June

June

பிரபாகரனின் மரணச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு

02supreme.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணச் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்ற நீதவான் குமுதினி விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக சிங்கள நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் குறித்த விசாரணைகளின் முதலாம் பிரதிவாதியான பிரபாகரனது மரணச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ள அவர் நீதிமன்ற கோப்பு பராமரிப்புக்குக் குறித்த மரணச் சான்றிதழ் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் சிலரும்,லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை மாணவர்கள் மீதும் தாக்குதல்

australia.jpgஅவுஸ் திரேலியாவில் படித்து வரும் இந்திய மாணவர்கள் மீது, அண்மைக்காலத்தில் அடிக்கடி நிறவெறியர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், மெல்போர்ன் நகரின் ஒரு பகுதியான மெக்குரைன் என்ற இடத்தில் 3 இலங்கை மாணவர்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. அவர்கள் தங்கி இருந்த வீட்டின் கண்ணாடிகளையும், அவுஸ்திரேலிய வன்முறை கும்பல் அடித்து நொறுக்கியது. வீட்டின் முன் நிறுத்தப்பட்டு இருந்த காரையும் சேதப்படுத்தினார்கள்.

20-20 உலகக் கிண்ணம். இன்றைய போட்டியில்…….

muralitharan-sri-lankas.jpgஇன்றைய இருபது-20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மாலை 6.00 மணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியுடன் இரவு 10.00 மணிக்கும் மோதுகின்றன. இங்கிலாந்து செயின்ட் ஜோன்ஸ்வுட், லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடைபெறுகின்றன.

த. தே. கூ. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை : சபாநாயகர் அறிவிப்பு

parliament-of-sri-lanka.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபாண்டார தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாடுகளில் தங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.கஜேந்திரன் மற்றும் எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் தமக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் எனக் கோரி அனுப்பியுள்ள மருத்துவச் சான்றிதழ்களை ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனையடுத்து இவர்களுக்கு மூன்று மாத விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை விடுமுறை கோரியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் இன்று நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

வடக்கு கிழக்கில் பொது முகாமைத்துவ உதவியாளர்களுக்கான 1025 வெற்றிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை – அநுர யாப்பா தகவல்

anura_priyadarshana_yapa.jpgவடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் 1025 பொது முகாமைத்துவ உதவியாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவைத் தீர்மாணங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதன்படி கிழக்கின் உதயம் வடக்கின் வசந்தம் ஆகிய வேலைத் திட்டங்களின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த 1025 வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் 306 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். எஞ்சியுள்ள 719 வெற்றிடங்களுக்கான பரீட்சை விரைவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.

இராணுவத்தில் கோதாபய படைப்பிரிவை உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை

gothabaya7777.jpgபாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கௌரவிக்கும் நோக்கத்துடன் “கோதாபய றெஜிமென்ட்’ என்ற இராணுவப் பிரிவை உருவாக்கவேண்டுமென பௌத்த கோட்பாட்டு சபை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை கேட்டுள்ளது. இது தொடர்பாக அந்தச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கௌரவிக்கும் நோக்கத்துடன், “கோதாபய றெஜிமென்ட்’ என்ற இராணுவப் பிரிவை உருவாக்கவேண்டும். கோதாபய நாட்டுக்குச் செய்த சேவைக்கு மதிப்பளித்து இதனை மேற்கொள்ளவேண்டும்.

கோதாபய படையினரை சரியான முறையில் வழிநடத்தியிருந்தார். நாட்டின் எல்லாப் பகுதியையும் படையினர் கைப்பற்றியது பாராட்டத்தக்கது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் சரித்திரத்தில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டும். துட்டகைமுனு, பராக்கிரமபாகு, கஜபா, அசீலா ஆகியோரின் பெயர்களுடன் மகிந்தவின் பெயரும் பொறிக்கப்பட வேண்டும். மகிந்த நீண்டகாலம் வாழவேண்டுமெனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொப்ரேயை திருப்பி அனுப்பியதற்கு கனடிய அரசு கடும் அதிருப்தி

bob-rae.jpgகனடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப்ரே இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக கனடா அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது.  இலங்கைக்கான விஜயமொன்றை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்த கனடிய எம்.பி.பொப்ரே புதன்கிழமை நண்பகல்வரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இது தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எம்மா வெல்போட் தெரிவிக்கையில்;

இலங்கைக்கான விஜயத்தின்போது பொப்ரே விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது.

கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இலங்கையில் விரும்பத்தகாததும் ஏற்றுக்கொள்ளவும் முடியாத வகையில் இலங்கை திருப்பி அனுப்பியுள்ளது. அத்துடன் பொப்ரே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ இருந்தாரென இலங்கை கூறிக்கொள்வது முட்டாள்தனமான செயலாகும்.

பொப்ரே சட்டத்துக்கு ஏற்றவாறு நியாயமான முறையில் இலங்கைக்கு செல்வதற்கான விசாவை பெற்றுள்ள நிலையில், அவரை இலங்கைக்கு அனுமதித்திருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.

அன்பும் பாசமும் வளமும் வசதியும் நிறைந்த டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு! : ஈழமாறன்

Moorthy N S Drஅன்பும் பாசமும் வளமும் வசதியும் நிறைந்த டாக்குத்தர் மூத்தி அவர்களுக்கு!
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற படுமோசமான பாசிச அமைப்பின் போர்வையின் பின் மறைந்திருந்து கொண்டு நீங்கள் செய்த திருகு தாளங்கள் நிறைய என்பதை நான் சொல்லித் தெரியவேண்டிய நிலையில் இல்லை என்று எனக்குத் தெரியும்.

மு.நித்தியானந்தன் உடன் மட்டக்களப்பு சிறையில் இருந்து தப்பிய சிறைக் கைதிகளுக்கு உதவியதன் பேரில் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் இருந்தபோது சிறை நிருவாகத்துக்கு நீங்கள் சக கைதிகளைக் காட்டிக்கொடுத்த உங்கள் நடவடிக்கையிலிருந்தே நீங்கள் புலிகளுடன் மட்டுமே உறவு கொள்ள முடியும் என்பது தெட்டத் தெளிவாக தெரிந்திருந்தது.

ஈழமாறனுக்கு பண்பாக எழுதத் தெரியவில்லை என்று பலரும் குறைபட்டதாக கேள்விப்பட்டதாலேயே இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். கிளிநொச்சி மக்கள் 20000 பேர் ஒரு நாளில் கொல்லப்பட்ட அவலத்தைப் பார்த்த பின்னும் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாத ஆனந்த சங்கரிஜயா போலவே நானும் வெறும் கடிதம் எழுதுவதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வருத்தம் தான்.

ஆனால் இது புலம் பெயர் சூழலில் இருக்கும் புலி வால்களுக்கும் அவர்களை சந்தர்ப்பம் கிடைக்கிறபோதெல்லாம் பணக்காரர்களாக்கி விட்டு மௌனமாகவே இருந்துவிடும் தமிழ் உணர்வின் நிமித்தம் கேட்ட உடனேயே பணம் கொடுத்து விடும் அப்பாவி மக்களை விழித்தெழ வைப்பதும் உங்களைப் போன்ற புல்லுருவிகள் இனியும் பிரபாகரன் சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறார். மதியோடுதான் இருக்கிறார். சார்ள்ஸ்சோடுதான் இருகக்கிறார் என்று கதை அளந்து கொண்டு காலத்தை போக்குவதும் தமிழ் மக்கள் காலப் போக்கில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மறந்து போனது போலவே இந்த முறையும் உங்கள் சுருட்டல்களையும் சுத்துமாத்துக்களையும்;… மறந்து விடுவார்கள் என்று கணக்குப் போடுவதை உடைப்பதற்காக என்றாலும் இந்தக் கடிதம் உதவலாம் என்றே எழுதுகிறேன்.

மூத்தி ஜயா  நீங்கள் இங்கிருக்கும் விசுவாசிகளை ஓரம் கட்டியதும் வசதி வருகிறபோதெல்லாம் (உங்கள் பணவசதி அல்ல வெண்புறா வசதியைச் சொல்கிறேன்) வன்னிக்குச் சென்று போட்டோ எடுத்ததும் அதைக் கொண்டுவந்து ஊரெல்லாம் காட்டியதும் பெருமைப்பட்டுக் கொண்டதும் மறைமுகமாக நீங்கள் தான் லண்டன் பிரதி நிதி என்று நிறுவிக் கொண்டதும் கூட எல்லாருக்கும் தெரியும்.

