June

June

ஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினம் World Refugee Day – புன்னியாமீன்

civiling_fleeng3.jpgஜூன் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினமாக World Refugee Day நினைவுகூரப்படுகிறது.  ஆரம்பத்தில் ஜூன் 20 ஆபிரிக்க அகதிகள் தினமாகத்தான் Africa Refugee Day  நினைவு கூரப்பட்டது. பின்னர் இத்தினமானது  2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் United Nations General Assembly  சிறப்புத் தீர்மானமொன்றின்படி,  ஆபிரிக்க அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக,  உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி அகதிகளாக தாம் வசிக்கும் நாட்டினுள்ளும்,  பிற நாடுகளுக்குள்ளும் இடம்பெயர்ந்து பல்வேறு துன்பங்களுக்குள்ளாகி வாழ்ந்துவரும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இத்தினத்தின் முக்கியமான நோக்கமாகும்.

உறவுகளை இழந்த மனிதன் அனாதை! சொந்த தேசத்தை இழந்தவன் அகதி! எனக் கூறுவார்கள். இங்கு தேசம் எனும்போது தான் வாழும் பிரதேசத்தை விட்டு அகன்ற நிலையையும் சுட்டிக் காட்டுவதாக இருக்கும். எனவே, அகதி எனும் பதத்துக்கு ஒரு திட்டவட்டமான வரையறை விதிக்க முடியாது. இத் தினத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும்  பல்வேறு போர்களால் அரசியல்,  சமூகச் சூழல்களால் அகதிகளாக அல்லலுறும் அகதிகளை நினைவு கூரும் வகையில் கூட்டங்கள்,  ஆர்ப்பாட்டங்கள்,  கருத்தரங்குகள்,  இசை நிகழ்ச்சிகள்,  நினைவஞ்சலி நிகழ்வுகளெனப் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன..

அகதி என்பது,  இனம்,  சமயம்,  தேசிய இனம்,  குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். 1951 ஆம் ஆண்டின் அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு அகதிகள் பற்றி மேல் குறிப்பிட்டவாறு வரைவிலக்கணம் தருகிறது. அகதி என்ற கருத்துரு,  மேற்படி உடன்பாட்டின் இணைப்புக்கள் மூலமும்,  ஆபிரிக்காவிலும்,  லத்தீன் அமெரிக்காவிலும் நடைபெற்ற பிரதேச மாநாடுகளிலும் விரிவாக்கம் பெற்றது. இதனால்,  சொந்த நாட்டில் இடப்பெறும் போர் அல்லது வேறு வன்முறைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுபவர்களும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டது. தன்னை அகதியாக ஏற்றுக்கொள்ளும்படி விண்ணப்பிக்கும் ஒருவர்,  அகதித் தகுதி கோருபவர் எனப்படுகின்றார்.

அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்பாடு என்பது அகதி என்பவர் யார் என்பதையும்,  அவர்களின் உரிமைகளையும்,  புகலிடம் கொடுத்த நாடுகளின் பொறுப்புகளையும் வரையறை செய்த அனைத்துலக உடன்பாடு ஆகும். இது டிசம்பர் 4,  1952 அன்று டென்மார்க்கில் முதலில் ஏற்புறுதி செய்யப்பட்டது. இதுவரை 147 நாடுகள் இந்த உடன்பாட்டை உறுதிசெய்துள்ளன. இரண்டாவது உலகப் போரைத் தொடர்ந்து,  கிழக்கு ஐரோப்பாவில் இருந்து ஏராளமானவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்தே அகதிகள் ஒரு சட்டபூர்வமான குழுவாக வரையறுக்கப்பட்டனர். அகதிகள் பாதுகாப்புத் தொடர்பான ஒருங்கிணைப்பு வேலைகளைச் செய்வது,  அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) ஆகும். இந்நிறுவனம் 2006 இல் உலகிலுள்ள மொத்த அகதிகள் தொகையை 8.4 மில்லியன் எனக் கணக்கிட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க அகதிகள் மற்றும் குடிவருவோருக்கான குழு உலகின் மொத்த அகதிகள் தொகை 12, 019, 700 என்கிறது. அத்துடன் உள்நாட்டிலேயே அகதியானோர் உட்பட போரினால் இடம்பெயர்ந்த மொத்த அகதிகள் 34, 000, 000 எனவும் இக்குழு மதிப்பிட்டுள்ளது. 2009 ம் ஆண்டு ஜுன் மாதத்தில் பீ.பீ.ஸி உலக சேவை வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி மோதல்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான துன்புறுத்தல்கள் காரணமாக உலகில் சுமார் 42 மில்லியன் மக்கள் தமது குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையம் மதிப்பிட்டுள்ளது என செய்தி வெளியிட்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் மோசமடைந்துவரும் பாதுகாப்பு நிலைமை காரணமாக குறைந்த அளவிலானோரே தமது குடியிருப்புகளுக்கு திரும்ப முடிந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்த்தானுகராலயம் தெரிவிக்கின்றது. அகதிகளை பராமரிப்பதற்கான பிரதான பொறுப்பு அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் மீதே சுமத்தப்படுவாகவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது தென்னாபிரிக்காவே அதிக அளவான தஞ்சமடைவோரின் விண்ணப்பங்களை பெறுகின்றமையும் இந்த எண்ணிக்கை அமெரிக்காவை விட நான்கு மடங்கு அதிகமானதென்பதும் குறிப்பி்டத்தக்கது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR)  அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும்,  ஆதரவளிப்பதற்கும்,  அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். 14 டிசம்பர் 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ் அமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. இவ்வமைப்பானது ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம் மற்றும் சர்வதேச அகதிகள் அமைப்பின் வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954 இலும் 1981 இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையம் United Nations High Commissioner for Refugees (UNHCR) வரையறுத்துள்ளபடி,  அகதிகள் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுகள்,  அகதிகள் தாமாகவே சொந்த நாட்டுக்குத் திரும்புதல்,  குடியேறிய நாட்டிலேயே கலந்துவிடுதல்,  மூன்றாம் நாடு ஒன்றில் குடியேற்றுதல் என்பனவாகும். 2005 ஆம் ஆண்டு நிலையின் படி மிக அதிகமான அகதிகள்,  பாலஸ்தீனப் பகுதிகள்,  ஆப்கனிஸ்தான், ஈராக்,  மியன்மார்,  சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆகும். உள்நாட்டில் இடம் பெயர்ந்தோரை அதிகமாகக் கொண்ட நாடு சூடான் எனப் படுகின்றது.

