01

01

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் பாரிய மோசடிகள் இல்லை – சிறிய மோசடிகள் பெரிய வெற்றியைப் பாதிக்காது

ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவான மோசடிகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் எதிர்க்கட்சிக் காரர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றதென்றும் உயர் பாதுகாப்பு சபைத் தலைவர் ஜனாதி தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் பத்து சதவீதமானவை எண்ணப்பட்டன. இதற் கென 12 பேர் கொண்ட விசேட குழு அமைக்கப்பட்டது. இதற்கு ஜனாதி தலைமையேற்றார். வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் அரச தொலைக்காட்சி ஜனாதியின் செய்தியை வெளியிட்டது. அதில் அவர் கூறியதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் பாரியளவான வாக்கு மோசடிகள் இடம்பெறவில்லை. சிறிய மோசடிகள் இடம்பெற்றுள்ள போதும் தேர்தல் முடிவுகளில் இது மாற்றத்தை ஏற்படுத்தாது. தேர்தல் சட்டங்களுக்கமைய முடிவுகள் வெளியாகி பத்து நாட்களுக்குள் விரிவான விசாரணைகளை மேற்கொண்டோம்.

எதிர்க்கட்சிக்காரர்கள் சொல்வதைப் போன்று பெரிய மோசடிகள் இடம்பெற்றதாகத் தெரியவில்லை என குவார்டியன் குழுத் தலைவர் ஆயதுல்லா அஹமட் ஜனாதி சொன்னார். 63 வீதமான வாக்குகளை ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் பெற்றுள்ளதால் சிறிய மோசடிகள் இவ்வெற்றியைப் பாதிக்காது என்பதையே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இது குறித்த விரிவான கடிதமொன்று குவார்டியன் குழுவால் நாட்டின் உள்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அரச தொலைக்காட்சி தெரிவித்தது.

திங்கட்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நகரைச் சுற்றி பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டனர். வாகனங்கள் கடுமையாகச் சோதிக்கப்பட்டது. சாரதிகளின் அடையாள அட்டைகள். உடல்களும் சோதனை செய்யப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கும் வகையில் பொலிஸார் இராணுவத்தினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.கைதுகள் அச்சுறுத்தல்கள் அடக்கு முறைகள் என்பவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது. ஈரானில் நடப் பவற்றை ஐரோப்பாவும், அமெரிக்காவும் நன்கு அவதா னிப்பதாக ஹிலாரி கிளின்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜோஸி மானுவெல் ஆகியோர் தெரிவி த்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை ஈரான் அடக்கிய முறைக ளுக்கெதிராக ஐ. நா.வில் கடும் கண்டனத்தையும் தடைகளையும் கொண்டுவரவும் ஆலோசிக்கப்பட்டது.

அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆராய சர்வகட்சி குழு – ஜனாதிபதி தீர்மானம்

he_president.jpgஅபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கென சர்வகட்சிக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

இதன் மூலம் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராய்வதுடன் இக் குழு ஜனாதிபதியின் தலைமையில் மாதமொரு முறை கூடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதல் கூட்டம் 2ம் திகதி நடைபெறவுள்ளது.

ஈராக் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் பொறுப்பேற்றது – அமெரிக்க இராணுவம் முகாம்களுக்குள் முடக்கம்

ஈராக்கின் முக்கிய நகரங்கள், மாகாணங்களின் பாதுகாப்பை ஈராக் அரச படைகள் பொறுப்பேற்றன. தற்போது இங்குள்ள அமெரிக்கப் படைகள் வெளியே செல்லாமல் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஈராக்கிலுள்ள அனைத்து அமெரிக்கத் துருப்பினரும் தங்களது பாதுகாப்பு பொறுப்புகளை ஈராக் அரச படைகளிடம் ஒப்படைத்துள்ளதாக அங்குள்ள அமெரிக்க கட்டளைத் தளபதி தெரிவித்தார்.  