இந்த வரிசையில் தான் புலிகளின் புனர்வாழ்வுக்கழகமும் இன்ன பிற அமைப்புக்களும் அம்பலப் பட்டதும் பல மில்லியன் டொலர்கள் முடக்கப் பட்டதும் வேறு வழியில்லாமல் அண்ணைக்கு அனுப்புவதற்கு வெண்பறா கட்டினீர்கள். இன்று வரையில் எவ்வளவு பணம் சேர்த்தீர்கள் என்ன செய்தீர்கள். என்று யாருக்காவது கணக்கு காட்டினீகளா? கடைக்கு கடை உண்டியல் வைத்து சேர்த்த பணம் எல்லாம் மூட்டை கட்டிச் சென்ற நீங்கள் இந்த கடைகளுக்கு எவ்வளவு பணம் சேர்ந்தது என்ற கணக்கு காட்ட வேண்டும் என்ற குறைந்த பட்ச பொறுப்பும் உங்களுக்கு வரவில்லையே ஏன்?

மூத்தி ஜயா. இது ஒன்றும் அக்குபஞ்சர் ஊசி போடும் விவகாரம் அல்ல. போட்ட ஊசிக்கு நீட்டின காசு செரியாப் போச்சு என்று சொல்வதற்கு. வெண்பறா கட்டி நாலு பிள்ளைகளுக்கு அதுவும் உங்கட தேசியத் தலைவர் துரத்திப் பிடித்து போர்முனையில் விட்டு நாசமாக்கிய சிறுவர்களுக்கு காலும் கையும் போட்டுவிட்டு மற்றதெல்லாம் என்ன செய்தீர்கள்?

தேசியத் தலைவருக்கு தெரிந்திருந்தால் புலிக்கு வால் பிடித்தால் நீங்கள் நேர்மையானவர்கள் என்ற மாயையை உருவாக்கி நாளுக்கு 15 மணி நேரங்கள் வேலை செய்து வீட்டுச் சுமை அடைத்து வாழும் வீட்டுக் கடனடைத்து மீதியை தன் தங்கைக்கு பிள்ளைக்கு என்று குருவி போல சேர்த்த பணம் முழுவதையும் அப்பாவி புலம் பெயர்ந்த மக்களை உசுப்பேத்தி வீர வசனம் பேசி வரலாறு கதைத்து உணர்ச்சி வசப் படவைத்து சேர்த்த பணமெல்லாவற்றையும் வறுகி உங்கள் வங்கியில் போட்டு விட்டு பெரும் தொண்டர்கள் போல நீங்கள் இனியும் வலம் வரலாம் என்ற தப்புக் கணக்கு போட வேண்டாம் என்று செல்லமாக எச்சரிக்கவே உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன்.

பிரபாகரன் என்ற ஒரு தனிமனிதனைக் காப்பாற்ற 20000 தமிழ் மக்களின் (வன்னி மக்கள் என்று சொல்லும் போது சிலருக்கு கோபம் கோவணம் வரையில் செல்வதாக அறிந்தேன்) உயிரை காவு கொண்டு கடைசியில் நந்திக் கடலில் நீந்தக் கூட முடியாமல் விளைந்த காரணத்தால் அத்தனை தளபதிகளையும் கொன்று குவிப்பதற்கு முன்னர் தீபம் தொலைகாட்சியிலும் ஜிரிவி தொலைக் காட்சியிலும் நாளுக்கு நாலு தடைவ வந்து வணங்கா மண் கப்பல் கட்டிறம் தமிழர்கள் வீரம் கொட்டிறம். என்று வாய் கிழியக் கத்தியவர் நீங்கள். வணங்கா மண்ணுக்கு கொட்டிக் கொடுத்த பணத்தின் தொகை என்ன என்று நீங்கள் இந்த இரண்டு தொலைக் காட்சிகளில் ஒன்னிறல் வந்து சொல்லியே ஆகவேண்டும். கப்டன் அலி தான் வணங்கா மண். சேர்த்த பணம் எல்லாம் அதிலேயே போய் விட்டது என்று பூ சுத்தும் வேலை இனி வேண்டாம். எனக்கு ஊசிபோடுற விளையாட்டை விட்டுவிட்டு பதில் தாருங்கள்.  அடுத்த முறை எழுத்து இந்த மாதிரி வராது என்பதை மட்டும் துப்பாக்கி இல்லாமல் மிரட்டுகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