இலங்கையிலும் அகதிகள் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. இலங்கையில் உள்நாட்டினுள்ளே எத்தனை பேர் அகதிகளாக உள்ளார்கள் என்ற சரியான புள்ளிவிபரம் வெளியிடப்படாவிடினும்கூட,  கணிசமான எண்ணிக்கையினர் அகதிகளாக இருக்கலாம் என கருத இடமுண்டு.

2007ஆம் ஆண்டு அகதிகள் நாளையொட்டி தமிழர்களின் அகதி வாழ்க்கை குறித்த அறிக்கை ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள்
வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கைப் பிரகாரம் வட பகுதியிலிருந்து ஏப்ரல் 2006 முதல் 2007ஆம் ஆண்டு வரை 3 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையம் தெரிவித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையில் ஒரு மிகக் குறிப்பிட்ட காலத்திலேயே மிகப் பெரும் தொகையான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையின் போது 3, 50, 000 பேர் தமிழர் தாயகத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட சிங்கள பொதுமக்களுக்கு அனைத்துலக உதவியுடன் நிரந்தரமான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. பெருந்தொகையான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களோ இன்னமும் தற்காலிக முகாம்களில்தான் வசித்து வருகின்றனர். தமிழ் மக்களுக்கான ஆழிப்பேரலை நிதி உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தடுத்துவிட்டது. மழையாலும் வெள்ளத்தாலும் அந்த மக்கள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் தமிழர் தாயகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் அனைத்துத் தமிழர்களுமே ஒரு முறையேனும் இடப்பெயர்வுக்குள்ளாகி இருக்கின்றனர் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும்,  1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளால் கொழும்பிலிருந்தும் தமிழர் தாயகத்திலிருந்தும் பெருந்தொகையான தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்றும் கூறப்பட்டிருந்தது.

அதேநேரம்,  1990களில் வட புலத்திலிருந்து முஸ்லிம்கள் அப்பிரதேசத்திலிருந்து துரத்தப்பட்ட நேரம் சுமார் 1இலட்சம் அளவில் இன்னும் அகதிகளாவேயுள்ளனர். எமது இலங்கiயில்  30ஆண்டு யுத்தத்தால் சொந்த மண்ணிலேயே அகதிகளானோரும்,  அகதிகளாகப் புலம் பெயர்ந்தோரும் அனாதைகளானோரும் இலட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும்,  ராணுவத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தத்தினால் இலங்கையில் இருந்து தமிழர்கள் அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டிலும் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 1983-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகளில் கடும் சண்டை நடந்தது. அப்போது 1 லட்சத்து 34 ஆயிரத்து 53 பேர் அகதிகளாக தமிழ் நாட்டுக்கு வந்தனர் எனக் கூறப்பட்டது. இவர்கள் அனைவரும் ராமேஸ்வரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 117 முகாம்களில் 75, 738 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. மறுபுறமாக 2009ஆம் ஆண்டு வட புலத்தில் நடந்த இறுதி யுத்தத்தின் போது சுமார் 3இலட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாகியுள்ளனர்.

அகதிகளின் பொதுவான வாழ்க்கை நிலையை நோக்கும்போது இவர்களின் அன்றாட அடிப்படை இன்னல்களையும் சிக்கல்களையும் உலக அரங்கிலும் உள்ளநாட்டு மக்கள் மத்தியிலும் புலப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படுவதே இந்த அகதிகள் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது எனலாம். இதனை வேறு வகையில் குறிப்பிடுவதாயின் வாழ்கை சிதைக்கப்பட்ட நிலையில் உயிர் வாழ்தல் ஒன்றைத் தவிர வேறு எந்த பலனும் இல்லாத அகதிகளின் மனக் குமுறல்களை வெளி உலகம் உணர வேண்டும் என்பதே இத் தினத்தின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.. ஆனால் உலகம் உணர்ந்ததா என்பது கேள்விக் குறியே! அழகான இச்சிறு கோளினைச் சீரழித்து வரும் அனைத்து யுத்தங்களுமொழிந்து,  உலகமெங்கனும் சமாதானமும்,  அமைதியும் ,  இன்பமும் மலர்ந்திட, அனைத்து அகதிகளின் வாழ்விலும் நல்ல ஒரு விடிவு காலம் வர இந்த உலக அகதிகள் தினம் உதவியாக இருக்குமெனில் சந்தோஷமே!!

ஊவா மாகாண தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இரு குழுக்கள் – சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர் தலைமையில் நியமனம்

uwa_provinces_and_districts.pngஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஐ.ம.சு. முன்னணி சார்பில் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவர் தலைமையில் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்படி பதுளை மாவட்டத்துக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தலைமையின் கீழ் ஒரு குழுவும் மொனராகலை மாவட்டத்துக்கு மின்வலு, எரிசக்தி அமைச்சர் டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தலைமையில் ஒரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு குழுக்களிலும் தென் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் எம்.பி.க்கள்,  முதலமைச்சர்கள் ஆகியோரும் அடங்குவதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு : குலன்

Pirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_Time

வைகாசி 17ல் பிரபாகரன் இறந்து பின் பிறந்து வைகாசி 19ல் மீண்டும் இறந்தார் என்பது அரசசெய்தி. பிரபாகரன் இறக்கவில்லை என்பது புலம்பெயர் புலிகளின் செய்தி. இன்றைய பிரச்சினை பிரபாகரன் பிறந்ததோ, இறந்ததோ அல்ல. பிரபாகரனால் என்ன நடந்தது என்பதுதான் பிரச்சனை. சரி அவர் உயிருடன் இருந்தால் வரும் போது வரட்டும். பிரபாகரனின் புலிப்பிறப்பும் நடப்பும் இறப்பும் எமக்கும் எம்சமூகத்திற்கும் சிலபாடங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

