July

July

கொழும்பிலிருந்து யாழ். வந்து கொண்டிருந்த பஸ் மீது கல்வீச்சு!

நேற்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை மூன்று மணியளவில் அநுராதபுரம் மகாஇலுப்பளம என்ற இடத்திலேயே இக்கல்வீச்சு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், குறித்த பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து சேதமுற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி வரும் பஸ்களுக்கு சிங்களப்பகுதிகளில் வைத்து சிலரால் கல்வீச்சு நடத்தப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவ்வாறு வரும் பஸ்களில் கூடுதலாக தமிழர்கள் மட்டுமே பயணித்தனர்.  போர் முடிவிற்கு வந்த பின் தற்போது தென்பகுதிகளிலிருந்து அதிகளவிலான சிங்களப் பயணிகள் யாழ்ப்பாணம் நோக்கி வருகை தருகின்றனர். இந்நிலையில், இக்கல்வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அபிவிருத்தி; மீள்கட்டுமானத்தில் புலம்பெயர் தமிழர் பங்கேற்க விருப்பம் – ரொபட் ஓ பிளேக்

r-b.jpgகடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்த பெருவெற்றி மற்றும் அவரது கட்சிக்கு கிடைத்த அதே போன்ற பாராளுமன்ற தேர்தல் வெற்றி ஆகியவை மூலம் இலங்கை இப்போது மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின் நிலையான சமாதானத்தையும் சுபீட்சத்தையும் ஏற்படுத்தும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறான சமாதான நிலையில் நல்லிணக்கத்தை பெற்றுக் கொள்வது முக்கிய காரணியாக அமைகிறது என்று. கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக் தெரிவித்தார்.
 
ஊடகவியலாளர்களிடையே அவர் மேலும் கூறியதாவது, புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அவர்  இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் முன்னணி உதவி வழங்குநராக அமெரிக்கா தொடர்ந்தும் இருந்து வருகிறது. கண்ணிவெடி அகழ்வு, மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு குடியேறும் இடம்பெயர்ந்தவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் திட்டங்களை வரைதல், மற்றும்புதிய பொருளாதார வாய்ப்புகளை வடக்கில் ஏற்படுத்துவதற்கான தனியார் துறை முதலீடுகளை பகுப்பாய்வு செய்தல் ஆகியவற்றில் அமெரிக்கா தொடர்ந்தும் உதவும். கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்கா இலங்கைக்கு 140 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது என்று ரொபர்ட் பிளேக் கூறினார்.

இலங்கைக்கான தனது விஜயத்தைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் அரசாங்க அமைச்சர்கள், வர்த்தக சமூகம், எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் சமூகத்தினரையும் சந்தித்துப் பேசியதாக கூறினார்.

ஜனாதிபதியுடனான தனது பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகவும் நல்லிணக்கம், ஆளுமை மற்றும் சாத்தியமான அரசியலமைப்பு மாற்றங்கள் உள்ளிட்ட பல விடயங்களைப் பற்றி பேசியதாக குறிப்பிட்டார். இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் திருப்தியளிப்பதாகவும் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்தில் இருந்து குறுகிய காலத்தில் அகதிகளின் எண்ணிக்கையை 37 ஆயிரமாக குறைக்க முடிந்தமை திருப்தியானது என்று பிளேக் கூறினார்.

மட்டக்குளி பிரதான சந்தேக நபர் நீதிமன்றில் சரண்

மட்டக்குளி பொலிஸ் நிலையம் மீது கடந்த 03 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் என்று சந்தேகிக்கப்படுபவர் நேற்று சட்டத்தரணி மூலம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

முரளி – 799ஆவது டெஸ்ட் விக்கட்

murali.jpgகாலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரில் 5ஆவது நாளான இன்று முரளிதரன் விளையாடும் இறுதி டெஸ்ட் நாளாகும்.

இன்றைய போட்டியில் சற்று நேரத்திற்கு முன் தனது 799ஆவது டெஸ்ட் விக்கட்டைப் பூர்த்தி செய்தார். இன்னும் ஒரு விக்கட்டைப் பெற்றால் 800 விக்கட்டுகள் பெற்ற சாதனைக்குரிய வீரராக முரளி மாறிவிடுவார்.

கிரிக்கட் உலகில் சாதனை நாயகனாகத் திகழும் முரளி மீதமான ஒரு விக்கட்டையும் கைப்பற்றி டெஸ்ட் கிரிக்க் உலகில் மற்றுமொரு சாதனையைப் படைக்க தேசம்நெற் இன் வாழ்த்து.

