June

June

ஆப்கானிஸ்தானில் கூடுதல் அமெரிக்கப் படையினர் தேவை: அமெரிக்க பாதுகாப்பு செயலர்

gatesgettyfora.jpgஆப்கா னிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான தமது நடவடிக்கையில், மேலும் கூடுதலாக பல்லாயிரக்கணக்கான துருப்புக்களை அங்கு அனுப்புவது அமெரிக்காவுக்கு சாதகமான ஒரு நிலைய ஏற்படுத்தும் என்று தாம் நம்புவதாக அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆப்கானில் 2001 ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு அவர்களால் நடத்தப்படும் தாக்குதல்கல் மிக அதிக அளவுக்கு தற்போதுதான் உயர்ந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் நடைபெறும் மோதல்களில் பொதுமக்களுக்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படாமல் இருப்பதற்கும் அதை குறைப்பதற்குமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக பிரஸ்லஸில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராபர்ட் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

அங்கு ஏற்படும் ஒவ்வொரு ஆப்கானியரின் உயிரிழப்பும் அங்குள்ள சர்வதேசப் படைகளுக்கு ஏற்படும் ஒரு தோல்வியே என்றும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர ஊடப் பிரச்சாரத்தினை சமாளித்து பதிலடி கொடுக்கும் முகமாக அங்கு தமது தரப்பிலிருந்து பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடுதாலன பணமும் மனித சக்தியும் செலவழிக்கப்படும் என்று ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரீ.எம்.வி.பி உறுப்பினர்கள் இருவர் சு.கவில் இணைவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாநகர அரசியல் துறைப் பொறுப்பாளரும், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான வெலிங்டன் ராஜேந்திர பிரசாத் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு மாநகர உறுப்பினர் நமசிவாயம் கருணானந்தம் ஆகிய இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலகி சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளனர்.

தாம் இருவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து சுய விருப்பத்தின் பேரில் விலகிக் கொள்வதாக கட்சியின் செயலாளர் ஏ. கைலேஸ்வரராஜா ஊடாக கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்தி மட்டக்களப்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவே சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளதாக இவர்கள் தெரிவித்தனர்.

மீட்சிப் பாதையில் இந்திய பொருளாதாரம்: புதிய புள்ளிவிபரங்கள்

fordindia.jpgபொரு ளாதார வீழ்ச்சியிலும் இந்திய உற்பத்தி துறை சிறிய வளர்ச்சி கண்டுள்ளது இந்தியப் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான பாதையில் செல்வதான எதிர்பார்ப்பை, இந்தியத் தொழில்துறை உற்பத்தி பற்றிய புதிய தரவுகள் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 4 மாதங்களில், முதலில் வந்த மூன்று மாதங்களில், தொழில்துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்திருக்க, ஏப்ரலுக்கான உற்பத்தி கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 1. 4 வீதம் அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி தொடர்ந்தும் பலவீனமாக இருக்கும் நிலையில், இந்த உற்பத்தி அதிகரிப்புகளுக்கு உள்நாட்டுத் தேவைகளே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். வளரும் பொருளாதாரங்கள், மீட்சியடைய ஆரம்பித்துவிட்டன என்பது தொடர்பில் சீனாவில் இருந்து கிடைத்த சமிக்ஞைகளுக்கு மேலதிகமாக தற்போது இந்த தகவல்களும் வந்துள்ளன.

குர்ஆன் மத்ரஸாவின் சான்றிதழ் வழங்கும் விழா

மள்வானை காந்தி வளவ்வ ஸஹீத் ஹாஜியார் மாவத்தையில் அமைந்துள்ள அல் முஸ்தபவிய்யா குர்ஆன் மத்ரஸாவின் முதலாவது சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று பி.ப. 4.00 மணிக்கு மத்ரஸா முற்றவெளியில் நடைபெறவுள்ளது. மத்ரஸாவின் உஸ்தாத் தக்கியாவின் பேஷ் இமாமுமான அல் ஹாபிழ் அல் ஆலிம் மொகமட் றில்வான் தலைமையில் இது நடைபெறும். நான்கு வருட பயிற்சியை பூர்த்தி செய்த எட்டு மாணவர்கள் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்படவு ள்ளனர்.