என்றும் இறந்தகாலமே எதிர்காலத்தின் திறவுகோல் என்பதால் இறந்தகாலத்தை திருப்பிப் பார்க்க வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. ஆனால் பழய பல்லவி பாடிக்கொண்டு இறந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தில் இறந்தகாலத்தின் பிழைகளைத் திருத்துவதும், நல்ல அனுபவங்களை எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்வதுமே மனிதனுடைய வாழ்க்கை மட்டுமல்ல, ஓரினத்தின் வாழ்வையும் மேம்படுத்தும். என்சிற்றறிவுக்கு எட்டியதை எம்மக்களின் போராட்டமும் எதிர்காலமும் பற்றி அக்கறை கொண்டவன் என்ற வகையில் ஒரு கருத்துக்களம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இக்கட்டுரை வரையப்படுகிறது. புலம்பெயர்ந்த இளையவர்களுக்கு எமது போராட்டவரலாறு முழுமையாகத் தெரியாத காரணத்தினால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என பிழையான வழியில் போய்விடக் கூடாது என்ற நோக்கத்திலுமே மிக சுருக்கமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

புலிகளின் ஆரம்பம் இன்றைய விளைவும் – முற்குறிப்பு
தமிழ்மக்கள் மேல் ஏற்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தின் விளைவாக பல இளைஞர்கள் தனிநபர் தீவீரவாதிகளானார்கள். தனித்து நின்றி போராடுவதனால் பயனில்லை என உணர்ந்தவர்கள் குழுக்களானார்கள். காட்டிக்கொடுப்போர் என்று துரோகிப்பட்டம் கட்டி பலதமிழர்களே கொல்லப்பட்டனர். இதில் முக்கியமாக கதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளான இணுவிலைச் சேர்ந்த இரு சண்முகநாதன்கள், பஸ்தியாம்பிள்ளை முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். பொலிஸ் இலாகாவில் வேலைசெய்பவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்துதானே ஆகவேண்டும். அது அவர்கள் தொழில்தர்மம். அவர்கள் மாறுவதற்கோ சிந்திப்பதற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படாது கொல்லப்பட்டது எவ்வகையில் நியாயானமது? வாங்கும் சம்பளத்துக்கு மேலாக தமிழ் இளைஞர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிய பஸ்தியாம்பிள்ளை தண்டிக்கப்பட வேண்டியவர்தான். துரோகிகள் என்று கொன்று குவிக்கப்பட்டவர்களுக்கு போதிய சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டனவா என்பது கேள்விதான்.

பின் துரோகிகள் என்பது இனத்துக்குரிய பதமாய் இன்றி தனிப்பட்ட முறையில் தமக்குப் பிடிக்காதவர்கள் எல்லோரும் துரோகிகள் ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அண்ணனுக்குத் தம்பியும் தம்பிக்கு அண்ணனுமாய் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரை ஒருவர் கொன்ற சரித்திரம் எம்மிடையே பலவுண்டு என்பது வேதனையே. தமிழின அழிப்பு என்பது எதிரிகளால் மட்டுமல்ல தமிழர்களாலேயும் நடத்தப்படத் தொடங்கியதன் விளைவைத்தான் நாமின்று அனுபவிக்கிறோம். இப்படியான கொலைகளுக்கெதிராக ஒரு குரல்கூட வெளிவரவில்லை. அப்படி எழுந்திருந்தால் கொலை செய்யும் இரும்புத் துப்பாக்கி கூட ஒருகணம் சிந்தித்திருக்கும். தமிழ் படுகொலைகள் தமிழ்மக்களால் ஆதரிக்கப்பட்டனவா? ஆதரிக்காவிட்டால் பிழையெனக்கண்ட போது ஏன் தட்டிக்கேட்கவில்லை? சுடப்பட்ட அத்தனைபேரும் துரோகிகளா? யாரை யாரும் கொல்லலாம் துரோகி என்றும் தூக்கலாம். தமக்கு மட்டும் துரோகி என்ற பெயர் கட்டப்பட்டு விடுமே என்ற பயமா? இதை எல்லா இயக்கங்களும் செய்தன. இதில் முக்கியமானவர்கள் புலிகள் இன்று எம்மினத்துக்கே துரோகியாகிப்போய் நிற்கிறார்கள். எம்மியக்கங்கள் எம்மினத்தில்தானே சுட்டுப்பழகியது.

புலிகள் இன்று தமிழினத்தின் துரோகிகளா? தியாகிகளா?
இக்கேள்விகளுக்கு, கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? யார் எதை எப்படி செய்தார்கள் என்பது முக்கியமில்லை. முடிவு என்ன? எம்மினத்தின் இன்றைநிலை என்ன என்பதே முக்கியமானது. எம்மினத்தில் 60 000 பேருக்கு மேல் கொன்றும், கொல்வதற்கு வழிவகுத்தும் நின்றவர்கள் புலிகளும் சில இயக்கங்களும். இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

சிங்களவர்கள் தமிழரைக் கலவரத்தில் கொன்றால் இது இனப்படுகொலை. மக்கள் கொடிபிடித்தார்கள் கோசம் போட்டார்கள். ஆனால் ஒரு இயக்கத்தை மற்றைய இயக்கம் கண்மூடித் தனமாக இராணுவத்தை விட மோசமாக கொன்றபோது ஏன் வாழாதிருந்தீர்? இது எப்படித் தியாகமானது?

சுமார் 500 000க்கு மேல் தமிழர்களை வெளிநாடுகளில் அகதியாக்கி, தம்சொந்த மண்ணை விட்டு அவனியெங்கும் அலையவிட்டு, அவர்களிடமே ஏமாற்றிப் பணம்பிடுங்கி வாழ்ந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

மக்களை ஒருபோராடும் சக்தியாகக் கருதாது அவர்களை பதுங்கு குழிகளாகவும், மறைவிடங்களாக மட்டும் பயன்படுத்தி, போராடும் வலுவை இழக்கச்செய்து, பங்காளிகளாக்காது பார்வையாளராக வைத்திருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஈரோசைத்தவிர அனைத்து சிறு இயக்கங்களில் இருந்து பெரிய இயக்கங்களாக வளர்ந்த புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் வரை கொன்று குவித்தது யார்? அவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஒவ்வொரு இயக்கமும் தம்முள் ஒருவரை ஒருவர் கொன்று தீர்த்தனவே அவர்கள் தியாகிகளா? துரோகிகளா? யாருக்கு விரல்விட்டுக் காட்டத் துணிவிருக்கிறது.

