சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை விண்ணப்பித்திருந்த 1.9 பில்லியன் டொலர் கடனுக்கான அனுமதி ஜூன் இறுதியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார். நாம் பெற்றிருக்கும் தரவுகளின் பிரகாரம் இந்த மாத இறுதிக்கு முன்பாக அது இடம்பெறும் என்று கப்ரால் நேற்று புதன்கிழமை ராய்ட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியக்கடன் தொடர்பான அவசர நிலைமையானது சிறிதுசிறிதாக குறைவடைந்து வருகிறது. இதனால் அது தேவையில்லை என்று நாம் கூறவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் பொருளாதாரப்பின்னடைவால் ஏற்பட்ட அச்சுறுத்தலிலிருந்தும் இலங்கை சிறிதளவு விடுபட்டுக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனுக்காக காத்திருக்கும் அதேசமயம், இருதரப்பு ரீதியான கடன் பெறும் பேச்சு வார்த்தையை மத்தியவங்கி ஏற்கனவே ஆரம்பித்திருக்கிறது. லிபியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடன் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை தற்போது மேற்கொண்டு வருகிறோம். மற்றொரு நாட்டிடமிருந்து மேலும் 500 மில்லியன் டொலர் வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான செயற்பாட்டில் நாம் ஈடுபட்டு வருகிறோம் என்றும் கப்ரால் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் இது தொடர்பாக உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால் இது தொடர்பான தீர்மானம் விரைவில் எடுக்கப்படும் என்று கடந்த மாதம் தெரிவித்திருந்தது.