வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் 1025 பொது முகாமைத்துவ உதவியாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நேற்று இடம் பெற்ற அமைச்சரவைத் தீர்மாணங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம சமர்ப்பித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி கிழக்கின் உதயம் வடக்கின் வசந்தம் ஆகிய வேலைத் திட்டங்களின் கீழ் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இந்த 1025 வெற்றிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் 306 பேர் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். எஞ்சியுள்ள 719 வெற்றிடங்களுக்கான பரீட்சை விரைவில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டார்.