ஆயுதம் ஏந்தியவனால் தான் பிரச்சனை என்றால் ஆயுதமே தொட்டுப்பார்க்காத அரசியலில் மட்டும் ஈடுபட்ட அரசியல்வாதியில் இருந்து ஒன்றுமே அறியாத அப்பாவித்தமிழர்கள் வரை கொன்று போட்டவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

எம்மினத்தவனைக் கொல்லத் துப்பாக்கி தூக்கும் போது இவன் என்னினத்தவன் என்று ஒரு செக்கன் கூட சிந்திக்காது நிந்தித்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

அடித்துவிட்டு ஒளிப்பதற்கே மக்களைப் பயன்படுத்தியது மட்டுமல்ல, அவர்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் அருகில் நின்றும் தம்மை மட்டும் பாதுகாத்தவர்களை எப்படித் தியாகிகள் என்பது?

மண்மீட்பு மண்மீட்பு என்றவர்கள் மக்களை, மக்கள் கருத்துக்களை என்றும் காது கொடுத்துக் கேட்டதில்லை. மக்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் ஒடி ஒளித்தார்கள். மக்களை தம்பாதுகாப்புக்காக கேடயமாய் பாவித்தார்கள்? இவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? மண் மண் என்றார்களே இன்று மண் எங்கே? ஒரு மண்ணாங்கட்டியைக் கூட மீட்க முடிந்ததா? மண் என்பது இருப்புமட்டுமே அன்றி மக்களாகாது. மக்களில்லாத மண்ணை வைத்து என்ன செய்யுமுடியும்? மண்ணின் பெயரைச் சொல்லிச் சொல்லி மக்களை அழிக்கக் காரணமாக இருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இறுதியாகப் புலிகளால் எமக்கு விளைந்தது என்ன? மக்கள் போராட்டம் என்றாலே பயப்படும் மனநிலைக்கும், தன்னம்பிக்கைச் சிதைவுக்கும், அடிமைத்தனத்தை ஆதரிக்கும் நிலைக்கும், கல்வி செல்வச்சீரழிப்புக்கும் எம்மக்களை உள்ளாக்கி, இறுதியில் விடுதலை என்ற சொல்லை எம் இருதலைமுறைகள் உச்சரிக்கவே பயப்படும் அளவுக்கு செய்துவிட்டு மறைந்த புலிகள் துரோகிகளா? தியாகிகளா?

மற்றவர்களை, தாம் விரும்பாதவர்களை, மற்ற இயக்கங்களை எல்லாம் துரோகிகள் என்று கூறிக்கூறியே தமிழ்மக்களின் உண்மைத் துரோகிகளாய் போனவர்கள் யார்?

இலங்கையரசின் காலத்தில் பேச்சு சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் இருந்தது. ஆனால் புலிகள் ஆட்சியில் இச்சுதந்திரமும் பறிக்கப்பட்டது. எதிரியைக் கூட நல்லவனாக்கியது புலிகளே. இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

என்கண்ணில் மக்கள் மட்டுமே பார்வையாளராக இருந்து தற்கொலை செய்து கொண்ட தியாகிகள்.

உயிருடன் மனிதனை ரயர்போட்டுக் கொழுத்த எதிரிக்குப் பழக்கிவிட்டது யார்? வீட்டில் வைத்துப்போடுதல், கவர் பண்ணும்போது போடுதல் போன்றவற்றில் ஈடுபட்டது யார்?

உலகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தன, வென்றன. எந்த இயக்கமும் தற்கொலைத் தாலிகட்டிச் சென்றதில்லை. ஆனால் மக்களின் போரட்ட உந்துசக்தியாக இருக்கும் இளைஞர்களை தற்கொலைக்கு தாலிகட்டி வழியனுப்பும் ஒரு கோழைத்தனமான விடுதலை அமைப்பு மன்னிக்கவும் மாவியா அமைப்பு புலிகளே. ஒவ்வொரு போராளியின் மனதிலும் எதிரியைக் கொல்லுவேன் வெல்லுவேன் எனும் மனத்திடம் தளர்ந்து அடிப்பேனா அன்றி சயனைட்டைக் கடிப்பேனா எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். புலிகள் தம்மைமட்டும் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்கொலைக் கலாச்சாரத்தை வளர்த்து ஒரு இனத்தையே தற்கொலை செய்யத் தூண்டியிருக்கிறார்கள்

இனியாவது சாப்பிடமட்டுமே வாய்திறப்பதை விட்டு விட்டு ஈழத்தமிழ் மக்களே! உண்மைக்காகவும் உரிமைக்காகவும் வாய் திறப்பீர்களா? எப்போ உங்கள் மௌனம் கலையும். சரியான மக்கள் நலன்விரும்பும் அமைப்புகளை உண்மை விடுதலை விரும்பிகளை இனங்காணுவீர்களா? உங்களைக் காக்கிறோம் என்று அரசில் இருந்து புலிகள் வரை இன்னும் எத்தனை எத்தனையோ அமைப்புகள் வரப்போகின்றன. உங்கள் அனுவங்களை வைத்து அடையாளம் காண்பீர்களா? அல்லது கெடுகிறேன் பிடிபந்தயம் என்று முன்புபோல் மீண்டும் மீண்டும் வதைபடப் போகிறீர்களா என்பதையும் நீங்களே தீர்மானியுங்கள்.

புலி இயக்கம் பிரபாகரனால் மட்டுமா ஆரப்பிக்கப்பட்டது?
தனிநபராக பிரபாகரன் பேருந்து ஒன்றை தீயிட்டுவிட்டு மாணவர்பேரவையைச் சேர்ந்த சத்தியசீலன் இடம் உரும்பிராய்க்கு வந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார் என்றும் யூரியூபில் கூறியிருந்தார். அக்காலகட்டங்களில் சிவகுமாரனில் இருந்து தனிநபர் தீவிரவாதிகளே உருவாகியிருந்தார்கள். இருப்பினும் சிலஅமைப்புக்கள் தம்மாலியன்ற போராட்டங்களைச் செய்து கொண்டிருந்தனர். அவற்றில் மாணவர்பேரவை, இளைஞர் பேரவை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ரெலோ ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் என்பனவும் மிகப்பழமையான இயக்கங்கள். இவைபற்றிய வரலாறு எனக்குத் தெரியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.

