தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு மீண்டும் விடுமுறை வழங்குவதற்கு சபையில் நேற்று (10) எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சபைக்கு வருகை தராமல் இருப்பதற்கான காரணத்தை ஆராயாமல் விடுமுறை வழங்கக் கூடாதெனத் தெரிவிக்கப்பட்டதால், விடுமுறை கோரிக்கைகளை விசாரணை செய்து பரிசீலிப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மூன்று மாதத்திற்குப் பாராளுமன்றம் வராதிருக்க அனுமதிக்கும் வகையில் அவர் சார்பிலான விடுமுறை கோரிக்கையை சிவசக்தி ஆனந்தன் முன்வைத்தார். இதற்கு உடனடியாகவே ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுகவீனம்போன்ற காரணங்களுக்காக சபைக்கு வருகை தர இயலாத நிலை ஏற்படின், அவருக்கு விடுமுறை வழங்குவதை சம்பிரதாயமாகக் கொண்டுள்ளோம். ஆனால், கூட்டமைப்பு உறுப்பினர்கள் நாட்டுக்கும் அரசியலமைப்புக்கும் எதிராகப் பிரசாரம் செய்வதற்கு வசதியாக விடுமுறை வழங்க வேண்டுமா? என்று ஆளுந்தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்பும் ஓர் உறுப்பினருக்கு கடந்த மார்ச் 19 ஆம் திகதி விடுமுறை கோரியபோது இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியதை நினைவு கூர்ந்த அமைச்சர் குணவர்தன சம்பிரதாயத்துக்காகச் சமர்ப்பிக்கப்படும் கடிதமொன்றுக்காக விடுமுறை வழங்கிவிடுவதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.
இவரின் கருத்தை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, அமைச்சர்கள் ஹேமகுமார நாணயக்கார, ஜகத் புஷ்பகுமார ஆகியோரும் ஆதரித்துப் பேசினர். எனினும், கூட்டமைப்பினரோ, எதிர்க்கட்சியினரோ எந்தப் பதில் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
இதன் போது, சபையின் தீர்மானத்துக்கமையவே தம்மால் எதனையும் தீர்மானிக்க முடியுமென சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார தெரிவித்தார். இறுதியாக, இந்தப் பாராளுமன்ற அமர்வுக்குள், விடுமுறை விண்ணப்பங்கள் தொடர்பில் விசாரணை செய்து விடுமுறை வழங்குவதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம் என சபை தீர்மானித்தது.
செல்வம் அடைக்கலநாதனைப் போன்று செல்வராசா கஜேந்திரன், சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, பத்மினி சிதம்பரநாதன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விடுமுறை கோரப்பட்டது. நால்வர் தொடர்பிலும் அதே அணுகுமுறை பின்பற்றப்படுமென சபாநாயகர் அறிவித்தார். மேற்குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் ஏற்கனவே விடுமுறை பெற்று வெளிநாடுகளில் தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பார்த்திபன்
நிச்சயமாக இந்த 4 கூத்தமைப்பினருக்கும் விடுமுறை நீடிப்பு வழங்கப்படக் கூடாது. அந்த மக்களின் அவலங்களிலும் அழிவுகளிலும் சுகம் கண்ட இவர்கள், உடனடியாக நாடு திரும்ப வேண்டும். இவர்கள் அகதிகளாகப் பதிந்து கொள்ள தற்போது இவர்கள் வசிக்கும் நாடுகளும் இடம் கொடுக்கக் கூடாது.