பாரிய குண்டு வெடிப்புகள் வன்முறைகளுக்கு மத்தியிலும் ஈராக் அரசாங்கம் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. எனினும் ஈராக் இராணுவத்துக்குத் தேவையான ஆலோசனைகள், பயிற்சிகள் போன்றவற்றை அமெரிக்க இராணுவம் வழங்கவுள்ளது. இரண்டு நாடுகளிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின்படி கடந்த எட்டு மாதங்களாக படிப்படியாக அமெரிக்க இராணுவத்தினர் பாதுகாப்பை ஈராக் இராணுவத்திடம் வழங்கி வருகின்றனர்.

ஈராக்கின் பாதுகாப்பை அந்நாட்டு இராணுவம் முழுமையாக பொறுப்பேற்றுக் கொண்டது. நேற்று ஜூன் 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் ஈராக்கில் ஆற்றி வந்த பாதுகாப்புப் பணிகள் யாவும் நிறுத்தப்பட்டு ஈராக் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.

சுமார் 8 மாதங்களாக இவ்வாறு படிப்படியாக ஈராக்கின் பாதுகாப்பு பிரதமர் நூரி அல்மாலிகி தலைமையிலான அரசாங்கத்தின் படையினரிடம் வழங்கப்பட்டு வந்தது. நேற்றுடன் முற்று முழுதாக ஈராக் இராணுவம் தனது நாட்டின் பாதுகாப்பை பொறுப்பேற்றுக் கொண்டது. கட்டம் கட்டமாக மாகாணங்கள் மாவட்டங்கள் நகரங்கள் எனப் பாதுகாப்புகள் கையளிக்கப்பட்டுவந்தன.

அமெரிக்கா, ஈராக்கிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் நேற்று 30ம் திகதியுடன் அமெரிக்கப்படைகள் தங்கள் பணிகளை நிறுத்தி ஈராக்கின் பாதுகாப்பை ஒப்படைக்க வேண்டும் 2010ம் ஆண்டுக்குள் ஈராக்கை விட்டே அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டுமென்றும் அந்த ஒப்பந்தம் கூறுகின்றது. இதற்கமைய பாதுகாப்புகளை ஒப்படைத்த அமெரிக்கப்படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளன.

இவர்கள் விரைவில் படிப்படியாக அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. அதுவரை ஈராக் இராணுவத்துக்குத் தேவையான இராணுவ ஆலோசனைகள் பயிற்சிகளை வழங்கவுள்ளன. வன்முறைகள் குண்டு வெடிப்புகள் ஈராக்கில் இடம்பெற்று வருகின்ற போது ஈராக் படைகள் பாதுகாப்பை பொறுப்பேற்றமை துணிச்சலான விடயம் எனக் கருதப்படுகின்றது.

ஈராக்கின் பாதுகாப்பு சொந்த இராணுவத்திடம் வந்த பின்னர் மக்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பட்டாசுகளைக் கொளுத்தினர், தேசிய விடுமுறை தினமாக நேற்றுப் பிரகடனம் செய்யப்பட்டது. பல் நாட்டு படைகளின் ஆட்சி முடிவடைந்தமைக்கான அடையாளம் இதுவென அவதானிகள் தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு ஈராக் ஆக்கிரமிக்கப்பட்டமையிலிருந்து நான் விசேட பைவங்களில் பங்கேற்றதில்லை.