நீர்வேலி வங்கிக் கொள்ளையிலேதான் கேபி விமலராசா எனும் ரியூசன் வாத்தியாரின் உந்துறுளியை பாவித்தார் என்ற காரணத்தால் விமலராசா சிறைபோனார். அவர் மாதகலிலுள்ள கடம்பவாதத்தை முகவரியாகக் கொண்டவர். இதனால் இவர் நோர்வேக்குப் போனபோது புலிகளின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். அப்போதும் இவர்தொடர்பில் கேபி வந்துபோவார்.

மாணவர்பேரவையைச் சேர்ந்தவர்கள், இளைஞர்பேரவை இரண்டாகி இளைஞர்பேரவை விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு புறப்பட்டவர்கள், தனிநபர் தீவீரவாதிகள் எனப்பலரும் ஒரு அமைப்பாகி மத்திய செயற்குழுவை அமைத்தார்கள். இளைஞர்பேரவையில் இருந்த உமாமகேஸ்வரன் தலைவராகவும் பிரபாகரன் இராணுவ ஆயுதப் பொறுப்புக்களையும் ஏற்றனர்.

புதிய புலி என்றார்கள், உட்பூசல்களில் பிரிந்தார்கள். பிரிந்தவர்கள் புளொட் என்றும் புதியபாதையுடன் புறப்பட்டனர். இவை ஆரம்பகாலமும், ஒருபக்கச்சார்பான தகவல் மட்டும்தான். இக்காலகட்டங்களில் ரெலோ ஈரோஸ் தம்பரிமாணங்களையும் வளர்த்துக்கொண்டது. உட்பூசல்கள் சகோதரப் படுகொலைகளாகப் பரிணாமம் பெற்றது. முக்கிய நோக்கம் திசைமாறியது. இதை ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் தமிழ்தேசிய விடுதலையை ஆரம்பித்தது பிரபாகரன் என்றும் அதன் ஏகபோக உரிமை அவருக்கே உண்டு என்றும் நம்புபவர்களுக்காகவே. அதுமட்டுமல்ல புலியியக்கம் தனியே பிரபாகரனால் மட்டும் உருவாக்கப்பட்டது என்பது தவறானதே.

யார் கெரில்லா, மாவியா?
ஒரு கெரில்லாவுக்கும் கொள்ளைகாரர், மாவியாக்களுக்கும் பலவித்தியாசம் கிடையாது. இவர்கள் அனைவரினதும் இயங்குதன்மை, செயற்பாட்டுத்திறன், நகர்வுகள், நகர்த்தல்கள் அனைத்தும் இரவுகளிலும், கூடுதலாக இரகசியமாகவும், உண்மை முகங்கள் மறைக்கப்பட்டும் இருக்கும். குறைந்த பொருட்செலவில் பெருவெற்றிகளையும், யாரும் எதிர்பாராவண்ணம் சடுதியான தாக்குதல்களையும் செய்வார்கள். அரசியலில் ஆர்வமும் பின்புல உறவுகளும் இருக்கும். ஆனால் வித்தியாசம் ஒன்றே ஒன்று மட்டும்தான் ”நோக்கம்” அதாவது மாவியாவானவன் என்றும் தன்சுயநலத்தில் மிக மிக கவனமாகவும், அக்கறையாகவும் இருப்பான். ஆனால் கொறில்லாவானவன் முக்கியமாக மக்களின் நலத்திலும், மக்களை நேசிப்பவனாகவும், மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவனாகவும் இருப்பான். இப்போ புலிகள் கெரில்லாக்களா? மாவியாக்களா? கெரில்லா தாக்குதல்கள் செய்பவர்கள் அனைவரும் கெரில்லாக்களாகிவிட முடியாது. சந்தணக் கடத்தல் வீரப்பன் பல கெரில்லாத் தாக்குதல்களைச் செய்தவன், இன்னுமேன் மக்களால் நேசிக்கப்பட்டவனும் கூட. ஆனால் இவன் ஒரு விடுதலைப் போராளியாகவோ கெரில்லவாகவோ இருக்க இயலாது. இங்கே புலிகள் மாவியாவா? கெரில்லாவா என்பதை வாசகர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

இனங்காணல்
இனங்காணல் என்பது ஒவ்வொரு மிருகங்களுடனும் ஏன் எல்லா ஜீவராசிகளுடனும் கூடிப்பிறந்த ஒன்றாகும். இது ஏன் தமிழர்களுக்கு மட்டும் இல்லாது போனது? நாலு ஆமியை சுட்டுவிட்டு 40 ஆமி என்று கொண்டாடும் போது மக்கள் புலிகளை அடையாளம் கண்டிருக்க வேண்டும் இது வெறும் வானவேடிக்கை என்பதை உணர்ந்திருக்க வேண்டும். சினிமா பார்த்து கீரோய்ஸ்சத்தில் (நாயகத்துவம்) வளர்ந்தவர்கள் நாயகமார்க்கத்தையே பின்பற்றுவர். மக்களும் கைதட்டி வரவேற்றனர். ஆமியைக் கொல்வதுதான் தமிழ்மக்களின் விடுதலையா? சரி இராணுவத்தை ஈழமண்ணில் இருந்து கலைத்து விட்டதும் எமக்கான விடுதலை கிடைத்துவிடுமா? அக்கேள்விகளும் இதற்கான வேள்விகளும் ஏன் நடக்கவில்லை?

ஒரு கெரில்லாவானவன் முக்கியமாக சகோதரப் படுகொலையைச் செய்யக்கூடாது. காரணம் அச்சகோதரனும் அவன் நேசிக்கும் மக்களின் ஒருவனே. இயலாக் கட்டத்திலோ பல அறிவுறுத்தல்கள் விளக்கங்களின் பின் சில கொலைகள் செய்யப்பட்டிருந்தால் கூட புலிகளை மன்னித்திருக்கலாம். எல்லோரும் தெரிந்து பிழைவிடுவதில்லை. விளக்கவின்மையும் தெளிவும் இல்லாமையே காரணம். சகோதரப் படுகொலைகள் நடைபெற ஆரம்பித்தபோது மக்களாவது தட்டிக்கேட்டிருந்தால் சிலவேளை புலிகள் திருந்தியிருக்கலாம். துப்பாக்கியால் மக்களிள் வாய்கள் பொத்தப்படும்போதே மக்கள் உணர்ந்திருக்க வேண்டும் இது சரியான விடுதலை அமைப்பா இல்லையா என்று. விடுதலை என்ற பெயரில் வளர்ந்த வளர்த்தெடுக்கப்பட்ட மாவியாக் கும்பல்தான் என்பதை இன்றைய நிலை உணர்த்தியுள்ளது. இன்னும் இப்படி பல எம்மத்தியில் உருவாகுவதற்குத் தயாராக உள்ளன. இவற்றை இனங்காண்பதற்கே இக்கட்டுரை முன்னுரிமை கொடுக்கிறது.

