின் முதன் மொழியாக கூறியமைக்கு ஆதாரம் உள்ளதா..?

பதில் :- இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.

என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பூட்டப்பட்டிருந்த இங்லாந்து கல்வி நிலையங்கள் இன்று திறப்பு ! – பாடசாலைகளின் நிலையை நேரில் சென்று பார்வையிட்டார் பிரதமர்!

மாணவர்கள், ஆசிரியர்கள் இதற்குரிய கட்டுப்பாடுகளுடன் வகுப்புகளுக்கு வரவேண்டும். நேரடி தொடர்பு இல்லாமல் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம் என்று பிரிட்டன் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதே போல் முகக்கவசங்களும் அவசியம். புதிய பள்ளி ஆண்டில் பலருக்கு இது கல்வியாண்டின் முதல்நாள், முழுநேர கல்வி அனைவருக்கும் திறக்கப்படுவதையடுத்து அங்கு மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக பிரிட்டன் கல்விச் செயலர் கேவின் வில்லியம்சன் கூறும்போது, கடந்த சில மாதங்கள் மாணவர்கள் எத்தகைய சவால்களை சந்தித்து இருப்பார்கள் என்பதை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை, எனவே பள்ளிகள் திறக்கப்படுவது அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எனக்குத் தெரியும். கல்விக்காக மட்டுமல்ல, அவர்களின் வளர்ச்சி, நல்லுணர்வு ஆகியவற்றுக்கும் பள்ளிகள் திறப்பு அவசியம்.

ஆனாலும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எதுவும் சுலபமல்ல. ஆனால் பெற்றோர் ஆதரவு இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது, எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நாட்டில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரிகளை ஆலோசித்ததன் பேரில் கோவிட்-19 வைரஸ் குழந்தைகளைப் பாதிப்பது மிகவும் குறைவே என்றனர், மேலும் இளம் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால் அவர்களது நல்லுணர்வு பாதிக்கப்படும் என்று அவர்கள் ஆலோசனை வழங்கினர், என்றார் கேவின் வில்லியம்சன்.

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வின்படியும் கரோனாவினால் குழந்தைகளுக்கு தீவிர நோய் ஏற்படும் வாய்ப்பு மிகமிகக் குறைவு என்று தெரிவித்துள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சன் முதலில் லெய்சஸ்டர்ஷயர் பள்ளிகளுக்கு சென்று நோய்ப்பரவல் தடுப்பு நடைமுறைகளைப் பார்த்து உறுதி செய்தார். கல்வி அமைச்சர் உட்பட அமைச்சர்களும் பள்ளிகளுக்கு வருகை தந்து கோவிட் 19 தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்த பின்னரே பள்ளிகள், கல்லூரிகள் திறப்புக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

40% பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. ஸ்காட்லாந்து, வேல்ஸ், நாதர்ன் அயர்லாந்து ஆகியவை வேறுபட்ட தேதிகளில் திறக்கப்படுகின்றன. இங்கு சில பள்ளிகள் ஏற்கெனவே திறக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் பள்ளிகளுக்கு நடந்தோ, சைக்கிள் மூலமோ அல்லது இருசக்கர மோட்டார் வாகனம் மூலம் வர வேண்டும். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வீடுகளிலிருந்து பள்ளிகளுக்கு போக்குவரத்துக்காக 40 மில்லியன் பவுண்டுகளை கூடுதலாக பிரிட்டன் அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தியாவின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் குடியரசு ஜனாதிபதியுமான பிரணாப்முகர்ஜி நேற்று காலமானார்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், இந்திய அரசியலின் பிரபல தலைவர்களில் ஒருவருமான, பிரணாப் முகர்ஜி நேற்று (31.08.2020)காலமானார்.

1935ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் திகதி பிறந்த அவர், மரணிக்கும்போது 84 வயதாகும்.

இந்த தகவலை அவரது மகன் அபிஜித் முகர்ஜி தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் கணக்கில் அறிவித்துள்ளார்.

