வவுனி யாவிலுள்ள அகதிமுகாம்களில் 60 ஆயிரம் மாணவர்களும் 1956 ஆசிரியர்களும் உள்ளதாக தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அகதிமுகாம்களாகவுள்ள 17 பாடசாலைகள் இன்னும் இரு வாரங்களில் விடுவிக்கப்படுமெனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
தமிழ் மக்கள் இன்று அகதிகளாக முகாம்களில் வாழும் நிலை ஏற்பட்டதற்கு பிரபாகரனே காரணம். அரசு அந்த மக்களுக்கு மீண்டும் இயல்பு வாழ்வை ஏற்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மிகத்துரிதமாக எடுத்துவருகின்றது.
வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களில் 60 ஆயிரம் மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 337 பேர் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்கள்.
இந்த மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கியுள்ளோம். அவர்கள் கல்வியைத் தொடருவதற்காக கொழும்பிலிருந்து தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள 12 முகாம்களில் 60 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றனர்.
இந்த முகாம்களில் இடம்பெயர்ந்த 1956 ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கான சம்பளத்தை வழங்கி வருகின்றோம்.
அகதிமுகாம்களாகவுள்ள 17 பாடசாலைகள் இன்னும் இரு வாரங்களில் விடுவிக்கப்படும். நான் அண்மையில் அந்த அகதிமுகாம்களுக்குச் சென்று மாணவர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தினேன்.
அவர்களின் கல்விக்குத் தேவையான சகல விடயங்களும் அரசினாலும் எனது அமைச்சினாலும் செய்துகொடுக்கப்படும்.