மாவீரர் தினத்தையோ பொங்குதமிழையோ ஒரு வெகுசனபோராட்ட நிகழ்வாகக் கொள்ள இயலாது. இது வெறும் வேடிக்கை மட்டுமே அன்றி வேறில்லை. மக்களை ஒரு போராட்ட சக்தியாக்கி அவர்களின் முன்னெடுப்புகளுக்கு பக்கபலமாக ஆயுதங்கள் இருந்திருந்தால் மக்கள் தமக்குரிய விடுதலையை வென்றெடுத்திருப்பார்கள். புலித்தலைமை முடிந்துவிட்டது புலிகள் அழிந்து விட்டார்கள் என்று நிம்மதியாக இருந்து விட இயலாது. தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் சுதந்திரம் உருவாகும் வரை போராட்டம் தொடரும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்தும் போராடவே பிறந்தன. ஒரு சின்னங்சிறிய வயிற்றுக்காக எறும்பு போராடுகிறது. நாம்…?

புத்திஜீவிகள் அன்று கொல்லப்படும் போது கைகட்டி மௌனியாய் சமூகம் இருந்தது. அன்று கூட ஒரு கண்டன ஊர்வலத்தையோ புலிகளுக்கெதிரான குரல்களையோ எழுப்பியிருந்தால் இன்று குறைந்தபட்சம் தமிழர்களுக்கு இந்த நிலைவந்திருக்காது. மக்களுக்காகப் போராடுகிறேன் என்று கூறும் அமைப்பு எப்போது மக்களின் குரல்களுக்கு மதிப்பளித்தது? அப்போது கூட மக்கள் ஏன் புலிகளை இனங்காணவில்லை. தெரிந்தும் தெரியாமல் இருந்தீர்களா? ஆகவே உங்களுக்கு இன்று கிடைத்த தண்டனை சரியானதா இல்லையா?

பிரோமதாசாவின் வேண்டுகோளுக்காவே அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்று அறியப்படுகிறது. சரி ஆயுதம் தாங்காது அரசியலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கிய திறமைசாலியான அமிர் கொல்லப்படும் போது கூட மக்களே வாய் மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள். அன்று துணைத்தளபதி அமிர்தலிங்கம் என்று வாயாரக்கத்திய உங்கள் வாய்கள் ஏன் அடைத்துப்போயின?

எதிரியென நீங்கள் கருதும் சிங்கள அரசுடன் புலிகள் சேர்ந்து பலசெயற்பாடுகளைச் செய்த போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? அப்போது தெரியவில்லையா புலிகளின் இயக்குதன்மை மாவியாக்கள் போல் அமைகிறது என்று? ஏன் இனங்காணவில்லை? எடுத்துக் கூறவில்லை. இன்று உள்ள கூத்தணிகளில் ஒருவரை விரல்விட்டுச் சுட்டிக்காட்டுங்கள் அன்றைய அமிருக்கு நிகராக இன்று வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ பேச்சுவார்த்தையையோ சட்டநுணுக்கங்களையோ அறிந்த அன்றி தமிழர்களின் நிலையை சரியான முறையில் எடுத்துரைக்கக் கூட ஒருமனிதரை? எல்லாவற்றுக்கும் காரணம் யாருமல்ல மக்களே நீங்கள் தான்..

மக்கள் மேல் குற்றச்சாட்டு
அப்பன் உழைத்துக் கொண்டுவர முழுக்குடும்பமும் சாப்பிட்டு வயிறாறும். அப்பன் இறந்தால் பெற்றோரின் பழிகளை சேர்த்து குடும்பவண்டியை இழுக்க மூத்தமகன் என்ற மாடு தயாராகி நிற்கும். குடும்பப் பெண்கள் பெண்கள் என்று யாரோ முன்பின்னறியா ஒருவனில் தங்கிவாழ பிறந்ததில் இருந்து தமிழ்பெண்கள் தயாராக்கப்படுகிறார்கள். இப்படியான ஒரு சமூகக் கட்டுமானத்தில் இருக்கும் மனிதர்களிடம் சுயசிந்தனையை எதிர்பார்ப்பது சரியா? இச்சமூகம் போராடும் குணாம்சங்கள் கொண்டதல்ல என்பதை புலிகள் அறிந்திருந்தார்கள்.

கலாச்சாரம் குடும்பம் என்று மற்றவர்களின் மூளையிலே சிந்திப்பார்கள். திருவள்ளுவர் சொன்னார், கம்பர் சொன்னார், லெனின் சொன்னார், மாக்ஸ், சே, மாவோ, தொல்காப்பியர், யேசு, புத்தன், கீதை என்று மற்றவர்களின் மூளையில் எம்மினம் சிந்தித்தது, வாழ்ந்தது வாழ்கிறது. எம்மக்கள் என்று புரட்சிகரமாக புதிதாக சிந்திக்கிறார்கள் என்ற நிலைவருகிறதோ அன்றுதான் எம்மக்கள் போராட்டத்துக்குத் தயாரானவர்கள் என்று கொள்ளலாம். எம்மக்கள் போராடத் தயாராக இருந்திருந்தால் புலிகள் பிள்ளை பிடிகாரர்களைப்போல் ஆள்பிடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எமது கலாச்சாரமும் சரி, அரசியல் போராட்ட சக்திகளும் சரி மக்களை சுயமாகச் சிந்திக்கவோ போராடவோ அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.