ஈராக் மக்கள் முழு மையான சுதந்திரத்தை அனுபவித்த மனமகிழ்ச்சியில் காணப்பட்டனர். இச்சந்தர்ப்பத்தில் ஈராக்கின் எதிரிகள் குழப்பம் விளைவிக்கலாம் என்பதால் ஈராக் படைகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

விபத்துக்களான யேமன் நாட்டு விமானத்தில் கோளாறு இருந்தது

image-air-team.jpgஇந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏமன் நாட்டைச்சேர்ந்த விமானத்தில் கோளாறு இருந்ததாக, 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட அந்த விமான நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறையின் ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த 310 ரக ஏர் பஸ் விமானம், அதன் தயாரிப்பு நிறுவன அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடந்த மேமாதம் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாகவும் யேமென் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோமொரோஸ் தீவுகளுக்கு அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 153 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒரு குழந்தை மட்டும் தப்பிப்பிழைத்தது. யெமெனியா விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட விமான நிறுவனங்களின் பட்டியலில் இல்லை என்று தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து அமைச்சர், இந்த பட்டியல் உலகம் தழுவிய அளவில் விரிவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர் இணைப்பு இயக்குநராக நியமனம்

முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சரும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளரும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் தலைவருமான எஸ்.அருள்சாமி ஜனாதிபதியின் இணைப்பு இயக்குனராகக் கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அலரிமாளிகையில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்படி நியமனக் கடிதத்தை அருள்சாமியிடம் கையளித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக அருள்சாமியை ஏற்கனவே ஜனாதிபதி நியமித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.தேர்தல் பணிகளுக்கு டக்ளஸ் தலைமை: வவுனியா நகர சபைக்கு ரிஷாத் பொறுப்பு

susil1111.jpgயாழ்ப் பாண மாநகர சபைத் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குழுவொன்றும் வவுனியா நகரசபைத் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் தெரிவித்தார்.

1976ஆம் ஆண்டு சுதந்திரக் கட்சி உறுப்பினர் ஒருவர் யாழ். மேயராகத் தெரிவானார். 33 வருடங்களின் பின் மீண்டும் எமது கட்சியைச் சேர்ந்த ஒருவர் மேயராகத் தெரிவாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மகாவலி நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ். மாநகர சபைக்கென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளதோடு அநுராதபுரம் மற்றும் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தலைவர்கள் சிலரும் இந்தக் குழுவில் அடங்குவர்.

வவுனியா நகரசபைக்கு அமைச்சர் ரிசாத் பதியுதீன், சுமதிபால அடங்களான குழு நியமிக்கப்பட்டுள்ளன. இரு உள்ளூராட்சி சபைகளிலும் சுதந்திரக்கட்சி, ஈ.பி.டி.பி, டெலோ, ஈரோஸ். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அடங்கிய குழு போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் யாழ், வவுனியா மக்களின் கருத்து மிக முக்கியமாகும்.

வவுனியாவில் இயல்பு நிலை காணப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்கும் நாம் விஜயம் செய்தோம். அங்கு ஆசிரியர் பற்றாக்குறை எதுவும் கிடையாது. தொண்டர் ஆசிரியர்களுக்கு தேர்தலின் பின்னர் நியமனம் வழங்க உள்ளோம். ஏ-9 வீதியினூடாக லொறிகளில் யாழ்ப்பாணத்துக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதால் அங்கு பொருட்களின் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

30 வருடங்களாகக் கிடைக்காத கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் வடபகுதி மக்களுக்குத் தற்பொழுது கிடைத்து வருகிறது. அந்த மக்கள் அதிகாரப் பகிர்வு குறித்து எதுவும் கோரவில்லை.

பயங்கரவாதத்தால் நன்மையடைந்தவர்களே நாட்டில் அப்பிரச்சினை இருக்க விரும்புகின்றனர் – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த

பயங்கரவாதத்தினால் நன்மை பெற்றவர்களே இன்னும் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் நாட்டில் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்க வேண்டுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும் என சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்துள்ளார். கலன் பிந்துனுவௌ, படிகார மருவ பகுதியில் வசிக்கும் 780 குடும்பங்களுக்கு இலவச மட்பாத்திரங்கள் பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடு ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. நாம் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு செயற்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. வடக்கின் வசந்தத்தின் கீழ் வடக்குப் பிரதேசம் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

யார் எதைச் சொன்னாலும் எமது நாட்டில் இருந்து பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டு விட்டது. இது எமக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும். தற்போது எமக்கு இருக்கும் பெரும் சவால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பதேயாகும்.