தீபம் போன்ற பொறுப்றற்ற தொலைக்காட்சிகள் அளவுக்கு அதிக விளம்பரம் கொடுத்து உங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள் என்பதால் அதே தொலைகாட்சியில் தேசம்நெற் ஒரு விளம்பரம் செய்யும்படிக் கேட்டுக் கொள்கிறேன். வணங்கா மண்ணுக்குச் சேர்த்த பணம் பொருட்கள் கப்டன் அலியில் சென்ற பொருட்களின் பட்டியல்  போன்ற விபரங்களைக் கோரும் விளம்பரம் ஒன்றை தீபத்தில் போட வேண்டும். மறுக்கும் சந்தர்ப்பத்தில் தீபமும் இதற்கான பொறுப்பை ஏற்றக வேண்டும் என்று பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். ஜயா மூத்தி அவர்களே எல்லோரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க கௌரவமாக இந்தக் கடித்ததை எழுதியுள்ளேன். இக் கடிதம் வெளியாகும் நாளில் இருந்து 14 தினங்களுக்குள் உரிய பதிலைத் தரவில்லை என்றால்…. (தொடக்கமே மவனே… என்றுதான் ஆரம்பிக்கும்) மிகவும் மோசமான மொழியில் உங்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் நீங்கள் வசூலித்த தொகை எவ்வளவு எங்கு போனது என்ற விபரங்கள் தெரியும் வரையில் என் பேனாமுனை யுத்தம் தொடரும் எனபதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாறனின் தாகம் மூத்தியின் விபரம்

இங்கனம்
யாராய் இருந்தாத் தான் என்ன.

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதில் ஜனாதிபதி உறுதி

yasusiakasi.jpg13வது திருத்தச் சட்டத்தை முழுயாக செயற்படுத்துவதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியாக இருப்பதாகவும் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜப்பானிய விசேட தூதுவர் யசூசி அகாசி தெரிவித்தார். ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி அடைவதாகவும் அவர் கூறினார்.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்து ள்ள ஜப்பானிய விசேட தூதுவர் நேற்று (11) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் விசேட செய்தியாளர் மாநா டொன்றை நடத்தினார். இங்கு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, இலங்கைக்கான விஜயம் திருப்திகரமாக அமைந்தது.

எனது விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேசினேன். இடம்பெயர்ந்த மக்களின் நலன்கள் குறித்து கவனிப்பதும் அரசியல் தீர்வு தொடர்பான முன்னேற்றம் பற்றி ஆராய்வதுமே எனது விஜயத்தின் நோக்கமாக இருந்தது. ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது அவர் அரசியல் தீர்வொன்றை வழங்குவதில் உறுதியாக இருப்பதை அறிந்தேன்.

இனங்களுக்கிடையில் ஒன்றுமையை நிலைநாட்டுவதற்கு ஜனாதிபதி பெரிதும் பாடுபட்டு வருகிறார். இலங்கையில் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என இரு சாரர்கிடையாது என பாராளுமன்ற உரையில் அவர்குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்களை பாராட்டுகிறேன்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அரசியல் தீர்வு யோசனையொன்றை தயாரிக்க நியமிக்கப்பட்ட சர்வகட்சிக் குழுவின் யோசனை விரைவில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது. இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என ஜப்பான் அரசு ஆரம்ப முதல் கோரி வருகிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் நாம் திருப்தி அடைகிறோம்.
முகாம்களுக்கு விஜயம்

எனது விஜயத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்குச் சென்று நிலைமைகளை பார்வையிட்டேன். அந்த மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர், தங்குமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் குறித்து திருப்தி அடைகிறேன். மலசல கூட வசதிகள் தொடர்பில் குறைபாடுகள் காணப்படுகிறது.

கடந்த முறை விஜயம் செய்த போது இருந்ததைவிட முகாம்கள் பாரியளவு முன்னேற்றப்பட்டுள்ளன. புதிதாக முகாம்கள் அமைக்கப்பட்டுமுள்ளன. இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார வசதிகள் குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

புலிகள் படையில் சேர்ந்த சிறுவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படும் நிலையங்களுக்கும் சென்று பார்வையிட்டேன். அவர்களுக்கு சிறந்த வசதிகள் வழங்கப்படுகின்றன. தமது உறவினர்களிடம் திரும்பிச் சென்று சுமூகமாக வாழ்வு நடத்த அவர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஐ. நா. மனித உரிமை அமர்வு

இலங்கைக்கு எதிராக ஐ. நா. மனித உரிமைகள் அமர்வில் பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது. இது தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை முன்வைத்த யோசனை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. ஜப்பான் வாக்கெடுப்பின் போது நடுநிலைமை வகித்தது. ஜப்பான் இலங்கைக்கு எதிராக செயற்படவில்லை. நாம் நடுநிலைமை வகித்தது குறித்து ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஜப்பானுக்கு நன்றி தெரிவித்தனர்.