இன்றும் தலைவா உன்னைத் தலையென்று நம்பினோமே விட்டுவிட்டுப் போட்டாயே என்று ஒப்புச்சொல்லி மாரடிக்கும் நிலையில்தான் மக்கள் இன்றும் உள்ளார்கள். இவர்கள் போராட, தன்உரிமைகளை வென்றெடுக்க தயாரானவர்கள் என்று சொல்கிறீர்களா? பிரபாகரன் இறந்துவிட்டார் என்றதும் ஒரு சமூகமே ஆடிப்போய் ஏன் நின்றது? அடுத்து என்ன செய்வது என்று ஏன் முழிக்கிறது. இதை மறைக்க மீட்பர் பிரபாகரன் இருக்கிறார் வருவார் என்று நம்புகிறது. இது ஏன்? இது தன்னம்பிக்கை இல்லாத ஒரு சமூகத்தையே புலிகளும் மக்களும் அரசியலும் கட்டிவைத்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

புரட்சி என்பது புரளும் துப்பாக்கியான றிவோல்வர் போன்றவற்றில் இருந்து பிறப்பதல்ல. புரட்சியும் போராட்டகுணமும் மூளையில் இருந்தே பிறக்கிறது. துப்பாக்கி தூக்கும் ஒவ்வொரு போராளியின் மனத்திலும் நான் எதற்காகப் போராடுகிறறேன் என்ற தெழிவு இருக்கவேண்டும். புலிப்போராளிகளினது பல வாக்குமூலங்களை ஊடகங்களுடாகக் கேட்டும் போது பலதடமை வேதனைப்பட்டேன். ஆமிக்காரன் அடிக்கிறான் அனைப்கலைக்க வேண்டும். அண்ணை யோசிக்காதையுங்கோ நாங்கள் இருக்கிறம். சின்னப்புலிகள் சொன்னவார்த்தை இது. இவர்கள் நாட்டுக்காகப் போராடினார்களா? அண்ணைக்காகப் போராடினார்களா? இது ஒரு விடுதலை இயக்கமா? மாவியா கும்பலா?

போராட்டம் என்பது சமூக, பொருளாதார, சூழல் நிலைகளுக்கமைய மாறுபடும். ஒவ்வொரு கெறில்லாப் போராட்ம் என்றும் சூழல் காலநிலைகளுக்கேற்ப மாறுபட்டே ஆகும். சூழலுக்கு ஏற்ப போராடுபவன்தானே கெறில்லா? புலிகளும் புலம்பெயர்ந்த தமிழரிடம் போதிய பணம் வசதியுள்ளது என்ற சூழலை அறிந்து கொண்டுதான் போராடினார்களோ என்னவே? புலிகள் மக்களை தம்பதுங்கு குழிகளாகப் பாவித்தார்களே தவிர போராட்டம் சக்தியாக என்றும் பார்க்கவில்லை என்பதே உண்மை. அப்படி அவர்கள் மக்களைப் போராடுடம் சக்தியாகப் பார்த்திருந்தால் மக்களைப் போராடவிட்டுவிட்டு ஊக்கசக்தியாகவும் அவர்களைப் பாதுகாக்கும் சக்தியாகவுமே இருந்திருப்பார்கள். செய்தார்களா?

ஏன் இல்லை
ஒரு இறைமையுள்ள நாட்டில் இருந்த ஒருபகுதி பிரிந்துபோவதற்கு பலவரையறைகள் உண்டு. அதற்கு வெளிநாடுகளின் அனுசரணை என்பது மிகமுக்கியமானது. அன்ரன் பாலசிங்கத்துக்கு கூட இது தெரியவில்லை என்றால் பாவம் பிரபாகரனுக்கு இதுவற்றித் தெரிவதற்கு சந்தர்ப்பமே கிடைக்காது. தெருச்சண்டித்தனம் ஊர்சண்டித்தனம் போல் ஒருநாட்டைப் பிரித்துவிட முடியாது. உலகம் முழுவதும் தெருத்தெருவாய் கத்தினாலும் ஒர் இறைமையுள்ள நாட்டினுள் மற்றைய நாடுகள் தான்தோன்றித்தனமாக தமிழர்கள் கத்துகிறார்கள் என்பதற்காக ஊடுருவ முடியாது. அரசியலே தெரியாத புலிகளுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் இது எப்படித்தெரியும்?

புலம்பெயர்நாட்டுத் தமிழ்பெற்றோரே
இனம் இனவுணர்வு, மொழி மொழியுணர்வு என்பது முக்கியமானதும் எம்முடையானானதுமாகும். ஆனால் உங்கள் பிள்ளைகள் சரியான முறையில் சரியான வழியில்தான் அரசியலையும் போராட்டத்தையும் புரிந்திருக்கிறார்களா என்பது மிக மிக முக்கியமானது.

இவ்வளவுகாலமும் இலங்கைக்குள் ஈழம் என்று விழுந்த கொலைகள் இனி……..? என் சிற்றறிவுக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டியது எனது கடன். முடிவெடுப்பதும் வழிநடத்துவதும் உங்கள் திறன்.

புலம்பெயர் தமிழர்கள் பற்றி எமக்குக் கவலையில்லை: அனுர பிரியதர்சன யாபா

anura_priyadarshana_yapa_1806_press.jpgபுலம் பெயர் தமிழர்கள் பற்றி எமக்குக் கவலையில்லை எனவும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்குவது பற்றியே நாம் கவனம் செலுத்த வேண்டுமென அமைச்சரவைப் பேச்சாளர் அனுர பிரியதர்சன யாபா தெரிவித்துள்ளார்.

கடல் கடந்த ஈழ இராச்சியம் குறித்தோ அதனை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கும் சட்டத்தரணி உருத்திர குமார் பற்றியோ நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் இருந்து சிங்கள ராணுவத்தை திரும்ப பெறவேண்டும்: விஜயகாந்த்

vijayakanth.jpgஇலங்கை விவகாரம் தொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் சுமார் 3 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து வைப்பதைப்போல சிங்கள ராணுவ காவலில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தமிழர்களும், அங்குள்ள மனிதாபிமானிகளும் தங்களால் இயன்ற உதவி பொருட்களை சேர்த்து மெர்சி மிஷன் என்ற கப்பல் மூலம் அவசர உதவிக்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். சில ஆவணங்கள் சரியில்லை என்று வேண்டுமென்றே சாக்குபோக்கு சொல்லி இந்த நிவாரண கப்பலுக்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிவிட்டது.

இந்த நிவாரண கப்பல் இன்னும் நடுக்கடலிலேயே காத்துக்கொண்டுள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு இந்திய அரசின் மூலம் நடுக்கடலில் நிற்கும் நிவாரண கப்பலை இந்திய துறைமுகத்தில் உணவு, மருந்து பொருட்களை இறக்க வசதி செய்து கொடுக்கவேண்டும். பிறகு அவற்றை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய தூதரின் மேற்பார்வையில் வினியோகிக்க வேண்டும்.

