மலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருவதால் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 24 மணி நேர முன்னெச்சரிக்கையொன்றை நேற்று விடுத்தது. இதன் காரணத்தினால் மலையகத்தின் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அந்நிறுவனம் மக்களைக் கேட்டிருக்கிறது.
இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் களுத்துறை ஆகிய நான்கு மாவட்டங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க இடங்களாக எற்கனவே அடை யாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு ஆபத்து குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
நிறுவனத்தின் மண்சரிவு ஆய்வுகள் பிரிவுத் தலைவர் ஆர். எம். எஸ். பண்டார மேலும் குறிப்பிடுகையில் :-மலையகப் பிரதேசங்களில் கடந்த சில தினங்களாகத் தொடராக மழை பெய்து வருகின்றது. இதனால் மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்பிரதேசங்களில் 100 மி. மீட்டருக்கும் மேல் தொடராக மழை பெய்திருப்பதோடு தொடர்ந்தும் மழை பெய்யும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கின்றது.
ஆகவே இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள எலபாத்த, பெல்மடுல்ல, இரத்தினபுரி, எஹலியகொட, கலவான, கஹவத்தை ஆகிய பிரதேசப் பிரிவுகளிலும் கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை, புளத்ஹோபிட்டிய, தெரணியாகல, ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, பிரதேச செயலகப் பிரிவிலும் கினிக்கத்தேன, நோட்டன் பிரிஜ், கெனியன், லக்ஷபான, மஸ்கெலிய பிரதேசங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர, புளத்சிங்கள, மதுகம, அகலவத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பல இடங்கள் உள்ளன.
தற்போது இம்மாவட்டங்களுக்கு தொடராக அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறுகின்றது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வசிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுவது மிக அவசியம். இதனடிப்படையில் தான் இந்த 24 மணி நேர முன்னெச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது என்றார்.