தேங்காயினுள் குழந்தையின் கை உருவம்; கல்முனையில் பரபரப்பு

coc.jpgகல்முனை பிரதேசத்தில் நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட தேங்காய் ஒன்றினுள் குழந்தையொன்றின் கை வடிவத்தில் தேங்காய் முளை காணப்பட்டுள்ளது.  இந்த கை வடிவத்திலான விரல்களுடன் கூடியதாகக் காணப்படும் இத் தேங்காய் முளையை பெருந்திரளான மக்கள் அதிசயமாகக் கருது பார்வையிடுகின்றனர்.

கல்முனைக்குடி – 14, எம். சி. அஹ்மது அவெனியூவில் வசித்துவரும் நிஸாம் மெளலவியின் வீட்டில் உணவு சமைப்பதற்காக உடைக்கப்பட்ட தேங்காயிலேயே இவ்வாறு முளை காணப்பட்டிருக்கின்றது.

இலங்கையின் நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை – சென்னையில் ரணில்

இலங்கையின் தற்போதைய நிலைவரம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீமூன் நியமித்திருக்கும் விசேட நிபுணர் குழு தொடர்பான விவகாரத்தை பாராளுமன்றத்தில் விவாதித்திருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க லடக் செல்லும் வழியில் செவ்வாய் அதிகாலை 4.30 மணிக்கு சென்னைக்கு வருகை தந்திருந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் ரணில் கூறியிருப்பதாவது; வட,கிழக்கு மாகாணங்களிலுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசு தமிழர்களை மீள்குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறது. இதுவரை 50 ஆயிரம் பேர் மீளக்குடியமர்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இது தொடர்பான சிக்கல்கள் குறித்து பாராளுமன்றத்தில் அரசிடம் விளக்கம் கேட்டோம்.

எதிர்க்கட்சிகள் நிறைவேற்றதிகார பிரதமருக்கான பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. பொலிஸ், நீதி, நிர்வாகம், தொழில் துறைகளில் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டிய தேவை உள்ளது. இந்தியா இலங்கை மீனவர்கள் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு அரசாங்கங்களும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சு நடத்த வேண்டுமென்று ரணில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் மாத 3ஆவது கிழமை டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனம்

mos.jpgஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது கிழமையை “டெங்கு தடுப்பு வாரமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இந்த வார நாட்களில் துப்புரவுபடுத்தும் நடவடிக்கைகள் டெங்குத் தடுப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

நேற்று புதன்கிழமை இடம்பெற்ற உள்ளூராட்சி மாநாட்டின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தேசிய டெங்கு தடுப்பு திட்டத்தின் ஓரங்கமாக சுத்தப்படுத்துதல், விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மாதத்தின் முதலாவது, இரண்டாவது திங்கள் கிழமைகளிலும் மூன்றாவது, நான்காவது சனிக்கிழமைகளிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த வருடம் மாத்திரம் டெங்கு நோயால் 158 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் 21 ஆயிரம் பேர் பீடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் கைவினைத் திறன் கண்காட்சி

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத் தொழில் அமைச்சு ஏற்பாடு செய்துள்ள கைவினைத் திறன் கைத்தொழில் கண்காட்சி இன்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாவதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பார். மேற்படி அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்திச் சபை, தேசிய கைப்பணி சபை, கைத் தொழில் அபிவிருத்தி சபை, தேசிய வடிவமைப்புச் சபை ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இக்கண்காட்சி இன்றும் 22ம் திகதி முதல் 25ம் திகதி வரை நடைபெறும்.

மூன்று அம்சங்களாக இடம்பெறும் இந்நிகழ்வில் கண்காட்சி, விற்பனை, நவீன கைத் தொழில் பயிற்சி ஆகியன உள்ளடங்குவதுடன் 156 கண்காட்சிக் கூடங்கள் இதில் இடம்பெறுகின்றன.

முதல் நாள் 22ம் திகதி மாலை 5.30 மணிக்கும் பின்னரும் அடுத்தடுத்த நாட்களில் காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை இக்கண்காட்சியைப் பொது மக்கள் பார்வையிட முடியும்

புனர்வாழ்வு முகாமில் 7980 பேர் மட்டுமே: டியூ குணசேகர

due.jpgசரணடைந்துள்ள முன்னாள் போராளிகள் 12,000 பேருள் 7980 பேர் மட்டுமே தற்போது புனர்வாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் 364 பேர் பரீட்சை முடிவடைந்ததும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர் என அமைச்சு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர நேற்று தெரிவித்தார்.

சொந்த இடங்களில் 198 குடும்பங்கள் – முல்லைத்தீவில் நாளை குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 198 குடும்பங்களைச் சேர்ந்த 602 பேர் நாளை சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார்.

இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தங்கியுள்ள இவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். ஏற்கெனவே 22 கிராமசேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றதோடு இதுவரை மீள்குடியேற்றப்படாதவர்களே நாளை மீள்குடியேற்றப்படுகின்றனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 23 கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரை மீள்குடி யேற்றம் இடம் பெறவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.