முகாம்களில் திறந்த சிறைச்சாலையை விட மோசமான நிலையில் அடைபட்டு கிடக்கும் தமிழர்கள் உணவு மற்றும் சுகாதார வசதியில்லாததால் தினந்தோறும் செத்து மடிகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழர்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச்செல்ல வழிவகை காணவேண்டுமென்றும் சிங்கள அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.

கேப்டன் அலி (வணங்காமண்) நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு இறக்கி மக்களுக்கு அளிக்க வேண்டும் – கருணாநிதி

vanangaaman-captainali.jpgஇலங் கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனுப்பிய உதவிப் பொருட்களுடன் வந்த கப்பலில் இருந்து மருந்து மற்றும் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு இறக்கி மக்களுக்கு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கருணாநிதி எழுதியுள்ள கடித்ததை அமைச்சர் பொன்முடி நேரில் சந்தித்துக் கொடுக்கவுள்ளார்.

இலங்கையில் நடந்த போரில் காயமடைந்தும், வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டும் உள்ள லட்சக்கணக்கான தமிழர்கள் ராணுவம் அமைத்துள்ள திறந்த வெளி முகாம்களி்ல் அடைக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள பெண்களிடம் ராணுவ வீரர்கள் முறைகேடாக நடப்பது, இளைஞர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்று கொல்வதுமாக கொடுமைகள் நடந்து கொண்டுள்ளன. இந்த மக்களுக்காக ஐரோப்பா வாழ் தமிழர்கள் கேப்டன் அலி (வணங்காமண்) என்ற கப்பலில் 884 டன் உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இந்த கப்பலில் இருந்து உதவிப் பொருட்களை இறக்க அனுமதிக்காமல் இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் இந்தக் கப்பல் இப்போது இந்திய கடல் எல்லையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது. இந் நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு முதல்வர் கருணாநிதி ஒரு அவசர கடிதம் எழுதியுள்ளார். அதில்,

பாதிப்புக்கு உள்ளான மக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உதவுவதற்காக சர்வதேச சமுதாயம் நிவாரணப் பொருட்களை அளிப்பது வழக்கம். இதை தடுப்பது மனிதாபிமானமல்ல. எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு அந்தக் கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்களை இறக்குவதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் இவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை அமைச்சர் பொன்முடி டெல்லிக்கு விரைந்து அதை நேரடியாக கிருஷ்ணாவிடம் வழங்கவுள்ளார்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்தும் இன்று காலை கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு புத்திமதி கூறுவதை விட உதவி செய்வதே பிரித்தானியாவின் கடமை -நெஸ்பி பிரபு தெரிவிப்பு

nasby.jpgஇலங்கை அரசாங்கத்துக்கு புத்திமதி கூறுவதை விடுத்து உதவிகளைச் செய்வது பிரித்தானியாவின் கடமையாகும் என அந்நாட்டின் சர்வகட்சிப் பாராளுமன்றக் குழுவின் இணைத் தலைவரும் பிரபுக்கள் சபையின் சிரேஷ்ட உறுப்பினருமான நெஸ்பி பிரபு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு பிரித்தானியா அர்த்தமுள்ள வகையில் தனது வளங்களைக் கொடுத்து இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் போன்ற வலுவான குணாதிசயங்களைக் கொண்ட ஒருவரால்தான் பயங்கரவாதத்தை வெற்றிகொள்ளக் கூடிய தெளிவானதொரு மூலோபாயத்தை வகுத்து அதற்குத் தலைமை தாங்கி வழிநடத்த முடியும் என்றும் அக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை-மாலைதீவு ஜனாதிபதிகள் இன்று அநுராதபுரத்தில் சந்திப்பு!

moldivian-president.jpgஇலங் கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் நசீத் இன்று அநுராதபுரத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றுப் பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்த மாலைதீவு ஜனாதிபதி இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்தார்.

இதேவேளை, மாலைதீவு ஜனாதிபதி இன்று முற்பகல் கொழும்பிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நலன்புரி நிலையங்களுக்கு கிஷோர் சென்றார்

kishore.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் நேற்று வியாழக்கிழமை இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள செட்டிகுளம் நலன்புரி நிலையங்களுக்குச் சென்றார். சகல நலன்புரி நிலையங்களுக்கும் இவர் சென்று நிலைமைகளை அவதானித்ததாக செட்டிகுளம் நலன்புரி நிலைய பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்தனர். அத்துடன், செட்டிகுளம் மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களையும் இவர் பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்னி எம்.பி. வினோநோகராதலிங்கம் முன்னர் ஒரு தடவை நலன்புரி நிலையத்திற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். அரசாங்கம் மேற்கொள்ளும் அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆதரிக்கப்போவதாக கிஷோர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்த நிலையில், இவர் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டார்

புலிகள் அமைப்பிலிருந்து சரணடைந்த சிறுவர்கள் பெற்றோருடன் பேச அனுமதி

புலிகள் அமைப்பில் இருந்த சிறுவர்களை அவர்களது பெற்றோர்களுடன் தொலைபேசியில் பேசவும் கடிதம் எழுதவும் அனுமதித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.  விடுதலைப்புலிகளுடனான போரின்போது புலிகள் இயக்கத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வவுனியாவில் உள்ள முகாம்களில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தற்போது போர் முடிவுற்று அமைதி திரும்பியுள்ள சூழ்நிலையில் அவர்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு சபைத் தலைவர் ஜெகத் வெள்ளவத்த கூறியுள்ளதாவது; புலிகள் இயக்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் உட்பட ஏராளமான சிறுவர்கள் நல்வாழ்வு முகாம்களில் உள்ளனர். இவர்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதவும் தொலைபேசியில் பேசவும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், நேரில் சந்தித்துப் பேச இன்னமும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் மறுவாழ்வுக்காக தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

புலிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட சிறுமிகள் பலரும் முகாம்களில் உள்ளனர். அவர்கள் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களுக்காக இலங்கை அரசு நான்கு இடங்களில் மறுவாழ்வு நிலையங்களை அமைத்துள்ளது. இதனிடையே தற்போது பல்வேறு இடங்களில் பதுங்கியிருக்கும் புலிகள் இயக்கத்தினர் பொலிஸாரிடம் சரணடைய வேண்டுமென்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.