கனடிய பாராளுமன்ற உறுப்பினர் பொப்ரே இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது தொடர்பாக கனடா அரசு கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயமொன்றை செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்த கனடிய எம்.பி.பொப்ரே புதன்கிழமை நண்பகல்வரை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டார். இது தொடர்பாக கனடிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எம்மா வெல்போட் தெரிவிக்கையில்;
இலங்கைக்கான விஜயத்தின்போது பொப்ரே விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
கனடியப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இலங்கையில் விரும்பத்தகாததும் ஏற்றுக்கொள்ளவும் முடியாத வகையில் இலங்கை திருப்பி அனுப்பியுள்ளது. அத்துடன் பொப்ரே விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவோ அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவோ இருந்தாரென இலங்கை கூறிக்கொள்வது முட்டாள்தனமான செயலாகும்.
பொப்ரே சட்டத்துக்கு ஏற்றவாறு நியாயமான முறையில் இலங்கைக்கு செல்வதற்கான விசாவை பெற்றுள்ள நிலையில், அவரை இலங்கைக்கு அனுமதித்திருக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.