கம்பஹா மாவட்ட உயர் நீதிமன்ற நீதவான் அல்ஹாஜ் எம். எம். ஏ. கபூர் பிரதம அதிதியாகவும், பேருவளை அல்முஸ்தபவிய்யா பேஷ் இமாம் மெளலவி அல்ஹாஜ் ஏ. சீ. எம். முபாரக் பிரதம பேச்சாளராகவும் சமூக சேவையாளர் அல்ஹாஜ் எம். எச். ஏ. ஸஹீத், சமாதான நீதவானும் ஆங்கில ஆசிரியருமான ஹனபி ஆகியோர் உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்துகொள்வார்கள்.

இலங்கையில் முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் வேண்டும்: ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்

HRW Logoஇலங் கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களை வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதித்தால் அம்மக்கள் வெளியே சென்று தங்கத் தயாராக இருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு முட்கம்பி வேலிகளுக்குள் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் வெளியேசெல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவித்திருக்கிறது.

இலங்கையில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் மக்களில், 10 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட மக்கள் தொகுதியினர் அந்த முகாம்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இவர்களில் கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டால் இந்தப்பகுதிகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் சென்று தங்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

முல்லை மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரம் கோரல்

முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை (முல்லைத்தீவு மாவட்டக் கிளை) இதற்கான வேண்டுகோளை விடுத்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சங்கத்தின் தலைவர் எம். எச். எம். இப்ராஹிம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களாகிய நாம் பல மாவட்டங்களிலும் வாழ்கின்றோம். அந்த குடும்ப விபரங்கள், அரச ஊழியர்கள், உலமாக்கள் போன்றோரிடமிருந்து விபரங்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அனுராதபுரம், கண்டி, கம்பஹா மற்றும் களுத்துறை போன்ற மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் விபரங்கள் கட்டாயம் திரட்டப்பட வேண்டியுள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் படிவங்கள் பெற்ற குடும்பத் தலைவரோ/ தலைவியோ, உலமாக்களோ, அரச ஊழியர்களோ அல்லது இதுவரையும் விண்ணப்பங்கள் கிடைக்காதவர்களோ 0718232462, 0714494040, 0312226710 இவர்களுடன் தொடர்பு கொண்டு விபரங்களை பெற்று 17ம் திகதிக்கு முன், ஹிஜ்ரா மாவத்தை, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர்: முதல்வரிடம் உறுதி

karunanithi.jpgதமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என தமிழ் திரைப்பட சீரமைப்பு குழுவினர் முதல்வர் கருணாநிதியிடம் உறுதியளித்துள்ளனர். தமிழ் திரைப்பட சீரமைப்பு குழவினர் சென்னை தலைமை செயலகத்தில் முதல் முறையாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனை திருப்தியளிப்பதாக கூறிய அவர்கள் தமிழ் திரைப்படங்களுக்கு இனிமேல் தமிழில் பெயர் வைக்கப்படும் என உறுதியளித்தனர்.

முதல்வரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அபிராமி ரங்கநாதன், தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கப்படும் என உறுதியளித்தார்.
 

66 பொலிஸ் உயர் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம்

பாதுகாப்பு அமைச்சினதும் பொலிஸ் ஆணைக்குழுவினதும் பரிந்துரைகளுக்கமைய 66 பொலிஸ் உயரதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி கிளிநொச்சி பிரிவுக்கும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள் முதலானோர் பல்வேறு இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

திருகோணமலை நடவடிக்கை பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய எஸ். டபிள்யூ. எம். ரீ. பி. சமரக்கோன் கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பிரதிப் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு நகர போக்குவரத்துப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகராகப் பணியாற்றிய ரி. கணேசநாதன் அநுராதபுரம் போக்குவரத்துப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய கே. அரசரட்ணம் குற்றப்பிரிவின் பதில் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவைப் பாதுகாப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய ரீ. எம். என். ஹமீட் தூதரகப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உறுதிமொழிகளை நிறைவேற்ற ராஜபக்ஸவை வலியுறுத்துவோம்: ப.சிதம்பரம்

