இலங்கை விவகாரம் தொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் சுமார் 3 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஆடு, மாடுகளை பட்டியில் அடைத்து வைப்பதைப்போல சிங்கள ராணுவ காவலில் உள்ள முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மனிதாபிமான அடிப்படையில் இவர்களுக்கு உதவ வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தமிழர்களும், அங்குள்ள மனிதாபிமானிகளும் தங்களால் இயன்ற உதவி பொருட்களை சேர்த்து மெர்சி மிஷன் என்ற கப்பல் மூலம் அவசர உதவிக்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். சில ஆவணங்கள் சரியில்லை என்று வேண்டுமென்றே சாக்குபோக்கு சொல்லி இந்த நிவாரண கப்பலுக்கு அனுமதி மறுத்து திருப்பி அனுப்பிவிட்டது.
இந்த நிவாரண கப்பல் இன்னும் நடுக்கடலிலேயே காத்துக்கொண்டுள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு இந்திய அரசின் மூலம் நடுக்கடலில் நிற்கும் நிவாரண கப்பலை இந்திய துறைமுகத்தில் உணவு, மருந்து பொருட்களை இறக்க வசதி செய்து கொடுக்கவேண்டும். பிறகு அவற்றை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இந்திய தூதரின் மேற்பார்வையில் வினியோகிக்க வேண்டும்.
முகாம்களில் திறந்த சிறைச்சாலையை விட மோசமான நிலையில் அடைபட்டு கிடக்கும் தமிழர்கள் உணவு மற்றும் சுகாதார வசதியில்லாததால் தினந்தோறும் செத்து மடிகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் இலங்கையில் உள்ள தமிழ் பகுதிகளிலிருந்து சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழர்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச்செல்ல வழிவகை காணவேண்டுமென்றும் சிங்கள அரசை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.