“என் தந்தை பிரணாப் முகர்ஜி மரணித்துவிட்டார். ஆர்.ஆர் மருத்துவமனையின் டாக்டர்களின் சிறந்த முயற்சிகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ளவர்களிடமிருந்து பிரார்த்தனைகள், துவாக்கள், வேண்டுதல்கள் ஆகியவற்றையும் தாண்டி அவர் காலமாகிவிட்டார் என்பதை கனத்த இதயத்துடன், உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்”

சிரேஷ்ட அரசியல்வாதியான பிரணாப் முகர்ஜி, அண்மையில் சிகிச்சைக்காக இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில் அவரது மூளையில் இரத்தம் உறைந்த கட்டியை நீக்கும் அறுவை சிகிச்சையொன்றும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை மோசமடைந்து, செயற்கை சுவாசத்தின் ஆதாரத்துடன் பல நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று அவரது நிலை மிக மோசமடைந்துள்ளதாக, அவரது மகன் அபித் முகர்ஜி தனது ட்விற்றர் கணக்கில் பிற்பகல் 2.00 மணியளவில் ட்விற்றர் பதிவொன்றை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜியின் அரசியல் வாழ்க்கை ஐந்து தசாப்தங்களைக் கடந்து வந்ததாகும். அதில் அவர் இந்திய ஜனாதிபதியாக தெரிவானது அவர் கண்ட உச்ச பதவியாகும். அவர் 2012 முதல் 2017 வரை ஜனாதிபதி பதவியில் இருந்தார். ஆயினும் அவர் இந்தியாவின் ஜனாதிபதி எனும் நிலையை அடைவதற்கு முன்பிருந்தே, இந்திய அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழ்ந்தார்.

அவர் 2009 – 2012 காலப்பகுதியில் இந்தியாவின் நிதி அமைச்சராகவும், 2004 – 2006 காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராகவும், 2006 – 2009 காலப்பகுதியில் வெளிவிவகார அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரணாப் முகர்ஜி ஒரு தீவிர காங்கிரஸ்காரராக இருந்தபோதிலும், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் (NDA) ஆட்சியில் ஜனாதிபதியாக தனது கடமையைத் தொடர்ந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பதவியில் தனது முதலாவது பதவிக்காலத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட வழிகாட்டல்களுக்கு பலமுறை நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணாப் முகர்ஜி, 2008இல் பத்ம விபூஷண் மற்றும் 2019இல் பாரத ரத்னா ஆகிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சிறுகுற்றங்கள் செய்த 444 சிறைக்கைதிகள் விடுதலை!

சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறசை்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்.

29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 444 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அவர்களுள் அதிகமானவர்களான 83 பேர் வெலிகட சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடைய எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு உதவ சீனா இணக்கம்!

நாட்டின் கல்வி மற்றும் தொழிற் கல்வி அபிவிருத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கைத்தொழில், மற்றும் டயர் தொழிற்சாலை செயற்றிட்டங்களில் உதவுவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சீனத் தூதுவர் ஹுவெய்க்கும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிசுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையின் போது நாட்டின் கல்வித் துறை மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நீண்ட கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் எவ்வாறு உதவ முடியும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு சீன அரசிடமிருந்து இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உத்தேச திட்டமான கைத்தொழில் மற்றும் முதலீட்டு வலயங்களில் மருந்து உற்பத்தி மற்றும் டயர் தொழிற்சாலை உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பிலும் அதற்கான மனித வள விருத்தியை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக நிர்மாணத்துறை மற்றும் வளங்கள் துறையின் திறன பிவிருத்தி அவசியம் தொடர்பில் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தொடர்பில் இருவருக்கிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் அது தொடர்பான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புகளை பலப்படுத்துவது தொடர்பில் செயற்படுவதற்கு தாம் விருப்பமாக உள்ளதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார். அதன் அடுத்தகட்ட நடவடிக்கையான வீடியோ கலந்துரையாடல் மூலம் மேலும் விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் வகையில் இரு தரப்பு அதிகாரிகளுக்கிடையில் இணைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபி மற்றும் டுபாயில் குண்டுவெடிப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி மற்றும் அதன் சுற்றுலா மையமான டுபாயில் இரண்டு தனித்தனி வெடிப்பு சம்பவம் நேற்று (31.08.2020) இடம்பெற்றுள்ளது.

இந்த வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

தலைநகரில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அபுதாபி அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

அபுதாபி சம்பவத்தில் பல சிறிய அளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கட்டிடம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை டுபாயில், நேற்று அதிகாலை உணவகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டுபாயில் நடந்த குண்டுவெடிப்பில் கட்டிடத்தின் தரை தளம் சேதமடைந்தது என்பதோடு தீ 33 நிமிடங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.