இதற்கான திட்டமிடல்கள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பொருளாதார ரீதியிலான முன்னேற்றத்தையும் எம்மால் எட்ட முடியும். இதற்காக எம்மாலான உதவிகளையும் நாம் அரசுக்கு வழங்க வேண்டும்.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அநுராதபுர மாவட்ட வாழ் மக்களுக்கு, இலவசமாக மட்பாத்திரங்கள் சுதேச வைத்தியத்துறை அமைச்சினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றன. இதுவரையில் அநுராதபுர மாவட்டத்தில் வாழும் எண்பதாயிரம் குடும்பங்களுக்கு மட்பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து துடைத்தெறிந்த எமது ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்து நாட்டை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதெனவும் அவர் கூறினார்.

கடும் மழை; மண் சரிவு அச்சுறுத்தல்; மலையகப் பகுதிகளுக்கு 24 மணி நேர முன்னெச்சரிக்கை

images.jpgமலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருவதால் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 24 மணி நேர முன்னெச்சரிக்கையொன்றை நேற்று விடுத்தது. இதன் காரணத்தினால் மலையகத்தின் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் மக்களைக் கேட்டிருக்கிறது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக எற்கனவே அடை யாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு ஆபத்து குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார மேலும் குறிப்பிடுகையில் :-மலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்பிரதேசங்களில் 100 மி. மீட்டருக்கும் மேல் தொடராக மழை பெய்திருப்பதோடு தொடர்ந்தும் மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது.

ஆகவே இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்தை ஆகிய பிரதேசப் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல, ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, பிரதேச செயலகப் பிரிவிலும் கினிக்கத்தேன, நோட்டன் பிரிஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலிய பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புளத்சிங்கள, மதுகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பல இடங்கள் உள்ளன.

தற்போது இம்மாவட்டங்களுக்கு தொடராக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுவது மிக அவசியம். இதனடிப்படையில் தான் இந்த 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது என்றார்.

இணைய தளங்களை கட்டுப்படுத்த சீனாவில் புதிய விதிகள்

_dam-afp.jpgசீனாவில் அனைத்து புதிய கணினிகளிலும், இணையத் தளங்களுக்கான வசதிகளை கட்டுப்படுத்துவதற்கான மென்பொருள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் புதிய விதியை அறிமுகம் செய்வதை சீனா தாமதப்படுத்துகிறது.  அந்த விதி அமலுக்கு வரவிருந்தது.

இந்த தாமதத்துக்கு எந்த விதமான காரணமும் கொண்டு வரப்படவில்லை. ஆபாச மற்றும் வன்செயல் படங்களை இளைஞர்கள் பார்ப்பதை தடுக்கும் நோக்கிலேயே, Green Dam Youth escort என்ற இந்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டதாக, அதிகாரிகள் கூறுகிறார்கள்.

ஆனால், இந்த மென்பொருள், அரசியல் ரீதியாக பிரச்சினைக்குரிய இணையத் தளங்களை சீன அரசாங்கம் தடை செய்ய உதவும் என்று பேச்சு சுதந்திரத்துக்காக போராடுபவர்கள் கூறுகிறார்கள்.

க.பொ.த. உ/த பரீட்சை வெட்டுப்புள்ளி நாளை

பல்கலைக் கழகங்களுக்கு 2009ஆம் ஆண்டில் மாணவர்களை அனுமதிப்பதற்கான க. பொ. த. உயர்தரப் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் நாளை வியாழக்கிழமை வெளியிடப்படும்.

இவ்வருடம் 20 ஆயிரம் மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படும். அத்துடன் சகல பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டுக்கான பாடவிதானங்கள் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசி ரியர் காமினி சமரநாயக்க தெரிவித்துள்ளார்.