June

June

‘20-20’ கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று; இலங்கை பாக். மோதல்

second-world-cup-of-twenty20.jpgஇருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்துக்கான இறுதி கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கை அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30க்கு இப்போட்டி ஆரம்பமாகும்.

இரண்டாவது 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் திகதி தொடங்கிய இந்தப் போட்டியில் 12 நாடுகள் பங்கேற்றன. “லீக்” முடிவில் அவுஸ்திரேலியா, ஒல்லாந்து, ஸ்கொட்லாந்து, பங்களாதேஷ் ஆகியவை வெளியேற்றப்பட்டன. “சூப்பர்-08” சுற்று முடிவில் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகள் வெளியேற்றப்பட்டன.

தென்ஆபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மேற்கிந்திய தீவுகள் ஆகியவை அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. கடந்த வியாழக்கிழமை நடந்த முதல் அரை இறுதியில் பாகிஸ்தான் 7 ஓட்டங்களில் தென்ஆபிரிக்காவையும், நேற்றுமுன்தினம் நடந்த 2வது அரை இறுதியில் இலங்கை 57 ஓட்டங்களில் மேற்கிந்திய அணியையும் தோற்கடித்தன.

20 ஓவர் உலக கோப்பை இறுதிப் போட்டி இன்று லண்டன் லோட்ஸ் மைதானத்தில் நடக்கிறது.

பாகிஸ்தான் அணி 2வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. 2007ம் ஆண்டு தென்ஆபிரிக்காவில் நடந்த முதலாவது உலக கோப்பையில் இந்தியாவிடம் தோற்று சம்பியன் பட்டத்தை இழந்தது. பாகிஸ்தான் இந்தப் போட்டித் தொடரின் தொடக்கத்தில் தடுமாறியது. “லீக்” ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. “சூப்பர்-8” சுற்றில் முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. அதன் பிறகே அந்த அணி விஸ்வரூபம் எடுத்து விளையாடி வருகிறது.

இலங்கை அணி எந்தத் தோல்வியையும் சந்திக்காமல் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. உலககோப்பையை வெல்ல இரு அணிகளுமே கடுமையாக போராடும். இதனால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடமாகாணத்தில் தொலைபேசி வசதிகளை ஏற்படுத்த ஏற்பாடு

basil.jpgவட மாகாணத்தில் தொலைபேசி வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொலைபேசி நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ள ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ, வடக்கில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதும் அங்கு தொலைபேசிக் கட்டமைப்புகளை விஸ்தரிப்பதாகத் தொலைபேசி நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சி னையை நிவர்த்தி செய்வது குறித்தும் அவற்றின் அபிவிருத்தித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இதனை ஏற்பாடு செய்ய வுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கென, கொக்காவில்பிரதேசத்தில் 175 அடி உயரமான பொதுத் தொடர்பாடல் மற்றும் தொலைத் தொடர்புக் கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இந்தக் கோபுரத்தினை வானொலி தொலைபேசித் தொடர்பாடல்களுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த கரியப்பெரும தெரிவித்துள்ளார்

தேர்தல் பணிகளில் ஈடுபட கூட்டமைப்புக்கு அனுமதி

007tna.jpgதமிழ்த் தேசிய கூட்டமைப்பினர், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகளுக்குச் சென்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபடலாமென்று பாதுகாப்பு அமைச்சு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா எம்.பி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கஜன் பொன்னம்பலம் ஆகியோர் கடந்த 19ம் திகதி யாழ்ப்பாணம் சென்றனர். யாழ்ப்பாணம் மாநகர சபை மற்றும் வவுனியா நகர சபைத் தேர்தல்களில் போட்டியிடத் தீர்மானித்த நிலையில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள்,

இரண்டு தினங்களுக்கு முன்னர் வவுனியா செல்லத் தீர்மானித்திருந்தனர். எனினும், பாதுகாப்பு அனுமதி கிடைக்கப் பெற்றிராததால், அவர்கள் அநுராதபுரத்திலேயே இருந்து வவுனியா தேர்தல் அலுவல்களைக் கவனித்துவிட்டு கொழும்பு திரும்பியிருந்தனர்.

இதனையடுத்து இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, பாதுகாப்புச் செயலாளருக்கும், தேர்தல்கள் ஆணையாளருக்கும் இதுபற்றிக் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தேர்தல் பணிகளில் ஈடுபட முடியும் எனப் பாதுகாப்புச் செயலாளர் கடந்த 18ம் திகதி மாலை அறிவித்திருக்கின்றார்.

பாதுகாப்புச் செயலாளரின் அறிவிப்பு கிடைத்தவுடன் யாழ் மாநகர சபைத் தேர்தல் வேட்பாளர்களைத் தேர்வதற்காக, மாவை சேனாதிராசா எம்.பியும், கஜன் பொன்னம்பலம் எம்.பியும் யாழ்ப்பாணம் விரைந்துள்ளனர். வவுனியா நகர சபைக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு விட்டதாக கூட்டமைப்பு உறுப்பினர் துரை ரெட்ணசிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிbழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (சுரேஷ் அணி) ஆகிய கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக தமிழரசுக் கட்சியின் ‘வீட்டு’ச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்குகின்றன.