சில நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட்டன. இலங்கை அந்த நாடுகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி அந்த நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும். இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கும் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது.
மீள்குடியேற்றம்

ஆறு மாத காலத்திற்குள் 80 வீதமான மக்களை தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மீள்குடியேற்றத்திற்கு முன்னதாக நிலக்கண்ணிகளை முழுமையாக அகற்ற வேண்டிய பாரிய சவால் உள்ளது. இராணுவத்தினர் முழு முயற்சியுடன் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளுக்கு ஜப்பான் தனது ஒத்துழைப்பை வழங்கும். மீள்குடியேற்றப் பணிகளுக்கும் ஜப்பான் எதிர்காலத்தில் உதவி வழங்கும்.

2005 ஆம் ஆண்டு நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால் புலிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்ததால் இந்த உதவி கிடைக்காமல் போனது. ஜப்பான், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி என்பன இணைந்து இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியாக வழங்க உத்தேசித்துள்ளன.

தமிழ் இனத்தை ஏமாற்றி வந்திருக்கிறோம்; தவறுகளை திருத்தாவிடின் ஒதுக்கப்படுவோம்.

vino_mp2222.jpg“நடை பெறவுள்ள யாழ் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாவிடில் எமது ரெலோ அமைப்பு தணித்தோ, அல்லது வேறு தமிழ்க் கட்சிகளுடன் இணைந்தோ போட்டியிடவுள்ளோம்” என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் கூறியுள்ளதாக சில பத்திரிகைகள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், வாழ்விடங்கள், மீள்குடியேற்றம் என்பனவற்றைக் கருத்தில் கொண்டுதான் இந்த முடிவுக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது பற்றி வினோ மேலும் கூறுகையில்,

வடக்குக் கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவவேண்டும் என்பதே ஒட்டுமொத்தத் தமிழர்களின் நீண்டகால விருப்பதாகும். ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலும் அரசியல் ரீதியான செயற்பாடுகளிலும் நாம் தொடர்ந்து தமிழ் இனத்திற்கு விமோசனங்களைப் பெற்றுக்கொடுக்காது ஏமாற்றி வந்திருக்கின்றோம.

எனவே, தவறுகளை உணர்ந்து நாம் திருந்தாவிடின் எமது இனம் எம்மைக் குப்பைக் கூடைக்குள் வீசிவிடும் நாள் வெகு தொலைவில் இல்லை. எனவே நடைபெறவுள்ள வட மாகாண உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணி போட்டியிடாவிட்டால் நாம் தனித்தோ அல்லது மிதவாதக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தோ போட்டியிடவுள்ளோம்.

குறிப்பாக எமது இயக்கத்திலிருந்து சமீபத்தில் பிரிந்து சென்ற ‘ஸ்ரீ டெலோ’ இயக்கத்தையும் இணைத்துக்கொண்டு ஓரணியில் போட்டியிட முயற்சி செய்வோம். அத்துடன் இனி வருங்காலங்களில் ஒன்றுபட்ட ‘ரெலோ’ அமைப்பாகச் செயல்படும் விருப்பத்தை ‘ஸ்ரீ டெலோ’ விடம் தெரிவித்துள்ளோம். எதிர்வரும் வாரங்களில் எமது செயற்குழு இது சம்பந்தமாக விரிவான பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

ஏனைய அமைப்புகளுடன் இராணுவ, அரசியல் ரீதியான முரண்பாடுகளைக் கொண்டிருந்த நாம் ஏன் எமது இயக்கத்துடன் இணையக் கூடாது. எமது முயற்சியானது வெறும் தேர்தலை அடிப்படையாகக் கொண்டதல்ல ஆயினும் இரு தேர்தல்களையும் ஆரம்பப் புள்ளிகளாகக் கொண்டு செயல்பட ஆயத்தமாகின்றோம் எனத் தெரிவித்த அவர், இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து பழமையைக் கிண்டிக்கிளறுவது தனது நோக்கமல்ல. இது ஆரோக்கியமான தலைமைக்கு அழகல்ல எனவும் அவர் தனது கருத்தை முன்வைத்தார்