08chidambaram.jpgஇலங் கைத் தமிழர்களை மீண்டும் அவர்களது இருப்பிடங்களில் மீண்டும் குடியமர்த்துவது, சமவுரிமை அளிப்பது உள்ளிட்ட உறுதிமொழிகளை ராஜபக்ஸ நிறைவேற்ற தொடர்ந்து இந்தியா வலியுறுத்தும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் இதைத் தெரிவித்தார். ”ராஜபக்ஸ தனது உறுதிமொழிகளை நிறைவேற்றுவார் என்று இப்போது வரை நம்புகிறோம். பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கையில் தமிழர்கள் சமவுரிமை பெறுவது தான் எங்களது நோக்கம்” என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

அகதிகளை முகாம்களில் தடுத்து வைத்திருப்பதை ஆட்சேபித்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

02supreme.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை,  முகாம்களில் தடுத்து வைத் திருப்பது அடிப்படை உரிமை மீறல் எனத் தெரிவித்து, அதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மனுவை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து சார்பில் சட்டத்தரணி நிலாந்தி டி.சில்வா நேற்று உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை இடம்பெயர்ந்து கொடிகாமம் மற்றும் வவுனியா முகாம்களில் தங்கியுள்ள ஐவர் சார்பில், சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா, அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்றுமுன்தினம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஜெகத் பாலபட்டபென்டி, சந்திரா  ஏக்கநாயக்கா ஆகியோரைக்கொண்ட ஆயம், ஆட்சேபனைகளை எதிர்வரும்  பதினேழாம் (17) திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.                                                             

மாற்றுக்கொள்கை நிலையத்தின் மனு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள பல்லாயிரக் கணக்கான  பொதுமக்கள் நலன்புரி நிலையங்களில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. யுத்தத்தினால் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் உள்ளவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அவசரகாலச்சட்டத்தின் 19(1) என்ற விதியின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். இது சட்ட விரோதமான செயற்பாடு. இதனால் அந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன.

அரசமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் சுதந்திரம், சம அந்தஸ்து, பொதுச் சுதந்திரம் என்பன இவ்வாறான தடுத்துவைத்தல் மூலம் மீறப்பட்டுள்ளன.
இவர்கள்  சுதந்திரமான முறையில் வெளியில் நடமாட தடைவிதித்திருக்கும் நடைமுறைக்கு எதிராக ஒரு இடைக்கால உத்தரவை நீதிமன்றம் விடுக்கவேண்டும்  என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

கொடிகாமம், வவுனியா ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்தவர்களில் ஐவர் சார்பாக சட்டத்தரணி கௌரிசங்கரி தவராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. பிரஸ்தாப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் தமது ஆட்சேபங்களை எதிர்வரும் 17 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கொடிகாமம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள மாணிக்கராஜா சிவபாக்கியம், சோபிகா சுரேந்திரநாதன், வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஜெயராணி சுரேந்திரநாதன், பொன்னுச்சாமி சுரேந்திரநாதன், நேசனா சுரேந்திரநாதன் ஆகியோர் சார்பில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர்களின் உறவினரான சட்டத்தரணி அன்னபாக்கியம் சிதம்பரப்பிள்ளையின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக யாழ்.அரச அதிபர், தென்மராட்சி பிரதேச செயலர், யாழ்.படைகளின் தளபதி, பொலிஸ்மா அதிபர், சட்டமா அதிபர், பட்டாணிச்சிப்புளியங்குளம் கிராம சேவையாளர், வவுனியா பிரதேச செயலர், வவுனியா அரச அதிபர், வவுனியா சைவப்பிரகாச நலன்புரி நிலைய கிராம சேவையாளர், வன்னி படைகளின் தளபதி, நலன்புரிநிலைய இணைப்பதிகாரி ஆகியோர் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.