ஜனாதிபதியின் பதவிக்காலத்தை நீடிக்க கோரி தம்புள்ள பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோக பூர்வமான ஆட்சிக் காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு ஜனாதிபதி தேர்தலோ, பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்போ இன்றி நீடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிய தம்புள்ள பிரதேச சபையின் தலைவர் உட்பட அரச தரப்பு மற்றும் எதிர்க்கட்சித் தரப்பு உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் நேற்று தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை தம்புள்ள பிரதேச சபையின் விசேட கூட்டம் ஒன்று அதன் தலைவர் கே.ஜீ.சோமதிலக்கவின் தலைமையில் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் நடைபெற்று முடிந்த பின் சபை உறுப்பினர்களையும் குழுமியிருந்தோர் மத்தியில் விளித்துப் பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது;

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலம் நிறைவடைவதற்கு இன்னும் இரண்டு வருடங்களே உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலோ அன்றி பொது சன அபிப்பிராய வாக்கெடுப்போ இல்லாமல் மேலும் ஆறு வருடங்களுக்குத் தொடர்ந்தும் அவரையே ஜனாதிபதியாக வைத்திருக்க மக்கள் பிரதிநிதிகள் இங்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை சிறந்த முன்மாதிரியாகும். இது காலத்தின் தேவையுமாகும்’.

“இத்தகைய தீர்க்க தரிசனம் மிக்க தீர்மானங்களை நாட்டின் பல்வேறு தாபனங்களும் மேற்கொள்ளும் என்பதும் எனது எதிர்பார்ப்பாகும். இன்று தம்புள்ள பிரதேச சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட வரலாற்றுப் புகழ்மிக்க இத்தீர்மானம் தொடர்பாக இச்சபையின் எதிர்க்கட்சித் (ஐ.தே.க.) தலைவர் ஏ.ஜீ.சிறிசேன எதிர்ப்புத் தெரிவிப்பார் அல்லது மாற்றுக் கருத்துகளை முன்வைப்பார் என்று எதிர்பார்த்தேன். எனினும், தாய் நாட்டின் சுபிட்சம் கருதி அவரும் ஐ.தே.க. உறுப்பினரான கே.ஜீ.ரணசிங்ஹ பண்டாரவும் இத் தீர்மானத்திற்குத் தமது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருப்பது நாட்டிற்கு நல்ல சகுனமாகும்.

முன்னைய ஆட்சியாளர் பலரும் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குப் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த போதிலும் 30 வருட காலம் நிலவிய கொடூர யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவிற்குக் கொண்டு வந்த பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே சாரும்.  இனி நாட்டின் அபிவிருத்தியையும் பொருளாதார மேம்பாட்டையும் மேற்கொள்வதற்கும் சர்வதேச நாடுகளின் தலையீடுகளையும் அழுத்தங்களையும் சமாளிப்பதற்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் நிறைவுறும் 2010 ஆம் ஆண்டிலிருந்து மேலும் ஆறுவருடங்களுக்கு நீடிக்கப்படுவது இன்றைய தேவையாகும்.

இதேவேளை, நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றோ அல்லது பொது சன அபிப்பிராய வாக்கெடுப்பு நிகழ்வொன்றோ நடத்தப்படுமாயின் அதற்கென பல கோடி ரூபா நிதியை வீண் விரயம் செய்து பின்னர் மகிந்த ராஜபக்ஷவையே மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே, தேர்தலுக்குச் செலவாகும் கோடிக்கணக்கான நிதியை நாட்டின் அபிவிருத்தியின் பொருட்டு பயன்படுத்தலாம் அல்லவா? மக்களின் சேம நலன்களை மேம்படுத்தலாம் அல்லவா.

இதுதவிர, இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவோ போட்டியில் வெற்றி கொள்ளவோ எவரும் இல்லை என்பதாலும் அவ்வாறு எவரும் போட்டியிடும் பட்சத்தில் வரலாற்றுச் சாதனை மிக்க பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ராஜபக்ஷவே வெற்றி பெறுவார் என்பதும் யதார்த்தமாகும்.

எனவே, ஜனாதிபதியின் எஞ்சியுள்ள இரண்டு வருட ஆட்சிக் காலத்துடன் மேலும் ஆறு வருடங்கள் என மொத்தமாக எட்டு வருடங்கள் போட்டியெதுவுமின்றி ஜனாதிபதியாக சேவை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முழுமனதுடன் வரவேற்கின்றேன்’ என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *