நாடாளு மன்றத்தின் ஆயுட்காலத்தை தேர்தல் நடத்தாமல் நீடிப்பதை ஒரு போதும் ஐக்கிய தேசியக் கட்சி அனுமதிக்கப் போவதில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை தேர்தல் நடத்தாமல் நீடிப்பதையும் தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது;
தேர்தல் நடத்தாமல் நாடாளுமன்றத்தின் ஆயுட் காலத்தை நீடிக்க முடியாது. இது ஜனநாயக விழுமியங்களுக்கு புறம்பான செயலாகும். அது போலவே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஆறு வருடங்களுக்கு தேர்தல் நடத்தாமலே நீடிக்கப்பட நடவடிக்கை எடுப்பதாக அறியவந்துள்ளது. இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. இதற்கு எதிராக நாடாளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் போராடுவோம். ஜனநாயக நடைமுறைக்கு எதிரான எந்த நடவடிக்கையையும் நாம் அனுமதிக்கமாட்டோம் என்றார் அவர்.