முல்லை, கிளிநொச்சி அபிவிருத்தி – வவுனியாவில் இன்று உயர்மட்ட கூட்டம்

basil.jpgவட மாகாண அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணியின் நான்காவது மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் இன்று மீண்டும் வவுனியாவில் நடைபெறவுள்ளது.

வடமாகாண விசேட ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம்.பி. தலைமையில் நடைபெறும் இவ்விசேட கூட்டத்தில், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் துரித அபிவிருத்தி, உட்கட்டமைப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர், என்பவற்றுடன் மீள்குடியேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டம் தொடர்பான மாநாடு காலையிலும், முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பான மாநாடு மாலையிலும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

வவுனியா மாவட்ட அபிவிருத்தி தொடர்பான மாநாடு கடந்த புதன்கிழமையும், யாழ்,மாவட்ட அபிவிருத்தி மாநாடு கடந்த வெள்ளிக்கிழமையும், மன்னார் மாவட்ட மாநாடு நேற்று சனிக்கிழமையும் நடைபெற்றன. இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன், முல்லைத்தீவு அரச அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

டெங்கு: 142 பலி – 10,700 பாதிப்பு

aedes_aegypti.jpgடெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியாக 68 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்று விசேட சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பான உரிய வழிகாட்டல்களை பிரதேச செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.

அதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் மரணமடைந்தோர் தொகை நேற்றுடன் 142 ஆக அதிகரித்துள்ளதுடன் 10,700 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. கண்டி மாவட்டத்திலேயே இந்நோயினால் பாதிக் கப்பட்டோர் தொகை அதிகரித்துக் காணப் படுவதாகவும் கண்டி, கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, கேகாலை, அம்பாந்தோட்டை உட்பட 12 மாவட்டங்களில் டெங்கு தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர்தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக இன்று ஆரம்பிக்கும் விசேட சுத்திகரிப்புப் பணியை பிரதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரண்டு மணித்தியாலங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டுமென பிரதேச செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டங்களுக்குப் பிரதேசவாசிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அத்துடன் தத்தமது வீட்டுச் சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதில் சகலரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு மீண்டும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட தகவலின் படி கொழும்பு மாவட்டத்தில் 1558 பேரும், கம்பஹாவில் 1198 பேரும், கேகாலையில் 1288 பேரும் நுவரெலியாவில் 1601 பேரும் இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – யாழ். விமானப்பயணப்பாதை மாற்றம்.

airplane.jpgகொழும் புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான உள்ளுர் விமான சேவையில் இடம்பெற்ற எல்லைகள் குறைக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் விமான அதிகாரசபையின் பதில் பணிப்பாளர் பராக்கிரம திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
 
இதுவரையில் யாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை கடல் எல்லையின் மேலாகவே மேற்கொள்ளப்பட்டு வந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது. எனினும் தற்போது நிலப்பரப்புக்கு மேலாக விமான சேவையை மேற்கொள்ள நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு தரப்பின் அனுமதி கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு நிலப்பரப்புக்கு மேலாக விமான சேவையை மேற்கொள்ளும் போது அன்னளவாக 15 தொடக்கம் 20 கடல்மைல்கள் தூரம் குறைவடையலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் சென்று யுத்தத்தில் ஈடுபட இளவரசர் வில்லியம் விருப்பம்

21wiliam.jpgஇங்கி லாந்து நாட்டு இளவரசர் வில்லியம், ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு சென்று யுத்த களத்தில் இங்கிலாந்து வீரர்களுடன் இணைந்து போர் செய்ய விரும்புகிறார்.

நான் இராணுவ சேவையில் இருந்து விலகி அரசபொறுப்பை ஏற்பதற்கு முன்பு, போர்க்களத்தில் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். இவர் சார்ள்ஸுக்கு பிறகு பட்டத்துக்கு வரக்கூடிய இடத்தில் இருப்பதால், போர் முனைக்கு செல்லத்தடை இருப்பதாக நம்பி வந்த அவர், தன் தம்பி ஹரி போர் முனைக்கு சென்று திரும்பிய பிறகு தானும் போர் முனைக்கு செல்வதற்கு தடை இருக்காது என்று நம்புகிறார்.

“என் கண்முன்னாலேயே என் தம்பி ஹாரி போர் முனையில் பணியாற்றி இருக்கும் போது, ஏன் நான் பணிபுரிய முடியாது” என்று கேட்டார். ஆப்கானிஸ்தான் சென்று போர்க் களத்தில் குதிக்க நான் விரும்புகிறேன்’ என்று அவர் மேலும் தெரிவித்தார். இளவரசர் வில்லியம் இப்போது விமானப் படையில் விமானியாக பயிற்சி பெற்று வருகிறார்.

தேர்தல் நடத்தப்படாமல் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடிப்பதை ஐ.தே.க. ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை – ஐ.தே.க.

