டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியாக 68 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இன்று விசேட சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தொடர்பான உரிய வழிகாட்டல்களை பிரதேச செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது.
அதேவேளை, டெங்குக் காய்ச்சலினால் மரணமடைந்தோர் தொகை நேற்றுடன் 142 ஆக அதிகரித்துள்ளதுடன் 10,700 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. கண்டி மாவட்டத்திலேயே இந்நோயினால் பாதிக் கப்பட்டோர் தொகை அதிகரித்துக் காணப் படுவதாகவும் கண்டி, கொழும்பு, கம்பஹா, நுவரெலியா, கேகாலை, அம்பாந்தோட்டை உட்பட 12 மாவட்டங்களில் டெங்கு தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர்தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக இன்று ஆரம்பிக்கும் விசேட சுத்திகரிப்புப் பணியை பிரதி ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரண்டு மணித்தியாலங்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டுமென பிரதேச செயலாளர்களுக்கு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டங்களுக்குப் பிரதேசவாசிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் அத்துடன் தத்தமது வீட்டுச் சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பதில் சகலரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமெனவும் சுகாதார அமைச்சு மீண்டும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதாகவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட தகவலின் படி கொழும்பு மாவட்டத்தில் 1558 பேரும், கம்பஹாவில் 1198 பேரும், கேகாலையில் 1288 பேரும் நுவரெலியாவில் 1601 பேரும் இக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.