21tissa.jpgநாடாளு மன்றத்தின் ஆயுட்காலத்தை தேர்தல் நடத்தாமல் நீடிப்பதை ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்கப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை தேர்தல் நடத்தாமல் நீடிப்பதையும் தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது;

தேர்தல் நடத்தாமல் நாடாளுமன்றத்தின் ஆயுட் காலத்தை நீடிக்க முடியாது. இது ஜனநாயக விழுமியங்களுக்கு புறம்பான செயலாகும். அது போலவே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு தேர்தல் நடத்தாமலே நீடிக்கப்பட நடவடிக்கை எடுப்பதாக அறியவந்துள்ளது.  இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் போராடுவோம். ஜனநாயக நடைமுறைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் நாம் அனுமதிக்கமாட்டோம் என்றார் அவர்.

அமைச்சர் டக்ளஸ், கட்டளைத் தளபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் முடிவு

21deva.jpgயாழ்ப் பாணக் குடாநாட்டில் ஊரடங்கு சட்ட நேரத்தைக் குறைக்கவும் மூடப்பட்ட பாதைகளைத் திறக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ் குடா ஊரடங்கு சட்டத்தை இரவு 11 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்துவதென உயர்மட்டக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு ள்ளது.

இதேவேளை, ஸ்டான்லி வீதி, யாழ். பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மணிக்கூட்டுக் கோபுர வீதி, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி உட்பட சில முக்கிய வீதிகளை பொதுமக்களின் பாவனைக்காகத் திறப்பதென முடிவு செய்யப்பட்டது. யாழ். குடாநாட்டு பொதுமக்கள் முகங்கொடுத்து வருகின்ற முக்கிய சில பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துதல், வீதித் தடைகளை அகற்றுதல், யாழ். மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள், பாதுகாப்பு அனுமதி பெறுவதில் முகங்கொடுக்க நேரிடுகின்ற சிரமங்களை அகற்றுதல், தற்காலிக நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் முகங்கொடுத்துள்ள குறைபாடுகளை நீக்குதல், ஊரடங்குச் சட்டத்தை நீக்குதல், சோதனைச் சாவடிகளை அகற்றுதல், தடைசெய்யப்பட்ட பொருட்களின் தடைகளை அகற்றுதல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் அவதானம் செலுத்தப்பட்டது.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வலிகாமம் பிராந்திய படை அதிகாரி, யாழ். அரச அதிபர் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஊரடங்குச் சட்டத்தை முற்றாக அகற்றுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் இணக்கப்பாடு காணப்பட்ட போதிலும், சில சமூக சீர்கேடுகளை கருத்தில் கொண்டு விழிப்புக்குழுக்கள் பரவலாக உருவாக்கப்படுதல் மற்றும் தமிழ் பொலிஸாரை பொலிஸ்துறையில் இணைத்துக் கொள்ளல் போன்ற சிவில் நிர்வாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் வரை தற்போதைக்கு இரவு 11.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பில் திட்ட வரைபொன்று உருவாக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

இதேநேரம், இராணுவ வாகனத்தொடரணி போக்குவரத்தின் போது மக்கள் முகங்கொடுக்க நேரிடுகின்ற அசெளகரியங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமெனவும், பிற மாவட்டங்களுக்கு செல்வோருக்கான பாதுகாப்பு அனுமதி கிடைப்பதில் ஏற்படுகின்ற தாமதங்கள் அகற்றப்படும் என்றும், பல வீதிகளில் காணப்படுகின்ற வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. பருத்தித்துறை வரணி ஊடான கொடிகாமம் வீதி, மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவது குறித்து ஆராய்வதாக தீர்மானிக்கப்பட்டது.

இதேநேரம், யாழ் லொறி உரிமையாளர்களது ஏ-9 பாதையிலான போக்குவரத்து தொடர்பிலும் ஆராயப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஏ9 பாதையில் வரையறுக்கப்பட்ட பயணிகள் பஸ் சேவையை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

யுத்தம் காரணமாக யாழ். குடாநாட்டிற்கு கொண்டு வர தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களின் தடையை நீக்குவது தொடர்பில் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடுவதாகக் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

புத்தளம் மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரம்

aedes_aegypti.jpgஇந்த ஆண்டின் ஜூன் மாதம் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் 191 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் ஆறு பேர் இந்நோயினால் மரணமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள வடமேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.கே.ரத்நாயக்க, மழைகாலம் ஆரம்பமாகி யுள்ளதால் டெங்கு நோய் மேலும் பரவும் ஆபத்து இருப்பதால் டெங்கு நோய் பரவுவதைத் தடுக்க சகலரும் ஒன்றுபட்டு முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் முந்தல், மாரவில, கல்பிட்டி, ஆராச்சி கட்டு,மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆறு பேர் டெங்கு நோய்க்கு ஆளாகி மரணமடைந்துள்ளனர். புத்தளம் மாவட்டத் தில் தங்கொட்டுவ பிரதேசத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.